என் மலர்
நீங்கள் தேடியது "மும்மொழி கல்வி"
- தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும்.
- தமிழ்நாட்டில் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு திணிக்க முயலும் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை திணிக்க முயற்சிக்கிறது.
மாநில அரசின் சுயமரியாதையை மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை.
ஒற்றை ஆட்சி முறையை திணிக்கும் முயற்சியாகவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப்படுகிறது.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான எந்த திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான புயல் பாதிப்பு நிதியைக் கூட மத்திய அரசு விடுவிக்க மறுக்கிறது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். கல்வித்துறையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அமலில் உள்ளது.
- தமிழகத்தில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சுந்தராபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஐ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.எராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
முன்னதாக எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபோது வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது. ஆனால் அதனை தற்போது ரூ.12.75 லட்சமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்தி சாதனை படைத்து உள்ளார்.
இதனால் மத்திய அரசுக்கு நேரடி வருவாயாக கிடைத்து வந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைந்து உள்ளது. இருந்த போதிலும் நடுத்தர குடும்பத்தினரின் கையில் நிதி இருப்பு விகிதம் கூடும். இதனால் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். அதன் மூலமாக பொருளாதாரம் உயர வாய்ப்பு உள்ளது.
மேலும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் சொத்து பிணையமின்றி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதுவும்தவிர விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமைந்து உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருமொழிக் கொள்கையை ஏற்பதாக கூறி உள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் உள்பட தி.மு.க. வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அமலில் உள்ளது. தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டதை அமல்படுத்தக்கோரி, நான் ஏற்கனவே போராட்டம் நடத்தி உள்ளேன்.
பணம் சம்பாதிக்க மும்மொழி, மக்களை ஏமாற்ற இருமொழி என்ற நிலைப்பாடை மாநில அரசு கையாளுகிறது. மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இதற்கு காரணமாக உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மும்மொழி பாடம் இருக்கலாம் என்றால் அரசு பள்ளிகளில் ஏன் மும்மொழி பாடத்திட்டம் அமலில் இருக்கக்கூடாது?
இவ்வாறு அவர் கூறினார்.
- மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.
- உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
அவதூறு வழக்கு விசாரணைக்காக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.
* ஒரே மொழி என்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.
* இந்தி கற்றே ஆக வேண்டும் என வலிந்து திணிப்பது ஏன்?
* உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
* மற்ற மொழிகளை கற்பது என் விருப்பம். கட்டாயம் பிற மொழிகளை கற்க வேண்டும் என வற்புறுத்துவது ஏன்?
* எங்களின் அடையாளமாக உள்ள எங்கள் தாய் மொழியை அழித்து நாடோடி கூட்டமாக அலையவிடப் போகிறீர்களா? என்று கூறினார்.
- உத்தர பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, 15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள்.
- தேசிய கல்விக்கொள்கைக்கும் நமக்கு ஒவ்வொரு வருடமும் சேர வேண்டிய கல்வி நீதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், "1986 க்கு பிறகு கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த, மொழிப் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான பேச்சிற்கு பிறகு.. நமது மூச்சில் கலந்த மொழிப்போர் தியாகிகளின் உயிர் மீண்டும் உயிர்த்தெழ ஆரம்பித்துள்ளது. அவர்கள் உங்களுடைய உருவின் இங்கு நின்று கொண்டுள்ளது.
தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்வி நிதி தருவேன் என்று 3 நாட்களுக்கு முன்பு ஒன்றிய அமைச்சர் கூறுகிறார்.
அரசியலமைப்பு சட்டத்தில் மும்மொழி கொள்கை எங்கு உள்ளது. தேசிய கல்விக்கொள்கைக்கும் நமக்கு ஒவ்வொரு வருடமும் சேர வேண்டிய கல்வி நீதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
தமிழக பாஜக தலைவர் வெளிநாட்டில் 6 மாத காலம் படித்துவிட்டு இப்போது பொய்யாக பேசி வருகிறார். அவர் தனது கையில் ACER அறிக்கை என்ற ஒன்றை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை விட உ.பி.யும் பீகாரும் சிறப்பாக இருக்கிறது என்று பேசுகிறார். அந்த ACER அறிக்கை பாஜகவின் ஒரு அஜெண்டா தான்.
