search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாட்ஜிபிடி"

    • கேலரியில் உள்ள புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும்.
    • ஆன்-டிவைஸ் இன்டெலிஜென்ஸ் வழங்குவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாடு, WWDC நேற்றிரவு நடைபெற்றது. இதை துவக்கி வைத்து உரையாற்றிய ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஆப்பிள் சேவைகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய அம்சங்கள் குறித்து பேசினார்.

    இத்துடன் ஆப்பிள் நிறுவன சாதனங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பிராண்டிங்கில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், WWDC 2024 நிகழ்வில் ஆப்பிள் அறிவித்த புதிய சேவைகள் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

    ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்:

    சக்திவாய்ந்த, ஒருங்கிணைந்த, உள்ளுணர்வு கொண்ட, தனிப்பட்ட மற்றும் தனியுரிமை என ஐந்து மிக முக்கிய விஷயங்களை அடிப்படையாக கொண்டு ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவையின் கீழ் தரவுகளை எழுதுவது, பல்வேறு செயலிகளில் தரவுகளை மறு உருவாக்கம் செய்வது போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

     


    இத்துடன் மெசேஞ்சஸ், கீநோட், ஃபிரீஃபார்ம் மற்றும் பேஜஸ் போன்ற செயலிகளில் படங்களை உருவாக்கும் வசதி வழங்கப்படுகிறது. பயனர்கள் கிட்டத்தட்ட உண்மைக்கு நிகராக காட்சியளிக்கும் படங்களை பல்வேறு விதங்களில் உருவாக்க முடியும். இந்த படங்கள் பயனர்களின் கேலரியில் உள்ள புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும்.

    ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-இன் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், ஆன்-டிவைஸ் இன்டெலிஜென்ஸ் வழங்குவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது ஏ.ஐ. சேவையை சாதனத்தில் உள்ள சிப்செட் சார்ந்து வழங்கும்.

    ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சார்ந்த சிரி:

    ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், சிரி சேவையில் ஏ.ஐ. வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சிரி மொழிகளை முன்பை விட அதிக நேர்த்தியாத புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருக்கிறது. கூடுதலாக சிரி சேவையை மற்ற ஆப்பிள் நிறுவன செயலிகளுடன் ஒருங்கிணைக்கவும் முடியும். இதனால் சிரியிடம் ஒரு புகைப்படத்தில் பிரைட்னசை அதிகப்படுத்த வாய்ஸ் கமாண்ட் கொடுத்தாலே போதுமானது.

     


    இன்-ஆப் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள்:

    போட்டோஸ் ஆப்-இன் மெமரிஸ் அம்சம் தற்போது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மூலம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏ.ஐ. மூலம் செயலியில் உள்ள சிறந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாக தேர்வு செய்யப்படுகிறது. மேலும், புகைப்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்குவதற்கு புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    இதே போன்ற வசதி கூகுள் பிக்சல் மற்றும் கேலக்ஸி ஏ.ஐ. உள்ளிட்டவைகளில் ஏற்கனே கிடைக்கிறது. இதுதவிர மெயில் ஆப், மெசேஜஸ் ஆப் உள்ளிட்டவைகளிலும் ஏ.ஐ. வசதி புகுத்தப்பட்டுள்ளது.

    ஆப்பிள் சாதனங்களில் சாட்ஜிபிடி:

    தனது சாதனங்களில் ஏ.ஐ. வசதிகளை அதிகப்படுத்தும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவையை ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் சாட்ஜிபிடி சேவையை லாகின் செய்யாமல் பயன்படுத்த முடியும். இந்த வசதி பல்வேறு இதர ஆப்பிள் சாதனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது.

    ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சேவை ஆப்பிள் சிலிகான், நயூரல் எஞ்சின் உள்ளிட்டவைகளில் இயங்கும். இந்த ஏ.ஐ. அம்சங்கள் ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபேட், M1 மற்றும் அதன்பின் வெளியான சிப்செட் கொண்ட மேக் சாதனங்களில் பீட்டா வடிவில் வழங்கப்படுகிறது. 

