என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரிசி கொம்பன் யானை"
- மாஞ்சோலை எஸ்டேட் நோக்கி நகர்கிறது
- யானை கூட்டத்துடன் சேர்ந்து சுற்றித்திரிகிறது
நாகர்கோவில் :
தேனி மாவட்டம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பிடிபட்ட யானையை நெல்லை, குமரி மாவட்ட எல்லை பகுதியான முத்துகுளிவயல் பகுதியில் விட்டனர். விடப்பட்ட அரிசிகொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு யானையை தினமும் கண்காணித்து வந்தனர். யானையை விடப்பட்ட நாள் முதல் ஒரு மாத காலத்திற்கு அதே இடத்திலேயே வசித்து வந்தது.
இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை மெலிந்து காணப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை அந்த பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து உலா வருவது போன்ற காட்சிகளும் வெளியானது. இருப்பினும் வனத்துறையினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அரிசி கொம்பன் யானை விடப்பட்ட நாள் முதல் தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்காமல் காணப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரங்களாக யானை தினமும் ஓய்வின்றி 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி திரிகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து அரிசி கொம்பன் யானை சுற்றி திரிவது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை விடப்பட்ட பகுதியில் இருந்து நாலுமூக்கு பகுதிக்கு வந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வாழைகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். தற்பொழுது அரிசி கொம்பன் யானை அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை எஸ்டேட்டை நோக்கி நகர்ந்து வருவதா கவும் தகவல் வெளியாகி உள்ளது.
மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலா ளர்கள் தங்கி உள்ளனர். அரிசி கொம்பன் யானை தற்போது அங்கு நகர்ந்து வருவதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட வனஅதிகாரி இளையராஜா கூறுகையில், அரிசி கொம்பன் யானை விடப்பட்ட இடத்தில் தான் கடந்த சில மாதங்களாக சுற்றி திரிந்தது. முதலில் தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நடந்த யானை தற்போது 14 கிலோமீட்டர் தூரம் வரை தினமும் நடக்கிறது.
அந்த பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து அது உலா வருகிறது. யானையை தினமும் வனத்துறையினர் கண் காணித்து வருகிறார்கள் என்றார்.
- தேனியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை கடந்த ஜூன் 5-ந்தேதி களக்காடு பகுதியில் விடப்பட்டது.
- அரிசி கொம்பன் யானையை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவில்:
கேரளா சின்னக்கானல் பகுதியிலும், தேனி மாவட்டம் குமுளி பகுதியிலும் அரிசி கொம்பன் யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பன் யானையை பிடித்தனர்.
பின்னர் அரிசி கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் அப்பர் கோதையாறு பகுதியில் கொண்டு விட்டனர். அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை அந்த பகுதியிலேயே சுற்றித்திரிகிறது. முத்துக்குளி வயல் பகுதியில் இயற்கை உணவு அதிகம் கிடைத்து வரும் நிலையில் அங்கேயே யானை உள்ளது. விடப்பட்ட இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே யானை சுற்றி வருகிறது.
யானை கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு நெல்லை, குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கால்நடை மருத்துவர்களும், வனத் துறை ஊழியர்களும் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
இதற்கு வனத்துறையினர் யானையின் உடல் மாற்றத்திற்கு காரணம் அதனுடைய உணவு பழக்க வழக்கமே என்று தெரிவித்திருந்தனர். அரிசி கொம்பன் யானை சுற்றி வரும் பகுதியில் இருந்து சிறிது தொலைவில் குட்டி யானை உட்பட 3 யானைகள் உள்ளது. அந்த யானையுடன் அரிசி கொம்பன் யானையை இணைக்கவும் வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
அரிசி கொம்பன் யானை மிகவும் ஆரோக்கியத்துடன் தனது வாழ்விடத்தில் வசதியாக உள்ளதாக மாநில வனத்துறை செயலாளர் சுப்ரியா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து களக்காடு சரணாலயத்தின் துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை கடந்த ஜூன் 5-ந்தேதி களக்காடு பகுதியில் விடப்பட்டது. கடந்த வாரங்களில் பெரும் மாற்றத்தை அடைந்துள்ளது. கடந்த காலங்களில் தனது உணவிற்காக அரிசி மற்றும் பயிர்களை சாப்பிட்டு வந்த யானையானது காட்டுப் பகுதியில் விடப்பட்ட பின்பு 20 நாட்களாக மூணாறு வனப்பகுதி போன்ற வாழ்விடம் களக்காட்டிலும் உள்ளதால் நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ள இயற்கையான உணவை எடுத்துக் கொண்டும் சுதந்திரமாக உலாவியும் வருகிறது.
