என் மலர்
நீங்கள் தேடியது "2000 ரூபாய் நோட்டு"
- டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.
- சமீப காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவது இல்லை என்று டாஸ்மாக் கடை ஊழியர் கூறியுள்ளார்.
சென்னை:
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அனைத்து வணிக நிறுவனங்களுமே அந்த நோட்டை வாங்குவதற்கு மறுத்துவிடுகின்றன.
அந்த வகையில் டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் கூறும்போது, 'சமீப காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவது இல்லை.
இருப்பினும் தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் மது பிரியர்கள் யாராவது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்து கொடுத்தால் அதனை வாங்குவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
- கருப்பு பணமாக முடக்கி வந்த காரணத்தினால் நடுத்தர மக்கள் பார்க்க கூட முடியவில்லை.
- சிறுக...சிறுக... சேர்த்து வைத்த 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் செல்லாது என்று அறிவித்து உள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.
சிறு வியாபாரி புவனேஸ்வரி (கோடம்பாக்கம்):- நடுத்தர மக்களுக்கு மற்றும் ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பணக்காரர்களிடம் மட்டுமே ரூ.2000 நோட்டு அதிகளவில் உள்ளது. அவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டும்.
இளநீர் வியாபாரி குமார் (கில் நகர்):- 2000 ரூபாய் நோட்டுகளை பார்த்தே 2 வருடங்கள் ஆகிறது. நோட்டுகள் அச்சடித்தது முதல் 2, 3 வருடங்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. பிறகு அதை கருப்பு பணமாக முடக்கி வந்த காரணத்தினால் நடுத்தர மக்கள் பார்க்க கூட முடியவில்லை.
ஆட்டோ டிரைவர் கணேஷ் (சூளைமேடு):- உள்ளூர், வெளியூர் பயணிகள் யாரும் அதிகளவில் 2000 ரூபாய் நோட்டுகள் தருவதில்லை. ஆனால் இனி அடிக்கடி மீண்டும் 2000 ரூபாய் பணப் புழக்கத்தை பார்க்கலாம்.
கூலி தொழிலாளி ஜெகநாதன் (போரூர்):- வார சம்பளத்தில் ஒன்று, இரண்டு 2000 ரூபாய் தாள்கள் வரும் நிலையில் அதனை சில்லரையாக மாற்ற பெரும்பாடு பட வேண்டி உள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக்கில் கூட சில்லரை தர மாட்டார்கள். இனி எங்கும் மாற்ற முடியாது. இனி அதனை கண்டால் பயம்தான் வரும்.
குடும்ப பெண் சித்ரா (போரூர்):- கொஞ்சம் கூட பணத்தை சேர்த்து வைக்க முடியல. வீட்டிற்கு கணவர் செலவுக்கு தரும் பணத்தில் மிச்சப்படுத்தி அதனை 500, 1000 ரூபாய்களாக மாற்றி வைத்து இருந்த நிலையில் திடீரென 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிப்பு விடுத்து படாதபாடு பட்ட நிலைமையில் மீண்டும் சிறுக...சிறுக... சேர்த்து வைத்த 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் செல்லாது என்று அறிவித்து உள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.
- தவறான முறையில் சம்பாதித்து பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்குத்தான் பாதிப்பு.
- ஆடைகள் வாங்குபவர்கள் ஆன்லைன் மூலமே பண பரிவர்த்தனை செய்கிறார்கள்.
திருப்பூர் :
2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் வரவேற்று உள்ளனர். இது குறித்து திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், 2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆடை உற்பத்தியாளர்களுக்குஎந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே ஆடை உற்பத்தி துறையினர் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் 2000 ரூபாய் நோட்டுகளை யாரும் பதுக்கி வைக்க வாய்ப்பில்லை. தவறான முறையில் சம்பாதித்து பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்குத்தான் பாதிப்பு. 2000 ரூபாய் நோட்டுகள் தடையால் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள்.எனவே 2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை வரவேற்கிறோம் என்றார்.
திருப்பூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சந்திரசேகர் என்பவர் கூறுகையில், ஊழல் அரசியல்வாதிகளுக்கு இது பாடமாக இருக்கும். தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் 2ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துகின்றனர். 2000 ரூபாய் நோட்டு தடையால் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை நான் வரவேற்கிறேன் என்றார்.
காதர்பேட்டை 2-ம் தரபனியன் வியாபாரிகள் சங்க துைண தலைவர் குமார் கூறுகையில், எங்களிடம் ஆடைகள் வாங்குபவர்கள் ஆன்லைன் மூலமே பண பரிவர்த்தனை செய்கிறார்கள். 10 சதவீதம்பேர்தான் பணம் செலுத்தி ஆடைகள் வாங்குகின்றனர். இதனால் 2000 ரூபாய் நோட்டு தடையால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றனர்.
- மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பாடை கட்டி, ஒப்பாரி வைத்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் :
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு மேல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் நேற்று ஒட்டப்பட்டிருந்தது.
அந்த போஸ்டரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மாதிரி அச்சிடப்பட்டு, அதன் கீழே பிறப்பு 8-11-2016, இறப்பு 19-05-2023, மத்திய பா.ஜ.க. அரசால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டு 19-05-2023 அன்று மாலையில் அகால மரணமடைந்தது.
இறுதி ஊர்வலம் 20-05-2023 அன்று மாலை 4 மணிக்கு சாலை ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே நேற்று மாலை திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். அவர்கள் தங்களது கைகளில் கட்டு, கட்டாக 2 ஆயிரம் மாதிரி ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்திருந்தனர். பின்னர் பாடை கட்டி, அதில் நோட்டுகளை போட்டனர். இதைத்தொடர்ந்து பாடையை சுற்றி ஒப்பாரி வைத்தனர். அப்போது சங்கு ஊதி, மணி அடிக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.
அதன்பிறகு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சக்காளை, கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் வேங்கைராஜா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் முகமது மீரான், கவுன்சிலர் பாரதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
- 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அடித்தட்டு மக்களிடம் இருக்க வாய்ப்பில்லை.
- ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம்.
சென்னை:
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வருகிற 23-ந் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ந் தேதி வரை நோட்டுகளை மாற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வங்கிகளில் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் என 2000 ரூபாய் நோட்டு மாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும். இதையொட்டி வங்கிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வங்கிகளில் செய்யப்பட்டு வரும் சிறப்பு ஏற்பாடு குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வருகிற 23-ந் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்பட உள்ளது. இதற்காக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் என்ன செய்ய வேண்டும் வாடிக்கையாளர்களுக்கு எப்படி வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை செய்யப்படுகிறது.
முன்பு போல கூட்டம் அதிகமாக வர வாய்ப்பு இல்லை. 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அடித்தட்டு மக்களிடம் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் வங்கிகளில் மற்ற பணிகள் பாதிக்காத வண்ணம் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் 2000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கு சிறப்பு கவுண்டர் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
கூட்டம் அதிகமானால் வரிசையில் நிற்க ஏற்பாடு செய்யப்படுகிறது. காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு சாமியானா பந்தல் போட்டு இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது.
வயதானவர்கள் வரிசையில் நின்று மாற்றாமல் அவர்களுக்கு தனி வசதி உருவாக்கப்பட்டு ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்படும். ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம்.
பணம் மாற்றிக் கொடுப்பதற்கு கூடுதலாக வங்கிகளில் பணம் இருப்பு வைக்க அனைத்து கிளைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது.
- சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளது.
சென்னை:
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது.
வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ம் தேதிவரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது.
இந்நிலையில் அரசு பேருந்துகளில் வரும் 23ம் தேதி முதல் டிக்கெட் வழங்கும்போது 2000 ரூபாய் நோட்டுக்கள் பேருந்துகளில் வாங்கப்பட மாட்டாது என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடம் வாங்க கூடாது என வலியுறுத்தியுள்ளது.
- 2,000 ரூபாய் நோட்டுகளை 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும்.
- பயணிகள் தவிர வெளிநபர்கள், தனியார் நிறுவனங்கள் ரூ 2,000 நோட்டுகளை மாற்ற அனுமதியில்லை
சென்னை:
சென்னை, செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி இருந்தநிலையில், அரசு பஸ்களில் பயணிகள் தரும் ரூ 2,000 நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பயணிகள் தவிர வெளிநபர்கள், தனியார் நிறுவனங்கள் ரூ 2,000 நோட்டுகளை மாற்ற அனுமதியில்லை என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
- கர்நாடகத்தில் அதிகளவில் கோவில்கள் உள்ளன.
- கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது.
மும்பை :
ரூ.2 ஆயிரம் நோட்டு தடை முடிவு குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி.யிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் பதிலளித்து கூறியதாவது:-
கர்நாடகம் ஒரு முக்கியமான தென் மாநிலம். அங்குள்ள மக்கள் பல்வேறு நம்பிக்கை கொண்ட பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். கர்நாடகத்தில் அதிகளவில் கோவில்கள் உள்ளன. மக்கள் தங்கள் நம்பிக்கையையோ, மத விருப்பத்தையோ மறைக்க மாட்டார்கள். இருந்தபோதிலும், கர்நாடக மக்கள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜனதாவை நிராகரித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது. அதை ஏற்றுக்கொள்வதில் பா.ஜனதாவுக்கு ஏன் இவ்வளவு சிரமம் என்று தெரியவில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்ள பா.ஜனதா கற்றுக்கொள்ள வேண்டும்.
