என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அட்சய திருதியை"
- 24 காரட் தங்க தட்டுவடை செட் வழங்கப்படும் என்று சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவியது.
- கடை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலத்தில் பிரசித்தி பெற்ற உணவு பொருளாக தட்டு வடை செட் உள்ளது. இந்த தட்டு வடை செட்டை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் விரும்பி சாப்பிடுவதால் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் தொடங்கி இரவு 10 மணி வரை தட்டு வடை செட் விற்பனை கொடி கட்டி பறக்கிறது.
குறிப்பாக இந்த தட்டு வடை செட் கடைகளில் , சாதா தட்டு வடை செட், முறுக்கு செட், மாங்காய் செட், பூண்டு செட், பொறி செட், நொறுக்கல், முட்டை நொறுக்கல், கார பொறி உள்பட பல்வேறு வகையான ருசி மிகுந்த செட்கள் விற்கப்படுகின்றன. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரும் வாங்கி ருசித்து சாப்பிடுகிறார்கள்.
இந்த நிலையில் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள திரு.வி.க. சாலையில் உள்ள துருவன் தட்டுகடை செட் கடையில் அட்சய திருதியையொட்டி 24 காரட் தங்க தட்டுவடை செட் வழங்கப்படும் என்று சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. தொடர்ந்து அந்த கடையில் கடந்த சில நாட்களாக கோல்ட் பாயில் பேப்பரில் தட்டு வடை செட் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி ருசித்து சாப்பிட்டனர். இதனால் அந்த கடையில் கூட்டம் அலை மோதியது.
இதனை அறிந்த அந்த பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரி பாபுராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அந்த தட்டு வடை செட் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோல்டு பாயில் பேப்பரில் உணவு தர குறியீடுகள் ஏதும் இல்லாமல் தங்க தட்டு வடை செட் என்ற பெயரில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. மேலும் அவை மனித உணவுக்கு ஏற்றதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கோல்ட் பாயில் பேப்பரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
உடனடியாக அதனை பகுப்பாய்வுக்கும் அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவின் அடிப்படையில் தட்டு வடை செட் கடை உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த கடை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பெரும்பாலான நகைகடைகளில் தங்க நாணயம் விற்பனைக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.
- கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்க நகைகள் விற்பனை இருந்தது.
சென்னை:
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, 'அட்சய' திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். அனைத்து நலன்களையும் குறைவில்லாமல் அள்ளிக்கொடுக்கும் இந்த திருதியை நாளன்று, வாங்கும் பொருள் இல்லங்களில் அளவில்லாமல் சேரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.
அந்த வகையில், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் மக்கள் தங்க நகைகளை வாங்கி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு, அட்சய திருதியை நேற்று அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி, இன்று (சனிக்கிழமை) மதியம் 2.50 மணியுடன் முடிவடைகிறது.
அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளும் அறிவித்தன. பவுனுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, பழைய நகைகளுக்கு கூடுதல் விலை, செய்கூலி, சேதாரம் தள்ளுபடி என சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
கூட்டம் அதிகம் குவியும் என்பதால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகைகடைகள் நேற்று அதிகாலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில், நகைகடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
அதேபோல், ஜி.ஆர்.டி. ஜூவல்லரி, ஜோயாலுக்காஸ், மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ், பீமா கோல்ட் ஜூவல்லரி, பிரின்ஸ் ஜூவல்லரி, கல்யாண் ஜூவல்லர்ஸ், போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஆகிய கடைகளில் அட்சய திருதியை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதியது.
நகைகடைகளில் குறிப்பிட்ட நேரத்தில், நகைகளை வாங்குவதற்கு, ஒரு வாரத்துக்கு முன்பே, 75 சதவீத தொகை செலுத்தி பலர் முன்பதிவு செய்து, நகைகளை நல்ல நேரத்தில் வாங்கினர். விதவிதமான டிசைன்களில் நகைகள் அட்சய திருதியை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் அட்சய திருதியை நாளில் தங்களுக்கு பிடித்த தங்கம் மற்றும் வைரம், வெள்ளி நகைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் அணிந்துக்கொண்டனர்.
பெரும்பாலான நகைகடைகளில் தங்க நாணயம் விற்பனைக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்க நகைகள் விற்பனை இருந்தது. நடப்பாண்டு, விற்பனை அதிகரித்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அட்சய திருதியை விற்பனை தொடர்பாக தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:-
சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகளில் நேற்று கூட்டம் அதிகம் காணப்பட்டது.
