என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முத்துசாமி"
- செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
- முதலமைச்சர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக.
கோவை:
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது.
செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இது தொடர்பாக கோவையில் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. சுப்ரீம் கோர்ட்டு இதில் சரியாக ஒரு நல்ல முடிவாக கொடுத்துள்ளது.
நிச்சயமாக இதனை நாங்கள் மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக தான் எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்னால் பல சிரமங்களும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
முதலமைச்சர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக. இதற்கும், தற்போது வந்த தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை. செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளதை ஒரு வெற்றி, மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம்.
அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமையும், முதல்-அமைச்சரும் முடிவெடுப்பார்கள்.
விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நன்றாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார்.
- உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்த சில நிபந்தனை விதித்துள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் வரும் 24-ந் தேதி வரை 5 பிரிவுகளின் கீழ் நடைபெறுகின்றது. போட்டியில் தமிழகம் முழுவதும் 11.56 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 21,626 பேர் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கையில் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.
ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார். அதற்கான பணிகள் தொடக்கப்பட்டுள்ளன. சி.என்.சி. கலை அறிவியல் கல்லூரியில் ஒரு உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு துறை அமைச்சர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.
மதுவிலக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு கொள்கை தளர்த்தப்பட்டது. இந்த அரசு காலத்தில் அல்ல அது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதனால் கூட்டணியில் இருந்து கொண்டு அவர் தி.மு.க.வை எதிர்ப்பதாக கருதக்கூடாது.
அவர் அவரது கருத்தை, கோரிக்கைகளை தெரிவிக்க மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு பிரசாரத்திற்கு 5 கோடி ரூபாய் இந்த அரசு ஒதுக்கி உள்ளது. இது படிப்படியாக தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கப்படும்.
உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்த சில நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் மட்டும் தற்போது பெற உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகள், கட்டிடங்கள் குறித்து கண்டறிய மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கீகரிக்கப்படாத பள்ளி கட்டிடங்கள் வரைமுறைப்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.
- மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது'' என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்களும், "உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்" என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் கூறியிருக்கின்றனர். அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து, நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநிலங்களில் இருந்து மது உள்ளே வந்து விடும்; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை.
அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும், கள்ளச்சாராய வணிகத்தை தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள். அதற்காகத் தான் காவல்துறை என்ற அமைப்பும், அதில் மதுவிலக்குப் பிரிவு என்ற துணை அமைப்பும் உள்ளன. தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அது குறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில் காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமை தான். மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.
அரசு அதன் வருவாய்க்காகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. மதுவால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இரு லட்சம் பேர் உயிரிழப்பதை விட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல். எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
- கள் விற்பனை குறித்து மிகப்பெரிய ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய பணிகள்.
- சிலர் செய்யும் தவறை மொத்தமாக சொல்லும் போது மற்றவர்களுக்கும் வேதனை அடைவார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களுடன் முதல்வர் திட்டம் அரசியல் நோக்கமோ அல்லது விளம்பரம் நோக்கத்திற்காகவோ செய்யவில்லை. மக்கள் தங்கள் கோரிக்கை மனு மீதான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் மது அருந்தும் சம்பவம் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில இடங்களில் மது அருந்துவதால் நிகழும் குற்ற சம்பவங்கள் குறித்து அரசு மீது சொல்லும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல.
தனிப்பட்ட முறையில் நிகழும் குற்ற சம்பவத்தில் போலீசார் விசாரணையில் தான் தெரியும் வரும். மது அருந்த வருபவர்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை. தவறான வழியில் சென்று தவறு நிகழக்கூடாது என்பதை சரி பார்ப்பதற்கான முயற்சியாக தான் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.
மது விற்பனை அதிகப்படுத்தும் நோக்கம் இல்லை. அதிலிருந்து மது அருந்துபவர்கள் விடுபட வேண்டும் என்ற நோக்கில் அரசின் சார்பில் போதுமான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. கள் விற்பனை குறித்து மிகப்பெரிய ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய பணிகள். ஒரே நாளில் கள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியாது.
அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து தெளிவான புகார் வந்தால் பணியாளர்கள் கைது மற்றும் பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்க அரசு தயாராக உள்ளது.
25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள நிலையில் சிலர் செய்யும் தவறை மொத்தமாக சொல்லும் போது மற்றவர்களுக்கும் வேதனை அடைவார்கள். 99 சதவீதம் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்டிடங்களை 12 மீட்டர் உயரம் வரை கட்ட இப்போது அனுமதியுள்ளது.