பா.ஜனதா அல்லது பிரதமர் மோடி மீது எதிர்மறை உணர்வுகள் வெளிப்படும்போது, அவற்றை நீர்த்து போகச் செய்ய சில அதிரடி முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அப்படி எடுக்கப்பட்ட முடிவு தான் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெற்றது ஆகும். பிரதமர் மோடி தன்னிச்சையான முறையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெட்ரோல் பங்குகளில் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்குவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது.
- சில்லரை தட்டுப்பாடு ஏற்படுவதால் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்கவே யோசனை மேலோங்குகிறது.
செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி அதிரடியாக வெளியிட்டது. அதன்படி ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும், அதனை வைத்திருப்போர் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் பதற்றத்தின் காரணமாக தற்போதே ரூ.2 ஆயிரம் நோட்டை கண்ணில்படும் இடங்களுக்கெல்லாம் சென்று மாற்ற தொடங்கி வருகிறார்கள். இதில் முன்னணியில் இருப்பது பெட்ரோல் பங்குகள் தான். ஆனால் இப்போது பெட்ரோல் பங்குகளிலும் ரூ.2 ஆயிரம் நோட்டை கண்டால் கோபப்பட தொடங்கிவிட்டார்கள். ஏன்? என்று கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு, விளக்கம் சொல்லியும் தவிக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:-
பெட்ரோல் பங்குகளில் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்குவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் ரூ.100-க்கு பெட்ரோல் போட்டுவிட்டு, ரூ.2 ஆயிரம் நோட்டை நீட்டுகிறார். அவருக்கு பாக்கி ரூ.1,900 தர வேண்டியதுள்ளது. இப்படி ஒரு நாளில் 50 பேர் வந்தால் சில்லரைக்கு நாங்கள் எங்கே போவது?
சில்லரை தட்டுப்பாடு ஏற்படுவதால் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்கவே யோசனை மேலோங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் - பெட்ரோல் பங்க் ஊழியர்களிடையே வாக்குவாதமே ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களை தவிப்புக்குள்ளாக்குவது எங்கள் நோக்கம் அல்ல.
இப்போதைய சூழலில் இந்த நடைமுறை சிக்கல்களை போக்க வங்கிகளுக்கு நாங்கள் பணத்தை டெபாசிட் செய்ய போகும்போது, நாங்கள் கேட்கும் தொகைக்கு ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 என்று அவர்கள் சில்லரையாகவும் தர வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இதை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன.
- 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
சென்னை:
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மே 23-ந்தேதி அனைத்து வங்கிகளிலும் அதை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக செப்டம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கை இன்று தொடங்கியது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வந்தால் அவற்றை மாற்றி கொடுப்பதற்கு ஏற்ப பணத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.
அதன்பேரில் அனைத்து வங்கிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமையே தேவையான அளவுக்கு 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டன. சென்னை ரிசர்வ் வங்கி கிளையிலும் அதிகளவு பணம் இருப்பு வைக்கப்பட்டது.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு வங்கிகளில் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறி இருந்தது. அதை ஏற்று பெரும்பாலான வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தனி இட வசதி உருவாக்கப்பட்டு இருந்தது. சில வங்கிகளில் மக்கள் கூட்டமாக வரலாம் என்று கருதி தனி வரிசை அமைத்து கொடுத்து இருந்தனர்.
முதியோர்கள் வங்கிக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி இடவசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வருகை தந்தபோது அவர்களுக்கு முதலில் பணத்தை மாற்றி கொடுத்து அனுப்பினார்கள்.
தற்போது கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களை வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க செய்யக்கூடாது என்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வங்கிக்கு வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பணத்தை மாற்ற போட்டி போட்டனர். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டது.
ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்லாது என்று அது அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக வங்கிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது.
சென்னையில் கொத்தவால் சாவடி உள்பட சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட சில வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அதிகம் பேர் திரண்டிருந்தனர். மற்ற வங்கிகளில் ஓரிருவர் மட்டுமே வந்து சென்றதை காண முடிந்தது.
பல வங்கிகளில் இன்று காலை நிலவரப்படி எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்பதால் மக்கள் மத்தியில் எந்த அவசரமும் காணப்படவில்லை என்பதை பார்க்க முடிந்தது.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிக எளிதாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி சென்றனர். மொத்தமாக அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களிடம் மட்டுமே அடையாள அட்டை கேட்கப்பட்டது.