தேர்தல் நடைமுறை அமலில் இருந்தபோது, பொதுமக்களால் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வெளியே கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது, அந்த நடைமுறை விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், அட்சய திருதி நாளில் மக்கள் அதிகளவு நகைகளை வாங்க குவிந்தனர். கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்கம் உள்பட நகைகள் விற்பனை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்மூலம், நேற்று ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தங்கம் உள்பட பல்வேறு நகைகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
- சென்னையில் அட்சய திரிதியைக்காக நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.
- பல நகைக்கடைகள் அட்சய திரிதியைக்காக போட்டி போட்டு சலுகைகளை அறிவித்திருந்தன.
சென்னை:
அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், அடிக்கடி தொடர்ந்து தங்கம் வாங்கி குவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாக மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும். இதனால் அள்ள அள்ளக் குறையாத செல்வ வளங்களை வாரித்தரும் அட்சய திரிதியை அன்று சிறிய நகையையாவது வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
தங்க நகை வாங்க முடியாதவர்கள் கையில் இருக்கும் சேமிப்பை வைத்து ஏதாவது சிறிய தங்க நாணயத்தையாவது வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் அட்சய திரிதியைக்கு நகைக்கடைகளில் தங்கம் அமோகமாக விற்பனையாகிறது.
இந்த ஆண்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அட்சய திரிதியை தினம் ஆகும். அட்சய திரிதியை இன்று காலை 6.33 மணிக்கு தொடங்கி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4.56 மணி வரை உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் விற்பனை அமோகமாக நடந்தது.
சென்னையில் அட்சய திரிதியைக்காக நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட்டை, பாடி, அண்ணாநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் வாங்கினார்கள்.
மேலும் நகைக்கடைகளில் இன்று கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் கடந்த 15 நாட்களாகவே நகைக்கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த நகைகளை தேர்வு செய்து 25 சதவீத பணம் செலுத்தி முன்பதிவு செய்து வைத்திருந்தனர். அவர்கள் அட்சய திரிதியையான இன்று நகைக்கடைகளுக்கு சென்று மீதமுள்ள பணத்தை செலுத்தி தாங்கள் ஏற்கெனவே தேர்வு செய்து வைத்திருந்த நகைகளை வாங்கினார்கள்.
அட்சய திரிதியையொட்டி தங்கம் விலை இன்று காலையிலேயே 2 முறை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் கூடியது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏற்கெனவே முன்பதிவு செய்து வைத்திருந்த வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த அன்று இருந்த குறைந்த விலைக்கே தங்கத்தை வாங்கி மகிழ்ந்தனர். முன்பதிவு செய்யாதவர்கள் இன்றைய விலைக்கு தங்கத்தை வாங்கினார்கள்.
மேலும் பல நகைக்கடைகள் அட்சய திரிதியைக்காக போட்டி போட்டு சலுகைகளை அறிவித்திருந்தன. சில கடைகளில் தங்க நகைகள் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி, வெள்ளி கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி ஆகிய சலுகைகளும் வழங்கப்பட்டன. சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்திலும் சலுகைகள் வழங்கப்பட்டன. பழைய தங்கத்தை இன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றிக்கொள்ளும் சலுகைகளும் வழங்கப்பட்டன. இந்த சலுகைகளை பெற்று வாடிக்கையாளர்கள் நகை வாங்கினார்கள்.
தங்க நாணயம் வாங்க சென்ற வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடைகளில் தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவர்கள் வரிசையில் சென்று தங்க நாணயங்களை வாங்கிச் சென்றனர். அட்சய திரிதியை விற்பனைக்காக சென்னையில் உள்ள பெரிய நகைக்கடைகள் எல்லாமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் நகைக்கடைகள் எல்லாமே விளக்கொளியில் ஜொலித்தன.
