என் மலர்
நீங்கள் தேடியது "அலர்ஜி"
- நுரையீரல் சம்மந்தமான நோய்கள் பொதுவாக வரக்கூடியது ஆஸ்துமா
- அலர்ஜி குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அதிகமாக உள்ளது.
இன்று அதிக அளவில் நுரையீரல் பாதிப்புக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். நுரையீரல் தொற்றில் இருந்தும் புற்று நோயில் இருந்தும் எப்படி தற்காத்துக்கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
அறிகுறிகள்
நுரையீரல் சம்மந்தமான நோய்கள் பொதுவாக வரக்கூடியது ஆஸ்துமா தான். நெஞ்சில் சளி கட்டி இருமலாக மாறும், இரவிலும் அதிகாலையிலும் இருமல் அதிகமாக இருக்கும். கட்டி கட்டியாக சளி வெளியேறுதல், மூச்சுத் திணறல், சுவாசிக்கும் போதுபூனை கத்துவது போன்ற சப்தம் கேட்பது போன்றன பொதுவாக இந்த நோயிற்கான அறிகுறிகள்.
ஆஸ்துமா, அலர்ஜி எதனால் ஏற்படுகிறது?
இவ்வகை அலர்ஜி குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அதிகமாக உள்ளது. இந்த அலர்ஜி தூசியால், செல்லப்பிராணிகளின் ரோமங்களை சுவாசித்தாலோ அல்லது பூஞ்சை காளான்கள் அல்லது மகரந்த துகள்களை சுவாசித்தாலோ கூட இது போன்ற சளி, தும்மல், இருமல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற மாசுபடுத்திகளால் நுரையீரலில் உள்ள ம்யூக்கஸ் சுரப்பிகள் வீங்கி அதிகப்படியான சளியை உண்டு பண்ணுகின்றன. மூச்சுக்குழாயின் சுருங்கும் தன்மை அதிகமாவதால் வீசிங் வருகிறது.
இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு நடக்கும் போது மாடிப்படி ஏறும் போது வீசிங் அதிகமாகும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மூச்சு விடும்போது சப்தம் அதிகமாகிறது. இவற்றை ஆஸ்துமா அல்லது அலர்ஜி என்று சொல்வார்கள்.
அலர்ஜி, ஆஸ்துமா வந்தால் எடுக்க வேண்டிய சிகிச்சை
அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் அவர்களுக்கான மருந்து மாத்திரைகள் மற்றும் இன்ஹெல்லர்-ஐ தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மக்கள் பலருக்கு இன்ஹெல்லர் எடுப்பதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது. ஆனால், இன்ஹெல்லர் ஸ்டீராய்டு இருக்கும் என அச்சப்பட தேவையில்லை. மைக்ரோ மில்லிகிராம் அளவே அது இருக்கும் என்பதோடு இது மாத்திரை போல உணவுக் குழாயில் இருந்து ரத்தத்தில் கலக்கும் தன்மை கிடையாது என்பதால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. இன்ஹேல்லரை பயன்படுத்திய பிறகு வாய்க்கொப்பளிப்பது அவசியம்.
அதேபோல ஆஸ்துமா வந்தால் மருந்து இன்ஹேல்லர் எடுப்பது மட்டுமல்ல, வீட்டில் தூசி சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்வது, செல்லப்பிராணிகள், பறவைகளை தவிர்ப்பது, மழை அல்லது குளிர்காலங்களில் விடியற்காலை நடைப்பயிற்சி செய்வதை தவிர்ப்பது போன்றவற்றால் அலர்ஜி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் நுரையீரல் செயல்பாடு சோதனை செய்வது போன்றவை இன்றியமையாதது.
செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுமா?
புறாக்களின் கழிவுகளை நீண்ட நாட்களாக சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்க வாய்ப்புண்டு. அலர்ஜி உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை இது ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இந்த கழிவை சுவாசிப்பவர்களுக்கு Hypersensitivity Pneumonitis என்ற ஒரு வகை மிகைப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி வரலாம். ஒன்று இரண்டு புறாக்களால் எந்த பிரச்சனையும் வராது. இவ்வகையான அலர்ஜி தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் மிக அதிகம்.
