என் மலர்
நீங்கள் தேடியது "ரகுபதி"
- தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்? எனக் கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி பழனிசாமியை கை காட்டுவான்.
- திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் பழனிசாமிதானே!
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
யார் அந்தத் தியாகி? என்ற அதிமுகவின் முனை மழுங்கிய கேள்விக்கு "நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள்தான் அந்த தியாகிகள்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், நொந்து போன எதிர்க்கட்சித் தலைவர் வீராவேசமாகக் கருத்து சொல்லியிருக்கிறார்.
தியாகியை விடுங்கள். துரோகியைத் தெரியுமா? தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்? எனக் கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி பழனிசாமியை கை காட்டுவான். அரசியல் அறத்தை அடகு வைத்து விட்டு, துரோகங்களை மட்டுமே செய்து முன்னேறியவர் பழனிசாமி.
ஜெயலலிதா அருகில் கூனி குறுகி நிற்பார்; ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு வணங்குவார்; ஆனால், ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக பாஜக-வின் பாதம்தாங்கியாக மாறி ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி.
தவழ்ந்து, ஊர்ந்து சென்று நாடகமாடி ஆட்சியைப் பிடித்த பிறகு, சசிகலாவுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் பழனிசாமிதானே!
சுயநலத்துக்காக எடப்பாடி பழனிச்சாமி எந்த எல்லைக்கும் செல்வார்? எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிகள் ஓ.பன்னீர்செல்வமும் தினகரனும். உண்மையில் எடப்பாடி பழனிச்சாமியின் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள்தான் அந்தத் தியாகிகள்!
கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது'' என்று சத்தியம் செய்து வந்த பழனிசாமி, இன்று டெல்லி மேலிடத்தின் மிரட்டலுக்குப் பயந்து, சிறைக்கு அஞ்சி தாங்கள் அடித்த கொள்ளை பணத்தைப் பாதுகாக்க மீண்டும் பாஜக கூட்டணிக்குத் தயாராகி விட்டார்.
அவரும் அவருடைய அடிவருடிகளும் பாஜகவின் பிரமுகர்களை முறை போட்டுப் போய் பார்த்துவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தையை நம்பி ஏமாற்றம் அடைந்த அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுமே தியாகிகள்தான்! அவர்களுக்கும் எடப்பாடி துரோகிதான்!
பாஜகவுடன் இதுகாலம் வரையில் இருந்த கள்ளக்கூட்டணி, கரம் பிடிக்கும் கூட்டணியாக மாறப் போவதால், ரத்தத்தின் ரத்தங்களும் மக்களும் நாக்கை பிடுங்கும் வகையில் கேள்வி கேட்பார்கள். அதை மடைமாற்ற திமுக அரசு மீது வதந்திகளை பழனிசாமி பரப்பி வருகிறார்; பாஜகவின் தயவில் அரசியல் வண்டியை ஓட்ட நினைக்கிறார் பழனிசாமி. தனக்கு முதுகெலும்பு இருப்பதே, பாஜகவிற்கு வளைந்து கொடுத்து அடிமை சேவகம் செய்வதற்குத்தான் என ஒன்றிய அரசின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் பாஜகவின் பண்ணையடிமைதான் பழனிசாமி.
தனது டெல்லி எஜமானர்களின் ஏவல் படையான அமலாக்கத்துறை தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய ஒரு முகாந்திரமற்ற சோதனையை வைத்துக் கொண்டு, அபத்தமான கேள்வியோடு தனது கோமாளித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. யார் அந்த சார்? என்ற புரளி நாடகம் அம்பலப்பட்ட பிறகு வேறு ஏதேனும் கிடைக்காதா என்று திணறிக் கொண்டிருக்கிறார்.
கள்ளக் கூட்டணியை உறுதி செய்ய டெல்லியில் அமித்ஷாவை பதுங்கிப் பதுங்கி, கார்கள் மாறி மாறி சென்று சந்தித்த கோழை பழனிசாமி, தமிழ்நாட்டு முதலமைச்சரைப் பற்றிப் பேசத் திராணியிருக்கிறதா? தன் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு சிபிஐ விசாரணை வேண்டாம் என நீதிமன்றத்திற்கு ஓடிப் போய் தடையாணை வாங்கிய பயந்தாங்கொள்ளி பழனிசாமி பேசுவது அத்தனையும் கேலிக்கூத்துகள்தான்.
தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் துரோகம், இந்தியைத் திணித்து துரோகம், தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து துரோகம் என பாஜக வரிசையாக துரோகங்களைச் செய்து சதித்திட்டம் தீட்டி வருகிறது. கொஞ்சம் கூட வெட்கமின்றி, தமிழ்நாட்டு மக்களைப் பற்றி துளியும் யோசிக்காமல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி!
இன்றைக்குத் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்து, நாட்டின் கூட்டாட்சி கோட்பாட்டை உயர்த்திப்பிடித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சரை இன்று உலக அளவில் ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. அதைப் பொறுக்க முடியாமல், தனது பதவி நலனுக்காக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 'பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்' என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி டெல்லி எஜமானர்களின் ஆணையின்படி இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகமும் மக்களிடம் அம்பலப்பட்டு பழனிசாமி அவமானப்படுவது உறுதி.
இவ்வாறு ரகுபதி தெரிவித்துள்ளார்.
- தேர்தலை பார்த்து பயப்படும் கட்சியும் திமுக இல்லை.
- கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை.
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தலை கருத்தில் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
இ.பி.எஸ்.க்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
* தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை.
* தேர்தலை பார்த்து பயப்படும் கட்சியும் திமுக இல்லை.
* கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை.
* இந்தியா- இலங்கை பிரிக்கப்பட்டபோது கச்சத்தீவு இலங்கைக்கு பிரிக்கப்பட்டது.
* எங்களை சொல்லும் அதிமுக, அவர்கள் மத்தியில் கூட்டணியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்டு இருக்கலாம்.
* கச்சத்தீவு குறித்து திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.
- சிறையில் கைதிகளுக்கு புதிய உணவு முறை, உணவின் அளவை மாற்றி அமைக்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
- அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் சிறைத் துறையின் மானிய கோரிக்கையின்போது சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறை துறைகள் துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி கைதிகளின் நலனுக்காக நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் கைதிகளின் உணவு முறை மற்றும் உணவின் அளவை ஆண்டுக்கு ரூ.26 கோடி செலவில் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்தும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு புதிய உணவு முறை மற்றும் உணவின் அளவை மாற்றி அமைக்கும் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி, டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன், சூப்பிரண்டுகள் கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
- 2024 மக்களவை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அ.தி.மு.க. தொடங்கி விட்டது.
தூத்துக்குடி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளது வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் காவலர் நலவாழ்வு திட்டம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மன அழுத்தம் உள்ள காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டனர். ஆனால் அந்த காவலர் நலவாழ்வு திட்டத்தை தற்போதைய தி.மு.க. அரசு நிறுத்தி விட்டதாக தெரிகிறது.
அந்த திட்டம் இருந்திருந்தால் தற்போதைய டி.ஐ.ஜி. தற்கொலை ஏற்பட்டிருக்காது. டி.ஐ.ஜி. தற்கொலை பற்றி அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை. காவலர் குடும்பத்திலும் மன அழுத்தம் இல்லை. அவருக்கும் மன அழுத்தம் இல்லை என தெரிகிறது. எனவே அவரது இறப்பு தற்கொலையா என விசாரிக்க வேண்டும்.
தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஊழல் பற்றி பேச தகுதி இல்லை. அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஊழல் வழக்கு உள்ள அவர் ஊழல் தடுப்பு பிரிவை கண்காணித்து வருகிறார். இது எப்படி சரியாக இருக்கும்.
தி.மு.க.வின் தற்போதைய அமைச்சர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்குகளில் தற்போதைய தி.மு.க. வக்கீல்கள் சரியான வாதங்களை எடுத்து வைக்காததால் அவர்கள் விடுதலையாகி வருகிறார்கள்.
தி.மு.க. அமைச்சர்கள் பாதி பேர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு பயந்து போய் உள்ளனர். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.
