search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டை மாரியம்மன் கோவில்"

    • வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.
    • கடவுள் போன்று வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.

    மேட்டூர்:

    சேலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 22 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் கோவிலை மையமாக வைத்து அதனை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா களைகட்டும்.

    ஆடி பண்டிகையின் போது பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவர். இதன் ஒரு பகுதியாக வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள் போன்று வேடமிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

    அந்த வகையில் சேலம் குகை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.

    இதில் மேச்சேரி சந்தைப்பேட்டையில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அக்னி கரகம், அலகு குத்துதல், பொய்க்கால் குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    இதையடுத்து வண்டிவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலில் பெண்கள் மட்டுமே அம்மன் வேடம் அணிந்து வலம் வரும் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

    பிரமாண்ட வண்டியில் மின்னொளி ஜொலித்தபடி பெண்கள் கடவுள்களைப் போல் வேடம் அணிந்து வண்டிகளில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அகிலாண்டேஸ்வரி, உலகநாயகி, காமாட்சி, காலபைரவி, சத்திய சொரூபி, சரஸ்வதி தேவி, ஞானரூப தேவி, தாட்சாயணி தேவி, துர்க்கை, பகவதி, பார்வதி தேவி, மீனாட்சி, பத்ரகாளியம்மன், வேப்பிலைக்காரி, உமா தேவி, காயத்ரி தேவி, பெரிய நாயகி உள்ளிட்ட பல்வேறு அம்மன் சாமிகள் வேடம் அணிந்து அசத்தினர்.

    இப்பெண்கள் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுபோல் காட்சி தந்தனர். இது கடவுள் விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்து ஆசி வழங்குவது போல் இருந்தது. இதிகாசங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.

    வண்டியின் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். பொய்க்கால் குதிரை நாட்டியம் காண்போரை கவரும் வண்ணம் இருந்தது.

    இவ்விழாவில் ஓமலூரான் தெரு, கோல்காரனூர், அழகா கவுண்டனூர் உள்ளிட்ட 12 பட்டி கிராம மக்கள் பங்கேற்றனர். 

    • ஆடிப்பண்டிகையை யொட்டி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
    • கோவிலை சுற்றி எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா 22 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.



    அதன்படி இந்தாண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 24-ந் தேதி கொடியேற்றுதல், 30-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் திருக்கல்யாணம் சக்தி அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    திருவிழாவையொட்டி கோவில் வளாகம், கோவில் கோபுரங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவம், உருளுதண்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. இதையொட்டி சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று காலை முதலே கோவிலில் திரண்டனர்.


    பின்னர் நேற்று முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய கோவில் சுற்றுப்பிரகாரத்தில் பொங்கல் வைத்தும், நேர்த்திக்கடனாக உருளு தண்டம் செலுத்தியும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    பொங்கல் நிகழ்ச்சி நாளை வரை நடைபெறுகிறது. இதையொட்டி இன்றும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு பொங்கலிட்டு வருகிறார்கள. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற உருளு தண்டம் செய்தும், கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தும் , அலகு குத்தியும் தங்களது நேர்ச்சை கடன்களை செலுத்தி வருகிறார்கள்.


    8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஆடித்திருவிழாவில் உருளுதண்டம் நிகழ்ச்சி நடைபெற்றதால் குடும்பத்துடன் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு உருளுதண்டம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகிறார்கள்.

    மேலும் நேற்றும், இன்று காலையும் தங்ககவசத்தில் அருள் பாலித்த அம்மனை ஏராளமான பக்ததர்கள் திரண்டு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலை சுற்றி எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. பக்தர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் கூழ், பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 10-ந் தேதி கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடுதல், 11-ந் இரவு 11.30 மணிக்கு சப்தாபரணம், 12-ந் தேதி மதியம் 1 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மாலையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    ஆடித்திருவிழாவையொட்டி கோவிலில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபினபு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.


    இதேபோல சேலம் மாநகரம் முழுவதும் அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெறுவதால் சேலம் மாநகரமே மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. மேலும் ஆட்டம் பாட்டத்துடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ஆடிப்பண்டிகையை யொட்டி இன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதால் குடும்பத்துடன் பெரும்பாலனோர் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். 

    • ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும்.
    • சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.

    சேலம்:

    சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து 2017-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கருவறை மண்டபம், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்பட அழகிய வேலைபாடுகளுடன் கூடிய திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும். பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.

    சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான 8 வழிச்சாலை வருங்காலத்தில் வரும். சேலம் மாநகரம் சென்னைக்கு மற்றும் பெங்களூருக்கு நிகராக வளர வேண்டும் என வேண்டுகிறேன்.

    சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.

    கவர்னர்கள் வாங்கும் சம்பளம் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பதை கண்டிக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கொலையாளிகள், குண்டு வைத்தவர்களை விடுவிக்க தீர்மானங்கள் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதை கவர்னர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது கவர்னர்களின் கடமை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்திர கிரகண தோஷ நிவர்த்திக்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.

    திண்டுக்கல்:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி நாளை (28-ந்தேதி) நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை சாத்தப்படும். சந்திர கிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யப்படும். பின்னர் மறுநாள் (29-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கலச பூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் நாளை மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந்தேதி மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்படும். மறுநாள் 29-ந்தேதி ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்திர கிரகண தோஷ நிவர்த்திக்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    • கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி 23 யாக குண்டங்கள், 16 கலசங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இதில் சிவாச்சாரியார்கள், தமிழ் ஓதுவார்கள் 45 பேர் கலந்து கொண்டு யாக சாலை பூஜையை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று காலை 2-ம் கால யாக சாலை பூஜை தொடங்கி நடந்தது. தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மாலை 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    நாளை (27-ந் தேதி) அதிகாலை 4.30 முதல் 7.30 மணி வரை 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.

    8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவிலில் தடுப்புகள் அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கும்பாபிஷேக விழாவினை காண்பதற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கும்பாபிஷேகத்தை எளிதாக காணும் வகையில் விழாவின் நேரடி ஒளிபரப்பை பெரிய டிஜிட்டல் திரையின் மூலம் காண கன்னிகா பரமேஸ்வரி கோவில், திருவள்ளுவர் சிலை, பழைய பஸ் நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா ஆகிய 4 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு ஆதினங்கள் பங்கேற்கிறார்கள்.

    மேலும் கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக நாளை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனை ஏற்று நாளை (27-ந் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்களும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவு பெற்று நாளை மறுநாள் (27-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    சேலம்:

    சேலத்தின் காவல் ெதய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவு பெற்று நாளை மறுநாள் (27-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.

    முகூர்த்தக்கால்

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து முளைப்பாலிகை இடுதல், புதிய கொடி மரம் பிரதிஷ்டை ஆகியவை நடந்தது. பின்னர் ராஜ கோபுரம் மற்றும் மணிமண்டப விமான கலசங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது.

    நேற்று கணபதி வழிபாடு, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தது. பின்னர் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்த யானை மற்றும் பக்தர்கள் புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை ஊர்வலமாக கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    யாக சாலை பூஜைகள்

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 23 யாக குண்டம் மற்றும் 16 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவாசனம், அக்னி சங்கரண வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கண் திறப்பு

    தொடர்ந்து மாலை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு வழிபாடு நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், பூதசுத்தி, கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், வேள்வி சாலை பிரவேசம், துவார பூஜை மண்டபார்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து முதற்கால வேள்வி வழிபாடு நடக்கிறது. பின்னர் இரவு 10 மணிக்கு முதற்கால பூர்ணாஹுதி, சதுர்வேத பாராயணம், தமிழ்முறை ஓதுதல்,மகா தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    2-ம் கால யாக வேள்வி

    நாளை (26-ந்தேதி) காலை 8 மணிக்கு மேல் கணபதி வழிபாடு, புண்யாகவாசனம் மற்றும் 2-ம் கால யாக வேள்வி வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தப்படுகிறது.

    தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மேல் 2-ம் கால திரவியாஹுதி மற்றும் சதுர்வேத பாராயணம், தமிழ் முறை ஓதுதல் மகா தீபாராதணை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து அஷ்டபந்தனம் சாத்தப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் 3-ம் கால வேள்வி வழிபாடு நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் நாடி சந்தானம், கண் திறப்பு வழிபாடு, தமிழ் திருமுறை ஓதுதல், மகா தீபாராதணை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    கும்பாபிஷேகம்

    நாளை மறுநாள் (27-ந் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால யாக வேள்வி வழிபாடு நடக்கிறது. பின்னர் காலை 7.35 மணிக்கு வேள்வி சாலையில் இருந்து தீர்த்தக்கலச குடங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 7.40 மணிக்கு மேல் 8 மணிக்குள் பெரிய மாரியம்மன் ராஜகோபுரம், கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மூல மூர்த்தி பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரைவீரன் சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேல் மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், தசதரிசனம், தசதானம், மகா தீபாராதணை நடைபெறுகிறது. காலை 10.30 மணிமுதல் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்கரதம் புறப்படுகிறது.

    மின்னொளியில் ஜொலிக்கிறது

    கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் கோபுரங்கள் மற்றும் சேலம் நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வருகிறார்கள். கும்பாபிஷேக விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • சேலம் சுகவனேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வருகிற 27ந் தேதி கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட இருக்கிறது.
    • அப்போது கும்பாபிஷேக விழாவில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    சேலம்:

    தமிழக சட்டசபையில் அருள் எம்.எல்.ஏ. தனது தொகுதி குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் கடந்த ஆண்டு சேலம் சுகவனேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வருகிற 27ந் தேதி கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட இருக்கிறது. அப்போது கும்பாபிஷேக விழாவில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். சேலம் மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? என அருள் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் 2014-ம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணி தொடங்கப்பட்டது. தி.மு.க. அரசு வந்த பிறகு பிறகுதான் 2 ஆண்டுகளில் திருப்பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. நான் 3 முறை கோவிலுக்கு ஆய்வுக்கு சென்றேன். வருகிற 27-ந் தேதி காலையில் கும்பாபிஷேக விழாவும், மாலையில் திருத்தேர் பவனியும் நடைபெற இருக்கிறது. அன்று நிச்சயமாக கும்பாபிஷேக விழா தமிழில் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
    • 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை மஹா கணபதி ஹோமம், முளைப்பாரி இடுதல், 10.15 மணி முதல் 11.30 மணி வரை புதிய கொடி மரம் நிறுவுதல், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ராஜகோபுர கலசங்களுக்கு பாலாலயம் செய்தல், 19-ந் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை கணபதி வழிபாடு, கிராமசாந்தி , அஷ்ட பலி பூஜை, 24-ந் தேதி காலை 10.30 மணி முதல் 1 மணி வரை விநாயகர் வழிபாடு, புனித தீர்த்த குட புறப்பாடு, முளைப்பாரி ஊர்வலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து நடைபெறும்.

    இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி, திஷா ஹோமம், காப்பு கட்டுதல், 25-ந் தேதி 9.30 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை, 26-ந் தேதி காலை 8 மணி முதல் 12 மணி வரை 2-ம் கால யாக பூைஜ, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம் , மூலஸ்தான விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர் கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.

    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
    • புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சை கிளி ஒன்று தானாக வந்து அமர்ந்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அடுத்த மாதம் 27-ந் தேதி பல ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக வைபவமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கோவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சை கிளி ஒன்று தானாக வந்து அமர்ந்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    இந்த நிகழ்வு காட்டு தீயை போல பரவியது. இதனையடுத்து கோட்டை மாரியம்மன் சிலை மீது பச்சைக்கிளி அமர்ந்திருப்பதை பார்க்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து கோவில் குருக்கள் கூறும்போது எங்கிருந்து பச்சை கிளி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அம்மன் கருவறையில் சிலையின் மீது அமர்ந்து கொள்வதும், அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யும்போது அருகிலேயே அமர்ந்து கொண்டும் கோவில் நடை சாத்தும் போது கூட கருவறையிலேயே பச்சைக்கிளி அமர்ந்து இருக்கிறது.