ஃப்ளூ காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?
தற்போது வரக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் தொண்டை வலியாக தொடங்கி, காய்ச்சல், தலை பாரம் வந்து பிறகு இருமலாக மாறும். இந்த வகை காய்ச்சலால் வரும் இருமலை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இவ்வகை அறிகுறிகளை Post Viral Bronchitis என்று அழைப்போம். அதாவது வைரஸ் காய்ச்சலின் பின் விளைவுகள். அதோடு சைனஸிட்டிஸ், வீசிங்க் பிரச்சினை போன்ற அலர்ஜி இருக்கும் நபர்களுக்கு இந்த அறிகுறிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
சாதாரணமாக ஒருவருக்கு சளி அல்லது காய்ச்சல் வந்தால் இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும் ஆனால் இந்த வகை ஃப்ளூ காய்ச்சல் குணமாக இரண்டு மூன்று வாரங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
இது போன்ற வைரல் இன்ஃபெக்ஷன் வைரஸால் ஏற்படும் தொற்று. இவை பொதுவாக காற்றுவழியாக மற்றவர்களுக்கு பரவும். குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இது எளிதில் பரவ வாய்ப்புள்ளது. அந்த குழந்தைகள் மூலம் பெற்றோருக்கும் வீட்டில் உள்ள தாத்தா பாட்டிக்கும் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு இவ்வகை தொற்று சுலபமாக வர வாய்ப்பு உள்ளது அதனை தொடர்ந்து நிமோனியா வர அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வயதினர்களுக்கு ஆண்டு தோறும் ஃப்ளூ வைரசிற்கான Influenza shot என்ற தடுப்பூசி போடுவதால் ஃப்ளூ காய்ச்சலை தவிர்க்கலாம்.
நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடிப்பது மட்டுமே காரணமா?
நிச்சயமாக இல்லை, புகைபிடிப்பது நுரையீரல் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கி்ல்லை என்றாலும், மரபணு சார்ந்த காரணங்கள், காற்று மாசுபாடு போன்ற மற்ற காரணங்களால் கூட நுரையீரல் புற்றுநோய் வரலாம். பொதுவாக சரியான நேரத்திற்கு உணவு உண்பது, துரித உணவுகளை தவிர்த்து சத்தாண உணவுகளை உண்பது, நல்ல தூக்கம், தொடர்ச்சியான உடற்பயிற்சி, புகைப் பிடிப்பது அல்லது மது அருந்துவதை தவிர்த்தல் போன்றவற்றை சரியாக பின்பற்றினால் பெரும்பாலும் புற்றுநோய் வருவதில் இருந்து தப்பலாம்.
நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்
நுரையீரல் புற்றுநோயை பொறுத்தவரை சிறிய அளவிலான கேன்சர் கட்டி ஒருவரின் உடலில் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்போ அறிகுறிகளோ ஏற்படுத்தாது. இவை பெரிய அளவில் வந்த பிறகே அவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படும். நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், ரத்த வாந்தி, இருமல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும் போது கேன்சரின் மூன்றாவது அல்லது நான்காவது நிலையிலே தான் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
இதனை தவிர்க்க வருடம் தோறும் முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம். இவ்வாறு செய்யும்போது ஆரம்ப நிலையிலேயே நோயினை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது, அதனால் ஆரம்ப நிலையிலையே கண்டறிந்து குணப்படுத்திவிடலாம். அதிக பாதிப்பிற்கு உள்ளான பிறகு தெரிய வந்தால் அதனை குணமாக்குவது கடினம்.
நுரையீரல் வீக்கம் என்றால் என்ன?