- ‘ரம்மி’ விளையாட்டை திறன் விளையாட்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி வருமாறு:-
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வாதிட்டுள்ளது. இதற்கு முன்பு இதே சட்டத்தை முந்தைய அ.தி.மு.க. அரசு இயற்றியபோதும் அதுபற்றி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அது ஒரு திருத்தச் சட்டம் என்று கூறி ஐகோர்ட்டு அந்த சட்டத்தை ரத்து செய்தது.
ஐகோர்ட்டு கூறியுள்ள கருத்துகளையும் சேர்த்து சட்டம் இயற்றுவதில் ஆட்சேபனை இல்லை என்று அந்தத் தீர்ப்பில் ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது. ஆனால் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறி அந்த வழக்கில் மத்திய அரசு அப்போது முறையீடு செய்யவில்லை.
ஆனால் இப்போது, தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வக்கீல் வாதிட்டு, இதே விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றி இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு சில விதிகளைத்தான் கொண்டு வந்துள்ளதே தவிர இதற்கென்று தனி சட்டத்தை மத்திய அரசு இயற்றவில்லை.
அந்த விதியும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு உரிமையாளர்களை பாதுகாக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது. அதோடு மத்திய அரசுக்கு வருவாயை ஏற்படுத்தும் வகையில் அது உள்ளது. அது மக்களுக்கு பாதுகாப்பான விதிகளாக இல்லை. சூதாட்டம் ஒரு கொடிய நோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதனால் 40-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடந்த பின்னரும் அதை கருத்தில் கொள்ளாமல் ஆன்லைன் விளையாட்டு மூலம் வருவாய் ஏற்படும் வகையில் விதிகளை திருத்திவிட்டு, சட்டம் கொண்டு வந்துவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. இதில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது. நோயை தடுக்காமல் அதை பரப்புகின்றனர்.
அரசியல் அமைப்பு சாசனத்தில் பொதுப்பட்டியல், மத்திய அரசு பட்டியல் மற்றும் மாநில அரசுப் பட்டியல் இடம்பெற்றுள்ளன. மாநில அரசுப் பட்டியலில் சூதாட்ட விளையாட்டு இடம் பெற்றுள்ளதால்தான் மாநில அரசு தனது உரிமையுடன் அதில் சட்டம் இயற்றியுள்ளது.
'ரம்மி' விளையாட்டை திறன் விளையாட்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் அது மக்கள் நேரடியாக உட்கார்ந்து ஆடும் ரம்மி விளையாட்டு ஆகும். தமிழக அரசு இயற்றிய சட்டம், ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றியது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 2 பேர் ரம்மி விளையாடினால், 3-வதாக 'புரோகிராமர்' என்ற மற்றொருவர் புகுந்து அந்த விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் மாற்றிவிட முடியும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் என்னதான் திறமையுடன் விளையாடினாலும், இறுதியில் புரோகிராமர் புகுத்தி வைத்துள்ள முடிவுதான் ஜெயிக்கும்.
இதனால்தான் பலரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று பணத்தை இழக்கின்றனர். எனவே 2 வகை ரம்மி விளையாட்டிலும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். இதை உணர்ந்து மத்திய அரசு உரிய திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.
ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு போடுகிறது. ஆனால் அப்படிப்பட்ட விளையாட்டே வேண்டாம், பாவப்பட்ட பணம் தேவையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. தெலுங்கானா உள்பட 2 மாநிலங்களில் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறுகிறார். ஆனால் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் வாதிடுகிறார். மத்திய அரசு என்பது மாறுபட்ட கருத்துகளின் ஒட்டுமொத்த வடிவமாக உள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு சார்பில் தமிழக கவர்னருக்கு எழுதிய பதில் கடிதம் அப்படியே இருக்கிறது. அவரிடம் இருந்து பதில் இன்னும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- எங்களைப் பொறுத்தவரை ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது.
- பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை.
புதுக்கோட்டை:
ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமசோதா நிறைவேற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அதில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது. ஆனால், திறமை சார்ந்த ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேநேரம், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லும். மேலும் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்லைன் தடைச்சட்டத்திற்கு அரசாங்கம் சட்டம் ஏற்றுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவாக சொல்லி உள்ளது. ஆனால் தமிழ்நாடு கவர்னர் அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.
