search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற 6 மாத காலஅவகாசம்: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
    X

    மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற 6 மாத காலஅவகாசம்: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

    • கட்டிடங்களை 12 மீட்டர் உயரம் வரை கட்ட இப்போது அனுமதியுள்ளது.
    • சென்னை மாநகராட்சியில் சில இடங்களில் மட்டும் தொடர் கட்டுமானத்திற்கான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி வருமாறு:-

    கட்டிட பொறியாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அவர்கள் சார்பில் 44 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் 18 கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது. மீதமுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.

    கட்டிடங்களை 12 மீட்டர் உயரம் வரை கட்ட இப்போது அனுமதியுள்ளது. அதை 13 மற்றும் 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மதுரை, திருவண்ணாமலை போன்ற கோவில் நகரங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர் கட்டிட கட்டுமானத்திற்கு (இடைவெளி இல்லாமல் கட்டுவது) அனுமதி வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. இந்த கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை மாநகராட்சியில் சில இடங்களில் மட்டும் தொடர் கட்டுமானத்திற்கான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர் கட்டுமான அனுமதி வழங்க சில விதிமுறைகளை பின்பற்றி சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அமைப்புகள் அனுமதி வழங்கி வந்தன. ஆனால் 2019-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கும் நடைமுறை கைவிடப்பட்டது.

    அதனால் தொடர் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நாகர்கோவிலில் இது சம்பந்தமாக எழுந்த பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். நாகர்கோவிலில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பல நகரங்களில் இந்த பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினைகளை தீர்க்க வழிமுறைகளை அரசு செய்து வருகிறது.

    எந்தெந்த இடங்களில் தொடர் கட்டுமானங்கள் தேவை என்பது குறித்த ஆய்வை உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

    தமிழகத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 7 சதவீத அளவிலான நிலத்திற்கு மட்டுமே பெருந்திட்டங்கள் (மாஸ்டர் பிளான்கள்) அனுமதிக்கப்பட்டு உள்ளன. அதை முதலில் 19 சதவீதமாகவும், பின்னர் 22 சதவீதமாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 135 மாஸ்டர் பிளான்கள் கொண்டு வர இருக்கிறோம். இவ்வாறு வரும்போது திட்டம் நிறைவாக இருக்கும். இப்போது 23 மாஸ்டர் பிளான்கள் முடியும் நிலையில் உள்ளன.

    கட்டிடம் கட்டும்போது அரசிடம் கண்டிப்பாக அனுமதி பெற்று கட்ட வேண்டும். முன் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்ட வேண்டாம். முன் அனுமதி பெறாமல் நிறைவு சான்றிதழ் பெற முடியாது. மேலும் அந்த கட்டிடங்களுக்கு 'சீல்' வைக்கப்படும். 2016-ம் ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட மனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெறாமல் இருந்தால் அவற்றுக்கு அங்கீகாரம் பெற வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதற்கான காலஅவகாசம் முடிந்துவிட்டது.

    எனவே 2016-ம் ஆண்டுக்கு முன் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் தனி மனைகளுக்கு அங்கீகாரம் பெற 6 மாத கால அவகாசம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    Next Story
    ×