நுரையீரல் வீக்கம் என்பது COPD (Chronic Pulmonary Obstructive Disease) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்று சொல்வார்கள். புகைபிடிப்பது, காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் மூச்சுக் குழாய் சுருங்கி நுரையீரல் வீங்குவது. இவை பொதுவாக சுற்றுச்சூழல் காரணமாக வரக்கூடியவை. பெரும்பாலும் ஆண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
முற்காலத்தில் விறகு மற்றும் வரட்டிகளை உபயோகித்து அடுப்பு எரித்ததால் பெண்களுக்கும் பாதிப்பு அதிகம் இருந்து வந்தது, இடை பட்ட காலத்தில் சமையல் எரிவாயுவான எல்.பி.ஜி. வந்த பிறகு பெண்களிடையே இந்த COPD குறைவானது. தற்போது passivesmoking (அதாவது அருகில் உள்ளவர்கள் புகைபிடிப்பதை சுவாசிப்பது), அல்லது புகைபிடிப்பது போன்ற காரணங்களால், கொசுவர்த்தி சுருள் அல்லது சுற்றுச்சூழல் காரணிகளான காற்று மாசுபாடு போன்றவற்றால் பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கும் இன்ஹெல்லர் தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டும்.
பொதுவாக மூச்சு வாங்குதல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் நுரையீரல் பிரச்சினை என்று சொல்லப்படுகிறது. இவை எதனால் ஏற்படுகிறது, இந்த அறிகுறிகள் ஏற்படலாம் மருத்துவரை அணுகுவது எவ்வளவு முக்கியம்?
பொதுவாக தூசி, மற்ற சில அலர்ஜிகளால் முதலில் தும்மல், மூக்கடைப்பு ஏற்படுத்தும் அதை சரியாக குணப்படுத்தா விட்டால் அலர்ஜி மற்றும் சைனசிட்டிஸ் ஏற்பட்டு நுரையீரலில் சளி உண்டாகலாம், இதனை தொடர்ந்து இருமல் ஏற்படும், அடிக்கடி இருமல் சளியை வெளியேற்றிக் கொண்டே இருப்பார்கள்.
பொதுவாக விடியற்காலை நேரங்களில் இருமல், தும்மல், மூக்கடைப்பு ஏற்படும் இவையெல்லாமே அலர்ஜிக்கான அறிகுறிகள், இதனை தொடர்ந்து வீசிங் ஏற்படும். இதற்கு மருத்துவரை அணுகி அலர்ஜி மாத்திரைகள் எடுக்கலாம், அடிக்கடி வரும்பட்சத்தில் இன்ஹெல்லர் சிறந்த தீர்வு.
என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்?
ஏசியை அடிக்கடி பராமரித்து உபயோகபடுத்த வேண்டும், சீரற்ற தூக்கம், இவை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க மூச்சுப் பயிற்சி தொடர்ச்சியாக செய்ய வேண்டும் உடற்பயிற்சி, ஏதாவது விளையாட்டு வீசிங், அலர்ஜிக்கான வாய்ப்புகளை குறைக்கும். சத்தான உணவை சரியான நேரத்திற்கு உட்கொள்வது, கீரை, காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
முகக் கவசம் உபயோகப்படுத்துவது தேவையா?
தற்போது ஃப்ளூ காய்ச்சல் அதிகம் பரவி வருவதால் நிச்சயமாக பொது இடங்களுக்கு செல்லும் போதும், பேருந்து ரயில் பயணங்கள் போன்றவற்றில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவதுநல்லது.
- வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது.
- தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும்.
கொசுவத்திச் சுருள் ஏற்றினால் வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. கொசுவத்திச் சுருள் எரியும் போது வரும் புகையானது, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும். மூச்சுத் திணறல், மற்றும் சுவாசக் கோளாறு முதலியவைகளை இந்த புகை உண்டாக்கக்கூடியது.
தினமும் கொசுவத்திச் சுருள் கொளுத்தி வைத்துக் கொண்டு தூங்கும் போது, அந்த புகையை சுவாசிக்க நேரிடும். இது பல நாட்கள் தொடரும் போது நுரையீரல் அடைப்பு நோயை ஏற்படுத்தி சுவாச மண்டலத்தையே பாதிக்கச் செய்யலாம். அத்துடன் சரும எரிச்சல், கண் எரிச்சல், அலர்ஜி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு, சில சமயங்களில் புற்றுநோயைக் கூட உண்டாக்கும் ஆபத்து உள்ளது.
சிகரெட் புகையின் பாதிப்பு எப்படியோ அதே போன்றது தான் கொசுவத்திச்சுருள் புகையின் பாதிப்பும். நீங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்குக்கூட (குறிப்பாக பூனை) கொசுவத்திச் சுருளின் புகை ஒத்துக்கொள்ளாது.