நாங்கள் அவரிடம் எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை எடுத்துக் கூறியிருந்தோம். இந்நிலையில் இன்று நீதிமன்றம் நாங்கள் கூறியதைப் போல் அரசு சட்டம் ஏற்றுவதற்கு உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இணைய வழி சூதாட்டம் ஒழுங்குமுறை படுத்துதல் தடை செய்தல் என்பதுதான் அந்த சட்டத்திற்கு பெயர். ஒழுங்குமுறைபடுத்துவது என்பது எந்தெந்த விளையாட்டுகளை எப்படி ஒழுங்குமுறைபடுத்த வேண்டும் அதற்கான குழுக்கள் அமைக்க வேண்டும் அந்த குழுக்களுக்கு மனுக்கள் போட்டு பரிசீலினை செய்து ஒழுங்குமுறைப்படுத்தி அந்த இணைய வழி விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும் என்பது முதலாவது கட்டம்.
இரண்டாவது கட்டம் ரம்மி மற்றும் போகர். இந்த 2 விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும். ஏனென்றால் அதில் பெரும்பாலான மக்கள் பணத்தை இழந்து தற்கொலைக்கு ஆளாகிறார்கள். அதனால் போகர், ரம்மி இரண்டையும் தடை செய்ய வேண்டும் என்பதற்காக தனி பட்டியலில் அதை தந்துள்ளோம்.
எங்களைப் பொறுத்தவரை ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. ரம்மி என்பது திறமைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் ரம்மியில் திறமைக்கு வாய்ப்பில்லை. அது ஒரு ப்ரோக்ராம். விளையாட்டை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி அமைக்கலாம் அது திறமை அடிப்படையில் வராது. அதனால் அதனை தடை செய்ய வேண்டும் என்பது எங்களின் கருத்து.
ஆனால் நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்றவாறு அந்த வாதத்தை முன்வைக்கவில்லையோ என்று நாங்கள் நினைக்கிறோமே தவிர தீர்ப்பை பற்றி எதுவும் சொல்ல முடியாது, எங்களது வழக்கறிஞர்கள் வாதத்தை சிறப்பாக முன் வைத்திருந்தாலும் கூட நீதிபதி அந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அவரை திருப்திபடுத்தும் வகையிலும் கருத்துக்களை எடுத்து வைக்கவில்லையோ என்ற எண்ணுவதைப் போல ஒரு தோற்றம்தான் வருகிறது தவிர வேறு எதுவும் கிடையாது. தீர்ப்புகளைப் பற்றி விமர்சிக்கும் உரிமை எனக்கு கிடையாது.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத்துறை பரிசீலனை செய்யும். மேல்முறையீடு தேவை என்று சொன்னால் அதன்படி மேல்முறையீடு செய்வோம். சட்டத்துறை அரசு வழக்கறிஞர்களுடைய கருத்துக்களைப் பெற்று அடுத்த நடவடிக்கை தொடரும்.
முறைப்படுத்துவது சட்டத்திலே உள்ளது கமிட்டி அமைக்கின்றோம் அந்த விளையாட்டுகளை ஒழுங்குமுறை படுத்துகின்றோம். சட்டப்படி ஒழுங்குமுறை படுத்துகின்ற விளையாட்டுகளை முறைப்படுத்தி நடத்தப்படும். ரம்மிக்கும் போகருக்கும் வயது வரம்பு கால வரம்பு எல்லாம் நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி எந்த அளவுக்கு பரிசீலனை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பரிசீலனை செய்து எந்த அடிப்படையில் அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்.
அரசியலில் பா.ஜ.க. கூறும் கருத்துக்களை எல்லாம் தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை, இந்த சமய அறநிலையத்துறை என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயிலுடைய சொத்துக்களை பாதுகாப்பதற்கும் அதை நிர்வகிக்க அறக்கட்டளை நியமிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பையே எடுத்து விடுவோம் என்று சொன்னார்கள் என்றால் எந்த அடிப்படையில் அவர்கள் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.