    • கரினா என்ற பெண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பம் அவருக்கு சரியான பொருத்தமாக அடையாளம் காட்டியதாக அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
    • சரியான பொருத்தத்தை கண்டுபிடிக்க சுமார் 1 வருடம் ஆனதாக அவர் கூறினார்.

    ரஷியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆன்லைன் டேட்டிங்கிற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாட்ஜிபிடியை பயன்படுத்தி உள்ளார்.

    ரஷியாவை சேர்ந்த சாப்ட்வர் டெவலப்பரான அலெக்சாண்டர் ஜாதன் என்பவர் டிண்டர் செயலியில் தனக்கு பொருத்தமான பெண்களை கண்டறிய சாட்ஜிபிடி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் இதர பாட்களை பயன்படுத்தி உள்ளார்.

    இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பெண்களுடன் சாட் செய்த பிறகு கரினா என்ற பெண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பம் அவருக்கு சரியான பொருத்தமாக அடையாளம் காட்டியதாக அலெக்சாண்டர் கூறியுள்ளார். அவருக்கான சரியான பொருத்தத்தை கண்டுபிடிக்க சுமார் 1 வருடம் ஆனதாக அவர் கூறினார்.

    • டெக் உலக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
    • கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.

    உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனமான ஒபன்ஏஐ, கடந்த வெள்ளிக் கிழமை (நவம்பர் 17) அதன் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. ஒபன்ஏஐ நிர்வாக குழுவின் இந்த முடிவு டெக் உலகையே அதிர்ச்சி அடைய செய்தது.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்புக்கு டெக் உலக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே பணிநீக்க நடவடிக்கை குறித்து கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்று வந்துள்ளதாக தெரிகிறது.

    அந்த வகையில், கடந்த ஞாயிற்று கிழமை வரையிலும் நிர்வாக குழு ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்த நடவடிக்கையில் உறுதியாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, சாம் ஆல்ட்மேனை தனது நிறுவனத்திற்கு வரவேற்க தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார்.

    இதுதவிர ஒபன்ஏஐ நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் சாம் ஆல்ட்மேனுக்கு நெருங்கிய உயர் அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் நிர்வாக குழுவின் பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

    அதில், சாம் ஆல்ட்மேனின் பணிநீக்க நடவடிக்கையை திரும்ப பெறாவிட்டால், அனைவரும் சாம் ஆல்ட்மேனுடன் வெளியேற தயாராக இருப்பதாக தெரிவித்து கையொப்பமிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், சாம் ஆல்ட்மேனை மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க நிர்வாக குழு ஒப்புக்கொள்வதாக நேற்று (நவம்பர் 21) தகவல்கள் வெளியாகின.

    "பிரெட் டெய்லர், லேரி சம்மர்ஸ் மற்றும் ஆடம் டி ஏஞ்சலோ ஆகியோர் அடங்கிய நிர்வாக குழு ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக திரும்புவதற்கான ஒப்பந்தத்தை எட்டியிருக்கிறோம். இது தொடர்பான விவரங்களை சேகரிக்க இருக்கிறோம். இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்தமைக்கு நன்றிகள்," என ஒபன்ஏஐ நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

    "நான் ஒபன்ஏஐ-ஐ விரும்புகிறேன். இந்த குழு மற்றும் அதன் குறிக்கோளை ஒன்றாக வைத்துக் கொள்ள கடந்த சில நாட்களில் அனைத்தையும் செய்தேன். புதிய நிர்வாக குழு மற்றும் சத்யாவின் ஆதரவுடன், நான் ஒபன்ஏஐ-க்கு திரும்புவதில் ஆவலாக இருக்கிறேன். இத்துடன் மைக்ரோசாப்ட் உடன் பலமான கூட்டணியை உருவாக்க விரும்புகிறேன்," என்று சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக ட்விட்ச் நிறுவனர் எம்மெட் ஷியர் நியமிக்கப்பட்டார். தற்போது, ஒபன்ஏஐ தனது பழைய தலைமை செயல் அதிகாரியை மீண்டும் அழைத்துக் கொண்டிருப்பதால், எம்மெட் ஷியர் நியமிக்கப்பட்டது குறித்து ஒபன்ஏஐ சார்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

    • சேவைகளை அவசர அவசரமாக தயார் செய்து வெளியிட்டன.
    • தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிப்பு.

