என் மலர்tooltip icon

    மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திகள் | District Collector News in tamil

    • பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் பிளஸ்-1 மாணவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
    • படுகாயம் அடைந்த தேவேந்திரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.

    அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாணவர்களிடம் பெயிண்ட்டை கொடுத்து சுவரில் வரையப்பட்டிருந்த சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தனர்.

    மேலும் சாதி பாகுபாட்டுக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

    • இருவர் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம்.
    • முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக இது நடைபெற்றதாக தெரிகிறது.

    தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் பாரில் சட்டவிரோதமாக மது குடித்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட பாருக்கும் டாஸ்மாக் கடைக்கும் தஞ்சை பொறுப்பு கோட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

    மேலும், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற புகாரில் தனியார் பார் உரிமையாளர் பழனி மீது கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான மதுவில் சயனைடு கலந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்த 2 பேரின் உடல்களை உடற்கூராய்வு செய்ததில் சயனைடு இருப்பது தெரியவந்தது.

    இருவரையும் கொல்ல மதுவில் விஷம் கலக்கப்பட்டதா அல்லது இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர், கீழ அலங்கம் பகுதியில் அரசு மதுபானக் கடை ஒட்டிய அரசு பாரில் மது அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவத்தில்,

    இறந்தவர்களின் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதில், அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு விஷம் உள்ளதாக தகவல் வந்திருக்கிறது.

    இருவர் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக இது நடைபெற்றதாக தெரிகிறது.

    இந்த விவகாரத்தில் சிறப்பு குழு அமைத்து விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம்.

    சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதள ஆன்லைன் போர்ட்டல் மூலமாக பதிவு செய்யலாம்.

    அதன்படி அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டிடம்/வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், திருவள்ளூர் மாட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.

    • புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
    • கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.

    இன்று (சனிக்கிழமை) காலை அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறி இருக்கிறது. இது புயலாக மாறுவதற்கு முந்தைய நிலையாகும்.

    இன்று பிற்பகல் இந்த புயல் சின்னம் மேலும் சென்னையை நோக்கி அருகில் நகர்ந்து வரும். அதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    வட மாவட்டங்கள் அருகே புயல் நாளை நெருங்குவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் எதிரொலியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    அதன்படி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    குறிப்பாக, சென்னை எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், எழும்பூர் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், அஸ்தினாபுரம், சிட்லபாக்கம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    • சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும் நாளை விடுமுறை.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டது.

    புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.

    இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், தாமிரபரணியில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கனமழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு சுமார் 15000 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    மேலும், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், தாமிரபரணியில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    தாமிரபரணி கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள், ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 87.8 அடியாக உள்ளது.

    • கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மழை வெள்ள பாதிப்பு காரணமாக நெல்லை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை.
    • தூத்துக்குடியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி இம்மாதம் (டிசம்பர்) 31ம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெருவாரியான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • மழை வெள்ள பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • 1,064 குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்து சேதம்.

    நெல்லை :

    நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேற்றுவரை எடுக்கப்பட்ட பாதிப்பு விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    மழை வெள்ள பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 67 மாடுகள், 135 கன்றுகள், 504 ஆடுகள், 28,392 கோழிகள் உயிரிழப்பு. 1,064 குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்துள்ளது.


    இழப்பீடு நிவாரணமாக ரூ.2.87 கோடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.58.14 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • டோக்கன் பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள், வயல்வெளிகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்தது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் நிவாரண தொகை பெற இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டோக்கன் பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    மேலும் நெல்லை மாவட்டத்தில் 92 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனவரி 4-ந்தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழக்கம்போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் ரூ.6000 நிவாரண நிதிக்கு பதிலாக ரூ.1000 வழங்கப்படுவதை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ×