என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு தினம்"
- மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது.
- ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
அதனையொட்டி மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது.
இந்நிலையில் தமிழ் கலாச்சாரம் குறித்து சத்குரு பேசிய விடியோ ஒன்றை அவரின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில், "பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாச்சாரம், இதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் மேலும் கூறியிருப்பதாவது:-
இந்த தமிழ் மண், தமிழ் கலாச்சாரம், தமிழ் இசை, தமிழ் நாட்டியம், தமிழ் கலை, தமிழ் மொழி என்று எதை எடுத்தாலும், தமிழ் என்றால், பக்தி என்கிற ஒரு தெம்பு. பக்தியில்லாமல் தமிழ் கலாச்சாரம் இல்லை. பக்தர்களின் நாடாக இருக்கின்ற தமிழ்நாட்டில், குழந்தை பிறந்தாலும் பக்தி, காது குத்து என்றாலும் பக்தி, வாழ்ந்தாலும் பக்தி, திருமணம் செய்தாலும் பக்தி, இறந்தாலும் பக்தி என்றே இருந்து வருகிறது.
பக்தியிலேயே ஊறி வளர்ந்திருக்கும் இந்தக் கலாச்சாரம், நெஞ்சத்தில் இருக்கும் பக்தி என்ற தெம்பினால் எவ்வளவோ சாதனைகள் செய்து இருக்கிறது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது. எவ்வளவு வளம் என்றால்? மற்ற நாடுகள் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு வளமான சமூகமும், கலாச்சாரமும் இங்கு உருவாக்கப்பட்டது.
உங்களுக்கு தெரிந்து இருக்கும், ஐரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் எப்படியாவது இங்கு வந்துவிட வேண்டும் என்ற பெரிய ஆர்வம் இருந்தது. கப்பல் ஏறி வழித் தெரியாமல் அங்குமிங்கும் அமெரிக்கா வரை சென்று, இறுதியில் இங்கு வந்தார்கள். ஏனெனில் உலகிலேயே வளமான நாடாக நாம் இருந்தது தான்.
இந்த வெற்றிகரமான வாழ்க்கைக்கு மூலமாக இருந்தது நம்முடைய பக்தி. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் மட்டுமில்லாமல் அனைத்திற்கும் மேலாக முக்கியமாக 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஒளவையார் போன்ற பக்தர்கள் பிறந்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது.
இந்த தமிழ் கலாச்சாரம் பக்தியில் ஊறி நனைந்து வளர்ந்திருக்கும் கலாச்சாரம். தமிழ் மக்கள் இதை உணர்ந்து உலகம் முழுவதும் தீவிரமாக இந்த பக்தியை கொண்டு சேர்க்க வேண்டும் . இது மிக மிகத் தேவையானது. தமிழ் கலாச்சாரத்தை குறித்து வெறுமனே பேசிப் பயனில்லை. நமக்கு அதில் பெருமை இருந்தால் அதனை உயிரோடு வைத்திருக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
- அறிஞர் அண்ணா பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் இன்று (ஜூலை 18) தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் சிறப்பு வீடியோ பகிர்ந்துள்ளார். வீடியோவுக்கு தமிழ்நாடு வாழ்க என்று தலைப்பிட்டுள்ளார்.
வீடியோவில் தமிழகத்தின் பெயர் மாற்ற விழாவில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியை மாநில தினமாக கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. தெலங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட ஜூன் 2 ஆம் தேதியை மாநில தினமாக கொண்டாடி வருகிறது.
எனினும், தமிழகத்தில் இப்படி மாநில நாள் கொண்டாடப்படாமல் இருந்தது. எனினும், தமிழ்நாடு அமைந்த நாளை தமிழ்நாடு தினமாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நீண்ட காலம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. சில தமிழ் அமைப்புகள் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடி வந்தன. இந்த கோரிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு, அக்டோபர் 25 ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18 ஆம் தேதி "தமிழ் நாடு விழா" கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டது. அன்று முதல் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- பரந்து விரிந்த நமது தமிழ் நிலமும், இனமும் மிக நீண்ட வரலாறு கொண்டது.
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் அதாவது சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்தது.
இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் இல்லாத பெருமை தமிழ்நாட்டின் பெயருக்கு உண்டு. எந்த மாநிலத்துக்கும் 'நாடு' என்ற பெயர் இருக்காது.
அத்தகைய பெருமைக்குரிய பெயர் சூட்டப்பட்ட நாள்தான் இன்று. இந்த நாளையும் அதன் வரலாற்றையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நினைவில் கொள்ள வேண்டும்.
பரந்து விரிந்த நமது தமிழ் நிலமும், இனமும் மிக நீண்ட வரலாறு கொண்டது. எத்தனையோ மன்னர்கள் ஆண்ட பூமி. வளர்த்த தமிழ்-கலாசாரம்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் அதாவது சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்தது. அப்போது ஆந்திரா, கேரளா மாநிலங்களும் ஒன்றிணைந்து இருந்தது.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. 1956-ல் மாநில எல்லைகளை மறுவரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் சென்னை மாகாணத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் பிரிந்து சென்றன. வட பகுதி ஆந்திர மாநிலத்துக்கு சென்றது. எஞ்சிய நிலப்பகுதி சென்னை மாநிலம் என்று அழைக்கப்பட்டது.
சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி காங்கிரசை சேர்ந்த சங்கர லிங்கனார் 1957-ல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். போராட்டம் தொடங்கிய 76-வது நாளில் அவர் உயிர் துறந்தார். அதன் பிறகு இந்த போராட்டம் தீவிரம் அடைந்தது.
1967-ல் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிவெடுத்தது. அதே ஆண்டில் ஜூலை 18-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறியது.
இதையடுத்து அண்ணா எழுந்து, "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றிய வரலாற்று சிறப்புமிக்க இந்த நன்னாளில் தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி விட்டு அவர் "தமிழ்நாடு" என்று மூன்று முறை குரல் எழுப்பினார். சபையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் பதிலுக்கு "வாழ்க" என்று 3 முறை குரல் எழுப்பினார்கள்.
ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில தினத்தை கொண்டாடி வரும் நிலையில் தமிழக தினமும் கொண்டாடப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். எல்லைகள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ந்தேதியில் கொண்டாடலாம் என்றும் பெயர் சூட்டப்பட்ட நாளில் கொண்டாடலாம் என்றும் இருவேறு கருத்துக்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந்தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும்" என்று அறிவித்தார்.
- விருதுநகரில் தமிழ்நாடு தினம் கொண்டாட்டப்பட்டது.
- சிறப்பு அரசு சாதனை விளக்க கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
விருதுநகர்
இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படு வதையொட்டி விருதுநகரில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேச பந்து திடலில் அமைக்கப் பட்டிருந்த சிறப்பு அரசு சாதனை விளக்க கண்காட்சி யை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
1968-ம் ஆண்டு இதே தினத்தில் சட்டப் பேரவையில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று அன்றைய முதல்-அமைச்சர் அண்ணா பெயர் சூட்டினார். கடந்த ஆண்டு முதல் இந்த தினம் (ஜூலை18) தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி விருதுநகரில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
அதற்கு வித்திட்ட தியாகி சங்கரலிங்கனார் விருது நகரில் தான் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார் என்பது மேலும் ஒரு சிறப்பாகும். அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெருமைக்குரிய இந்த தினத்தை தமிழ்நாடு தினமாக கொண்டாடுமாறு உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.சீனிவாசன், நகர சபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே!
- 1967-ல் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.
சென்னை:
தமிழ்நாடு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே! 1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின. ஆனால், நம் தாய் நிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் பெற இன்னும் பதினொரு ஆண்டுகள் காக்க வேண்டியதாயிற்று!
1967-ல் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நிலத்தின் பெருமகன்-தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார். 1967 ஜூலை 18-ல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினோம்!
மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார், சங்கரலிங்கனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி என இந்தப் போராட்டத்தின் வேர் மிக ஆழமானது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தமிழ்நாடு நாளில், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!
இவ்வாறு அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- “தமிழ்நாடு தினம்” குறித்து பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.
- இன்று முதல் வருகிற 23-ந்தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில், இச்சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெறும்.
சென்னை:
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு தினம் ஜூலை 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, "தமிழ்நாடு தினம்" குறித்து பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இப்பேரணியில் மாணவ-மாணவிகள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச்செல்வார்கள்.
அதேபோன்று "தமிழ்நாடு தினம்" முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 18-ந்தேதி (இன்று) முதல் வருகிற 23-ந்தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில், இச்சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெறும். அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்கிறார்கள்.
சென்னை, மாநிலக் கல்லூரியில் 18-ந்தேதி (இன்று) நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், அமைச்சர்கள் கலந்துகொண்டு தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். பின்னர், தமிழ்நாடு தினம் உருவான வரலாறு குறித்த சிறப்புகளை பொதுமக்கள் அறியும் வண்ணம், சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. எனவே, மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் "தமிழ்நாடு தினம்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 12-ந் தேதி காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
தமிழ்நாடு"என பெயர் சூட்டப்பட்ட 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு நாளாக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இது குறித்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியதாவது:-
மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள்" வருகிற 12-ந் தேதி காலை 9.30 மணியளவில் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனித்தனியாக நடைபெறவுள்ளது.
இதில், வெற்றிபெறும் மாணவர் களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் கீழ்நிலை அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு கட்டுரை, பேச்சு போட்டிக்கு தனித்தனியே 60 மாணவர்கள் வீதம் தேர்வு செய்ய படுவார்கள். முதன்மைக் கல்வி அலுவல ரால் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம்பெறும் மாணவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியும்.
மாவட்ட அளவிலான போட்டி களில் பங்கேற்க பரிந்துரைக்கப் படும் மாணவர்கள் படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கையெழுத்து பெற்று போட்டி நடக்கும் நாளன்று வேலுார் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநரிடம் நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.
தலைப்புகள்
கட்டுரை போட்டிக்கு 'தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்' என்ற தலைப்பும், பேச்சு போட்டிக்கு 'தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப் போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்' என்ற தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் அலுவலகத்தை 0416-2256166 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்