    தொழில்நுட்ப உலகில் அனைவரையும் திரும்பி பார்க்க செய்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒபன்ஏஐ. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி (ChatGPT) என்ற சேவை டெக் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மேலும், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிய சேவையை உருவாக்குவதில் பல நிறுவனங்களும் ஈடுபட துவங்கின. முன்னணி டெக் பிராண்டுகள் ஏற்கனவே உருவாக்கி வந்த சேவைகளை அவசர அவசரமாகவும் தயார் செய்து வெளியிட்டன.

    இந்த நிலையில், தொழில்நுட்ப உலகையே அதிரச் செய்யும் அறிவிப்பு ஒன்றை ஒபன்ஏஐ நிறுவனம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் திடீரென இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தையும் ஒபன்ஏஐ தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. இதோடு ஒபன்ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முராடி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    "ஆல்ட்மேனை பதவியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவை நிர்வாக குழு பெரும் ஆலோசனைக்கு பிறகே எடுத்தது. ஆலோசனையின் போது, ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்புகளில் தெளிவற்ற நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் நிர்வாக குழுவின் பணிகளில் இடர்பாடு ஏற்படலாம். இதன் காரணமாக ஒபன்ஏஐ நிறுவனத்தை அவர் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை நிர்வாக குழு இழந்துவிட்டது," என ஒபன்ஏஐ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, அதன் தலைமை செயல் அதிகாரி குறித்து இத்தகைய கருத்துக்களை தெரிவிப்பதும், திடீரென பதவியில் இருந்து விடுவிப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஆல்ட்மேன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கப்பட உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒபன்ஏஐ நிர்வாக குழு ஏற்றுக் கொள்ள முடியாத விஷயத்தை ஆல்ட்மேன் செய்திருக்க வேண்டும், அல்லது ஆல்ட்மேன் மற்றும் நிர்வாக குழு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்பட்டதும், ஒபன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். 

    • சிறுவன் உணவு பொருட்களை சாப்பிட ஆரம்பித்ததும் அவனது கடைவாய் பற்களில் மிகுந்த வலி உண்டாகி உள்ளது.
    • கடந்த 3 ஆண்டுகளில் 17 டாக்டர்களை பார்த்தும் சிறுவன் அலெக்சின் நோயை கண்டறிய முடியவில்லை.

    ஏ.ஐ. (ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் மருத்துவ துறையிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 4 வயது சிறுவனின் நோயை 17 டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சாட்ஜிபிடி தொழில்நுட்பம் கண்டுபிடித்து பதில் அளித்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த அலெக்ஸ் என்ற 4 வயது சிறுவன் கடந்த 3 வருடங்களாக கடுமையான பல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளான். மேலும் அந்த சிறுவனின் வளர்ச்சியும் குன்றிய நிலையில் நோயோடு போராடி உள்ளான்.

    இதனால் சிறுவனை அவனது தாயார் கர்ட்னி பல டாக்டர்களிடமும் அழைத்து சென்று காட்டியுள்ளார். ஆனால் டாக்டர்கள் பலரும் அந்த சிறுவனுக்கு எந்த வகையான நோய் தாக்கி உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை.

    சிறுவன் உணவு பொருட்களை சாப்பிட ஆரம்பித்ததும் அவனது கடைவாய் பற்களில் மிகுந்த வலி உண்டாகி உள்ளது.

    அதற்கான காரணம் என்ன என்பதை டாக்டர்களால் உறுதியாக கண்டறிந்து கூற முடியவில்லை. மாறாக ஒவ்வொரு டாக்டரும் மற்ற டாக்டர்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளில் 17 டாக்டர்களை பார்த்தும் சிறுவன் அலெக்சின் நோயை கண்டறிய முடியவில்லை.

    இதனால் விரக்தி அடைந்த சிறுவனின் தாயார் கர்ட்னி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஓபன் ஏ.ஐ.-ன் சாட்ஜிபிடி உதவியை நாடி உள்ளார்.

