search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரிசி கொம்பன் யானையின் அவலம்- ரொம்ப சாதுவானது, அன்பானது என்கிறார்கள் மூணாறு மக்கள்
    X

    அரிசி கொம்பன் யானையின் அவலம்- ரொம்ப சாதுவானது, அன்பானது என்கிறார்கள் மூணாறு மக்கள்

    • பொதுவாகவே யானைகளை அதன் போக்கிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்பார்கள். அதற்கு ஏற்பாடு செய்து விட்டாலே பிரச்சினை தீர்ந்து விடும்.
    • கொஞ்சம் அரிசி கொடுத்தால் அரிசி கொம்பன் நிச்சயம் குழந்தையாக மாறி விடுவான்.

    மன அழுத்தம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல. யானைகளுக்கும் உண்டு. அரிசி கொம்பன் யானை தொடர்பான சர்ச்சைகள் இதைத்தான் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

    அரிசி கொம்பன் என்ற பெயரை கேட்டதும் அதன் உருவத்தை பார்த்ததும் அந்த யானை படுபயங்கரமான யானையாக இருக்குமோ என்ற எண்ணம்தான் 99 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது. ஆனால் மூணாறு பகுதி மக்கள் அரிசி கொம்பன் யானை ரொம்ப ரொம்ப சாதுவானது. அன்பாக பழகக்கூடியது என்றெல்லாம் கண்ணீர் மல்க சொல்கிறார்கள்.

    பொதுவாக யானைகள் சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. ஆண் யானையான அரிசி கொம்பனுக்கு தற்போது 36 வயதுதான் ஆகிறது. இன்னும் 50 சதவீத வாழ்க்கையை அந்த யானை வாழ வேண்டி உள்ளது. ஆனால் அந்த யானையை சுற்றி ஏற்பட்டுள்ள சர்ச்சைகளும், பரபரப்புகளும் அந்த யானையை நிம்மதியாக வாழ வைக்குமா? என்ற ஏக்கம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது.

    அரிசி கொம்பன் யானை இதுவரை 9 பேரை கொன்று விட்டதாகவும், 100-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தள்ளி விட்டதாகவும் ஒருசாரார் புகார் வாசிக்கிறார்கள். ஆனால் உணவுக்காகத்தான் அது குடியிருப்புகளை தேடி வருகிறது என்று மற்றொரு சாரார் சொல்கிறார்கள். இதில் உண்மை தெரிய வேண்டுமானால் அரிசி கொம்பன் பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக-கேரள எல்லை பகுதியில்தான் அதிக யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் காட்டுக்குள் தனித்தனி குழுக்களாக பிரிந்து கொண்டு வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. அப்படி ஒரு குழுவில்தான் அரிசி கொம்பன் யானை 1987-ம் ஆண்டு பிறந்தது.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிதான் அதன் பூர்வீகம். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதி மக்களுக்கு அரிசி கொம்பன் யானை பற்றி சின்ன வயதில் இருந்தே தெரியும். முதலில் அந்த யானையை சின்ன கொம்பன் என்றுதான் மூணாறு பகுதி மக்கள் செல்லமாக அழைத்தார்கள்.

    பொதுவாகவே நமது வீட்டில் உள்ள சிறுவர்-சிறுமிகளை நாம் அம்மு குட்டி, செல்ல குட்டி என்றெல்லாம் கொஞ்சுவது உண்டு. அதுபோல் தான் கேரளாவில் பாசமாக வளரும் யானை குட்டிகளை கொம்பன் என்று கொஞ்சுவார்கள். கொம்பன் வகை யானைகளுக்கு மக்கள் மத்தியில் தனி செல்வாக்கு உண்டு.

    ஏனெனில் கொம்பன் யானையை வீட்டு முற்றத்தில் கட்டி வைத்தால் செல்வம் சேரும் என்பது ஐதீகம். கொம்பன் யானைகள் காதை ஆட்டிக் கொண்டே இருந்தால் அந்த வீட்டுக்கு நல்லது என்று பேசப்படுவது உண்டு. அரிசி கொம்பன் யானையையும் அந்த ரகத்தில்தான் வைத்திருந்தனர்.

    ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே. இந்த கொம்பன் யானைக்கு ஒரு கட்டத்தில் அரிசியை உணவாக கொடுத்தனர். அரிசியை சாப்பிட்ட யானைக்கு அது தேவஅமிர்தமாக இருந்தது. இதனால் மற்ற வழக்கமான உணவுகளை அந்த கொம்பன் யானை சாப்பிட மறுத்தது. இதனால் மூணாறு பகுதி மக்கள் அந்த யானையை சின்ன கொம்பன் என்று அழைத்து வந்ததற்கு பதில் அரிசி கொம்பன் என்று அழைக்க தொடங்கினார்கள். பிறகு அதுவே அந்த யானையின் பெயராக நிலைத்துப் போனது.