உத்தர பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, 15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள். அதையேதான் தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிக்கிறார்கள்.
நம் வரிப்பணத்தில் 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் ஒன்றிய அரசு தருகிறது. இது என்ன உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? என்று எக்ட்டதற்கு உங்களுக்கு கோவம் வந்ததே, இப்போது கேட்கிறோம் ரூ.2,151 கோடி உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஆகவே எங்கள் பணத்தை எங்களிடம் கொடுங்கள்" என்று தெரிவித்தார்.
- இது திமிர் பிடித்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.
- வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர்.
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "இது திமிர் பிடித்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம். வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர்.
மத்திய அமைச்சரின் பெயர் தர்மேந்திரா, ஆனால் எந்த தர்மமும் இல்லாதவர். ஆனால் இந்திய ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்க முடியாது என ஆணவத்துடன் கூறுகிறார். இதை கேட்ட தமிழ்நாட்டு மக்கள் உங்கள் அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிறார்கள்.
எங்களின் உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம். யாசகம் கெடக்கவில்லை. மும்மொழியை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி கொடுக்க கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது?
1965 இல் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டபோது அதற்கு எதிராக இங்கு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் பலர் உயிரிழந்தார்கள். அப்போது ரெயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்களில் இருந்த இந்தி அழிக்கப்பட்டது.
இதனையடுத்தது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படாது என்று அப்போதைய பிரதமர் நேரு உறுதி அளித்தார். இப்போது மோடி மன்னர் போல இருக்கிறார். அவர்களின் பாசிஸ்ட்ட ஆட்சியை எதிர்த்து தான் இங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தனது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்ட அண்ணாமலை இருமொழி கொள்கை காலாவதியாகிவிட்டது என்று கூறுகிறார். உண்மையில் அண்ணாமலை தான் காலாவதி ஆகிவிட்டார். தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்கள்.
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செருப்புப் போடுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- மூன்றாவதாக எதாவது ஒரு மொழி என்று பிதற்றுகிறார்கள். அதெல்லாம் பொய்.
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், "ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் திரண்டிருக்கிறார்கள். இந்தி நமக்கு எந்த விதத்தில் நமக்கு பயன் தரும். இந்திய கற்றுக்கொள்வது பெரிய விஷயம் இல்லை. நான் அசாமில் இருந்தபோது 3 மாதத்தில் இந்தி கற்றுக்கொண்டேன்.
மூன்றாவதாக எதாவது ஒரு மொழி என்று பிதற்றுகிறார்கள். அதெல்லாம் பொய். இதில் ஏமாந்தோம் என்றால் பள்ளிகளில் இந்தி, சம்ஸ்கிருத ஆசிரியர்கள் மட்டும் தான் இருப்பார்கள்.
பள்ளியில் 50 மாணவர்கள் வெவ்வேறு மொழி தேர்ந்தெடுத்தால் எப்படி அதற்கு ஆசிரியர்களை நியமிக்க முடியும். அது நடைமுறை சாத்தியமற்றது. இது ஒரு பிளாக்மெயில் அரசாங்கம்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செருப்புப் போடுவேன் என மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். ஜென்மத்திற்கும் நீங்கள் செருப்பு அணிய மாட்டீர்கள். செருப்புப் போட வாய்ப்பு அமையாது
- பா.ஜ.க. அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
- தமிழக மக்கள் வாரி வழங்கிய நிதியைத்தான் திரும்ப கேட்கிறோம்.