    அதில் அவரது மகனின் நோய்க்கான அறிகுறி மற்றும் இதுவரை டாக்டர்களிடம் காட்டிய மருத்துவ அறிக்கைகள் குறித்த அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

    இதைத்தொடர்ந்து சிறுவனின் நோயை சாட்ஜிபிடி தொழில்நுட்பம் கண்டறிந்து கூறியுள்ளது. அதாவது சிறுவன் அலெக்ஸ் 'டெதர்ட் கார்டு சிண்ட்ரோம்' எனப்படும் அரிய நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சாட்ஜிபிடி பரிந்துரைத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து சிறுவனை ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் அழைத்து சென்று உள்ளார். மேலும் அலெக்சின் எம்.ஆர்.ஐ. படங்களையும் காட்டிய போது சிறுவனின் நோய் காரணங்கள் கண்டறியப்பட்டு அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த சிறுவன் குணமடைந்து வருகிறான்.

    • சாட்ஜிபிடி வழங்கிய உடற்பயிற்சி ஆலோசனையை பின்பற்றி அமெரிக்காவை சேர்ந்த கிரெக் முசன் என்பவர் 3 மாதங்களில் 11 கிலோ எடையை குறைத்துள்ளார்.
    • தூங்கி எழுந்ததும் கதவுக்கு முன்னால் காலணிகளை பார்க்கும் போது ஜாக்கிங் செல்ல வேண்டும் என எண்ணம் வரும்.

    ஏஐ (ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ்) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் தடம் பதிக்க தொடங்கி விட்டது. இதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி வழங்கிய உடற்பயிற்சி ஆலோசனையை பின்பற்றி அமெரிக்காவை சேர்ந்த கிரெக் முசன் என்பவர் 3 மாதங்களில் 11 கிலோ எடையை குறைத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில், எனது உடல் எடையை எப்படி குறைக்கலாம் என சாட்ஜிபிடியிடம் கேட்ட போது, அது எனக்கு பல்வேறு எளிய ஆலோசனைகளை வழங்கியது. அதில் எனக்கு பிடித்தது எது என்றால், தூங்குவதற்கு முன்பாக நான் உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் காலணிகளை கதவுக்கு முன்னால் வைத்துவிட்டு உறங்க செல்ல வேண்டும் என்பது தான். ஏனென்றால் உடல் எடை குறைப்பில் முக்கியமானது, காலையில் ஜாக்கிங் செல்வதுதான். தூங்கி எழுந்ததும் கதவுக்கு முன்னால் காலணிகளை பார்க்கும் போது ஜாக்கிங் செல்ல வேண்டும் என எண்ணம் வரும். மேலும் நாம் உடற்பயிற்சி செய்தால் பசி அதிகரிக்கும். இதனால் நம்மையும் அறியாமல் அதிக உணவு எடுத்து கொள்வோம். எனவே சுலபமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என சாட் ஜிபிடி அறிவுறுத்தியது. அதை பின்பற்றி 3 மாதத்தில் 11 கிலோ எடை குறைத்துள்ளேன் என கூறி உள்ளார்.

    • அதிவேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் செயலி என்று ஆய்வாளர்கள் சாட்ஜிபிடி செயலியை குறிப்பிடுகின்றனர்.
    • அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க பாராளுமன்றமும் புதிய விதிமுறைகளை கோடிட்டுக் காட்ட போராடி வருகிறது.

    செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்டு உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயலியை, சென்ற வருட இறுதியில் சந்தையில் அறிமுகப்படுத்தி பெரும் வெற்றியடைந்து பிரபலமாகியுள்ளது ஓபன்ஏஐ (OpenAI) மென்பொருள் நிறுவனம். இதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன்.

    இந்த நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் (Federal Trade Commission) ஒரு விரிவான விசாரணையை துவங்கியுள்ளது.

    மக்களின் தனிப்பட்ட பெயர் மற்றும் தரவுகளை அவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் விதத்தில் ஓபன்ஏஐ பயன்படுத்துவதாக கூறப்படுவதால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை அந்நிறுவனம் மீறுகிறதா என்பதை எஃப்.டி.சி. ஆய்வு செய்கிறது.