எங்களை பொறுத்தவரை பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதனால் இந்து சமய அறநிலையத் துறையை அவர்கள் எடுக்கப் போவதுமில்லை. அவர்கள் போற போக்கில் எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு பா.ஜ.க.விற்கு உரிமை உண்டு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் அவர்கள் கூறலாம். சுதந்திர நாட்டில் கருத்து சொல்ல உரிமை உண்டு.
அண்ணாமலை தன்னை பற்றி பிறர் பேச வேண்டும் என்பதற்காக விமர்சனங்களை அவர் முன் வைக்கின்றார். தன்னை பிரபலப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தவிர வேறு ஏதும் இல்லை.
ஒருத்தர் மீது பழியை சொல்லிவிட்டு போனால் அவர்கள் அதற்கு பதில் கூறுவார்கள் அதன் மூலம் தனக்கு விளம்பரம் கிடைக்கும் தன்னுடைய எஜமானர்களை திருப்திபடுத்த முடியும் என்று அண்ணாமலை எண்ணுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
- காலியிடங்களை நிரப்ப ஒப்புதல் தர வேண்டும் என கோரியுள்ளோம்.
கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன் ஆகியோரும் சந்தித்துள்ளனர்.
பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில் நிறைவு பெற்றது.
சந்திப்பின்போது, கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:-
ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 அமைச்சர்களுடன் ஆளுநரை சந்தித்தார்.
10 சட்ட முன்வடிவு இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆனால், அதை ஆளுநர் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பினார்.
முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் தொடர்பாக கோப்புகளுக்கு அனுமதி கோரியுள்ளோம்.
அண்ணாவின் பிறந்தநாளன்று கைதிகள் விடுதலை தொடர்பாக 68 கோப்புகளுக்கு மட்டுமே ஆளுநர் அனுமதி அளித்திருந்தார். எஞ்சிய கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி தரவில்லை. நிலுவையில் உள்ள 49 கோப்புகளுக்கு அனுமதி வழங்குமாறு ஆளுநரிடம் கோரியுள்ளோம்.
டிஎன்பிஎஸ்சியில் 4 பேர் தான் உள்ளனர். காலியிடங்களை நிரப்ப ஒப்புதல் தர வேண்டும் என கோரியுள்ளோம்.
கோரிக்கைகளை மனுக்களாக ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்.
20 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு, ஆளுநர் அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற அறிவுரைபடி மசோதாக்களை ஆளுநர் பரிசீலிக்க வேண்டும். மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதில்லை என்பதே எங்களின் கருத்து.
மசோதாக்களுக்கு நீங்களே அனுமதி தரலாம் என ஆளுநரிடம் தெரிவித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கம்ப ராமாயணம் சொல்வது திராவிட மாடல் ஆட்சியைத்தான் சொல்கிறது.
- ராமன் அனைவருக்கும் பொதுவானவனாக இருந்தான்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழகத்தின் 10-வது நாள் விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:-
கம்ப ராமாயணத்தை உற்றுநோக்கி உள்நோக்கி சமுதாயக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், அங்கே நமக்கு தெரிவது, சமத்துவம், சமூகநீதி, எல்லோருக்கும் எல்லாம், நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள், நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது, இதுதான் கம்ப ராமாயணம்.
இதைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்கிறார். கம்ப ராமாயணம் சொல்வது திராவிட மாடல் ஆட்சியைத்தான் சொல்கிறது என்பதால், இதை நான் சொல்கிறேன்.
மற்றவர்கள் யாரும் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ராமன் எந்த குலத்தில் பிறந்தான் என்று பார்ப்பது கிடையாது. ராமன் அனைவருக்கும் பொதுவானவனாக இருந்தான் என்றுதான் நாம் பார்க்கிறோம்.
தசரதனுடைய மகனாகத்தான் விபீஷனனையும், குகனையும், சுக்ரீவனையும், ராமன் ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்று சொன்னால், அங்கே ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை எதிர்காலத்திலே உருவாக வேண்டும், இருக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு உருவாக்கப்பட்ட காவியம்தான் ராம காவியம், கம்ப ராமாயணம் என்பதை நாம் இங்கே மனதிலே வைத்துக்கொண்டாக வேண்டும்.