அரிசி கொம்பன் யானையை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். களக்காடு சூழலுக்கு ஏற்றவாறு யானையை பழக்கப்படுத்த வனத்துறை மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அரிசி கொம்பன் யானையை தினந்தோறும் கண்காணித்து வரும் களப் பணியாளர்கள் யானை நல்ல ஆரோக்கியமாகவும் நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- யானையானது நன்றாக உணவு மற்றும் தண்ணீர் எடுத்து கொள்கிறது.
- வனத்துறை கால்நடை டாக்டர்களின் கண்காணிப்பிலேயே யானை தொடர்ந்து இருந்து வருகிறது.
நெல்லை:
கேரளாவிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வன சரகத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.
அரிசி கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோகாலர் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றித்திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, யானையை டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தினமும் யானை சாப்பிடும் உணவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானை ஏற்கனவே இருந்த சீதோசண நிலையில் இருந்து தற்பொழுது புதிய சீதோசண நிலைக்கு வந்துள்ளது. அதன் காரணமாக உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.
இந்நிலையில் யானையின் மெலிந்த உடல் குறித்த புகைப்படங்களின் உண்மை தன்மை குறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறியதாவது:-
அரிசி கொம்பன் யானை நலமுடன் உள்ளது. மெலிந்த நிலையில் இருந்தாலும், உடல் உறுப்புகள் நல்ல நிலையிலேயே உள்ளது. முன்பு அரிசி மட்டுமே சாப்பிட்டு வந்ததால் உடல் உப்பிசமாக காணப்பட்டது. தற்போது காட்டு உணவு, புல் வகைகளை சாப்பிடுவதால் வனவிலங்குகளுக்கே உரித்தான உடல் வாகுக்கு அரிசி கொம்பன் வந்து கொண்டிருக்கிறது. காட்டு விலங்குகள் இப்படித்தான் இருக்கும்.
யானையானது நன்றாக உணவு மற்றும் தண்ணீர் எடுத்து கொள்கிறது. நன்றாக நடக்கிறது. வனத்துறை கால்நடை டாக்டர்களின் கண்காணிப்பிலேயே யானை தொடர்ந்து இருந்து வருகிறது. தொலைதூரத்தில் இருந்து அதாவது 100 மீட்டர் தொலைவில் இருந்து புகைப்படம் எடுத்ததால் யானை உடல் மெலிந்து காணப்படுவதைபோல் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரேடியோ காலர் கருவி மூலம் நெல்லை மற்றும் குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
- அரிசி கொம்பன் யானையின் உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
நாகர்கோவில்:
கேரள மாநிலம் சின்னக்கானல் பகுதியிலும் தமிழகத்தின் தேனி மாவட்டம் குமுளி பகுதியிலும் அரிசி கொம்பன் யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.
இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பன் யானையை பிடித்தனர். பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டன் துறை புலிகள் சரணாலயத்தில் அப்பர் கோதையாறு பகுதியில் கொண்டுவிட்டனர்.
அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட யானை அந்தப் பகுதியிலேயே சுற்றி திரிந்து வருகிறது. முத்துக்குளிவயல் பகுதியில் இயற்கை உணவுகள் அதிக அளவு கிடைத்து வருகிறது. தண்ணீரும் கிடைப்பதால் யானை அந்த பகுதியை விட்டு நகராமல் அங்கேயே உள்ளது. விடப்பட்ட இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே யானை சுற்றி வருகிறது.
யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் கருவி மூலம் நெல்லை மற்றும் குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். கால்நடை மருத்துவர்கள், வனத்துறை ஊழியர்கள் அங்கேயே முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அரிசி கொம்பன் யானையின் உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. யானையின் உடல் மாற்றத்திற்கு காரணம் அதனுடைய உணவு பழக்க வழக்கமே என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஏற்கனவே அரிசி கொம்பன் யானை அரிசி, வெல்லம், கரும்பு போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தது. தற்பொழுது விடப்பட்டுள்ள பகுதியில் இயற்கை உணவை மட்டும் சாப்பிட்டு வருவதால் உடல் மெலிந்திருப்பதாக தெரிவித்தனர். யானையின் சாணத்தை மருத்துவ குழுவினர் தினமும் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். யானை உட்கொள்ளும் உணவு சரியான முறையில் செரிமானம் ஆகி உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. யானையின் உடல் குன்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி கொம்பன் யானையை மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். ஒரு சில வாரங்களில் யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் அரிசி கொம்பன் யானை ஏற்கனவே சாப்பிட்டு வந்த அரிசி, கரும்பு, வெல்லம் போன்ற உணவுப் பொருட்கள் கிடைக்காததால் அது மீண்டும் ஊருக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதை தடுத்து நிறுத்த வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அரிசி கொம்பன் யானையை பொருத்தமட்டில் தீயை பார்த்தால் மட்டுமே அங்கிருந்து சென்றுவிடும் என்று கூறப்படுகிறது. ஊருக்குள் வரும் வழித்தடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு அந்த பகுதிக்கு யானை வரும் போது தீயை வைத்து யானையை மீண்டும் காட் டுக்குள் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரிசி கொம்பன் யானையின் உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்று சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உணவுப் பழக்க வழக்கத்தின் காரணமாக உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவது இயற்கை தான். தற்பொழுது அரிசி கொம்பன் யானை இயற்கையான உணவை சாப்பிட்டு வருகிறது. தினமும் யானையை கண்காணித்து வருகிறோம். ஏற்கனவே 2 முறை மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்து காட்டுக்குள் கொண்டு விட்டு உள்ளோம். யானை விடப்பட்ட ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் தான் சுற்றி வருகிறது. திட காத்திரமாக நல்ல நிலையில் அரிசி கொம்பன் யானை உள்ளது என்றார்.
- யானை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.
நாகர்கோவில்:
கேரளா எல்லை பகுதிகளிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வன சரக்கத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது. காட்டுக்குள் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை குடியிருப்பு பகுதியில் வரக்கூடும் என்பதால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அரிசி கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர்கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பர் கோதையாறு பகுதியில் அரிசி கொம்பன் யானைக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைத்து வருவதால் அந்த பகுதியிலேயே யானை சுற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றித்திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இது யானை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அரிசி கொம்பன் யானை மூணாறு பகுதியில் பிறந்தது. அதன் பிறகு தேனி பகுதியில் இருந்து தற்போது அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ளது.
அப்பர் கோதையாறு பகுதியில் யானைக்கு தேவையான தண்ணீர், உணவு வகைகள் கிடைக்கிறது. தினமும் யானையை டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தினமும் யானை சாப்பிடும் உணவு போன்றவையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையின் சாணத்தையும் டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். யானை ஏற்கனவே இருந்த சீதோசண நிலையில் இருந்து தற்பொழுது புதிய சீதோசண நிலைக்கு வந்துள்ளது. அதன் காரணமாக உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.
அதை டாக்டர் குழுவினர் கண்காணித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 14 நாட்களாக 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே யானை சுற்றி வருகிறது. அரிசி கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்கு வரும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்பொழுது கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் மேல் உள்ள கோதை ஆற்றின் பிறப்பிடம் அருகே வனப்பகுதியில் தான் அரிசி கொம்பன் யானை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரிசிக்கொம்பன் காதில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
- அரிசிக்கொம்பனை மீண்டும் கேரள வனத்திலேயே விட வேண்டும் என கொச்சியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் ரேஷன் கடைகளை குறி வைத்து தாக்கி அரிசியை சாப்பிட்டதால் அரிக்கொம்பன் என்ற பெயர் பெற்ற யானை, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் அதனை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் பெரியார் வன காப்பகத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன், தமிழகத்தின் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அரிசிக்கொம்பன் என்ற பெயருடன் மக்களை அச்சுறுத்தியது. பின்னர் பலத்த போராட்டங்களுக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி அரிசிக்கொம்பனை பிடித்த வனத்துறையினர், அதனை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனச்சரகம் அப்பர் கோதையாறு பகுதியில் விட்டனர்.