தமிழகம் முழுவதும் சுமார் 45 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. அனைத்து நகைக்கடைகளிலுமே இன்று தங்கம் விற்பனை மிகவும் அமோகமாக நடந்தது. வாடிக்கையாளர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. தி.நகர் உள்ளிட்ட சென்னையில் உள்ள முக்கியமான வணிக பகுதிகள் தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. இதனால் நகைக்கடைகள் அதிகம் உள்ள இடங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
நகைக்கடைக்காரர்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக அட்சய திரிதியை சலுகைகளை இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு வழங்குகிறார்கள். இதனால் இந்த 3 நாட்களும் தங்கம் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்சய திரிதியைக்காக நகை வாங்க விரும்புபவர்கள் இன்று இரவு வரை நகை வாங்க வருவார்கள் என்பதால் இன்று நள்ளிரவு வரை நகைக்கடைகளை திறந்து வைத்து நகைகளை விற்பனை செய்யவும் நகைக்கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் சென்னையில் சில நகைக்கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தங்க நகைகள் வாங்க விரும்புபவர்களுக்கு வீடுகளுக்கு வாகன வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
அட்சய திரிதியை விற்பனை குறித்து சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-
அட்சய திரிதியையொட்டி இன்று காலை 6 மணிக்கே நகைக்கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகிறோம். இன்று காலையில் இருந்தே நகை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். தொடர்ந்து நேரம் செல்லச்செல்ல வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் பொறுமையாக நகை வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.
வாடிக்கையாளர்களின் கூட்டத்தை பொறுத்து இன்று நள்ளிரவு வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய முடிவு செய்து உள்ளோம். இந்த ஆண்டு அட்சய திரிதியைக்காக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வந்து உள்ளன. வைர நகைகளும் புதிய டிசைன்களில் அதிக அளவில் உள்ளன.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது பொதுமக்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் அப்போது நகை விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது சென்னை நகருக்குள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல தடை இல்லை என்பதால் தேர்தல் நேரத்தில் நகை வாங்குவதை தவிர்த்தவர்கள் இப்போது நகை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்க நகை விற்பனை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இரவு நேரத்தில் நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக அவர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று விட வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கடைகளில் கூடுதலாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று 20 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. தமிழகத்தில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு நகை விற்பனையானது. இந்த ஆண்டு சுமார் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.90-ஆகவும் பார் வெள்ளி ரூ.90,000ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை:
சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.
இதனால் தங்கம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இன்று தங்கம் விலை 2-வது முறையாக உயர்ந்துள்ளது.
காலையில் கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்த நிலையில் மீண்டும் 45 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் இன்று தங்கம் சவரன் 720 ரூபாய் அதிகரித்து ரூ.53,640-க்கும் கிராம் ரூ.6,705-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.90-ஆகவும் பார் வெள்ளி ரூ.90,000ஆகவும் விற்பனையாகிறது.
- அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.
- அட்சய திருதியையொட்டி இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னை:
தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.
இந்த ஆண்டு அட்சய திருதியை இன்று அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி 11-ந்தேதி மதியம் 2.50 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில் பொதுமக்கள் தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.
இந்தநிலையில் அட்சய திருதியையொட்டி இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து 88 ரூபாய் 70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
- அட்சயம் என்றால் வளர்வதும், பெருகுவதும் ஆகும்.
- மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
அட்சய திருதியை இந்த ஆண்டு மே 10ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொறு ஆண்டும் சித்திரை அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் நாள் திருதியை திதியில் அட்சய திருதியை சுப தினமாக கொண்டாடப்படுகிறது.
அட்சயம் என்றால் வளர்வதும், பெருகுவதும் ஆகும். அதனால், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அது பெருகி வளம் சேர்க்கும். குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தரும் திருநாளாக அட்சய திருதியை போற்றப்படுகிறது.
தர்மர் சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், இவ்வளவு ஏன் சிவபெருமான் அன்னபூரணித் தாயாரிடம் தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் இந்நாளில் தான்.
இந்நாளில் தங்கம் மட்டும் வாங்காமல் உப்பு, அரிசி, ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம்.
அன்றைய தினம் கல் உப்பு. மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும்.
அதன்படி, மே 10ம் தேதி காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் அட்சய திருதியை வருவதால் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இரு தினமும் காலை 5.33 மணி முதல் மதியம் 12.18 மணி வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாகும்.
இந்நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு லலிதா ஜூவல்லரி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, தங்க நகைகள் மீதான சேதாரம் ஒரு சதவீதம் குறைத்து சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வைர நகைகள் மீது கேரட்டுக்கு ரூ.5 ஆயிரம் குறைக்கப்படுகிறது.
இந்த சலுகை கடந்த 3ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. நாளை தினம் அட்சய திரிதியை என்றாலும், இந்த சலுகை வரும் 12ம் தேதி வரை நீட்டித்து லலிதா ஜூவல்லரி அறிவித்துள்ளது.
- பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார்.
- இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர்.
விவசாய நாடான இந்தியாவில் குறிப்பாக கிழக்கு இந்தியாவில் அட்சய திருதியை நன்னாளை முதல் உழவு நாளாக தொடங்குகின்றனர். அட்சய திருதியை நன்னாளில்தான் கடவுளர்களின் பொருளாளர் பதவியை ஏற்று குபேரர் லட்சுமி தேவியை வணங்கி போற்றினார்.
புதிய தொழில் தொடங்குவதற்கும் வீட்டின் கட்டுமான பணியை ஆரம்பிப்பதற்கும் மிகவும் சிறப்பான நாளாக அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாள் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள் இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் அதிக அளவிற்கு பொருள் சேரும் என இந்த குறிப்பிட்ட நாளில் தங்க ஆபரணங்களை வாங்க மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த நாளின் சிறப்பு என்னவென்றால் விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங்கிய நாள். பரசுராமர் அவதரித்த தினம்.
பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார். அன்னபூரணி தேவி பிறந்த நாளும் இதுவே. என இந்த நாளுக்கும் அட்சய என்கின்ற பதத்திற்கும் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்
தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்கிர பட்சத்தில் மூன்றாவது நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர் பலர் திருமணங்களை இந்த நாளில் முடிவு செய்கின்றனர்.
இந்த நன்னாளில் நாம் செய்கின்ற நற்காரியங்களும் நமக்கு பல மடங்கு வாழ்வில் நன்மை பயக்கும் மேலும் தொடர்ந்து நல்ல செயல்கள் பல செய்யக்கூடிய சூழலை நம் வாழ்வில் ஏற்படுத்தி எல்லா வளங்களையும் இறைவன் நமக்கு அருள்வார். எனவே தான் இந்நன்னாளில் மக்கள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து மகிழ்கின்றனர் குறிப்பாக அட்சய திருதியை கடும் கோடையில் வருவதால் பலர் நன்னாளில் தங்களால் முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு பானகம் மோர் விநியோகிக்கின்றனர். தண்ணீர் பந்தல் அமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அக்ஷய்ய திருதீயா புண்ய காலே
- பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:
தானம் அளிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்...
அக்ஷய்ய திருதீயா புண்ய காலே அக்ஷய்ய புண்ய ஸம்பாதனார்த்தம் (பித்ரு ப்ரீத்யர்த்தம்) தர்மகடாக்ய உதகும்ப தானமஹம் கரிஷ்யே..
ஏஷ தர்மகடோ தத்தோ ப்ரும்ஹ விஷ்ணு சிவாத்மக: அஸ்ய) பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:
- 'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள்.
- பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும்.
மகாத்மாவான தருமரை, துரியோதனன் தன் தாய்மாமன் சகுனியின் உதவி கொண்டு சூழ்ச்சி செய்து சூதாட்டத்தில் தோற்கடித்தான். இதனால் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தது. அவர்கள் அஸ்தினாபுரத்தில் இருந்து திரவுபதியோடு வடக்கு நோக்கி யாத்திரையை தொடங்கினார்கள். அப்போது இந்திராதி தேவர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும் மற்றும் மிகுந்த பற்றுள்ள மக்களும் பாண்டவர்களின் பின் சென்றனர்.
பஞ்சபாண்டவர்கள் அவர்களை நோக்கி, "உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும். எனது அருமை மக்களே நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்" என்று வேண்டிக்கொண்டனர்.
ஆனால் மக்களோ, பாண்டவர்களை நோக்கி பலவிதமாக புகழ்ந்தனர். அப்போது தருமர் அவர்களிடம், "நீங்கள் அன்பால் என்னை இவ்வாறு புகழ்கிறீர்கள். எங்களிடம் இல்லாத உயர்ந்த குணங்களை கூட எங்களிடம் உள்ளது போல் சொல்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். இருப்பினும் நீங்கள் திரும்பி செல்லுங்கள்" என்று கூறினார். பின்பு பஞ்ச பாண்டவர்கள், கங்கை கரையில் இருந்த பிரமாணக்கோடி என்னும் ஆலமரத்திற்கு அருகில் சென்று, அன்று இரவை அங்கேயே கழித்தனர்.