எனவே, பாதி பேருக்கு இது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். இருந்தாலும், அதில் இருக்கக்கூடிய பல நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். போற்றப்பட வேண்டும். அந்த வித்தியாசமான கண்ணோட்டத்திலே நாங்கள் பார்க்கிறபோது, இது எங்களுடைய திராவிட மாடலுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்ற காரணத்தினாலேதான் ராமனை திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக இருக்கும் என்று நாங்கள் சொல்லி வருகிறோம்.
தந்தை பெரியாருக்கு முன்னால், பேரறிஞர் அண்ணாவுக்கு முன்னால், அண்ணல் அம்பேத்கருக்கு முன்னால், தலைவர் கலைஞருக்கு முன்னால், இன்று தலைவர் தளபதிக்கு (மு.க.ஸ்டாலின்) முன்னால், இந்த திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றிருக்கின்ற சமூகநீதியின் காவலர், சமத்துவம் சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர், எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமன்.
இதை யாரும் மறுக்க முடியாது. இதை மறுப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க ஆட்சி. 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மை பெற்று யாருடைய தயவு, இல்லாமல் மீண்டும் ஆட்சியை அமைக்கும். யாருடைய தயவையும் பெறும் சூழ்நிலை எங்களுக்கு வராது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கம்பராமாயணத்தில் ராமனை பற்றி சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கள் திராவிட மாடல் ஆட்சியை ஒட்டிய கருத்துக்கள். திராவிட மாடல் கொள்கையில் கம்பன் எந்த அளவுக்கு ஈடுபட்டிருந்தார் உடன்பட்டு இருந்தார், சமரசப்பட்டு இருந்தார் என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன்.
சமத்துவம் சமூக நீதி எல்லோருக்கும் எல்லாம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. குகனோடு சேர்ந்து ஐவரானோம், சுக்கிரனோடு சேர்ந்து அறுவர் ஆனோம், விபீஷணனோடு சேர்ந்து ஏழ்வரானோம் என்று எல்லோரையும் தன்னுடன் இணைத்துக் கொள்கின்ற அந்த சகோதரபான்மையோடு ராமர் நாங்கள் எல்லாம் தசரதனின் குழந்தைகள் என்று சொல்வதோடு அனைவரையுமே தனது சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற அந்த பக்குவம் அதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதைத்தான் நாங்கள் முன்னிறுத்தி இருக்கின்றோம்
அயோத்திக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் செல்வேன். நான் அனைத்து கோவிலுக்கு செல்பவன் தான். அயோத்திக்கும் சென்று பார்க்கத்தான் வேண்டும். அயோத்தியில் இருப்பது பால ராமர் தான்.
- முதல்வர் மருந்தகம் மாநிலம் முழுவதும் 1,000 திறக்கப்பட உள்ளது.
- விக்கிரவாண்டி தேர்தலை பார்த்து பயந்தவர்கள் அதிமுகவினர்.
நாகப்பட்டினம்:
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசு, ஸ்டிக்கர் ஒட்டி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என்று விமர்சித்துள்ளார். 'ஸ்டிக்கர் பாய்ஸ்' என்று பெயர் பெற்றவர்கள் அதிமுகவினர்.
அம்மா மருந்தகத்தை முதல்வர் மருந்தகம் என்ற பெயர் மாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். அம்மா மருந்தகம் வேறு, முதல்வர் மருந்தகம் வேறு. அம்மா மருந்தகம் கூட்டுறவு துறையோடு இயங்கியது. மாநிலம் முழுவதும் அம்மா மருந்தகம் 380 தான் இருந்தது.
ஆனால் முதல்வர் மருந்தகம் மாநிலம் முழுவதும் 1,000 திறக்கப்பட உள்ளது. முதல்வர் மருந்தகம் மூலம் அனைத்து வகையான மருந்துகளும் கிடைப்பதுடன், வேலையில்லா திண்டாட்டமும் குறையும்.