    கடந்த 3 நாட்களாக கிளியானது கருவறையை விட்டு செல்லாமல் உள்ளது. அம்மனுக்கு வைக்கக்கூடிய பிரசாதத்தையே உண்டு வருகிறது.

    அடுத்த மாதம் அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் கோட்டை மாரியம்மன் கிளி ரூபத்தில் இங்கு வந்து இருப்பதாக குருக்கள் பரவசத்துடன் தெரிவித்தார். மேலும் பச்சை நிறம் அம்மனுக்கு உகந்த நிறம். பச்சைக்கிளி அல்லது வெட்டுக்கிளி இல்லங்கள் வந்தால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். ஆகையால் அம்மனே வந்து அமர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    • என் மன் என் மக்கள் பாதயாத்திரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
    • 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 99 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்து கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டா லின் பொறுப்பேற்றவுடன் திருப்பணிகள் நிலுவையில் உள்ள கோவில் பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டார். அதன்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வினர் ஆட்சி மீது வேண்டும் என்றே குறை கூறுகிறார்கள். சனாதனத்தை எதிர்க்கவில்லை, சனாதன கோட்பாடுகளான உடன்கட்டை ஏறுதல், குலக்கல்வி திட்டம் உட்பட கோட்பாடுகளை எதிர்க்கிறோம்.

    என் மன் என் மக்கள் பாதயாத்திரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் சமத்துவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடமை உறுதியுடன் தற்போதைய ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. பொழுதுபோக்குக்காக சிலர் எதையோ சொல்கிறார்கள். கோவில் இறைபணி தொடரும்.

    சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற காசி விசுவநாதர் கோயில் ஆயிரமாவது குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் உட்பட அனைவரும் பாராட்டியுள்ளனர். 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 99 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படி 38 பேர் அர்ச்சகராகி உள்ளனர். 1959-ம் ஆண்டுக்கு பிறகு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தான் அதிக அளவில் தமிழகத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

    அனைத்து கோவில்களிலும் முறைகேடுகள் தடுக்கப்படும். மக்களாட்சி வந்தபின் இந்து கோவில்கள் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மத கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டம் இல்லை. இறை நம்பிக்கை அவரவர் விருப்பம். சமத்துவம் அங்கம் வகிக்கும் ஆட்சி தி.மு.க. இதனால் இறை நம்பிக்கை உள்ளவர்களையும் வரவேற்கிறோம், இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் வரவேற்கிறோம்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி கடந்து 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டுவரை 10 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க நேர்ச்சை செலுத்தும் வகையில் ரூ.4.5 லட்சம் செலவில் தங்க தேர் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை கும்பாபிஷேக நாளிலேயே பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள்
    • கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆடித்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

    அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த மாதம்25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள் தோறும் இரவு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வைபவம் நேற்று தொடங்கியது. இதயைடுத்து நேற்று காலை முதலே கோவிலுக்கு வந்த பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள். இன்று காலையும் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதையொட்டி கோவில் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அதன் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் பக்தர்கள் நீண்ட தூரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் கூழ் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் டவுன் போலீஸ் கமிஷனர் வெங்கடேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகி றார்கள். மேலும் கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. அதன்படி சேலம் குகை மாரியம்மன், காளியம்மன், சேலம் சின்ன மாரியம்மன், தாதாகப்பட்டி மாரியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலபட்டரை மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், தாதம்பட்டி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், காமராஜர் காலனி மாரியம்மன் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் திரண்டு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல், அக்னி மற்றும் பூக்கரகம் எடுத்தல், போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் முதுகில் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். சிலர் விமான அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். இதனை பார்த்தபக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    ஆடிப்பண்டி கையையொட்டி சேலம் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆடிப்பண்டிகையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் அதிக அளவில் கூட்டம் அலை மோதியது. இதை யொட்டி கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    ×