என் மலர்
நீங்கள் தேடியது "அந்தோணியார் ஆலய திருவிழா"
- கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் விசைப்படகுகளை இன்று சுங்கத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- வருகிற 3, 4-ந்தேதிகளில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் கல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 மைல் கல் தொலைவிலும் இந்த தீவு அமைந்துள்ளது.
இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆலய திருவிழா பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 4-ந்தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி மாலை 4.30 மணிக்கு அந்தோணியாரின் உருவம் பதித்த கொடி ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து 14 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி மற்றும் திருவிழா திருப்பலி, நற்கருணை ஆசீர், இரவு தேர்பவனி ஆகியவை நடக்கிறது.
4-ந்தேதி காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. இதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரத்தில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 19 நாட்டுப் படகுகளில் 1,960 ஆண்களும், 379 பெண்களும், 38 ஆண் குழந்தைகளும், 31 பெண் குழந்தைகளும் கச்சத்தீவு செல்கின்றனர்.
மொத்தம் 2 ஆயிரத்து 408 பேர் பதிவு செய்துள்ளனர். கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் அனைத்தும் நாளை மறுநாள் (3-ந்தேதி) காலை 8 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்படுகின்றன. திருவிழாவுக்கு செல்ல ஏற்கனவே பதிவு செய்தவர்களின் ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி வைக்கிறார்கள்.
கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் விசைப்படகுகளை இன்று சுங்கத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படகுகள் பழுதின்றி உள்ளதா? சட்டவிரோத பொருட்கள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்தினர். அதிகாரிகளின் இந்த ஆய்வு மற்றும் சோதனை நாளையும் தொடர்ந்து நடக்கிறது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று (1-ந்தேதி) முதல் வருகிற 4-ந்தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம் பகுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதேபோல் வருகிற 3, 4-ந்தேதிகளில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர்.
- கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை தொடங்குகிறது.
ராமேசுவரம்:
இந்தியாவின் தென் எல்லையான ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிங்கல் மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. 1974-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த இந்த தீவு பின்னர் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக கைமாறியது.
இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு வருடம் தோறும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடக்கும். 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்திய-இலங்கையை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் இரு நாட்டு மக்களும் சகோதரத்துவத்துடன் சந்தித்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றம் செய்வது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி கச்சத்தீவு திருவிழா எளிமையாக நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் இருந்து மறை மாவட்ட பாதிரியார்கள் மட்டும் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கச்சத்தீவு திருவிழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட இருநாட்டு மறைமாவட்ட பாதிரியார்கள் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது.
கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்தில் இருந்து பங்கேற்க விரும்புவோர் விபரங்களை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சேகரித்தது. அதன்படி கச்சத்தீவு திருவிழாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்து 408 பேர் செல்ல பதிவு செய்திருந்தனர்.
கச்சத்தீவு திருவிழா இன்று (3-ந் தேதி) மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி ராமேசுவரத்தில் இருந்து பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் புறப்பட்டு சென்றனர். ராமேசுவரம் துறைமுகத்தில் இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன. 60 விசைப்படகுகள், 12 நாட்டு படகுகள் என மொத்தம் 72 படகுகளில் 2408 பேர் இன்று காலை முதல் கச்சத்தீவுக்கு சென்றனர்.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பக்தர்களின் கச்சத்தீவு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.
மது பாட்டில்கள், பாலிதீன் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அளவு இந்திய பணம் மற்றும் திண்பண்டங்கள் போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டன.
ஒவ்வொரு படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் ஏற்றப்பட்டன. படகுகளில் ஏறிய அவர்கள் உற்சாகத்துடன் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று பிற்பகலுக்குள் அனைத்து படகுகளும் கச்சத்தீவுக்கு செல்லும் என தெரிவிக்கிறது.
கச்சத்தீவு திருவிழாவையொட்டி இந்திய கடல் எல்லையில் கடற்படை, கடலோர காவல் படையினர், உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது அந்தோணியார் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குசந்தை எமலிபால் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலி நடைபெறுகிறது. இரவு அந்தோணியார் தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் நாளான நாளை (சனிக்கிழமை) யாழ்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானபிரகாசம் தலைமையில் சிறப்பு திருப்பலியோடு விழா நிறைவு பெறுகிறது.
அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. விழா முடிந்த பின் இந்திய பக்தர்கள் நாடு திரும்புகிறார்கள். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதியில் வருகிற 5-ந் தேதி வரை மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கடல் எல்லை பகுதியில் இருநாட்டு கடற்படை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- கச்சத்தீவில் இருந்து பெண்கள் உள்பட 2193 பேர் இன்று மதியம் ராமேசுவரம் திரும்புகிறார்கள்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிங்கல் மைல் கடல் தொலைவில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயத்தில் மார்ச் மாதம் திருவிழா நடைபெறும். இதில் இந்திய, இலங்கை மக்கள் பங்கு கொள்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு திருவிழாவை விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று விமரிசையாக தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ராமேசுவரத்தில் இருந்து 362 பெண்கள், 65 சிறுவர், சிறுமியர் என மொத்தம் 2,193 பேர் 59 விசைப்படகுகள், 11 நாட்டு படகுகளில் கச்சத்தீவுக்கு வந்தனர்.