மேலும் அம்மா சிமெண்டு் திட்டத்தை வலிமை சிமெண்டு திட்டமாக மாற்றி விட்டதாகவும் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலேயே அம்மா சிமெண்ட் திட்டம் கைவிடப்பட்டது. ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில் வலிமை சிமெண்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் அதிமுக 3, 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதிமுகவில் உள்ளவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதை தவிர்க்கவே ஜெயக்குமார் இதுமாதிரி பேசி வருகிறார்.
விக்கிரவாண்டி தேர்தலை பார்த்து பயந்தவர்கள் அதிமுகவினர். திமுக எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. கவர்னரை தன் பக்கம் வைத்துக்கொள்ள தேநீர் விருந்தில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.
திமுகவினருக்கு ஒருபோதும் பாஜகவின் துணை தேவையில்லை. அதிமுகவுக்கு வேண்டுமானால் பாஜக எஜமானர்களாக இருக்கலாம். இந்தியாவிலேயே பாஜகவை எதிர்ப்பதில் முன்னோடியாக இருந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை.
- திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இந்து அறநிலை துறை சார்பாக 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார். வேறு வேலையில்லாததால். தி.மு.க. கூட்டணியை அவர் உடைக்கவும் முடியாது, கொளுத்தவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, நசுக்கவும் முடியாது.
இது அனைத்தும் அவர் சார்ந்திருக்கக்கூடிய கட்சிக்கு வேண்டுமென்றால் ஏற்படுமே தவிர, தி.மு.க.வுக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்பது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தாக இருக்கலாம்.
தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை மக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் பாடப்பட்டு வருகிறது. சீமான் அதில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். தமிழ்நாடு, திராவிடம் இதை இரண்டையும் தமிழ் மண்ணில் இருந்து பிரிக்க முடியாத சொற்கள்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் திராவிடம் என்ற பெயரோடு தான் இருக்கிறது. இங்கு உள்ள கட்சிகள் திராவிடம் சார்ந்த கட்சிகள் தானே தவிர திராவிடம் சாராத கட்சிகள் இல்லை. யாரும் கட்சி ஆரம்பித்தால் கூட திராவிடம் சார்ந்து தான் கட்சியை ஆரம்பிக்கின்றனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணிலே ஊறிப்போன ஒன்று. அதை திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்துச் செல்லும்.
ஒரு இயக்கத்தை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த இயக்கத்தின் தலைமை பலவீனமாக இருந்துவிட்டால் அந்த இயக்கம் தானாகவே அழிந்து விடும். இன்று எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை பலவீனமாக உள்ளது. அதனுடைய எடுத்துக்காட்டு தான் இந்த குழப்பம்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. நம்பிக்கைக்குரிய இணையாக அ.தி.மு.க.வை ஏற்றுக்கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை. அவரும் என்னென்னமோ எண்ணி வலைவீசி பார்க்கிறார். யாரும் அவர் பக்கம் செல்வதற்கு தயாராக இல்லை. அவரை திரும்பி கூட பார்க்கவில்லை. அதுதான் உண்மை.
சீமான் கற்பனையில் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகலாம். ஏதாவது குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் அரசு அமைவதில் அவர் உறுதியோடு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், முத்துராஜா எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் தவ. பாஞ்சாலன், மாமன்ற உறுப்பினர் கனக அம்மன் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
- உழைப்புக்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தான்.
- அ.தி.மு.க. கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது விஜய்க்கு தெரிந்துள்ளது.
புதுக்கோட்டை:
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கைகள் தமிழ்நாடு மக்களிடமிருந்து அகற்ற முடியாது என்பதை விஜய் கட்சி வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும், எங்களுடைய கொள்கைகளை அதில் சில வெற்றிக்கு விளக்கங்களை கொடுத்திருக்கிறாரே தவிர திராவிட மாடல் ஆட்சியையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து செல்கின்ற கொள்கைகளையும் தமிழ்நாடு மக்களிடம் இருந்து எடுத்து விடவும் பிரித்து விடவும் முடியாது.
