search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலிகள் உயிரிழப்பு"

    • 2012-ம் ஆண்டுக்கு பிறகு 2023-ம் ஆண்டில் புலிகள் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
    • உத்தரபிரதேசத்தில் புலிகளின் தாக்குதலுக்கு 59 பேரும், மத்தியபிரதேசத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கையாகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலில் 349 பேர் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரத்தில் மட்டும் 200 பேர் புலிகள் தாக்கியதில் பலியாகி உள்ளனர்.

    தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின் படி, 2019-ம் ஆண்டு 96 புலிகளும், 2020-ம் ஆண்டு 106 புலிகளும், 2021-ம் ஆண்டு 127 புலிகளும், 2022-ம் ஆண்டு 121 புலிகளும் மற்றும் 2023-ம் ஆண்டு 178 புலிகளும் இறந்துள்ளன. 2012-ம் ஆண்டுக்கு பிறகு 2023-ம் ஆண்டில் புலிகள் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

    மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன்சிங், 2019, 2020-ம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021-ம் ஆண்டு 59 பேரும், 2022-ம் ஆண்டு 110 பேரும், 2023-ம் ஆண்டு 82 பேரும் புலி தாக்குதலுக்கு பலியானதாக தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் புலிகளின் தாக்குதலுக்கு 59 பேரும், மத்தியபிரதேசத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2022-ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக இருந்தது. இது உலகின் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீதம் ஆகும்.

    • சின்னக்குன்னூா் பகுதியில் கடந்த 19-ந்தேதி 4 புலிக்குட்டிகள் பட்டினியால் இறந்தன.
    • நீலகிரி மாவட்டத்தில் கடந்த 33 நாட்களில் மட்டும் இதுவரை 11 புலிகள் பலியாகி உள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக புலிகள் சாவு தொடர்கதையாக உள்ளது. அங்கு கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி சீகூரில் 2 புலிக்குட்டிகள் பட்டினியால் இறந்தன. இதற்கு அடுத்த நாள் நடுவட்டத்தில் ஒரு புலி செத்து கிடந்தது.

    முதுமலையில் ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி ஒரு புலியும், அவலாஞ்சி பகுதியில் செப்டம்பா் 9-ந்தேதி ஒரு புலியும் விஷம் வைத்து கொல்லப்பட்டன. சின்னக்குன்னூா் பகுதியில் கடந்த 19-ந்தேதி 4 புலிக்குட்டிகள் பட்டினியால் இறந்தன.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 33 நாட்களில் மட்டும் இதுவரை 11 புலிகள் பலியாகி உள்ளன. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    இந்த நிலையில் தேசிய புலிகள் காப்பக ஆணைய ஐ.ஜி. முரளி தலைமையில் அதிகாரிகள், இன்று காலை முதுமலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் புலிகள் இறந்து கிடந்த பகுதிகள் மற்றும் சாவுக்கான காரணம் ஆகியவை குறித்து தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.

    முதுமலையில் 2 நாட்கள் தங்கியிருக்கும் தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 11 புலிகள் பலியானதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதன்பிறகு இறுதிகட்ட விசாரணை அறிக்கை, தேசிய புலிகள் காப்பக ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • 2 புலி குட்டிகளும் பிறந்து 2 வாரமே ஆனது தெரியவந்தது.
    • புலி குட்டிகளின் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்தது.

    மசினகுடி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. 688 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. இதுதவிர தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வன சரகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 புலி குட்டிகள் செத்து கிடந்தன. 2 புலி குட்டிகளும் பிறந்து 2 வாரமே ஆனது தெரியவந்தது. இதில் ஒரு புலி குட்டியின் உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து உடனே வனத்துறை ஊழியர்கள், புலிகள் காப்பக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் அருண் மற்றும் வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செத்த புலி குட்டிகளின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் புலி குட்டிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புலி குட்டிகளின் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்தது. ஆனால், புலி குட்டிகள் எப்படி இறந்தது என்பது தெரியவில்லை.

    இதேபோல் நேற்று ஊட்டி அருகே நடுவட்டம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஒரு புலி செத்து கிடந்தது. அது 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி என்பது தெரியவந்தது. ஆனால் அந்த புலி எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. மற்ற வனவிலங்குகளுடன் சண்டையிட்டதில் புலி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் புலி செத்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×