தொடர்ந்து அரிசிக்கொம்பன் காதில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
அப்பர் கோதையாறு, குற்றியார், முத்துக்குழிவயல் என 5 கிலோ மீட்டருக்குள்ளேயே அரிசிக்கொம்பன் சுற்றி வந்தபோதும், குமரி மற்றும் நெல்லை மாவட்ட மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே உள்ளனர். அவர்கள் அரிசிக்கொம்பனை இங்கிருந்து அகற்றி கேரள வனத்திற்கு அனுப்புமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆனால் அரிசிக்கொம்பனை கண்காணித்து வரும் 2 மாவட்ட வனத்துறையினரும், மக்கள் அச்சப்பட தேவையில்லை. வனத்தில் அமைதியான சூழல், உணவு, குளிர்ந்த தண்ணீர் போன்றவை கிடைப்பதால் அரிசிக்கொம்பன் அங்கிருந்து வராது. அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் அரிசிக்கொம்பனை மீண்டும் கேரள வனத்திலேயே விட வேண்டும் என கொச்சியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி அவர்கள், பாலக்காடு அருகே உள்ள கணபதி கோவிலில் யாகமும் நடத்தினர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த யாகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் பேரணியும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள், அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர்.
- ரேடியோ காலர் சிக்னல் திடீரென கிடைக்காததால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
- அரிசி கொம்பன் கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியையொட்டி உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் தான் உள்ளது.
நாகர்கோவில்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் தேனி மாவட்டம் சின்னமனூர் ஹைவேலிஸ் பகுதிகளில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அரிசி கொம்பன் யானை, வனத்துறையின் பலத்த போராட்டங்களுக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் விடப்பட்டுள்ளது.
தற்போது காட்டுப்பகுதியில் அரிசி கொம்பன் சுதந்திரமாக சுற்றி வரும் நிலையில் அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அரிசி கொம்பன் காதில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல்களை வைத்து திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் யானை செல்லும் பாதைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரேடியோ காலர் சிக்னல் திடீரென கிடைக்காததால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. யானையின் இருப்பிடம் தற்போது எங்கு உள்ளது? என்பது தெரியாமல் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. கன்னியாகுமரி பகுதியை நோக்கி அரிசி கொம்பன் செல்வதாகவும் கூறப்பட்டது. இதனால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டது.
ஆனால் இதனை மறுத்த வனத்துறையினர், ரேடியோ காலர் சிக்னல் மீண்டும் கிடைக்கப்பெற்றதாகவும், தற்போது கிடைத்த தகவலின்படி அரிசி கொம்பன், கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியையொட்டி உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் தான் உள்ளது. அந்த பகுதியில் சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் பகுதிகளில் தான் சுற்றி வருகிறது என்றனர். அப்பர் கோதையாறு, முத்துக்குழி வயல், குற்றியார் பகுதிகளில் இருக்கும் உணவை சாப்பிட்டும், தண்ணீர் அருந்தியவாறும் யானை உள்ளதாக அதனை கண்காணித்து வரும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டம் வனத்துறையை சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவினரும், திருநெல்வேலி மாவட்ட வனத்துறையை சேர்ந்த 50 பேர் கொண்ட குழுவும் தொடர்ந்து அரிசி கொம்பன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
- ஜி.பி.எஸ். கருவி மூலம் அறிந்த வனத்துறையினர் உடனடியாக களக்காடு சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறை ஊழியர்கள் யானை சென்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
களக்காடு:
தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து நேற்று முன்தினம் பிற்பகலில் நெல்லை மாவட்டத்துக்கு லாரியில் கொண்டு வந்தனர்.
பின்னர் அந்த யானையை மணிமுத்தாறு வன சோதனைச்சாவடி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு வழியாக மேல் கோதையாறு அணை பகுதியில் கொண்டு விட்டனர். அங்கிருந்து வன ஊழியர்கள் மேற்பார்வையில் அடர்ந்த வனப்பகுதியான முத்துக்குழி வயல் பகுதியில் யானை விடப்பட்டது. அந்த யானையின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க வனத்துறையினர் அதன் காதில் ரேடார் கருவியை பொருத்தியிருந்தனர். அதன்மூலம் யானையின் இருப்பிடம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மயக்க மருந்து செலுத்தியதில் இருந்து மீளாத அந்த யானை முத்துக்குழி வயல் பகுதியில் தனக்கான வாழ்விடத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில் மயக்கத்தில் இருந்து முழுமையாக மீண்ட அரிசிக்கொம்பன் இன்று அதிகாலை கோதையாற்றில் இருந்து சற்று தொலைவில் உள்ள குட்டியாறு வனப்பகுதியில் நடமாடியது. ஆனால் அதன்பின்னர் அந்த யானை மேற்கு திசையில் அதாவது குமரி மாவட்டம் பேச்சியாறு அணை வனப்பகுதியை நோக்கி வேகமாக சென்றது. இதனை ஜி.பி.எஸ். கருவி மூலம் அறிந்த வனத்துறையினர் உடனடியாக களக்காடு சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறை ஊழியர்கள் யானை சென்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் யானையை மீண்டும் குட்டியாறு வனப்பகுதிக்கு விரட்டி விட்டனர். தொடர்ந்து அவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
- மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.
- அரிசிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
மதுரை:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அரிசிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த சில நாட்களாக தேனி, கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தியது. கேரளா அரசு அரிசி கொம்பனை கும்கியாக மாற்ற முயற்சி செய்தது.
ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள், நீதிமன்றத்திற்கு சென்றதால், அரிசிக்கொம்பனை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அரிசிக்கொம்பன் யானையை வளர்ப்பு யானையாக மாற்ற கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அரிசிக் கொம்பன் யானையை பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போதுதான் யானை கம்பம் பகுதியில் நுழைந்தது. சின்னக்கானல் பகுதியிலும் ஏராளமான ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்புகளால் யானையின் வலசை பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே அது ஊருக்குள் நுழையும் நிலை உருவானது.
சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர் அரிசிக்கொம்பன் யானையை கடவுளின் குழந்தையாக பார்ப்பதோடு, மீண்டும் அந்தப் பகுதியிலேயே யானையை விட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆகவே யானையை வேறு புது இடத்திற்கு மாற்ற முயற்சிப்பதோடு, மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.
அரிசிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரிசிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, "சில விஷயங்களில் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காக தெரிகிறது. தமிழ்நாடு அரசு மிகுந்த சிரமப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து யானையை தற்போது பிடித்துள்ளது.
யானையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. யானைகள்-காடுகள் தொடர்பான வழக்குகளை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தர விடுகிறோம் என்று தெரிவித்தனர்.
- கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் யானைகளுக்கான உணவு வழங்கும் பணி நடைபெற்றது.
- 3 யானைகளுக்கும் தினமும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் கடந்த மாதம் 27-ந்தேதி புகுந்த அரிசி கொம்பனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டும் முடியாததால் ஊட்டி முதுமலை வனப்பகுதியில் இருந்து உதயன், சுயம்பு, அரிசி ராஜா ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த யானைகள் கடந்த 1 வாரமாக கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று அதிகாலை அரிசி கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தியதும் அதனை லாரியில் ஏற்ற கும்கிகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அரிசி கொம்பன் யானை பிடிபட்டதால் 3 கும்கிகளை சொந்த ஊருக்கு அனுப்ப வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.
உதயன் என்ற கும்கி நேற்று இரவு முதுமலை வனக்காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று அரிசி ராஜா மற்றும் சுயம்பு ஆகிய 2 கும்கிகள் தெப்பக்காடு செல்கின்றன.
இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், அரிசி கொம்பனை பிடிக்க வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் அதனை அனுப்ப கும்கிகள் பெரிதும் உதவியாக இருந்தன.
இந்த 3 யானைகளுக்கும் தினமும் காலையில் சீமைப்புல் உணவாக வழங்கப்படும். அதன் பின் கேப்பை, அரிசி கலந்த மாவு, கவளமாக வழங்கப்படும். அதன் பின் கரும்பு, வாழைப்பழம், பலாப்பழம் போன்றவை வழங்கப்படும்.
மாலையில் சத்துமாவு கொண்ட கவளம் வழங்கப்பட்டது. கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் யானைகளுக்கான உணவு வழங்கும் பணி நடைபெற்றது. 3 யானைகளுக்கும் தினமும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அரிசி கொம்பன் ஆபரேசன் நிறைவடைந்ததால் ஏற்கனவே ஒரு கும்கி சென்று விட்ட நிலையில் மற்ற 2 கும்கிகளும் இன்று செல்ல உள்ளன என்றனர்.