மற்றபடி ஏ.டி.எம். மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை பல இடங்களில் டெபாசிட் செய்தனர். சில வங்கிகளில் எழுதி கொடுத்தும் டெபாசிட் செய்தனர். ஒருவர் 10 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலை இருந்ததால் அதற்கேற்ப வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
நகர் பகுதிகளில் அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சற்று கூட்டம் வரலாம் என்று எதிர்பாார்க்கப்பட்டது. இதனால் வங்கிகளில் டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் பணத்தை மாற்றிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
சில வங்கிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன. இந்த 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
2000 ரூபாய் நோட்டுகள் மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதால் கடைகளில் இந்த நோட்டுகளை வாங்க வியாபாரிகள் மறுக்கிறார்கள். அரசு சார் நிறுவனங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கிறார்கள்.
பெட்ரோல் நிலையங்கள், பஸ்கள் மற்றும் மால்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுக்க இயலவில்லை. இதனால் வங்கிகளில் மட்டுமே இனி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
- இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
- 2 ஆயிரம் ரூபாய் தாளை இனி எப்போ பார்க்க போறேனோ?
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடமாடும் நகைக்கடை என அழைக்கப்படும் மதுரை வரிச்சியூர் செல்வம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில், ரூ.2 ஆயிரம் தாளா போகுது. ஒருவாட்டி முகர்ந்துகிறேன். இந்த 2 ஆயிரம் ரூபாய் தாளை இனி எப்போ பார்க்க போறேனோ? தலைவா திரும்பவும் 2 ஆயிரம் ரூபாய் தாளை போட்டிங்கனா சொல்லிட்டு செய்யுங்க. இருக்கிற 2 ஆயிரம் ரூபாய் தாள் பூரா இப்படி வெட்டியா போகுது.
ஓகே மகிழ்ச்சி, விடை கொடுக்கிறேன் உனக்கு. போயிட்டு வா ஆத்தா... எங்களை காக்கும் தெய்வம் நீ.. எங்களை விட்டு போற... என கூறியுள்ளார்.
- 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.
- வங்கி அதிகாரிகள் மீது சிலர் கோபம் கொண்டதை பார்க்க முடிந்தது.
சென்னை :
நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அனைத்தையும் திரும்பப்பெற இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது. இது, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருக்கும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள், 23-ந் தேதி (நேற்று) முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் அந்த நோட்டுகளை கொடுத்து அவற்றிற்கு வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
அதோடு, ஒரு நேரத்தில் ஒருவர் அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் என்ற அளவில்2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ள முடியும், அதற்கு அடையாள ஆவணமோ, வேண்டுகோள் சீட்டோ தேவையில்லை. ஒருவர் ஒரு முறைக்கு ரூ.20 ஆயிரம் என்ற அளவில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. அடையாள ஆவணம் தேவையில்லை என்ற அறிவிப்பை முன்னிட்டு, பணத்தை மாற்றிக்கொள்வதற்காக வங்கிக்கு வந்த சிலர் ஆவணங்களை கொண்டு வரவில்லை.
ஆனால் ஏற்கனவே உள்ள விதிகளின்படி, கே.ஒய்.சி. என்ற வாடிக்கையாளர் விவரங்களை வங்கிகள் கேட்டுப் பெறலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறியிருந்ததால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வருவோர் 6 அடையாள ஆவணங்களில் ஒன்றை வங்கி காசாளரிடம் காண்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
வங்கிகள் குறிப்பிட்டுள்ள 6 விதமான அடையாள ஆவணங்கள், ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மக்கள் தொகை பதிவேடு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அட்டை, பாஸ்போர்ட் ஆகியவை ஆகும். ஆனால் கே.ஒய்.சி. பற்றிய விவரங்கள் தெரியாத மக்கள் சிலர், இதுபோன்ற அடையாள ஆவணங்களை வங்கிகளுக்கு நேற்று எடுத்து செல்லவில்லை.
பணத்தை மாற்றிக்கொள்ள அவர்கள் முயன்றபோது, அவர்களின் அடையாள விவரங்களை கோரும் விண்ணப்பத்தை வங்கி காசாளர் கொடுத்தார். அந்த அடையாள ஆவணங்களை கொண்டு வராதவரால் நேற்று ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அவர்களால் மாற்றிக்கொள்ள முடியாமல் போய்விட்டது. எனவே இதுகுறித்த அறிவிப்பை ஏன் நோட்டீஸ் பலகையில் வெளியிடவில்லை? என்று வங்கி அதிகாரிகள் மீது சிலர் கோபம் கொண்டதை பார்க்க முடிந்தது.
ரிசர்வ் வங்கி அறிவித்தது ஒன்று, ஆனால் வங்கிகளில் உள்ள நடைமுறை வேறு ஒன்றாக இருக்கிறது என்று அவர்கள் வருத்தத்துடன் சென்றனர். ஆனால் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் அடையாள விவரங்கள் ஏற்கனவே வங்கியிடம் இருக்கும் என்பதால் அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் கோரப்படவில்லை.