search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாஸ்மாக் மதுபாட்டில்கள் கொள்முதல் தொடங்கி விற்பனையாகும் வரை கணினி மூலம் கண்காணிக்கப்படும்- அமைச்சர்
    X

    டாஸ்மாக் மதுபாட்டில்கள் கொள்முதல் தொடங்கி விற்பனையாகும் வரை கணினி மூலம் கண்காணிக்கப்படும்- அமைச்சர்

    • டாஸ்மாக் கடை வாடகையினால் கடை ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
    • மதுப்பழக்கத்தை நிறுத்துவது பற்றி தனியாக கவுன்சிலிங் வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் தொடர்பான 21 சங்கத்தினரை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி வருமாறு:-

    21 சங்கத்தினரும் 55 கோரிக்கைகளை அளித்தனர். அவற்றில் 39 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில கோரிக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மற்ற கோரிக்கைகள் பற்றி அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

    டாஸ்மாக் கடை வாடகையினால் கடை ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அரசு அந்தக்கடையின் வாடகையை நிர்ணயம் செய்து, துறையே அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதென்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக அதிக வாடகை கேட்கப்படும் சில இடங்களுக்கு அதிகாரிகள் சென்று பேசி தீர்வு காணப்படும்.

    கடைக்கு தனி மின் இணைப்பு இல்லாத இடங்களில் தொழிலாளர்கள் அதிக கட்டணத்தை செலுத்தும் நிலை இருந்தது. இப்போது கடைக்கென்று தனி மீட்டர் பொருத்தவேண்டும் என்றும் கட்டணத்தை டாஸ்மாக் தலைமையகம் கட்டவேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கண்காணிப்பு கேமரா 3 ஆயிரம் கடைகளில் உள்ளது. உடனடியாக 500 கடைகளில் அவற்றை பொருத்த ஏற்பாடு செய்துள்ளோம். அந்த வகையில் அனைத்துக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளோம்.

    மது விற்ற பணத்தை கடைகளில் வைக்க பாதுகாப்பு பெட்டகம் கேட்டுள்ளனர். ஏற்கனவே அவை பல கடைகளில் உள்ளன. மேலும் 500 கடைகளில் அவை உடனடியாக வைக்கப்படும். பின்னர் அனைத்து கடைகளுக்கும் அவை அமைக்கப்படும்.

    கடைகளில் மதுபாட்டில் உடையும்போது விற்பனையாளர்களே அதற்கு பொறுப்பு ஏற்றனர். உடையும் பாட்டிலுக்கு சரியான கணக்கை கொடுத்தால் அதை துறையின் சார்பில் ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பணியாளர்களுக்கான கூட்டுறவு சங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் பணம் திருட்டு, தீவிபத்து மற்றும் வங்கிக்கு செல்லும்போது வழிப்பறி ஆகியவை நிகழ்வதால், அதற்கான காப்பீடு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் அளித்து, பிரச்சினை வந்தால் போலீசிடம் தெரிவித்து உடனே நடவடிக்கை எடுக்க வழிமுறைகள் செய்து தரப்பட்டுள்ளன.

    தற்போது அவர்களுக்கு கூடுதல் பணி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்த வயதுள்ள, முதல் முறையாக கடைக்கு வந்து மது வாங்குபவரை கண்டறிந்து, குடிப்பழக்கத்தில் விழாமல் அவர்களை தடுக்கவேண்டும். அவர்களது பெயர், செல்போன் எண்ணை வாங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்கவேண்டும்.

    அவர்களுக்கு மதுப்பழக்கத்தை நிறுத்துவது பற்றி தனியாக கவுன்சிலிங் வழங்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை யார் அதிகமாக எடுத்தார்களோ அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.

    அனைத்து கடைகளுக்கும் மின்னணு விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மதுபாட்டில் கொள்முதல் முதல் விற்பனை செய்யப்படும் வரையில் கணினி மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.

    விற்பனை ரசீது வழங்கவும் வசதி செய்யப்படுகிறது. அவர்களுக்கு இருந்த சில சிரமங்களை நீக்கிவிட்டதால் மதுபானங்களுக்கு ஒரு ரூபாய் கூட அதிகமாக வாங்கக்கூடாது என்று ஊழியர்களிடம் கண்டிப்பாக தெரிவித்துள்ளோம். அவர்களின் ஊதிய உயர்வு குறித்து அடுத்த கூட்டத்தில் பேச உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×