    மிக அதிக எண்ணிக்கையிலான மக்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, அவற்றை செயற்கை நுண்ணறிவின் மூலம் தேவைப்படும் விதத்தில் பாகுபடுத்தி சாட்ஜிபிடி உருவாக்கப்பட்டது. மாதிரிகள் (samples) சேகரிப்பினால் எழக்கூடிய அபாயங்களை எப்படி அந்நிறுவனம் சரி செய்கிறது என்பது பற்றிய பதிவுகளை தெரிவிக்கும்படி 20-பக்க கோரிக்கையை எஃப்.டி.சி. அனுப்பியிருக்கிறது.

    அதிவேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் செயலி என்று ஆய்வாளர்கள் சாட்ஜிபிடி செயலியை குறிப்பிடுகின்றனர்.

    எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பெருமளவு அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட இருப்பதால் அது குறித்த கொள்கையை வரையறுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த ஒழுங்குமுறை வரையறைகள் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

    ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஆரம்ப வெற்றியானது சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களிடையே இதை விட சிறப்பான ஒரு செயலியை உருவாக்க ஒரு போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது.

    அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க பாராளுமன்றமும் புதிய விதிமுறைகளை கோடிட்டுக் காட்ட போராடி வருகிறது. செயற்கை நுண்ணறிவுக்கான ஒழுங்குமுறை பற்றிய விவாதங்களில் சாம் ஆல்ட்மேன், ஒரு செல்வாக்கு மிக்க நபராக உருவெடுத்திருக்கிறார். அமெரிக்காவில் எம்.பி.க்கள் மட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருடனும் நெருக்கமானவராக இருக்கிறார்.

    இந்நிலையில் அவர் நிறுவனம் எஃப்.டி.சியின் மூலம் ஒரு புதிய சோதனையை எதிர்கொள்கிறது.

    ஏற்கனவே இருக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று எஃப்.டி.சி. பலமுறை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

    ஒரு நிறுவனம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறுவதாக எஃப்.டி.சி. கண்டறிந்தால், அது அந்நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாம் அல்லது அந்நிறுவனம் அதன் தரவை எவ்வாறு கையாள வேண்டும் என்று ஆணையிடலாம்.

    எஃப்.டி.சி.யின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபன்ஏஐ, "முழு ஒத்துழைப்பு கொடுப்போம்" என மட்டும் கூறியுள்ளது.

    நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாக கூறி மெட்டா, அமேசான் மற்றும் ட்விட்டருக்கு எதிராக எஃப்.டி.சி. பெரும் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • எண்ணற்ற நபர்களின் பதிப்புரிமை மற்றும் தனியுரிமையை பெருமளவில் மீறியிருக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
    • வலைதளங்களில் உள்ள கோடிக்கணக்கான வார்த்தைகளை வைத்து இந்த செயலியின் மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு சட்ட நிறுவனம், சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் செயலியை உருவாக்கிய ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருக்கிறது.

    ஓபன்ஏஐ நிறுவனம் அதன் மென்பொருள் தொழில்நுட்ப செயலியின் உருவாக்கத்திற்காக, இணையத்திலிருந்து, "டேட்டா ஸ்கிரேப்பிங்" (Data Scraping) என்ற இணையதளத்தில் உள்ள தகவல்களை எடுத்து பயன்படுத்தும் வழிமுறையை கையாண்டு, எண்ணற்ற நபர்களின் பதிப்புரிமை மற்றும் தனியுரிமையை பெருமளவில் மீறியிருக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

    கோடிக்கணக்கான இணைய பயனர்களின் சமூக ஊடக கருத்துகள், வலைப்பதிவு இடுகைகள், விக்கிபீடியா வலைதளத்தின் கட்டுரைகள் மற்றும் குடும்ப சமையல் குறிப்புகள் போன்ற எண்ணற்ற தகவல்களை ஓபன்ஏஐ பயன்படுத்தும் போது அவர்களின் உரிமைகளை அது தன்னிச்சையாக மீறியிருக்கிறதா, இல்லையா என்கின்ற ஒரு புதிய கோட்பாட்டை இந்த வழக்கு பரிசோதிக்க முயல்கிறது என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இவ்வழக்கின் பின்னணியில் உள்ள சட்ட நிறுவனமான கிளார்க்சன், தரவு மீறல்கள் முதல் தவறான விளம்பரம் வரையிலான பிரச்சனைகளில் பெரிய குழுவின் சார்பாக வழக்கு தாக்கல் செய்வதில் அனுபவமிக்க நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான ரியான் கிளார்க்சன் கூறும்போது, "அதிக சக்தி வாய்ந்த இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக, தங்களின் தகவல்கள் திருடப்பட்டவர்கள் மற்றும் வணிக ரீதியாக தங்கள் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இவ்வழக்கில் பிரதிநிதித்துவம் கிடைத்திட எங்கள் நிறுவனம் விரும்புகிறது" என்றார்.