- சென்னை மாநகராட்சியில் சில இடங்களில் மட்டும் தொடர் கட்டுமானத்திற்கான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி வருமாறு:-
கட்டிட பொறியாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அவர்கள் சார்பில் 44 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் 18 கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது. மீதமுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.
கட்டிடங்களை 12 மீட்டர் உயரம் வரை கட்ட இப்போது அனுமதியுள்ளது. அதை 13 மற்றும் 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மதுரை, திருவண்ணாமலை போன்ற கோவில் நகரங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர் கட்டிட கட்டுமானத்திற்கு (இடைவெளி இல்லாமல் கட்டுவது) அனுமதி வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. இந்த கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் சில இடங்களில் மட்டும் தொடர் கட்டுமானத்திற்கான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர் கட்டுமான அனுமதி வழங்க சில விதிமுறைகளை பின்பற்றி சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அமைப்புகள் அனுமதி வழங்கி வந்தன. ஆனால் 2019-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கும் நடைமுறை கைவிடப்பட்டது.
அதனால் தொடர் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நாகர்கோவிலில் இது சம்பந்தமாக எழுந்த பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். நாகர்கோவிலில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பல நகரங்களில் இந்த பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினைகளை தீர்க்க வழிமுறைகளை அரசு செய்து வருகிறது.
எந்தெந்த இடங்களில் தொடர் கட்டுமானங்கள் தேவை என்பது குறித்த ஆய்வை உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
தமிழகத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 7 சதவீத அளவிலான நிலத்திற்கு மட்டுமே பெருந்திட்டங்கள் (மாஸ்டர் பிளான்கள்) அனுமதிக்கப்பட்டு உள்ளன. அதை முதலில் 19 சதவீதமாகவும், பின்னர் 22 சதவீதமாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 135 மாஸ்டர் பிளான்கள் கொண்டு வர இருக்கிறோம். இவ்வாறு வரும்போது திட்டம் நிறைவாக இருக்கும். இப்போது 23 மாஸ்டர் பிளான்கள் முடியும் நிலையில் உள்ளன.
கட்டிடம் கட்டும்போது அரசிடம் கண்டிப்பாக அனுமதி பெற்று கட்ட வேண்டும். முன் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்ட வேண்டாம். முன் அனுமதி பெறாமல் நிறைவு சான்றிதழ் பெற முடியாது. மேலும் அந்த கட்டிடங்களுக்கு 'சீல்' வைக்கப்படும். 2016-ம் ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட மனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெறாமல் இருந்தால் அவற்றுக்கு அங்கீகாரம் பெற வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதற்கான காலஅவகாசம் முடிந்துவிட்டது.
எனவே 2016-ம் ஆண்டுக்கு முன் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் தனி மனைகளுக்கு அங்கீகாரம் பெற 6 மாத கால அவகாசம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
- டாஸ்மாக் கடை வாடகையினால் கடை ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
- மதுப்பழக்கத்தை நிறுத்துவது பற்றி தனியாக கவுன்சிலிங் வழங்கப்படும்.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் தொடர்பான 21 சங்கத்தினரை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி வருமாறு:-
21 சங்கத்தினரும் 55 கோரிக்கைகளை அளித்தனர். அவற்றில் 39 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில கோரிக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மற்ற கோரிக்கைகள் பற்றி அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
டாஸ்மாக் கடை வாடகையினால் கடை ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அரசு அந்தக்கடையின் வாடகையை நிர்ணயம் செய்து, துறையே அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதென்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக அதிக வாடகை கேட்கப்படும் சில இடங்களுக்கு அதிகாரிகள் சென்று பேசி தீர்வு காணப்படும்.
கடைக்கு தனி மின் இணைப்பு இல்லாத இடங்களில் தொழிலாளர்கள் அதிக கட்டணத்தை செலுத்தும் நிலை இருந்தது. இப்போது கடைக்கென்று தனி மீட்டர் பொருத்தவேண்டும் என்றும் கட்டணத்தை டாஸ்மாக் தலைமையகம் கட்டவேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா 3 ஆயிரம் கடைகளில் உள்ளது. உடனடியாக 500 கடைகளில் அவற்றை பொருத்த ஏற்பாடு செய்துள்ளோம். அந்த வகையில் அனைத்துக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளோம்.