திருச்சி:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சியில் ரூ.3 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திருச்சி சிந்தாமணியில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-
பா.ஜ.க. அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் வெள்ள பாதிப்பின்போது 6 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கோரிய நிலையில் 900 கோடியை மட்டும் மத்திய அரசு வழங்கியது.
இந்தி படித்தால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்குவோம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நேரடியாக கூறுகிறார். இதனை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் சென்னையில் பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தினோம்.
இருமொழிக் கொள்கை என்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அல்லது இந்தியா கூட்டணியின் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கொள்கை . தமிழக மாணவர்களின் கொள்கை.
தமிழக மக்கள் வாரி வழங்கிய நிதியைத்தான் திரும்ப கேட்கிறோம். எந்த நிலையிலும் கல்வி, நிதி பெறும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். அதற்காக போராடி வருகிறோம்.
பொதுமக்களும் தயாராக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் ஒருவரை புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து சுயமரியாதையோடு வாழ வேண்டும். மணமக்கள் தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைக்கு அழகிய தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சமச்சீர் கல்வியை கொடுக்கிறேன் என்று.. வசதி படைத்தவர்களுக்கு ஒரு கல்வி.. வசதி இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி.
- புதிய கல்விக் கொள்கை.. மொழியை மட்டும் முன்னிறுத்தவில்லை.. விரிவுபடுத்தப்பட்ட கல்வி.. உயர் தொழில்நுட்ப கற்றல்..
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பிரதானமாக.. மூன்றாவது மொழி வேண்டாம் என்று. விவாதிப்பவர்கள்.. அரசியல்வாதி மட்டுமல்ல.. சில கல்வியாளர்கள் என்று சொல்பவர்கள் கூட.. அரசாங்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு... அவர்களுக்கு எந்த பின் புலமும் இல்லாமல்.. இரண்டு மொழி சொல்லிக் கொடுப்பதே பெரிய சேவை போலவும்... அவர்களுக்கு வீட்டில்.. சொல்லிக் கொடுப்பதற்கு.. படித்த தாய் தந்தையர் இல்லை என்பதனால்.. அவர்களுக்கு tuition போன்ற வசதிகள் செய்து கொள்ள முடியாததால்.. அவர்களுக்கு இதுவே போதும் என்று வாதிடுகிறார்கள்...
ஆக வறுமையில்.. வாடும் குழந்தைகளுக்கு.. இப்போது சொல்லிக் கொடுப்பதே.. ஏதோ அதுவே பெரிய சாதனை.. அதற்கு மேல். அவர்கள் ஆசைப்படக்கூடாது.. என்ற தொனியில்.. பலர் பேசி வருகிறார்கள்...
சமச்சீர் கல்வியை கொடுக்கிறேன் என்று.. வசதி படைத்தவர்களுக்கு ஒரு கல்வி.. வசதி இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி என்று.. தமிழக மாணவர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.. பல ரூபாய் பணம் கட்டி.. தனியார் பள்ளிகளில்.. படிப்பதை.. அரசாங்க பள்ளி குழந்தைகளுக்கும் கொடுக்கிறேன் என்றால்... இதுவே அவர்களுக்கு போதும்.. இதற்கு மேல் அவர்களுக்கு எதற்கு.. என்ற என்ற தொனியே.. அரசாங்கத்திடமும் விவாதிப்பவர்களிடமும் இருக்கிறது...