    2010-ம் ஆண்டுகளில் அதாவது அரிசி கொம்பனுக்கு 23 வயது இருக்கும்போது அது அரிசி மட்டுமே சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் வனப்பகுதியில் தங்காமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலாவ ஆரம்பித்தது. அரிசி எங்கிருக்கும் என்று தேடிப்பிடித்து சாப்பிட்டு வந்தது.

    இதனால் மூணாறு பகுதி மக்களோடு மக்களாக அந்த யானை இரண்டற கலந்துபோனது. அந்த யானைக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பூப்பாறை என்ற இடத்தில் அரிசி கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் டீக்கடை தொடங்கி நடத்தினார்கள். அந்த அளவுக்கு அரிசி கொம்பன் செல்லப்பிள்ளையாக இருந்தது.

    முதலில் அரிசி கொம்பனின் சிறு சிறு விளையாட்டுகளை வனப்பகுதி மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அரிசிக்காக அந்த யானை சற்று உக்கிரத்தை காட்டியது. அதில்தான் பிரச்சினை தொடங்கியது. சாதாரண குடிசை போட்டு வாழும் வனப்பகுதி மக்களுக்கு அது தொல்லை தருவதாக இருந்தது.

    ஆனால் ஒருபோதும் அரிசி கொம்பன் அரிசிக்காக மக்களை பந்தாடியது கிடையாது. அரிசிக்கும், நல்ல தண்ணீருக்கும் மட்டுமே அது ஆசைப்பட்டது. அதில் குறுக்கீடு வந்தபோதுதான் அந்த யானை தாறுமாறாக நடந்து கொண்டது. அதை எதிர்கொண்ட சிலர் பலியாக நேரிட்டது. இப்படியே 10 ஆண்டுகள் ஓடிப்போனது.

    கடந்த 3 ஆண்டுகளில் அரிசி கொம்பனால் அதிக பிரச்சனை ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. வனப்பகுதி மக்கள் சொல்லாத நிலையில் வனத்தையொட்டி உள்ள தனியார் நிலப்பகுதி மக்கள்தான் இந்த புகாரை அதிகம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் கேரள வனத்துறை அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்தது.

    அதற்கு கேரள யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரிசி கொம்பனை தொந்தரவு செய்யக் கூடாது என்று கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதையடுத்து அரிசி கொம்பனை பிடித்து பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடும்படி கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்படி 5 மயக்க ஊசிகள் போட்டு அரிசி கொம்பனை பிடித்தனர்.

    மூணாறு வனப்பகுதியில் இருந்து அதை லாரியில் ஏற்றி தேக்கடி பகுதிக்கு கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் அரிசி கொம்பனை பிரிகிறோமே என்று மூணாறு பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏப்ரல் மாதம் இறுதியில் தேக்கடியில் இருந்து அந்த யானை வேறு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தது.

    கடந்த மாதம் தமிழக பகுதியான மேகமலைக்குள் அது ஊடுருவியது. அந்த வனப்பகுதியில் சுமார் 20, 25 நாட்கள் உலாவி கொண்டே இருந்தது. யாரையும் அது துன்புறுத்தவில்லை. ஒரே ஒரு தடவை மட்டும் ரேஷன் கடையை உடைத்து அரிசி இருக்கிறதா? என்று தேடியது. அரிசி கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் தேக்கடிக்கே சென்று விட்டது.

    என்றாலும் அரிசி மீது உள்ள ஆசையால் கடந்த 27-ந்தேதி மேகமலையில் இருந்து கம்பம் பகுதிக்குள் வந்து விட்டது. இதனால் கம்பம் நகரமே அல்லோகலப்பட்டது. ஆனால் அப்போதும் கூட அது மக்களை தாக்கவில்லை. அரிசியை தேடித்தான் அலைந்தது. நல்ல தண்ணீர் கிடைக்குமா? என்று தவித்தது.

    அந்த யானையை சற்று அருகில் இருந்து பார்த்த கம்பம் பகுதி மக்கள் பரிதாபப்படுகிறார்கள். அரிசி கொம்பனுக்கு உடல் முழுக்க ரத்த காயம் இருக்கிறது. அந்த யானையால் நடக்க கூட முடியவில்லை என்று கவலையோடு சொல்கிறார்கள். அரிசி கொம்பன் யானையை உரிய வகையில் பக்குவப்படுத்தினால் அது நல்ல பாசமாக இருக்கும் என்பதுதான் வன விலங்கு ஆர்வலர்களின் கருத்து ஆகும்.

    பொதுவாகவே யானைகளை அதன் போக்கிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்பார்கள். அதற்கு ஏற்பாடு செய்து விட்டாலே பிரச்சினை தீர்ந்து விடும். கொஞ்சம் அரிசி கொடுத்தால் அரிசி கொம்பன் நிச்சயம் குழந்தையாக மாறி விடுவான்.

    Next Story
    ×