இதனிடையே அரிசி கொம்பன் யானை சேதப்படுத்திய விளைநிலங்களின் மதிப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளது. முன்னாள் எம்.பி. தங்கதமிழ்செல்வனுக்கு சொந்தமான வாழைத்தோட்டம், சண்முகா நதி அணையை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான வாழைத் தோட்டம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை அரிசி கொம்பன் சேதப்படுத்தியது. கடந்த 1 வாரமாக வனத்துறை அறிவுறுத்தலின்படி வேலைக்கு செல்லாமல் இருந்த தோட்டத்தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சேதமடைந்த பயிர்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் இன்று அல்லது நாளை சேத மதிப்பீட்டை ஆய்வு செய்து அதன் அறிக்கையை மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேரளாவில் பிடிக்கப்பட்ட போது மீண்டும் காட்டில் விடப்பட்டது
- 2 மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சாந்தம்பாறை பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் ஆண் காட்டு யானை கடந்த ஏப்ரல் மாதம் மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.
தேக்கடி, இரவங்கலாறு, ஹைவேவிஸ், குமுளி, லோயர்கேம்ப் பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் கடந்த மே மாதம் 27-ந்தேதி கம்பம் நகருக்குள் புகுந்தது.
அப்போது சாலையோரம் இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை அடித்து நொறுக்கி வலம் வந்ததைப் பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியார் கோவில் பகுதியை அடைந்தது.
அதன் பிறகு சண்முகா நதி அணையைச் சுற்றியே வலம் வந்த அரிசி கொம்பன் அங்குள்ள பெருமாள் கோவில் பகுதியில் முகாமிட்டது. யானையை பிடிக்க வனத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வந்தனர். மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் யானை சமத ளப்பகுதியில் வந்தால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும் என காத்திருந்தனர்.
இதற்காக ஊட்டி தெப்பக்காடு பகுதியில் இருந்து சுயம்பு, அரிசி ராஜா, உதயன் ஆகிய 3 கும்கி யானைகளும் வர வழைக்கப்பட்டு கம்பம் வனச்சரக அலுவலகத்தில் தயார் நிலையில் நிறுத்தப் பட்டு இருந்தன.
ஸ்கெட்ச் போட்டு தூக்கினர்
கடந்த 2 நாட்களாக சண்முகா நதி அணையை ஒட்டியுள்ள சின்ன ஓவு ளாபுரம், எரசக்க நாயக்கனூர் காப்புக்காடு பகுதிகளிலேயே சுற்றி வந்தது. இதனால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நேற்று இரவே வனத்துறையினர் தயார் நிலைக்கு வந்தனர்.
இதுகுறித்து உத்தமபாளை யம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சின்ன ஓவுளாபுரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். மின்வாரிய அதிகாரிகளுக்கும் முன் கூட்டியே தக வல் தெரிவிக்கப்பட்டு ஆனைமலையான்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன் பட்டி, சின்ன ஓவுளாபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டது.
இரவு 11.30 மணியளவில் சண்முகாநதி பெருமாள் கோவிலில் இருந்து தனியார் பட்டா நிலத்துக்கு அரிசி கொம்பன் யானை நடந்து வந்த போது அதன் மீது மருத்துவக்குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். இந்த மயக்க ஊசி யானையின் உடல் பாகங்களை சில மணி நேரங்கள் செயல் இழக்கச் செய்து அதனை அசைவற்ற நிலையில் வைத்திருக்கும் என மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
மயக்க ஊசி செலுத்திய பிறகு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அரிசி கொம்பன் அங்கும் இங்கும் நடந்து பின்னர் கீழே விழுந்தது. அதனைத் தொடர்ந்து யாைனயை ஏற்றுவதற்கு லாரி சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அரிசி கொம்பன் யானையை லாரியில் ஏற்றினர். இப்பகுதியில் பெரும்பாலான கிராமங்கள் இருப்பதால் மின் வயர்கள் தாழ்வாக செல்லும் வகையில் உள்ளது.
மிக உயரமான லாரி யானையை ஏற்றிச் செல்லும் போது மின்சாரம் தாக்கி அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவே யானை நகரை விட்டு வெளியேறும் வரை மின் வினியோகம் நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய அரிசி கொம்பன் ஆபரேசன் அதிகாலை 5 மணி அளவில் வெற்றிகரமாக முடிவு பெற்றது.
கடந்த 1 வாரமாக சுருளிப்பட்டி, காமய கவுண்டன்பட்டி, கம்பம், ராயப்பன்பட்டி, ஆனை மலையான்பட்டி ஆகிய பகுதி மக்களை தூங்க விடாமல் செய்த அரிசி கொம்பன் பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர். யானை ஏற்றிச் செல்லப் பட்ட லாரிக்கு முன்னும் பின்னும் 30-க்கும் மேற்பட்ட வனத்துறை வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனை சாலையின் இரு புறமும் ஏராளமான மக்கள் நின்று ஆர்வமுடன் பார்த்தனர்.
தடை உத்தரவு வாபஸ்
இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1 வாரமாக யானை நடமாட்டத்தால் கம்பம், சுருளி அருவி, காமயகவுண்டன்பட்டி, சின்ன ஓவுளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை உத்தரவு இன்று முதல் வாபஸ் பெறப்பட்டதால் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பினர்.
- சுருளி அருவி பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்வதால் தோட்ட வேலைக்கு செல்பவர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
- சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டுள்ள யானை மேகமலை நோக்கி செல்கிறது.
உத்தமபாளையம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானை கடந்த மாதம் அந்த மாநில வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தமிழகத்தை ஒட்டிய வனப்பகுதியில் விடப்பட்டது. அதன்பிறகு ஹை வேவிஸ் மலைகிராமங்களில் சுற்றித்திரிந்த அந்த யானை கடந்த மாதம் 27-ந்தேதி கம்பம் நகருக்குள் நுழைந்து சாலையோரம் இருந்த வாகனங்களை சேதப்படுத்தியது.
அதனை பிடிக்க தமிழக வனத்துறையினர் கண்காணிப்பு சோதனைச்சாவடி அமைத்து மயக்கஊசி செலுத்த முயன்று வருகின்றனர். ராயப்பன்பட்டி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் சண்முகாநதி அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அந்த யானை உலாவி வருகிறது.
இதனால் காமய கவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அரிசிக்கொம்பன் யானை அங்குள்ள வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தி உண்டு வருகிறது. தினந்தோறும் சாரல் மழை பெய்து வருவதால் அது வசிப்பதற்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் அணைப்பகுதியில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் சென்று விடுகிறது.
சுருளி அருவி பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்வதால் தோட்ட வேலைக்கு செல்பவர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். மேலும் தோட்டப்பயிர்களையும் சேதப்படுத்தி வருவதால் அதன் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 4 டாக்டர்கள் 2 குழுவாக பிரிந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். ராயப்பன்பட்டி அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சண்முகநாதன் கோவில் பகுதிக்கு அரிசி கொம்பன் யானை சென்றது. அங்கு சில நாட்களுக்கு முன்பு சமையலறை சுவற்றை சேதப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று கோவில் கேட்டையும் சேதப்படுத்தி அங்கிருந்த அரிசியை சாப்பிட்டு சென்றது.
இதனால் கோவில் வளாகத்தில் தங்கி இருந்த சரஸ்வதியம்மாளை வனத்துறையினர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேற்றினர். தற்போது அவரது மகன் அங்கு பூஜை செய்து வருகிறார். சில நாட்களுக்கு கோவிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மூணாறு சின்னக்கானல் பகுதியில் அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த குழுவில் இருந்த கேரள டாக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அரிசி கொம்பன் யானையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டுள்ள யானை மேகமலை நோக்கி செல்கிறது. இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சுருளிப்பட்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கம்பம் பிளாண்டேசன் ரேஞ்சர் கலையரசன் வெளியாட்களை அப்பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மண்டல வன அலுவலர் பத்மாவதி, ரேஞ்சர் கலையரசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
மேலும் அனைத்து வனத்துறையினரையும் கண்காணித்து வருகின்றனர். இதனால் செய்தியாளர்களுக்கு முறையான தகவல்கள் கிடைப்பதில்லை. அரிசி கொம்பன் யானை ஒரே இடத்தில் சுற்றித் திரிவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் துதிக்கையில் அடிபட்டு யானை சோர்ந்து காணப்பட்டது. குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
தடை உத்தரவு எப்போது நீங்கும்? இயல்பு நிலை திரும்புமா? என அவர்கள் விரக்தியில் உள்ளனர். எனவே வனத்துறையினர் அரிசி கொம்பன் யானை குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்