உழைப்புக்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தான். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகத்திற்கே வழிகாட்டுகின்ற திட்டம். தமிழ்நாடு மக்களின் இதயங்களில் அவருக்கென்று தனி இடம் உள்ளது. உழைப்பின் மற்றொரு வடிவமாக திகழ்ந்து வருபவர் தான் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு மக்களிடையே அவர் உழைப்புக்கும் மரியாதை உள்ளது. இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடிய ஒன்று அரசியல் அது போக போக தெரியும்.
இது வரைக்கும் பல அரசியல் கட்சிகளுடைய ஏ டீம், பி டீம் பார்த்துள்ளோம். இது பாஜகவுடைய சி டீம். ஆளுநரை எதிர்த்து பேசினால் தான் தமிழ்நாட்டில் எடுபடும். தமிழ்நாடு மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிற ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசினால் எடுபடாது. வெறுப்புக்கு ஆளாகியுள்ள ஆளுநரை பற்றி பேசினால் அவருக்கு மரியாதை கிடைக்கும் என்பதால் ஆளுநரை எதிர்த்து விஜய் மாநாட்டில் பேசப்பட்டுள்ளதே தவிர இது முழுக்க முழுக்க பாஜகவின் ஏ டீம் பி டீம் அல்ல பா.ஜ.க.வின் சி டீம்.
அவர் யாருடைய ஏ டீம், பி டீம் அல்ல என்று விஜய் கூறியுள்ளார். அவருக்கே தெரியும் அவர் சி டீம் என்று. ஆட்சிக்கு வரட்டும், அப்போது பாத்துக்கலாம். மக்களை சந்திக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த வேண்டும். மக்களை சந்தித்து வாக்குகளை பெற வேண்டும். பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர வேண்டும்.
அதற்கு பிறகு தான் ஆட்சியில் பங்கு என்பதற்கெல்லாம் வாய்ப்பு. எங்களது கூட்டணியை யாரும் பிரித்து விட முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் காட்டுகின்ற பாசத்தை விட்டு யாரும் சென்று விட மாட்டார்கள்.
அ.தி.மு.க. கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது விஜய்க்கு தெரிந்துள்ளது. அ.தி.மு.க.வை அவர் கட்சியாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அங்கிருக்க தொண்டர்களை இழுக்க வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள். பா.ஜ.க.வுக்கு வலுவூட்டுகின்ற வகையில் அ.தி.மு.க. தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்காக அ.தி.மு.க.வைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. ஊழலை பற்றி பேச வேண்டும் என்றால் 2011-21 பற்றி தான் பேச முடியுமே தவிர 21-26 ஐ பற்றி பேசுவதற்கு யாராலும் முடியாது. எந்த தவறுக்கும் நாங்கள் ஆளாகவில்லை.
பழுத்த பழம் தான் கல்லடி படும். தி.மு.க.வை பற்றி தாக்கி பேசினால் தான் மக்கள் மன்றத்தில் ஏதாவது பேச முடியும். தமிழ்நாட்டில் அரசியலில் அண்ணா, பெரியார், கலைஞர் அதேபோல் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கக்கூடியவர் எங்களது தலைவர் மு.க. ஸ்டாலின். இதை மீறி யாரும் அரசியல் செய்ய முடியாது இவர்களைப் பற்றி பேசாமல் யாரும் அரசியல் செய்து விடவும் முடியாது.
183 படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் தி.மு.க.வின் கொள்கைகளை பரப்புவதற்காக சிறந்த பேச்சாளர்களாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் அவர்கள் மூலமாக அடுத்த கட்ட பிரசாரத்தை திமுக இளைஞரிடத்தில் கொண்டு செல்லும்.
தி.மு.க. நினைத்தால் 5 மடங்கு கூட்டத்தை கூட கூட்ட முடியும் எங்களின் இளைஞர் சக்தி அதிகரித்துள்ளது குறையவில்லை. இன்று இளைஞர்கள் நம்பி வரும் இயக்கமாக திமுக தான் இருக்கிறது. நேற்று நடந்த மாநாடு எங்களைப் பொறுத்தவரை சினிமா குறித்தான மாநாடு.
இவ்வாறு அவர் கூறினார்.