புதிய கல்விக் கொள்கை.. மொழியை மட்டும் முன்னிறுத்தவில்லை.. விரிவுபடுத்தப்பட்ட கல்வி.. உயர் தொழில்நுட்ப கற்றல்.. சவால்களை சமாளிக்கும் பேராற்றல்.. மாறிவரும் உலகத்திற்கு ஏற்ப.. ஏழைக் குழந்தைகளுக்கும்.. அதே விரிவு படுத்தப்பட்ட கல்வி முறை கிடைக்க வேண்டும்.. என்ற நல்லெண்ணத்தில் கொண்டுவரப்பட்டது... ஆனால் அதையெல்லாம் மறைக்கப்பட்டு.. இது ஏதோ ஹிந்தி திணிப்பு என்ற மாயத் தோற்றத்தை.. திராவிட மாடல் அரசு.. அதற்கு ஆதரவாக பேசுபவர்கள்.. ஏற்படுத்துகிறார்கள்... எனக்கு எப்பவுமே.. மிகுந்த உற்சாகத்தோடு அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மீது ஒரு ஈடுபாடு உண்டு.. எந்தவித பெரிய பின்புலமும் இல்லாமல்.. பின் பலமும் இல்லாமல்.. படிப்பில் அவர்கள் காட்டும் ஆர்வம்.. என்னை வியக்க வைத்திருக்கிறது..
அதனால்தான் தெலுங்கானா ஆளுநராக இருந்தபோது.. பக்கத்தில் அரசாங்க ராஜ்பவன் பள்ளி.. இருந்தது.. அந்தப் பள்ளிக்கு அடிக்கடி செல்வேன்.. ஆளுநரின் பொது நிதியிலிருந்து.. அந்தப் பள்ளியை மேம்படுத்துவதற்கு.. கம்ப்யூட்டர் போன்ற கரணங்களை அளித்தேன். அந்தப் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள். அன்றாட வேலை செய்பவர்களின் குழந்தைகள் அதனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலேயே.. நான் வணங்கும்.. சத்ய சாய் பாபாவின் அறக்கட்டளை நடத்திய உணவகம் மூலமாக. காலை உணவிற்கு ஏற்பாடு செய்தேன்... இது அங்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது... அந்த அரசாங்க பள்ளியில்.. மாணவர் சேர்க்கைக்கு. அந்த ஆண்டிலிருந்து.. அதிக ஈர்ப்பு இருந்தது...
அதேபோல் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக. அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது.. அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பதற்கும்.. காலை உணவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த.. ரொட்டி பால்.. கொடுப்பதற்கும்.. மதிய உணவையும்.. ஏற்பாடு செய்வதற்கு உறுதுணையாக இருந்தேன்... சுமார் 75.. அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று.. அவர்களோடு உரையாடி.. அவர்களின் திறமையை கண்டு வியந்து.. மாலை நேரங்களில்.. அரசாங்க பள்ளி மாணவர்களை ராஜ் நிவாஸிற்கு அழைத்து.. அரசு பள்ளி மாணவர்களின்.. திறமை கண்டறியும் (Talent.hunt) நிகழ்ச்சியை நடத்தி.. பல மாணவ மாணவிகளின் அபரி தமான திறமையை கண்டு.. ஊக்கப்படுத்தியது மட்டுமல்லாமல்.. அவர்களுக்கு பல வாய்ப்புகள்.. கிடைப்பதற்கு முயற்சி செய்தேன்...
அதேபோல.. அனைவருக்கும் சமமான கல்வி என்ற வகையில்.. முதல்வர் கல்வி அமைச்சரோடு இணைந்து.. அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ.. பாடத்திட்டத்தை இன்றைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் ஒத்துழைப்போடு.. கொண்டு வந்தோம்.. அரசு பள்ளி.. மாணவர்கள் மேஜையில்.. அந்தப் பாடத்திட்டத்தின்.. புத்தகங்கள் அலங்கரிப்பதை பார்த்து. அகமகிழ்ந்து போனேன் அதே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக.. மாலைநேரத்தில்.. சிறுதானிய. சிற்றுண்டி.. வழங்க ஆலோசனைக் கூறி.. முதல்வரும் கல்வி அமைச்சரும் அதை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினோம்..
