என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமநவமி"

    • கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
    • பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா கடந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது.

    முக்கிய நிகழ்வான ஓலை சப்பரத்தில் கருட சேவை, கோரதம் புறப்பாடு ஆகியவை சிறப்பாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் ராமநவமி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோலாகலமாக நடந்தது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்... பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து, தேரானது 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. பின்னர், உற்சவர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    ராமநவமி மற்றும் தேரோட்டத்தை யொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை (திங்கட்கிழமை) சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.

    • அயோத்தியில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
    • 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராம நவமி திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ராமா் பிறந்த இடமான அயோத்தியில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்து காணப்படுகிறது.

    அயோத்தியில் சமீபத்திய நாள்களில் சுட்டெரிக்கும் அதிக வெயில் காராணமாக பொது பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ராமா் கோவிலில் இன்று நண்பகல் வரை சிறப்பு அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை மீட்க அவர்கள் மீது சரயு நதிநீரை டிரோன்கள் மூலம் தெளித்து வருகிறார்கள்.இன்று இரவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

    அயோத்தி நகரில் ஆங்காங்கே நிறுவப்பட் டுள்ள எல்.இ.டி. திரைகள் மூலம் கோவிலில் நடைபெறும் சிறப்புப் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.

    பக்தா்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் இருக்க கனரக வாகனங்கள் பூா்வாஞ்சல் விரைவுச்சாலை வழியாக நகருக்கு வெளியே திருப்பி விடப்பட்டுள்ளது.

    • தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பயணப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன.
    • சித்திரக்கூடம் பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்தார்.



    அயோத்தி சக்கரவர்த்தி தசரதனுக்கு மகனாக பிறந்த ராமபிரான், 14 ஆண்டு வனவாசம் மற்றும் ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்கும் போராட்டம் காரணமாக, இந்திய தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பயணப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி அவர் காலடிபட்ட சில முக்கிய இடங்களை இங்கே பார்க்கலாம்.


    அயோத்தி

    ராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இந்த இடம் தான், ராமர் பிறந்த ஊர். சிறு பிள்ளையாக அவர் விளையாடியதும், 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு, அவர் அரியணையில் அமர்ந்து அரசாட்சி செய்ததும் இந்த இடம்தான்.

    தமிழில் ராமாயணத்தை எழுதிய கம்பர். வட நாட்டில் ராமாயணத்தை எழுதிய துளசிதாசர், மகாத்மா காந்தி போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த, ராம நாமத்தின் ஊற்றுக்கண் இந்த இடமாகும்.

    வாரணாசியில் இருந்து 189 கிலோமீட்டர் தூரத்தி லும், லக்னோவில் இருந்து 128 கிலோமீட்டர் தொலை விலும் இருக்கிறது. அயோத்தி, வாரணாசி யில் இருந்து லக்னோ செல்லும் ரெயில் மார்க்கத் தில் இருக்கிறது அயோத்தி ரெயில் நிலையம்.


    பக்ஸர்

    விஸ்வாமித்திரர், தன்னுடைய யாகத்திற்கு இடையூறாக இருக்கும் தாடகையை அழிப்பதற்காக ராமரையும், லட்சுமணனையும் காட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் பலை, அதிபலை என்ற முக்கியமான இரண்டு மந்திரங்களை உபதேசித்த இடம் இதுவாகும்.

    சித்தாசிரமம்', 'வேத சிரா', 'வேத கர்ப்பா', 'க்ருஷ்' என்று வேறு பெயர்களாலும் இந்த இடம் அழைக்கப்படுகிறது. பாட்னாவில் இருந்து மொகல்சராய் செல்லும் ரெயில் மார்க்கத்தில் முக்கியமான ரெயில்நிலையம், பக்ஸர்.


    அகல்யா குண்ட்

    பல நூறு ஆண்டுகளாக கல்லாகக் கிடந்த அகல்யை, காட்டிற்குள் வனவாசம் வந்த ராமரின் காலடிபட்டு, சாப விமோசனம் பெற்றார். அந்த இடம் 'அகல்யா குண்ட்' என்று வழங்கப்படுகிறது.