மது விற்ற பணத்தை கடைகளில் வைக்க பாதுகாப்பு பெட்டகம் கேட்டுள்ளனர். ஏற்கனவே அவை பல கடைகளில் உள்ளன. மேலும் 500 கடைகளில் அவை உடனடியாக வைக்கப்படும். பின்னர் அனைத்து கடைகளுக்கும் அவை அமைக்கப்படும்.
கடைகளில் மதுபாட்டில் உடையும்போது விற்பனையாளர்களே அதற்கு பொறுப்பு ஏற்றனர். உடையும் பாட்டிலுக்கு சரியான கணக்கை கொடுத்தால் அதை துறையின் சார்பில் ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கான கூட்டுறவு சங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் பணம் திருட்டு, தீவிபத்து மற்றும் வங்கிக்கு செல்லும்போது வழிப்பறி ஆகியவை நிகழ்வதால், அதற்கான காப்பீடு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் அளித்து, பிரச்சினை வந்தால் போலீசிடம் தெரிவித்து உடனே நடவடிக்கை எடுக்க வழிமுறைகள் செய்து தரப்பட்டுள்ளன.
தற்போது அவர்களுக்கு கூடுதல் பணி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்த வயதுள்ள, முதல் முறையாக கடைக்கு வந்து மது வாங்குபவரை கண்டறிந்து, குடிப்பழக்கத்தில் விழாமல் அவர்களை தடுக்கவேண்டும். அவர்களது பெயர், செல்போன் எண்ணை வாங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்கவேண்டும்.
அவர்களுக்கு மதுப்பழக்கத்தை நிறுத்துவது பற்றி தனியாக கவுன்சிலிங் வழங்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை யார் அதிகமாக எடுத்தார்களோ அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.
அனைத்து கடைகளுக்கும் மின்னணு விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மதுபாட்டில் கொள்முதல் முதல் விற்பனை செய்யப்படும் வரையில் கணினி மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.
விற்பனை ரசீது வழங்கவும் வசதி செய்யப்படுகிறது. அவர்களுக்கு இருந்த சில சிரமங்களை நீக்கிவிட்டதால் மதுபானங்களுக்கு ஒரு ரூபாய் கூட அதிகமாக வாங்கக்கூடாது என்று ஊழியர்களிடம் கண்டிப்பாக தெரிவித்துள்ளோம். அவர்களின் ஊதிய உயர்வு குறித்து அடுத்த கூட்டத்தில் பேச உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு இப்போது மதுபானங்களை அட்டை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றது.
- அட்டை பாட்டில்கள் மக்க கூடியதாக இருக்க வேண்டும்.
சென்னிமலை:
கண்ணாடி பாட்டில்களில் மதுபானம் விற்பது சுற்றுச்சூழலை கெடுத்து வருகிறது. 'டெட்ராபேக்' என்னும் அட்டை பாட்டில்களில் மது விற்பனை செய்ய பயன்படுத்தலாம் என 4 விவசாய சங்கள் ஆதரவு தெரிவித்து அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி, கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சென்னிமலை கி.வே.பொன்னையன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பு ஆகியோர் கூட்டாக அமைச்சர் சு.முத்துசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் அரசின் டாஸ்மார்க் கடைகள் மூலமாக விற்கப்படுகிறது. மதுபானங்கள் அனைத்தும் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது.
பெரும்பாலும் இந்த கண்ணாடி பாட்டில்கள் 180 எம்.எல். அளவுள்ள சிறிய பாட்டிகளாகவே உள்ளன. மது அருந்துவோர் இந்த பாட்டில்களை பயன்படுத்திவிட்டு கண்ட கண்ட இடங்களில் போட்டு விடுகின்றனர்.
குறிப்பாக பாசனக்கால்வாய் செல்லும் அனைத்து பகுதிகளிலும் உள்ள பல்வேறு இடங்களில் இந்த சிறு பாட்டில்கள் கொட்டி கிடப்பதை காணலாம். அதோடு வேளாண் விளை நிலங்களில் வேலை செய்யும் பலரும் இந்த பாட்டில்களை வயலில் பல்வேறு இடங்களில் அப்படியே போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
இந்த பாட்டில்களை சேகரித்து ஒழுங்கு செய்ய இயலுவதில்லை. எனவே வயல் வேலைகளில் டிராக்டர் உழவு செய்யும் போது கண்ணாடி பாட்டில்கள் உடைந்து வேளாண் பணிகள் ஈடுபடுகின்றவர்களை கால்களை வெட்டி விடுகின்ற நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் நெல் அறுவடையில் அறுவடை எந்திரங்கள் இந்த பாட்டில்களையும் நெல்லோடு சேகரித்து விடுகின்றன. அவை நொறுங்கி போய் அரிசியிலும் கூட கண்ணாடி துகள்கள் கலந்திருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கண்ணாடி பாட்டில்களில் மது விற்பனை செய்வதால் பெரும்பாலும் கிராமப் புறத்தில் உள்ள வேளாண் விளை நிலங்களையும், கால்வாய்களையும் கடுமையாக பாதித்து வருகின்றது. எனவே அரசு இப்போது மதுபானங்களை அட்டை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றது.
அட்டை பாட்டில்கள் மக்க கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் அட்டை பாட்டில்களின் மூலமாக மதுபானங்களை அடைத்து விற்பனை செய்தால் தற்போது கண்ணாடி பாட்டில்களினால் ஏற்பட்டு வரும் பெரும் சூழல் கேடு தவிர்க்கப்பட முடியும்.
எனவே அரசு கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக அட்டை மூலம் செய்யப்பட்ட பாட்டில்களை 'டெட்ராபேக்' பயன்படுத்தலாம் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு அவர்கள் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.
- கள்ளச்சாராயத்தை நோக்கி யாரும் சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் அரசுக்கு இல்லை.
- டாஸ்மாக் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டாஸ்மாக் கடைகளை வழக்கத்தைவிட முன்கூட்டியே திறப்பதற்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக கூறியிருந்தேன். இதுசம்பந்தமாக நான் கூறிய கருத்தின் முழு பகுதியையும் கவனிக்காமல், அதிலுள்ள ஒரு சில பகுதியை மட்டும் கேட்டு சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
நான் திட்டவட்டமாக சொல்வது என்னவென்றால், டாஸ்மாக் கடைகளுக்கான நேரத்தை மாற்றுவதற்கான எண்ணம் அரசுக்கு இல்லை. இப்போதுள்ளபடி பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணிவரைதான் இயங்கும். அதில் மாற்றம் எதுவும் இல்லை.
டாஸ்மாக் மது விற்பனையில் உள்ள சில சிக்கல்களை ஒதுக்கித்தள்ள முடியவில்லை. மற்ற நேரத்தில் தவறான இடத்தில் மது வாங்குவதை தவிர்த்துவிட்டு, டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கடை நேரத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளோம்.
மது பாட்டில்களை வெளியே போட்டுச் செல்வது உள்பட பல பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பாக தொழிற்சங்கங்கள் உள்பட பல தரப்பினரும் பேசுகிறோம். அரசின் கொள்கைக்கு முரணானவற்றை ஒதுக்கிவிட்டு மற்ற கருத்துகள் பற்றி ஆய்வு செய்கிறோம். மற்ற மாநிலங்களுடனும் ஒப்பிட்டு பார்த்து வருகிறோம். 'டெட்ரா பேக்' குடுவைகளுக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
90 மி.லி. 'மினி குவார்ட்டர்' மது விற்பனை செய்தால், குறைவான பணம் வைத்திருப்பவரும் அதை வாங்கி அருந்த வாய்ப்பு ஏற்படுமே என்று கேட்டால், இதுசம்பந்தமாக அனைத்து தரப்பினரின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்க இருக்கிறோம். 90 மி.லி. அளவில் மதுவை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விருப்பம் அல்ல.
ஆனால் அளவுக்கு அதிகமாக (90 மி.லி.க்கு மேல்) சிலர் மது அருந்தும் தவறுகளும் நடக்கிறது. அந்த கோணத்தில் சிந்தித்தோம். ஆனால் அது வேறு விளைவுகளை ஏற்படுத்துவதான சூழ்நிலை வந்தால் அதை கைவிட்டுவிடுவோம்.
கல்வி நிறுவனங்கள், கோவில் அருகில் உள்ள மதுக்கடைகள் பற்றி மீண்டும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதுபோன்ற கடைகளை கண்டறிந்து மூடி விடுவோம். மூடப்பட்டுள்ள கடைகளின் முன்னாள் வாடிக்கையாளர்கள் போதைக்காக தவறான இடங்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதுதான் அரசின் எண்ணம். அதற்கு வாய்ப்பு அளித்துவிடக்கூடாது. 24 மணி நேரமும் மது தொடர்பாகவே அதிகாரிகள், போலீசார் கவனித்துக் கொண்டிருக்க முடியாது.