    மேலும், "வலைதளங்களில் உள்ள கோடிக்கணக்கான வார்த்தைகளை வைத்து இந்த செயலியின் மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வார்த்தைகளுக்கு உண்மையான உரிமையாளர்கள், வலைதளங்களில் தங்கள் பதிவுகளை வெளியிடும் நபர்கள்தான். அவர்களில் எவரும் இத்தகைய ஒரு நிறுவனம் தங்கள் லாபத்திற்காக இவற்றை பயன்படுத்தி கொள்ள ஒப்புதல் வழங்கவில்லை" என ரியான் கூறியிருக்கிறார்.

    குறுகிய காலங்களிலேயே மிகவும் பிரபலமடைந்து விட்ட இந்த நிறுவனத்திற்கெதிரான இந்த வழக்கின் போக்கை தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    • கல்வித்துறை சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள புதிய முயற்சி.
    • ஏஐ சாட்பாட் ஒபன்ஏஐ நிறுவனத்தின் அதிநவீன சாட்ஜிபிடி 4 மாடல்களை தழுவி உருவாக்கப்படுகிறது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை இதனை உண்மையாக்கும் வகையில் உள்ளது.

    சாட்ஜிபிடி சேவையின் திறன்களை கொண்ட ஏஐ சாட்பாட் ஒன்றை கணினியியல் துறை பாடப்பிரிவுக்கு ஆசிரியராக நியமனம் செய்ய ஹார்வார்டு பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. இதுபற்றிய திட்டமிடல் பணிகளில் ஈடுபட்டு வரும் வரிவுரையாளர்கள், ஏஐ சாட்பாட் ஒபன்ஏஐ நிறுவனத்தின் அதிநவீன சாட்ஜிபிடி 3.5 அல்லது ஜிபிடி 4 மாடல்களை தழுவி உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

     

    கல்வித்துறை சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதன்படி ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ஏஐ சாட்பாட் டீச்சர் செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட இருக்கிறது.

    ''கணினியியல் துறையின் குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு ஏஐ சாட்பாட் 1:1 ஆசிரியர்: மாணவர் வீதம் வழங்கப்பட இருக்கிறது. மாணவர்களுக்கு இது தொடர்பான மென்பொருள் டூல்கள் வழங்கப்பட இருக்கிறது. இவை 24/7 நேரமும் பயன்படும் என்பதோடு, மாணவர்களுக்கு சிறப்பாகவும் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் கணினியியல் துறையை சேர்ந்த பேராசிரியர் டேவிட் மலன் தெரிவித்துள்ளார்.

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதித்து வருகிறார்.
    • வேலைவாய்ப்புகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை என்றார்.

    "செயற்கை நுண்ணறிவு கருவிகள், கால்குலேட்டர்கள் செய்ததை போல் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும், ஆனால் கற்றலுக்கு மாற்றாக அமையாது" என்று சாட்ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ கீயோ பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்பத்தை ஆதரித்து மாணவர்களிடம் பேசும்போது இவ்வாறு அவர் கூறினார்.

    "அநேகமாக வீட்டுப்பாடமாக மாணவர்கள் செய்யும் கட்டுரைகள் எழுதுதல் போன்றவை இனி முன்பு இருந்தது போல் ஒரே மாதிரியாக இருக்காது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

    "எங்களிடம் கல்விக்காக ஒரு புதிய கருவி உள்ளது. வார்த்தைகளுக்கான கால்குலேட்டர் போன்றது" என்று கூறிய அவர், "நாம் மக்களுக்கு கற்பிக்கும் விதம் மாற வேண்டும். அதே போன்று நாம் மாணவர்களை மதிப்பிடும் விதமும் மாற வேண்டும்" என தெரிவித்தார்.