மத்திய அரசின் கல்வித் திட்டத்தில் இணைந்து அரசாங்க பள்ளிகளில் smart class rooms ஏற்பாடு செய்தோம். ஒரு பள்ளி கட்டிட வசதிக்காக அரை நாள் பள்ளி என்று அறிவித்ததை மகிழாமல் முழு நேர பள்ளிக்காக போராடிய அரசு பள்ளி மாணவி மாணவிகளின் ஆர்வத்தை வியந்து.. பாராட்டினேன் பணிவன்புடன் கேட்கிறேன் இந்த குழந்தைகளின் வாய்ப்பை பறிக்காதீர்கள்... அவர்களும் உயரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
- தி.மு.க.வை வேரோடு அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் இருக்கிறார்கள்.
- தி.மு.க. எனும் தீய சக்தியை வேரோடு அறுத்து தூக்கி எறிய வேண்டும்.
கரூர்:
கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க.வை வேரோடு, மண்ணோடு அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் இருக்கிறார்கள். 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. எனும் தீய சக்தியை வேரோடு அறுத்து தூக்கி எறிய வேண்டும். தவறினால் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
உலகத்தில் எங்கேயும் இல்லாத சாதனையை மத்தியில் 8 முறை திருச்சியை சார்ந்த தமிழ் பெண் பட்ஜெட் கொடுத்து இருக்கிறார். இதுவே சரித்திர சாதனை.
இது வளர்ச்சியின் பட்ஜெட், இதுவரை முதல்வர் பட்ஜெட் குறித்து பேசியது இல்லை. ஆனால், மத்திய பட்ஜெட் குறித்து விமர்சிக்க கூட்டம் போடுகிறார்கள். இந்த் ஆண்டு 51 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போட்டப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட்டாக போடப்பட்டுள்ளது.
2 லட்சத்து 20 ஆயிரம் தனிநபர் வருமானமாக வளர்ந்து இருக்கிறோம். வளர்ச்சி பாதையில் நம் நாட்டை மோடி அழைத்துக் கொண்டு இருக்கிறார். இந்தியாவில் 87 சதவீதம் பேர் வரி கட்ட வேண்டாம் என விலக்கு அளித்து இருக்கிறார்கள். இந்த இழப்பு 1 லட்சத்து 10 ஆயிரம் கோடியாகும்.
தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுக்கவில்லை என முதல்-அமைச்சர் பேசுகிறார். காங்கிரஸ் ஆண்ட 10 வருட காலத்தில் வரி பகிர்மானம், 2004 முதல் 2014 வரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 900 கோடி நேரடியாக கொடுத்தது.
ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில் 6 லட்சத்து 14 ஆயிரம் கோடி நேரடியாக கொடுத்து இருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் 2030 முடியும் போது 2 லட்சம் பேர் மருத்துவம் படிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியை விட 5 மடங்கு அதிகமாக நேரடி நிதியாக கொடுக்கிறோம்.
நான்கரை லட்சம் கோடி பாஜக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது. மோடி தமிழகத்திற்காக கொடுக்கிறார். தமிழக மக்கள் மீது உணர்வுபூர்வமாக வைத்துள்ள நம்பிக்கை மனிதர் மோடி.
தண்ணீர், போக்குவரத்து, கழிவறை உள்ளிட்ட வசதிகள் குறித்து என்னிடம் மோடி கேட்டுக் கொள்வார். குற்றம் இருந்தால் டெல்லியில் இருந்து போனில் தொடர்பு கொண்டு பேசுவார்.
உதயநிதி ஸ்டாலின், மோடி வந்தால் இனி கெட் அவுட் மோடி சொல்வோம் என்கிறார். நீங்கள் சொல்லி பாருங்கள். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி, இன்னும் கைது செய்யப்படவில்லை, தலைமறைவாக இருக்கிறார்.
இதே ஊரில் 20 வருடம் கழிப்பறையை பார்த்தது கிடையாது. சைக்கிள், பேருந்தில் போய் படித்தவன் நான். கல்வியின் பெருமை எனக்கு தெரியும். மோடி கல்விக்காக மட்டும் தான் என்னை மதிக்கிறார்.
3-வது மொழியாக ஒரு விருப்பப்பட்ட மொழியை படியுங்கள் என்கிறார். இதில் எங்கே இந்தியை திணிக்கிறார். உங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக விருப்ப மொழியை படிக்க சொல்கிறார்.