நேற்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அப்போது இருநாட்டு மக்களும் பங்குபெற்ற சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து 14 இடங்களில் சிலுவை பாதை வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்ற ஏராளமானோர் சிலுவையை ஏந்தி ஆராதணை பாடல்களை பாடி வந்தனர். இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றி கொண்டார்கள். இரவு தேவாலயம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல்களில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கடல் எல்லை பகுதியில் இருநாட்டு கடற்படை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 2-வது நாளான இன்று காலை யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானபிரகாசம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இருநாட்டு மக்கள் பங்கு பெற்ற திருப்பலியில் தமிழ், சிங்கள மொழியில் ஆராதனை பாடல்கள் பாடப்பட்டது.
தொடர்ந்து உலக நன்மை வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. அதன்பின்னர் கச்சத்தீவில் இருந்து பெண்கள் உள்பட 2193 பேர் இன்று மதியம் ராமேசுவரம் திரும்புகிறார்கள். முன்னதாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்திருந்தது.
- இரவு 12 மணிக்கு புனித அந்தோணியார் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- 10-ம் திருவிழாவான இன்று காலை 6.30 மணிக்கு அருள் பிரபாகரன் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள தெற்குபுதூர் புனித அந்தோணியார் ஆலயதிருவிழா கடந்த 21-ந் தேதி பங்குதந்தை லூர்துசாமி மற்றும் தெற்கு கள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கே. மணி ஆகியோர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்ப்பவனி
திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரை, திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் வழிபாடுகள் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று மாலை பாதிரியார் போஸ் தலைமையில் பாதிரியார்கள் சந்தியாகு, செல்வின், கோட்டார் ஷிபு ஆகியோர் முன்னிலையில் பெருவிழா மாலை ஆராதனை மற்றம் நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது வி.பி.எஸ். மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அசனவிருந்து வழங்கப்பட்டது. பின்னர் இரவு 12 மணிக்கு புனித அந்தோணியார் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
10-ம் திருவிழா
10-ம் திருவிழாவான இன்று காலை 6.30 மணிக்கு அருள் பிரபாகரன் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழாவில் பல்வேறு ஊர் பங்குகளை சேர்ந்த பங்கு தந்தையர்கள், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை தெற்குபுதூர் பங்குதந்தை லூர்துசாமி, சி.எம். அடிகளார், தெற்குபுதூர் புனித அந்தோணியார் ஆலய நிர்வாகிகள், இளைஞர்கள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
- இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
- விழாவில் கலந்து கொள்பவர்களுக்கான விண்ணப்ப படிவம் வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது.
ராமேசுவரம்:
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது. திருவிழா அழைப்பிதழானது யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் மூலம் சிவகங்கை மறை மாவட்ட பிஷப், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, ராமேசுவரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு பின்பு பங்குத்தந்தை அசோக் வினோ கூறியதாவது:-
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வழங்க இருக்கிறோம். இந்த திருவிழாவுக்கு சென்று வர அரசிடம் அனுமதி பெற்றுத்தந்து, பயண ஏற்பாடுகள் செய்து தருவது தொடர்பாக கலெக்டரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு 75 விசைப்படகுகளும், 16 நாட்டு படகுகளும் செல்ல உள்ளன. 2500-க்கும் மேற்பட்டோர் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்பவர்களுக்கான விண்ணப்ப படிவம் வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தை பிப்ரவரி 25-ந்தேதிக்குள் அனைவரும் பூர்த்தி செய்து படகு உரிமையாளர்களிடம் அல்லது விழா கமிட்டியிடம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய, இலங்கை நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பார்கள்.
- வருகிற மார்ச் மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
ராமநாதபுரம்:
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையில் நெடுந்தீவு கடல் பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ள கச்சத்தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் திருவிழாவில் இந்திய, இலங்கை நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதற்கான முறையான அழைப்பிதழ் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயரிடமிருந்து ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தைக்கு வந்துள்ளது. இந்தநிலையில் கச்சத்தீவு புனித திருப்பயண ஒருங்கிணைப்பு குழு சார்பில் ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கச்சத்தீவு திருவிழா தொடர்பாக இலங்கையிடமிருந்து வந்துள்ள கடிதத்தை கொடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்வதற்காக வந்திருந்தனர்.
இதில் ராமேசுவரம் வேர்க்கோடு புனித ஜோசப் தேவாலய பங்குத்தந்தை அசோக்வினோ மற்றும் ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர்கள் சேசுராஜா, சகாயம் உள்ளிட்ட குழுவினர் கலெக்டரை சந்தித்தனர். பின்னர் கச்சத்தீவு திருவிழா ஒருங்கிணைப்பாளரான வேர்க்கோடு ஆலய பங்குத்தந்தை அசோக்வினோ கூறியதாவது:-
வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடை பெற இருக்கிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 75 விசைப்படகுகள் மற்றும் 16 நாட்டு படகுகளில் சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் செல்ல உள்ளனர்.
கச்சத்தீவு செல்லும் பக்தர்களுக்கு படகு கட்டணமாக ரூ.2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர கூடுதல் கட்டணமாக யாரும், பணம் தரக்கூடாது.
ராமநாதபுரம் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் இருந்து திருவிழாவில் பங்கேற்க வருபவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து தடையின்மை சான்று பெற்று வர வேண்டும்.
உரிய ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும். வருகிற பிப்ரவரி 6-ந்தேதி முதல் இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 25-ந்தேதிக்குள் அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எங்களிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜா கூறுகையில், பயணிகள் யாரும் சட்டவிரோ தமான பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. இது ஒரு திருப்பயணம் என்பதால் கடவுளை தரிசிப்பதற்காக மட்டுமே செல்கிறோம். விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் திருப்பயணியாகவே வரவேண்டும் என்றார்.