    மனிதர்களை போன்ற உரையாடல்கள், எழுத்து மற்றும் மொழிபெயர்ப்புகளை நொடிகளில் உருவாக்கும் திறனுடைய சாட்ஜிபிடி தொழில்நுட்பம், உலக மக்களின் கற்பனை ஆற்றலை மிகவும் கவர்ந்திழுத்திருக்கிறது. ஆனால், அதே சமயம் இது கல்வி உட்பட பல துறைகளில் பலருக்கு கவலைகளை எழுப்பியுள்ளது.

    குறிப்பாக கல்வித்துறையில் இதன் தாக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பலர், அனேக மாணவர்கள் தாங்களாக சிந்தித்து அசலான ஒரு படைப்பை உருவாக்குவதற்கு பதில் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதையே விரும்ப தொடங்கி விடுவார்கள் என்றும் அதே போன்று, இந்த தொழில்நுட்பத்தை ஒரு சில மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கி விடலாம் என்றும் கவலைப்படுகிறார்கள்.

    உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானிய தலைநகருக்கு ஆல்ட்மேன் வருகை தந்திருக்கிறார். அங்கு அவர் வணிக மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து, ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றை கட்டுப்படுத்த தேவைப்படும் விதிமுறைகளை வகுப்பது பற்றியும் விவாதித்து வருகிறார்.

    ஏ.ஐ.க்கான விதிமுறைகளை உருவாக்குமாறு அரசியல் தலைவர்களை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அவர், "இந்த தொழில்நுட்பம் தவறாகப் போனால், முற்றிலும் தவறாகிவிடும்" என்றும் எச்சரித்திருக்கிறார்.

    "இன்னும் இரண்டு ஆண்டுகளில் நம்மிடம் இருக்கப் போகும் கருவிகளுடன் ஒப்பிடும்போது நம்மிடையே தற்பொழுது உள்ள கருவிகள் மிகவும் பழமையானவை" என்று கூறிய அவர், இந்த தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து மீண்டும் வலியுறுத்தினார்.

    ஏ.ஐ.க்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்புகள் குறித்து தனது அச்சத்தை மீண்டும் வலியுறுத்திய ஆல்ட்மேன், உலகத் தலைவர்களைச் சந்தித்த பிறகு, தாம் நேர்மறையாக உணர்ந்ததாக கூறினார். இருப்பினும் அவர் இச்சந்திப்புகள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

    "எவ்வளவு தவறு நடந்தாலும், நாங்கள் மிகவும் பொறுப்பாக இருப்போம்," என்று அவர் கூறினார்.

    "சாட்ஜிபிடியினால் ஒரு சில வேலைகள் பறிபோய்விடும்" என்ற கருத்தை அவர் ஒப்புக்கொண்ட போதிலும், மக்கள் எதிர்பார்ப்பது போல் வேலைவாய்ப்புகளில் பெரிய அளவில் தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை என்றார். புதிய வகை வேலைகள் உருவாகும் எனவும் அவர் கூறினார்.

    • ஓபன்ஏஐ நிறுவத்தின் சாட்ஜிபிடி ஏற்கனவே செயலி வடிவில் கிடைக்கிறது.
    • ஏ.ஐ. சாட்பாட் இன்ஃபினிக்ஸ் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஃபோலக்ஸ்-இல் ஒருங்கிணைக்கப்படும்.

    சாட்ஜிபிடி, சாட்பாட் மூலம் ஜெனரேடிவ் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஓபன்ஏஐ நிறுவனம் அதிக பிரபலமடைய செய்திருக்கிறது. சந்தையில் புதுவரவு தொழில்நுட்பம் என்ற போதிலும், இந்த நிறுவனம் தொடர்ச்சியாக அதனை மேம்படுத்தியும், அதிக திறன்களை வழங்கியும் இந்த சேவையை நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றி இருக்கிறது.