    சீதாமடி-தர்பங்கா ரெயில் மார்க்கத்தில், கம்தவுல் என்ற ரெயில் நிலையத்தில் இறங்கி, மேற்கே 15 மைல் தொலைவு சென்றால் அஹியா என்ற இடம் உள்ளது. இங்கு கவுதம குண்ட் என்ற இடம் இருக்கிறது. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அகல்யா குண்ட் உள்ளது.


    ஜனக்பூர்

    மிதிலை நாட்டை ஆண்ட ஜனகரின், அரசாட்சி நடை பெற்ற இடம் இந்த ஜனக்பூர். இங்கிருந்த பெரிய மைதா னத்தில்தான். சீதையை மணப்பதற்காக சிவ தனுசை ராமர் முறித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சீதாமடி என்ற இடத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் ஜனக்பூர் உள்ளது.


    வால்மீகி ஆசிரமம்

    பெரும் வழிப்பறி கொள்ளையனாக இருந்து, பின் மனம் மாறி ராமபிரானின் காவியத்தை எழுதிய வால்மீகி முனி வர் வாழ்ந்த இடம் இதுவாகும். பிரயாகைக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்த இடம் உள்ளது.

    மேலும் இரு இடங்களையும் வால்மீகி ஆசிரமமாகக் கூறுகின்றனர். கான்பூர் அருகே பிடுரில் உள்ள கங்கை கரையிலும், சீதாமடி அருகேயும் வால்மீகி முனிவர் வசித்ததாக சொல்லப்படுகிறது.


    சித்திரக்கூடம்

    ராமர் வனவாசத்தில் முக்கிய இடம் இது.ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற போது, சீதை மற்றும் லட்சுமணனுடன் இந்த சித்திரக்கூடம் பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு அனுசுயா, அத்ரி, மார்க்கண்டேயர் ஆகிய ரிஷி பெருமக்களுடன் ராமரும் தவம் இயற்றியதாக ராமாணயம் சொல்கிறது.

    அலகாபாத்தில் இருந்து ஜபல்பூர் செல்லும் ரெயில் மார்க்கத்தில் மாணிக்பூர் ஜங்ஷன் உள்ளது. இங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சித்திரக்கூடம் ரெயில் நிலையத்தில் இறங்கி, இந்த பகுதிக்குச் செல்லலாம்.


    பஞ்சவடி

    அயோத்தியில் இருந்து தெற்கு நோக்கி பயணித்தராமபிரான், சில முனிவர்களின் வேண்டுகோள்படி ஓரிடத்தில் தங்க சம்மதிக்கிறார். அது ஐந்து ஆலமரக்கூட்டம் இருக்கும் இடம். எனவே அது பஞ்சவடி என்று அழைக்கப்பட்டது.

    இங்கிருந்துதான் சீதையை, ராவணன் கடத்திச் சென்றான் என்று ராமாயணம் சொல்கிறது. மும்பையில் இருந்து புசாவல் செல்லும் = ரெயில் தடத்தில், நாசிக் ரோட் என்ற பெரிய ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பஞ்சவடி இருக்கிறது.


    கிஷ்கிந்தா

    வாலியும், அவன் இறந்த பிறகு சுக்ரீவனும் அரசாட்சி செய்த வானர நகரம் இதுவாகும். கர்நாடகத்தில் இருந்து ஹூப்ளி - கதக் - பெல்லாரி ரெயில் வழித்தடத்தில் அமைந்த முக்கியமான ரெயில் நிலையம், ஹான்ஸ்பேட். இந்த இடத்தின் அருகேதான். கிஷ்கிந்தா ராஜ்யம் அமைந்திருந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


    ராமேஸ்வரம்

    ராமபிரான் இங்கிருந்துதான், இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்தார். பின்னர் வெற்றிக்கொடி நாட்டி திரும் பியதும், இங்குள்ள மணலில் சிவலிங்கம் ஒன்றை செய்து வழிபட்டார். அந்த மணல் லிங்கம்தான் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர் கோவிலின் மூலவராக இன்றளவும் உள்ளதாக தல புராணம் தெரிவிக்கிறது.