அன்பில் மகேஷ் சொந்த ஊர் ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளியை இடித்து, மரத்துக்கு அடியில் போர்டு வைத்து படிக்கிறார்கள். ஆனால், அவர் பையன் பிரெஞ்சு படிக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்கள் ஹிந்தி படிக்க கூடாது என்கிறார்கள்.
52 லட்சம் மாணவர்கள் 2 மொழி தான் படிக்கிறார்கள். தி.மு.க. நடத்தும் பள்ளிகளில் 3 மொழி, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 2 மொழி தான் படிக்கிறார்கள். தி.மு.க.வின் கபட நாடகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறை பட்ஜெட் போட்டு இருக்கிறார்கள். ஆனால், மோடி 2190 கோடி கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.
பெண்களுக்கு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அசாமில் 830, மத்திய பிரதேசத்தில் 1250, சட்டீஸ்கரில் 1000, மஹாராஸ்டிராவில் 2100 உதவித் தொகை பெண்களுக்கு கொடுக்கிறோம்.
டெல்லியில் மகளிருக்கு 2500 ரூபாய் கொடுக்கிறார்கள். இங்கு உரிமை தொகை என்கிறார்கள்.
பா.ஜ.க. ஆட்சியில் அமரும் போது 2500 ரூபாய்க்கும் அதிகமாக கொடுப்போம். கமிசன் அடிக்காத கூட்டம் பா.ஜ.க. கூட்டம். எங்களிடம் இருந்து நியாயம், நேர்மையை உங்கள் வீட்டுக்கு கொண்டு வருகிறோம்.
கட்டுகோப்பான காவல் துறையை வீதியில் இறக்கி விட வேண்டும். பிஞ்சு குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை. 18 வயதுக்கே ஒன்னும் தெரியாத போது, 8 வயது குழந்தை மீது கை வைக்கிறார்கள்.
நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகிறார்கள். விஜய் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கிறது. பா.ஜ.க. உங்களோடு இருக்கிறது. வருகின்ற காலகட்டத்தில் பா.ஜ.க.வுடன் இருங்கள், 2026 மாற்றம் இல்லை என்றால், எப்போதும் மாற்றம் இல்லை.
தி.மு.க. சொந்தங்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன், 3 மொழியையும் படிக்க வையுங்கள். உங்கள் குழந்தைகள் பா.ஜ.க. தலைவர்களாக வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது.
- அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
சென்னை:
மும்மொழியை ஏற்றால்தான் நிதி என்பதை மாற்றி மத்திய அரசு தமிழகத் துக்கு கல்வித் துறைக்கான ரூ.2,512 கோடியை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு தனியார் விழா மேடையில் என்னை வசை பாடியதாக அறிந்தேன்.
உங்க வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம், அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகள் மும்மொழி கற்பதற்கு உங்கள் அரசியல் தடையாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்புவோம்.
அதற்காக நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான்.
சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும், காணாமல் இருக்க, ஒரு கல் நெஞ்சம் வேண்டும். எங்கே தான் சென்றதோ கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய்.
நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் ஏழை-எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தாய் மொழி தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்து உள்ளது.
இதன்படியே, நமது பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைதான் இருக்கிறது.
- மும்மொழி கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு இருந்தால் உதயநிதி ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும்.
