search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்கேடு"

    • முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.
    • தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அதிகனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    குறிப்பாக முத்தம்மாள் காலனி , பாத்திமா நகர், ராஜகோபால் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், பாரதி நகர், கே.டி.சி. நகர், ஸ்டேட் பாங்க் காலனி, நேதாஜி நகர், சின்னக்கண்ணு புரம், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களாக அப்பகுதி பொது மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார் வலர்கள் ஆகியோர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    எனினும் தூத்துக்குடி மாநகர் பகுதியிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சாலை துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தற்போதும் சிக்கல் நிலவி வருகிறது. அரசு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங் களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

    ஆனாலும் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வீடுகளில் தவிப்போரை மீட்பதில் சிரமம் இருந்து வருகிறது. அவர்களுக்கு மீட்பு குழுவினர் உணவு, தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். எனினும் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை தொடர்வதால் குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளது. இதே போல் வீடுகள், தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரிலும் ஏராளமான கால்நடைகள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.

    இதே போல் மாவட்டம் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சுமார் 150 பேர் இறந்திருக்கலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

    இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 18 பேரும், சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என இதுவரை மாவட்டத்தில் மழைக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு சிகிச்சை அளிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்றும், இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 41 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 17 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

    எனினும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய பின்னரே வேறு ஏதேனும் உடல்கள் அங்கு இருக்கிறதா என கண்டறிந்து அதன் பின்னரே பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

    இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

    3-ம் மைல் முதல் திரேஸ்புரம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்கிள் ஓடை செல்லும் சாலையின் இருபுறமும் மண் சாலைகளாகவும், தாழ்வாகவும் காணப்பட்டது. இதனால் கனமழை பெய்யும் போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பக்கிள் ஓடைக்கு நேரடியாக செல்லும். ஆனால் தற்போது சாலையின் இருபுறமும் உயரமான அளவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெள்ள நீர் அருகில் உள்ள மாநகர குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீடுகளை சுற்றி வெள்ளமாக தேங்கி நிற்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் அங்குள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாகி உள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பல இடங்களிலும் இன்னும் சீரான குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை நீர் தேங்கிய பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் மேலும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    இதற்கிடையே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் முதன்மை செயலாளரும், தென்மாவட்டகளுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் காய்ச்சல் பாதித்த 37 பேருக்கும், தொற்று நோய் பாதித்த 104 பேருக்கும், தோல் நோய் பாதிப்படைந்த 49 பேருக்கும், காயம் ஏற்பட்ட 12 பேர், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 16 பேர் என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 221 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • வாழப்பாடி பெரியாற்றின் கரையில் ஆடு அடிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தினந்தோறும் ஓரிரு ஆடுகள் மட்டுமே இங்கு வெட்டப்படுகிறது.
    • இறைச்சி கழிவு, எலும்பு ஆகியவை சாலையோரத்தில் சிதறி கிடப்பதால் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் சுகாதாரமான முறையில் இறைச்சி வெட்டுவதற்கு, வாழப்பாடி பெரியாற்றின் கரையில் ஆடு அடிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தினந்தோறும் ஓரிரு ஆடுகள் மட்டுமே இங்கு வெட்டப்படுகிறது.

    சாலையோரம்

    பெரும்பாலான இறைச்சி கடைக்காரர்கள், கடலூர் சாலை, தம்மம்பட்டி சாலையோரத்தில் ஆடுகளை வெட்டி, திறந்த வெளியில் கடைவிரித்து இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். இறைச்சி கழிவு, எலும்பு ஆகியவை சாலையோரத்தில் சிதறி கிடப்பதால் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    எனவே வாழப்பாடி பேரூராட்சியில் திறந்த வெளியில் செயல்படும் இறைச்சி கடைகளை அகற்றவும், சுகாதாரமான முறையில் இறைச்சி கடைகள் செயல்படவும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழிவுநீர்-குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • குழந்தைகள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    கீழக்கரை

    மக்கள் நல பாது காப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் முதல்- அமைச்சர், தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் நிலவும் மெத்தனப் போக்கால் தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதியில் சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் ஓடுவதும், பல்வேறு இடங்கள் குப்பைகள் நிறைந்து இருப்பதும் அன்றாடம் காணப்படும் நிகழ்வாக இருக்கிறது. இதனால் கொசு உறுபத்தியாகி பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    கீழக்கரை நகராட்சி பகுதியில் 100-க்கும் அதிகமான நாய்கள் வெறி பிடித்த நிலையில் நகரை சர்வ சாதாரணமாக சுற்றி வலம் வருகின்றது. நாய் கடியால் ஏராளமான பொதுமக்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையில் உள், வெளி நோயாளியாக தினந்தோறும் சிகிச்சை பெற வருகின்றார்கள். இன்று வரை இந்த நாய்களை அப்புறப்படுத்த கீழக்கரை நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் நகர் சார்ந்த பணிகள் திட்டமிடல் இல்லாத காரணத்தால் நகராட்சி நிதி வீணடிக் கப்பட்டு வருகிறது. கீழக்கரை நகராட்சி அதிகாரி கள் தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடை பிடித்து வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் அதிருப்தியுடன் இருக்கி றார்கள்.

    கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மீது தனி கவனம் செலுத்தி தனி அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணிக்க பொதுமக்கள் சார்பாகவும், எங்கள் கழகம் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கீழ்புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மொனயம்பேட்டை கிராமத்தில் சாலையில் கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது
    • இவற்றால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது


    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மொனயம்பேட்டை கிராமத்தில் சாலையில் கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. இவற்றால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×