என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகூர்த்த நாள்"

    • திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
    • தொடர்ந்து 2 நாட்களாகவே பூக்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை இயங்கி வருகிறது.

    இங்கு திண்டுக்கல், ஓசூர் , நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதுபோல் இங்கிருந்தும் வியாபாரிகள் பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பூக்கள் வாங்குவர்.

    விஷேச தினங்கள், பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், சுப முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை சற்று அதிகரிக்கும். வரத்து , விளைச்சல் குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

    இந்த நிலையில் தற்போது ஆவணி மாதம் என்பதால் சுபமுகூர்த்த நாட்கள் அதிகளவில் உள்ளது. இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகளவில் தேவைப்பட்டது. இதனால் இன்று தஞ்சை பூச்சந்தையில் இன்று பூக்களின் விலையும் சற்று அதிகரித்தது.

    அதன்படி மல்லிகை கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டன. இதேப்போல் முல்லை கிலோ ரூ.800, ஆப்பிள் ரோஸ் ரூ.250, கனகாம்பரம் கிலோ ரூ.800, சம்பங்கி ரூ.600, அரளி ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டன.

    நேற்றும் பூக்களின் விலை கணிசமாக அதிகரித்தது. தொடர்ந்து 2 நாட்களாகவே பூக்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

    இது பற்றி வியாபாரிகள் கூறும்போது, ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகளவில் உள்ளதால் சுபநிகழ்ச்சிகள் ஏராளமாக நடக்கும். இதனால் பூக்களின் தேவையும் அதிகரிக்கும்.

    அதன் அடிப்படை யிலேயே இன்று பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது . பூக்களின் வரத்தும் பரவலாக உள்ளது என்றனர்.

    • திருத்தணி மலைக்கோவில் முழுவதும் கூட்டமாக காணப்பட்டது.
    • திருப்போரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருத்தணி:

    பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில் திருத்தணி கோவிலுக்கு தற்போது வரும் பக்கதர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்ந நிலையில் இன்று வைகாசி மாதத்தில் வரும் முதல் சுப முகூர்த்த நாள் என்பதால் திருத்தணி கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

    மேலும் இன்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. திருமணகோஷ்டி மற்றும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் திருத்தணி மலைக்கோவில் முழுவதும் கூட்டமாக காணப்பட்டது.

    புதுமணத்தம்பதிகள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்போரூர்

    இதேபோல் திருப்போரூர் முருகன் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சுமார் 50 திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    திருமண கோஷ்டியினர் வந்த வாகனங்களால் திருப்போரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனிக்கு வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனத்திற்காக பழனிக்கு வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் முகூர்த்தநாள் என்பதால் பழனி அடிவார பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றது.

    மேலும் பஸ்நிலையம், அடிவாரம், படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முகூர்த்த நாள் என்பதால் அடிவாரம் திருமண மண்டபங்களில் நடைபெற்ற விஷேசசத்திற்கு ஏராளமான வாகனங்கள் வந்தன.

    மேலும் பக்தர்களின் வாகனங்களும் அதிகரித்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • கூடுதல் கட்டணமாக ரூ.1000 சேர்த்து வசூலிக்கப்பட்டது.
    • ‘தட்கல்’ டோக்கன்களும் பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    இன்று மங்களகரமான முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    வீடு, நிலம் வாங்கு பவர்கள் நல்ல நாள் பார்த்து பததிரப்பதிவு செய்வதால் இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் முகூர்த்த நாள் என்பதால், இன்றைய நாளில் பத்திரப்பதிவு செய்ய பொதுமக்களுக்காக பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

    இதனால் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் காலையில் இருந்தே கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே கூடுதலாக டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இது தவிர 'தட்கல்' டோக்கனும் கொடுக்கப்பட்டது.

    இன்று விடுமுறை நாளில் பத்திரப்பதிவு நடைபெற்றதால் ஒவ்வொரு ஆவணப்பதிவுக்கும் கூடுதல் கட்டணமாக ரூ.1000 சேர்த்து வசூலிக்கப்பட்டது. இன்று பணியாற்றும் அதிகாரிகள் ஊழியர்களுக்கு வேறொரு நாளில் மாற்று விடுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    நாளையும் (3-ந்தேதி) மங்களகரமான நாள் என்பதால் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடை பெறும் என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 'தட்கல்' டோக்கன்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று பத்திரப்பதிவுத் துறை தலைவர் அறிவித்துள்ளார்.

    2024-25-ம் நிதியாண்டில் கடந்தாண்டு டிசம்பர் 5-ந் தேதி ஒரே நாளில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் பதிவுத் துறையில் ஈட்டப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஜனவரி 31-ந்தேதி 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதே நிதியாண்டில் 2-வது முறையாக அரசுக்கு ரூ.231.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருந்தது. இப்போது இன்றும், நாளையும் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்கு வாதம்.
    • கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்யாததால் பயணிகள் தவிப்பு.

    சென்னை:

    கோயம்பேட்டில் இருந்து வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்திற்கு பஸ் நிலையம் மாற்றப்பட்ட பிறகு பயணிகள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

    பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிக அளவில் கூடுகிறார்கள். இப்படி அதிக எண்ணிக்கையில் பெறலாம். பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.

    முகூர்த்த நாளான இன்று தமிழகம் முழுவதும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்பதற்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்காக பயணிகள் பலர் தங்களது குடும்பத்தினரோடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு திரண்டனர்.

    இதுபோன்று அதிக அளவில் கூடிய பொது மக்கள் தங்களுக்கு தேவையான பேருந்து கிடைக்காததால் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். இதை தொடர்ந்து பஸ்நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் இது போன்று வாக்குவாதத்தில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் இதுபோன்ற பிரச்சனைகள் அங்கு நீடித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டினார்கள்.

    முகூர்த்த நாளை கணக்கில் கொண்டு வெளியூர்களுக்கு கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்யாதது பயணிகள் தவிப்புக்கு உள்ளானதற்கு காரணமாக அமைந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    எனவே வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×