    • சோழவந்தானில் ராமநவமி திருக்கல்யாணம் நடந்தது.
    • கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ராம பக்த சபாவின் சார்பில் ராம நவமிவிழா 4 நாட்கள் நடந்தது. ராம நாம பாராயணத்துடன் விழா தொடங்கியது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை உஞ்சவிருத்தி நடைபெற்று ஒற்றை அக்ரகாரத்தில் இருந்து பெண்கள் வானவேடிக்கை, மேளதாளத்துடன் சீர்வரிசை எடுத்து இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோவில் முன்பு அமைந்திருக்கும் திருமண வைபவம் நடக்கும் மேடையில் வந்து சேர்ந்தனர். அங்கு சீதா கல்யாணம் மற்றும் ஆஞ்சநேயர் விழா நடந்தது. இன்று இரவு சுவாமி புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராம பக்த சபா நிர்வாகிகள் காசி விசுவநாதன், தலைவர் வரதராஜப் பண்டிட், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் மகாதேவன், உதவி தலைவர் ரமணி, இணைச்செயலாளர் விசுவநாதன் ஆகியோர் செய்துள்ளனர். விழாவில் மலையாளம் கிருஷ்ண அய்யர் சாரிட்டிஸ் வேத பாடசாலை, சீர்திருத்தினம் அய்யர் ரூரல் டெக்னாலஜி பவுண்டேசன் சார்பில் அன்னதானம் நடந்தது.

    எம்.வி.எம். குழுமத் தலைவரும், பா.ஜ.க. மாநில விவசாய அணி செயலாளருமான மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ண பகவான் ருக்மணி, சத்ய பாமாவுடன் காட்சி அளிக்கிறார்.
    • திருமாங்கல்ய தோஷ நிவர்த்திக்கு உரிய திருத்தலமாகும்.

    புதுவை முத்தியால்பேட்டை தெபேசன்பேட் வீதியில் வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண பகவான் ருக்மணி, சத்ய பாமாவுடன் காட்சி அளிக்கிறார்.

    நெசவு தொழில் செய்து வந்த பத்மசாலிய சமூகத்தினர் இதை உருவாக்கினர். முதலில் மூலிகைகளாலும் தங்க இழைகளாலும் உருவாக்கப்பட்ட கிருஷ்ணனின் படங்கள் வைக்கப்பட்டு இங்கு பஜனை நடந்து வந்தது. பின்னர் 1922-ல் வேணுகோபால சுவாமியாக சிலை அமைக்கப்பட்டது.

    இங்கு பத்மசாலியர்களின் குலதெய்வமான பாவண மகரிஷி மற்றும் அவரது மனைவி பத்ராவதி அம்மை ஆகியோருக்கும் சிலை உள்ளது. சந்தான கிருஷ்ணனின் உருவமான குழந்தை கிருஷ்ணனுக்கும் இங்கு சிலை வழங்கப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயருக்கு என தனி சன்னிதி உள்ளது. தமிழ், தெலுங்கு புத்தாண்டு நாட்களில் இங்கு விஷேச பூஜை நடைபெறும். ஆடி பூரம், பங்குனி மாத ராமநவமி, மார்கழி மாத ஏகாதசி அனுமன் ஜெயந்தி நாட்களிலும் இங்கு விசேஷ பூஜைகளை காண பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

    கிருஷ்ணஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் தாழி அலங்காரம் செய்யப்பட்டு உறியடி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு நடக்கிறது. மாசிமாத தீர்த்த வாரியில் வேணுகோபால சுவாமி உற்சவரும் கலந்து கொள்கிறார்.

    இந்த கோவில் திருமாங்கல்ய தோஷ நிவர்த்திக்கு உரியது ஆகும். மேலும் இங்கு சந்தான கிருஷ்ணரும் அருள்பாலிப்பதால் குழந்தை வரமும் வழங்கும் கோயில் என்கிற ஐதீகமும் உள்ளது. இங்கு உள்ள ஆஞ்சநேய சுவாமி நவக்கிரக தோஷ நிவர்த்தி வழங்குகிறார்.

    • ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும்.
    • இந்நாட்களில் விரதம் இருந்து ராமாயணம் படிப்பதும், சொற்பொழிவுகள் செய்வதும் உண்டு.

    ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும்.

    இது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நவமியும் புனர்வசு நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளில் வரும்.

    ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும். பத்து நாட்கள், முன் பத்து எனப் பெறும்.

    பிறந்த தினத்திலிருந்து கொண்டாடப்பெறும் பின் பத்து நாட்கள், பின் பத்து எனப்பெறும்.

    சில வைணவத் தலங்களில் இத்தினங்களை முன்பத்து, பின்பத்து என்று மிகவும் சிறப்பான திருவிழாவாகக் கொண்டாடுவார்கள்.

    இந்நாட்களில் விரதம் இருந்து ராமாயணம் படிப்பதும், சொற்பொழிவுகள் செய்வதும் உண்டு.

    பூஜைகளும் நிகழும்.

    ராமாயணம் படித்துப் பட்டாபிஷேகம் செய்து ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து பூர்த்தி செய்வார்கள்.

    பானகம், நீர்மோர், சந்தனம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவை வினியோகங்களாக அமையும்.

    விளக்கு ஏற்றும்பொழுது நாராயணனுக்கு உரிய நல்லெண்ணை ஊற்றி ஏற்றுவது சிறப்பாகும்.

    ராம நவமி விரதத்தை தவறாமல் கடைப் பிடிப்பவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும்.

    இது தவிர புரட்டாசி மாதத்திலும் ராமாயணம் முழுவதையும் ஒரு மாத காலத்திற்குப் படித்துப் பொருள் சொல்வதுண்டு.

    • சீதா-ராமருக்கு திருக்கல்யாண உற்சவத்தை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.
    • பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம் என பக்தி கோஷம் எழுப்பினர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலின் துணைக் கோவிலான ஸ்ரீகாளஹஸ்தி பட்டாபி ராமர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. அதையொட்டி உற்சவர்களான சீதா-ராமருக்கு பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மேடையில் எழுந்தருளச் செய்தனர்.

    முன்னதாக கணபதி பூஜை மற்றும் பல்வேறு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, சீதா-ராமருக்கு திருக்கல்யாண உற்சவத்தை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம் என பக்தி கோஷம் எழுப்பினர்.

    திருக்கல்யாண உற்சவத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, செயல் அலுவலர் எஸ்.வி நாகேஸ்வரராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநவமி, பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    சித்தூர்:

    சித்தூர் கோதண்டராமர் கோவிலில் நேற்று ராமநவமி, பிரம்மோற்சவ விழா தொடங்கியது. அதையொட்டி உற்சவர் கோண்டராமர் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ராமநவமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சித்தூர் கோதண்டராமர் கோவிலில் 11 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ராமநவமி, பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.

    நேற்று காலை கோதண்டராமர் கோவிலில் மூலவருக்கு சிறப்புப்பூஜைகள், ஆராதனை நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் கருடசேவை நடந்தது. உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளி சித்தூர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் ராம நவமியை முன்னிட்டு சித்தூர் கிரீம்ஸ்பேட்டையில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் காலை 8.30 மணியளவில் மூலவருக்கு அபிேஷகம், அலங்காரம், சிறப்புப்பூஜைகளும், காலை 9.30 மணியளவில் சீதா-ராமர் திருக்கல்யாணம் உற்சவமும், ராமர் பட்டாபிஷேகமும் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி பா.ஜனதா அலுவலகம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பா.ஜனதா மாநில செயலாளர் கோலா.ஆனந்த் தலைமை தாங்கினார். அலுவலக வளாகத்தில் உள்ள ராமர் உருவப்படத்துக்கு ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி பா.ஜனதாவினர் சிறப்புப்பூஜை செய்தனர். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

    • வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
    • பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றமும் நடந்தது.

    திருமலை:

    திருப்பதி மாவட்டம் சந்திரகிரி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணமும், நேற்று காலை 9.05 மணியில் இருந்து 10 மணி வரை விருஷப லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றமும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து ராமநவமியான நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை உற்சவர் கோதண்டராமர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் சீனிவாசலு, கோவில் ஆய்வாளர் ஹரிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×