    இதன் காரணமாக பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் சாட்ஜிபிடி சேவை ஏராளமான டூல்களில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் இன்ஃபினிக்ஸ் நோட் 30 சீரிஸ் மாடலிலும் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி இந்த ஏ.ஐ. சாட்பாட் இன்ஃபினிக்ஸ் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஃபோலக்ஸ்-இல் (Folax) ஒருங்கிணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து பிரபல டிப்ஸ்டரான ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், தனது சாதனங்களில் சாட்ஜிபிடி சேவையை ஒருங்கிணைக்கும் முதல் ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற பெருமையை இன்ஃபினிக்ஸ் நிறுவனம் பெற இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

    "ஓபன்ஏஐ நிறுவத்தின் சாட்ஜிபிடி ஏற்கனவே செயலி வடிவில் கிடைக்கிறது. எனினும், சாட்ஜிபிடி சேவையை மொபைலில் வழங்கும் சம்பவம் சிறப்பான ஒன்றாகும். ஃபோலக்ஸ் போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் உடன் ஒருங்கிணைக்கும் போது, சாட்ஜிபிடி ஆப்பிள் நிறுவனத்தின் சிரி-க்கு கடும் சவாலை ஏற்படுத்தும்" என்று டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு ஒருங்கிணைப்பது சுவாரஸ்யம் நிறைந்ததாகவும், வாய்ஸ் அசிஸ்டண்ட் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் இருக்கும் என்று தெரிகிறது. இன்ஃபினிக்ஸ் சாதனத்தில் சாட்ஜிபிடி வாய்ஸ் அசிஸ்டண்ட் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் ரெக்கார்டிங்கை ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டு உள்ளது. வாய்ஸ் அசிஸ்டண்ட் தனக்கென சொந்த அவதார் கொண்டிருக்கிறது. இதனை ஆக்டிவேட் செய்ய மைக்ரோபோன் பட்டனை அழுத்திப்பிடித்தாலே போதுமானது.

    ஜூன் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள இன்ஃபினிக்ஸ் நோட் 30 ஸ்மார்ட்போனில் சாட்ஜிபிடி சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இன்ஃபினிக்ஸ் நோட் 30 மாடலில் 6.78 இன்ச் IPS LTPS ஸ்கிரீன் இன்ச் HD+ 120Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    இத்துடன் 108MP பிரைமரி கேமரா, எக்ஸ் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 13, பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஜெபிஎல் சார்ந்த டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகின்றன. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஜூன் 14 ஆம் தேதி தெரியவரும். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.
    • சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது.

    தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் நடத்தப்படும் TSPSC தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏழு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

    குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவர் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. உதவியோடு இயங்கும் சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    பதில்களை பெற்றதோடு, அவற்றை ப்ளூடூத் இயர்போன் மூலம் மற்ற தேர்வர்களுக்கும் தெரிவித்துள்ளார். சாட்ஜிபிடி போன்று அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு, வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் நாட்டிலேயே முதல் முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு பேருக்கு பதில் அனுப்பிய பூலா ரமேஷ் என்ற நபரை புலனாய்வு படையினர் விசாரணை செய்தது.

    ரமேஷ் என்ற நபர், தேர்வு தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே வினாத்தாளை எடுத்து, சாட்ஜிபிடி சேவை மூலம் பதில்களை பெற்றுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு தேர்வர்களும், தேர்ச்சி பெறுவதற்காக ஆளுக்கு ரூ. 40 லட்சம் வரை வழங்க தயாராக இருந்துள்ளனர். அதன்படி மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் ரமேஷ் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட உதவியிருக்கிறார்.

    தொடர்ந்து இலவசமாகவே கிடைப்பதால், ஏ.ஐ. டூல்களால் ஏற்படும் அபாயம் குறித்த கவலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. சாட்ஜிபிடி மற்றும் மைக்ரோசாஃப்ட் பிங் உள்ளிட்ட ஏ.ஐ. டூல்கள் தற்போது செயலி வடிவிலேயே கிடைக்கின்றன. ஏ.ஐ. டூல்கள் ஏராளமான பலன்களை வழங்கும் போதிலும், இவை ஏற்படுத்தும் அபாயங்களும் அதிகமாகவே உள்ளன.

    ×