அப்போதும் சில அந்தணர்களும் குறிப்பாக அக்னி ஹோதிரிகள் (தினமும் யாகம் செய்யக்கூடிய அந்தணர்களும்) மற்றும் அவர்களது உறவினர்களும் திரும்பி செல்லாமல் நூற்றுக்கணக்கில் பாண்டவர்களுடன் வந்தனர். அவர்களை நோக்கி தருமர், "ராட்சசர்கள் மற்றும் கொடிய மிருகங்கள் வசிக்கும் இந்த இடத்தில் எங்களுடன் ஏன் வருகிறீர்கள்" என்று கேட்டாலும், அவர்களின் அன்பான பேச்சால் மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் ஒரு காரியம் அவர் மனதை நெருடியது. "சன்னியாசிகளும், அந்தணர்களும், உறவினர்களும் நம்முடன் வருகின்றனர். இவர்களின் பசியை போக்க வேண்டியது எனது கடமை. தர்ம சாஸ்திரத்தில் விதித்தபடி தேவர்களுக்கும், நம்மை தேடி வந்த விருந்தினர்களுக்கும், நாய்களுக்கும், காக்கைக்கும், அன்னம் இடாவிட்டால் மகா பாவம். எனவே இதற்கு என்ன செய்யலாம்" என வருத்தப்பட்டார்.
அப்போது சவுனகர் என்ற மகா முனிவர் அங்கு வந்தார். அவர் தருமரை நோக்கி, "தவத்தின் மூலம் உன் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும். யோக சித்தியை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தவத்தின் மூலம் அடைய முடியாதது எதுவுமில்லை" என்றார்.
இதையடுத்து தருமர் தன் புரோகிதரான தவுமியரிடம் ஆலோசனை கேட்டார். தவுமியரோ, "தர்ம ராஜாவே.. பிராணிகள் எல்லாம் ஒரு சமயம் கடும் பசியால் துன்பமடைந்த பொழுது, சூரியபகவான் அந்த ஜீவன்கள் மேல் இரக்கம் கொண்டு பூமியில் மேக ரூபமாக மாறி மழை நீரை வெளிப்படுத்தினார். அந்த மழை நீரால் பூமி செழித்து, அனைத்து ஜீவ ராசிகளின் பசியும் தீர்ந்தது. சூரியன் அன்ன ரூபம் ஆனவர். அனைத்து உயிரையும் காக்கக்கூடியவர். எனவே நீ அவரை நோக்கி தவம் செய்" என்றார்.
தருமரும் ஒரு மனதுடன் அன்ன ஆகாரம் இன்றி சூரிய பகவானின் விசேஷமான 108 நாமத்தை கூறி தவம் இயற்றினார். பின்னர் சூரிய பகவானை நோக்கி, "12 ஆதித்யர்களும், 11 ருத்திரர்களும், அஷ்டவசுக்களும், இந்திரனும், பிரஜாபதியும், ஆகாசத்தில் சஞ்சரிக்கும் சித்தர்களும், உங்களை ஆராதித்து சித்தி அடைந்தனர். தங்களை ஆராதிப்பதால் ஏழு வகை பித்ருக்களும் திருப்தி அடைகின்றனர். தாங்கள் எனக்கு உதவ வேண்டும்" என்று தருமர் கேட்டுக் கொண்டார்.
அதற்கு சூரிய பகவான், "தர்மராஜா.. நீ வேண்டியது அனைத்தும் உனக்கு கிடைக்கும்படி செய்கிறேன். இப்பொழுது நான் தரும் பாத்திரம் உனக்கு 12 ஆண்டு வரை சக்தி உள்ளதாக இருக்கும். இந்த பாத்திரத்தை பெற்றுக்கொள். இதில் நீ இடும் பழமோ, கிழங்கோ, கீரையோ, காய்கறிகளோ அல்லது அவற்றை கொண்டு தயார் செய்த உணவோ, தான் உண்ணாமல் திரவுபதி அந்த உணவை பரிமாறிக் கொண்டே இருக்கும் வரை, அது வளர்ந்து கொண்டே இருக்கும். இன்றைய தினத்தில் இருந்து நீ இதை பயன்படுத்தலாம்" என்றார்.
தருமரும் ஒரு அடுப்பு மீது அந்த பாத்திரத்தை வைத்து சமையல் தயார் செய்தார். அதில் தயாரித்த உணவு சிறிய தாக தோன்றினாலும், அந்த பாத்திரத்தின் சக்தியால் அது வளர்ந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் உணவளித்த பிறகு மீதமிருந்த அன்னத்தை பிரசாதமாக தருமரும் மற்றவர்களும் சாப்பிட்டனர். இறுதியாக திரவுபதி சாப்பிட்டாள். அட்சய பாத்திர மகிமையால் அங்கிருந்த அனைவரும் பசி நீங்கி மகிழ்ந்தனர்.
தருமர், மற்றவர்களின் பசியை தீர்க்க சூரிய பகவானிடம் இருந்து, சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதி அன்று அட்சய பாத்திரம் பெற்றதால் அந்த தினம் 'அட்சய திருதியை' என அழைக்கப்பட்டது.