கள்ளச்சாராயத்தை நோக்கி யாரும் சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் அரசுக்கு இல்லை. மது என்பது மக்களிடையே மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயமாக இருப்பதால் இப்படியோ அல்லது அப்படியோ போக முடியவில்லை. எனவே இதில் அனைவரையும் வைத்து பேசி முடிவு எடுக்க உள்ளோம்.
பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கும் பிரச்சினை இன்னும் தொடர்கிறதா? என்று கேட்டால், சில இடங்களில் அப்படி நடந்தது பெரிதாக்கப்பட்டு விட்டது. இப்போதுகூட இரண்டொரு இடங்களில் நடக்கிறது. 100 சதவீதம் இல்லை என்று சொல்ல மாட்டேன்.
அங்கும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். இந்த பிரச்சினை கட்டுப்படுத்தப்படும். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் சம்பந்தப்பட்டவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
டாஸ்மாக் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அவற்றை தீர்க்க தொழிற்சங்கங்களுடன் பேசி இருக்கிறோம். இதில் என்னென்ன நிவாரணம் செய்யப்படலாம் என்பது பற்றிய அறிவுரைகளை அதிகாரிகள் அளித்துள்ளனர். இன்னும் 10 நாட்களில் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுவால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே டாஸ்மாக் கடையிலேயே ஏற்படுத்த இருக்கிறோம். கடையின் கண்காணிப்பாளருக்கும், விற்பனையாளருக்கும் இதுசம்பந்தமான சுற்றறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த கேமரா மூலம் சென்னையில் இருந்தபடியே அதிகாரிகள், கடையை கண்காணிக்கலாம். உள்ளூர் போலீசும் கண்காணிப்பார்கள். கடையின் அளவு மிகச் சிறியதாக உள்ளது. இனி கடைகளை 500 சதுரஅடிக்கு மேலான இடங்களில் வைக்க முடிவு செய்துள்ளோம்.
அப்படி இடம் அமையும்போது பில் போட தனி இடம் இருக்கும். தற்போது 500 சதுரஅடிக்கு மேலான இடங்களில் உள்ள கடைகளை கண்டறிந்து அங்கு பில் எந்திரம் வைக்க முடிவு செய்துள்ளோம். மற்ற கடைகளை மாற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்வோம். பில் வழங்கும் முறையை கொண்டு வருவோம். கேரளாவில் இந்த நிலை உள்ளது. ஆனால் அங்கு கடை ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.
- புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம்.
- அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து மறுக்கப்படவில்லை.
ஈரோடு:
தமிழக வீட்டு வசதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி சென்னிமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
டாஸ்மாக் கடைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மது பாட்டில்கள் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மிக எளிதாக கலப்படம், மறு பயன்பாட்டின் போது சுத்தம் செய்வதில் குறைபாடு, சாலையோரம் மற்றும் விளை நிலத்தில் வீசி செல்வதால் விவசாயிகள் பாதிப்பு, எடுத்து செல்லும் போது பாட்டில்கள் உடைந்து விடுவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.
இவற்றை தீர்க்க புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம். இதன் மூலம் 99 சதவீதம் சேதாரம் இருக்காது. 2 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து மறுக்கப்படவில்லை. அது குறித்து பரிசீலிக்கப்படும். தனியாக குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த குழு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் காகிதக் குடுவையில் (டெட்ரா பாக்கெட்) மது பானம் வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.
- 90 மில்லி காகிதக் குடுவையில் மதுபானம் வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அமைச்சர் முத்துசாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகை இருப்பை இரவு நேரங்களில் ஊழியர்கள் எடுத்துச் செல்லும்போது பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. அதனை தடுக்கும் வகையில் வங்கி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், வங்கி அதிகாரிகளே நேரடியாக கடைக்கு வந்து பெற்று செல்லும் வகையிலோ அல்லது வாகனங்கள் மூலம் ஒவ்வொரு கடையாக பெறக் கூடிய வகையிலோ நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல, கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் காகிதக் குடுவையில் (டெட்ரா பாக்கெட்) மது பானம் வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பாட்டிலை வாங்கி 2 பேர் பிரிக்கும்போது தான் அதில் விஷம் உள்ளிட்ட பொருட்கள் கலப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க, 90 மில்லி காகிதக் குடுவையில் மதுபானம் வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்