மதுரை:
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பூஜை செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தாய் மொழியை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்தேன். தி.மு.க.வினர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்படுகிறது. நவோதயா பள்ளி வந்தால் தி.மு.க.வின் கல்வி வியாபாரம் கெட்டுப் போய்விடும் என்பதற்காக மும்மொழி கல்விக் கொள்கையை அவர்கள் எதிர்க்கிறார்கள்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைதான் இருக்கிறது. இதில் தி.மு.க.வினர் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். தமிழர்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். மும்மொழி கொள்கை நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை. கம்யூனிஸ்ட் காரர்கள் கேரளாவில் வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வேண்டாம் என்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் கெட் அவுட் மோடி என்று சொல்கிறார். இதன் மூலம் அவர் அரசியல் தளத்தை தாழ்த்தி விட்டார். எடப்பாடி பழனிசாமியை தவறாக பேசுகிறார். கெட் அவுட் மோடி என்று சொல்கிறார். அவருக்கு அண்ணாமலை உரிய பதிலடி கொடுத்திருக்கிறார். உலகத்தில் நம்பர் ஒன் டிரெண்டிங் கெட்டவுட் ஸ்டாலின் தான்.
மும்மொழி கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு இருந்தால் உதயநிதி ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும். இரு மொழி கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் ஆங்கிலக் கல்வி திணிக்கப்படுகிறது. கர்நாடகாவில் ஆங்கிலத்தை திணிக்க முடியாது கன்னடம் மட்டும்தான்.
அ.தி.மு.க. மட்டும் எதிர்க்கட்சி அல்ல. பா.ஜ.க., நாம் தமிழர் உள்ளிட்டவைகளும் எதிர்க்கட்சிகள் தான். அனைவரும் சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்.
- இளைஞர்களின் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை தி.மு.க.வும், உதயநிதி ஸ்டாலினும் நிறுத்த வேண்டும்.
சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியை ஒரு மொழியாக சேர்க்க வேண்டும் என்று நாங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை.
3-வதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பது தான் புதிய கல்விக்கொள்கையின் நோக்கமாக இருக்கிறது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதி உள்ள 3 பக்க கடிதத்தில் விளக்கமாக சொல்லி இருக்கிறார்கள். நாம் தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் எந்த அளவுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
உலகத்திலேயே தொன்மையான மொழி, பழமையான மொழி தமிழ் மொழி என்று பிரதமர் மோடி உலக நாடுகளிடம் போய் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு நாட்டிலும் திருவள்ளுவருக்கு கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று சொல்லி இருந்தோம். ஆட்சிக்கு வந்த 5 மாதங்களிலேயே 5 இடங்களில் ஆரம்பித்து உள்ளோம். கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி சிங்கப்பூரில் கலாச்சார மையத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கல்வி திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது,
இதற்கு முழுமுதற்காரணம் ஸ்டாலின் அவர்களும், உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தான்.
தமிழக மக்கள், தமிழக மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை வஞ்சிக்கும் செயல்களை செய்துகொண்டிருப்பது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தான்.
துணை முதலமைச்சரின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள். முதலமைச்சரின் பேரன்கள் எங்கே படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 3-வதாக ஒரு மொழி இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 3-வதாக ஒரு மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
அப்படி இருக்கும்போது அரசு பள்ளியில் படிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள், பட்டியலின மக்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் தான் 3-வதாக ஒரு மொழியை கற்பிக்க மறுக்கப்படுகிறது. இது நவீன தீண்டாமையின் உச்சமாக இருக்கிறது.
உன்னை திட்டினால் கூட தெரியாது. சிரித்துக்கொண்டே திட்டுவான். ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்போது அந்த மொழி மீது பற்றுதல் வரும். எப்படி தமிழ் மொழியை அதிகம் பேர் விரும்புகிறார்களோ அதே போல் இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு மொழியை கூடுதலாக கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.
ஏன் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளியில் கொடுக்கிறீர்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்.
அதனால் 3 மொழி கல்வி என்பது வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றோர்கள் வரவேற்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கோலம்போட்டு 3-வது மொழி வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். புதிய தேசிய கல்விக்கொள்கை வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
கல்வியில் விளையாடாதீர்கள். கல்வியில் அரசியல் செய்யாதீர்கள். இளைஞர்களின் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை தி.மு.க.வும், உதயநிதி ஸ்டாலினும் நிறுத்த வேண்டும் என்று கூறினார்.