'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய இந்த திருதியை மிக விசேஷமானது. அன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகளோ, அபிஷேகமோ, ஜபமோ, ஹோமமோ மற்ற நாட்களை விட பல மடங்கு உயர்ந்த பலன்களைத் தரும். அன்றைய தினம் ஏழைகளுக்கு வழங்கப்படும் அன்னதானம், நீர் மோர் போன்றவை நமக்கு குறைவற்ற செல்வத்தை பெற்றுத் தரும். சிலர் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் அது தானத்தையும், தர்மத்தையும் தான் சிறப்பாக சொல்லியுள்ளது.
முன்னோர்களின் (பித்ருக்களின்) பிரீதிக்காக நீர் நிறைந்த ஒரு செப்பு பாத்திரத்தை தானம் செய்வார்கள். இதற்கு 'தர்மகட தானம்' என்று பெயர். இதனால் நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் தாகமின்றி இருப்பார்கள். ஒரு செப்பு பாத்திரத்தில் அல்லது கலசத்தில் நல்ல நீரை நிரப்பி ஏலக்காய் மற்றும் வாசனை திரவியங்களை சேர்த்து அதற்கான மந்திரத்தை சொல்லி தானம் அளிப்பது மிகச் சிறப்பானது.
இந்த நாளில் எந்தவிதமான பாகுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் பார்க்காமல் அனைவருக்கும் அன்னதானம் அளிப்பது உயர்ந்த பலனை தரும். மேலும், பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும். இறந்த முன்னோர்களுக்கு நல்ல கதி உண்டாகும். வேதம் படித்த பெரியோர்களுக்கு குடை, விசிறி, நீர் மோர் போன்றவை அளிப்பார்கள். மேலும் அட்சய திருதியை அன்று தான் கிரத யுகம் ஆரம்பித்த நாள். எனவே அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தரும்.
- 'ஜோதிட சிம்மம்' சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா.
- மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப்பக்கமாக வையுங்கள்.
- அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு.
அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடுங்கள். பிறகு பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையை போட்டு மேலே வாழை இலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். அதனுள் காசுகளை போடுவது காசுகளை பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்.
கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப்பக்கமாக வையுங்கள்.
நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். அது விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு. அதிக பலன் தருவதும் அதுதான். உப்பு வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.
முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியங்கள். உங்களுக்கு தெரிந்த விஷ்ணு&லட்சுமி, சிவன்&பார்வதி, குபேரன் துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.
குசேலரின் கதையை படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.
அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்கு சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப, தீப ஆராதனையை கலசத்துக்கு செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள்.
உண்ணாவிரதம் இருப்பது எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தை பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காயை அடுத்து வெள்ளிக்கிழமை பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம். நெல்லை ஒரு முடிச்சாகக் கட்டி அரிசிவைக்கும் பாத்திரத்தில் வைத்து விடுங்கள். காசுகளை பீரோவில் வையுங்கள்.
அட்சய திரியை நாளில் விரதம் இருப்பது. பூஜைகள் செய்வது புதிய பொருட்களை வாங்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது, தானம் அளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்.
இல்லோதருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுங்கள். பெற்றோர் பெரியோரிடம் ஆசி பெறுங்கள். நீத்தார் கடன்களை அவசியம் செய்யுங்கள்.
- தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்.
- வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.
அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.
செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார்.
இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது.
இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது.
அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புனித நதிகளையும் மானஸசரோவரம், புஷ்கரம், கௌரி குண்டம் ஆகிய புனித தடாகங்களையும் மானசீகமாக வழிபடுவதும் நீராடுவதும் புண்ணிய பலன் தரும்.
ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தானம், தர்மம், உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.
சாலக்கிராமம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் மற்றும் ஆராதனைக்கு வைத்துள்ள விக்கிரக தெய்வத்திருவுருவங்களுக்குப் பச்சை கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து சந்தனக் கட்டையால் அரைத்த சந்தனம் பூசி வழிபட உடலில் ஏற்படும் வெப்ப சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.
தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்.
தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.
- பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.
- மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர்.
அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர்.
ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.
இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள்) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன.
இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும்,
ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும்,
வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ''அட்சய திருதியை யாகவும்'' (பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது.
சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.
வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன.
இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது.
பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.
மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர்.
விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர்.
இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்