கொசுவத்திச் சுருள் புகை மட்டுமல்ல திரவ வடிவிலான கொசு விரட்டி, களிம்பு, தெளிப்பான், ஆவி பிடிக்கும் கருவி இவைகளும் கூட பாதுகாப்பானதல்ல.
கதவு - ஜன்னல்களெல்லாம் மூடப்பட்ட அறையில் நீங்கள் கொசுவத்திச் சுருளை கொளுத்தி வைத்துக் கொள்ளும்போது, அதில் இருந்து வரும் புகையைத் தான் படுக்கப் போனதில் இருந்து மறுநாள் காலை வரை சுவாசிக்க வேண்டும். காற்றையும், உடலையும் மாசுபடுத்தும் ரசாயனப் பொருட்களை நாம் அதிக நாட்கள், அதிக நேரங்கள் சுவாசிக்க சுவாசிக்க அது நுரையீரல் கோளாறை உண்டு பண்ணிவிடும்.
கொசுத்தொல்லையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தரமான கொசுவலைகளை உபயோகிக்கலாம்.


பூண்டு எண்ணெய்யை அறையில் தெளித்தால் கொசு வராது. எலுமிச்சைச் சாறு, துளசி எண்ணெய், வேப்பெண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவைகளையும் தூங்கும் அறைகளில் பயன்படுத்தலாம். வீடுகளில் சமையலுக்கு தினமும் பயன்படுத்தும் பூண்டு உரித்த தோலை சேகரித்து வைத்து அதை அறைகளில் எரித்தால் வரும் புகை கொசுவை விரட்ட பயன்படும். இம்மாதிரி காய்ந்த வேப்பிலை, காய்ந்த துளசி இலை, காய்ந்த யூகலிப்டஸ் இலைகளையும் எரித்து புகை உண்டு பண்ணி பயன்படுத்தலாம். இவைகள் பாதுகாப்பானதும்கூட.
- சைனஸ் என்பது மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும்.
- அலர்ஜி பிரச்சினை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
சைனஸ் என்பது நம் மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும். இதில் அலர்ஜி பிரச்சினை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக சைனஸ் இருக்கிறது. இது பெரும்பாலும் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் ஒன்றாகும்.

மேலும் அதிகப்படியான குளிர்பானங்கள், குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகிறது. முகத்தில் வலி, அதிகப்படியான சளி, சுவாசப் பிரச்சினை போன்றவை சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள்.
நீங்களும் சைனஸ் பிரச்சினையால் அவதிப்படும் நபராக இருந்தால், எளிதான வீட்டு வைத்திய முறையிலேயே அதை சரி செய்ய முடியும். அதற்கு உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி. இந்த மூன்றையும் பயன்படுத்தி கசாயம் செய்து சாப்பிட்டால் விரைவில் சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
செய்முறை:
முதலில் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து, நன்கு காய வைத்து, பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். அடுத்ததாக அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.
பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு வேறு ஒரு கிளாசில் வடிகட்டினால், சைனஸ் பாதிப்பை குணமாக்கும் அற்புத பானம் தயார்.

இந்த கசாயத்தை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடிக்க வேண்டும். நிச்சயமாக சைனஸ் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.
அதேநேரம் மூலிகைப் பொடியை அதிகமாக கலந்து கஷாயம் தயாரிக்க வேண்டாம். ஒரு ஸ்பூன் மூலிகைப் பொடி பயன்படுத்துவது நல்லது. அதிகமாகக் குடித்தால் வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவதற்கு முன் தகுந்த மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
- ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- முறையாக சுத்தம் செய்யப்படாமல், வேகவைக்காமல் உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
சென்னை:
மழைப் பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரில் 40 சதவீதம் பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா். அதில், பெரும்பாலானோருக்கு 'இ-கோலி' எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா் எம்.மணிமாறன் கூறியதாவது:-
எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் 'இ-கோலி' என்பது மனிதா்கள் மற்றும் பாலூட்டி விலங்குகளின் குடலில் வளரும் பாக்டீரியா. இதில் பல வகைகள் உள்ளன.
அவற்றில் பல பாக்டீரியாக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், சில வகை பாக்டீரியாக்கள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.

அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீா், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் அவை செல்கின்றன. முறையாக சுத்தம் செய்யப்படாமலும், வேகவைக்காமலும் அவற்றை உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகள். உரிய சிகிச்சை பெறாவிடில் ஒரு கட்டத்தில் அது சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுக்கும்.
அண்மைக்காலமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் வயிற்றுப்போக்கு பாதிப்பு 40 சதவீதம் பேருக்கு உள்ளது. அவா்களுக்கு 'இ-கோலி' பாதிப்பு இல்லை என்றாலும், பெரும்பாலா னோருக்கு அதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

'இ-கோலி' பாதிப்பை பொருத்தவரை மலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை மூலமாக உறுதி செய்யலாம். அதன் அடிப்படையில், நீா்ச்சத்தை தக்க வைக்கும் சிகிச்சைகளும், ஆன்ட்டிபயாடிக் சிகிச்சைகளும் வழங்கப்படும். அதனை முறையாக பின்பற்றினால் முழுமையாக குணமடையலாம் என்றாா் அவா்.
இது தொடா்பாக பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மழை வெள்ள காலங்களில் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளன. அதை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிா்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாசுபட்ட குடிநீா், உணவுகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்து மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை பாதித்த பகுதிகளில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யுமாறும், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். சுகாதாரமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.
- ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது.
- மருந்து நோயாளிகளுக்கு ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகள் பாதிப்பு.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் ஆண்கள் அறுவை சிகிச்சை உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வார்டில் நேற்று இரவு 11 மணியளில் பணியில் இருந்த டாக்டர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த மருந்து நோயாளிகளுக்கு சரிவர ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவி மீனாள், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி மற்றும் அரசு ஆஸ்பத்திரி இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.
ஊசி போட்டதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் (வயது 40) என்பவர் அலர்ஜி ஏற்பட்டு இறந்து விட்டார். மேலும் தர்மபுரி மாவட்டம் நாகலூரை சேர்ந்த மனோஜ் (28), வாழப்பாடியை சேர்ந்த முருகேசன் (54), ஓமலூர் காமலாபுரம் பகுதியை சேர்ந்த அன்பழகன் (60), மனோகரன் (64), ரமேஷ் (45) ஆகிய 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவிமீனாளிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
வேணுகோபாலுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. இதைபார்த்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் உறவினர்களிடம் வேணு கோபாலின் உடலை ஒப்படைத்தனர். அவர்கள் உடலை பெற்று கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
- செல்லப் பிராணிகளிடமிருந்து விலகி இருக்கவும்.
- ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ என பதிவு இருக்கிறது.
காற்றைத் தவிர வேறு எந்த ஒரு அந்நியப் பொருளும் நமது மூக்குக்குள் நுழைந்தால் நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அந்த மறுப்பின் பிரதிபலிப்பு தான் 'தும்மல்'.

'அலர்ஜி' அதாவது 'ஒவ்வாமை' தான் தும்மலின் மூலகாரணம் ஆகும். சமையற்கட்டு, வாகனங்கள், தொழிற்சாலைகள், சாம்பிராணி, ஊதுவத்தி, கொசுவத்தி, கற்பூரம் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் புகை, வீட்டை சுத்தப்படுத்தும் போது வெளிப்படும் தூசு, குளிர்ந்த தரை, கடும்பனி, குளிர்ந்த காற்று, ஒட்டடை இதுபோக எந்த ஒரு பொருட்களிலிருந்தும் வெளிப்படும் கண்ணுக்குத் தெரியாத நுண்துகள்கள் உள்பட இன்னும் பல விஷயங்களினால் வெளிவரும் தூசி மூக்கில் பட்டதும் தும்மல் ஆரம்பித்துவிடுகிறது.
பளிச்சென்ற மிகப்பொிய வெளிச்சத்தை திடீரென்று பார்க்கும்போதும், அதிக அளவில் உணவு சாப்பிட்டு வயிறு முழுவதும் நிரம்பியிருந்தாலும் கூட தும்மல் ஏற்படுவதுண்டு.
செல்லப் பிராணிகளிடமிருந்து விலகி இருக்கவும். தும்மலை உண்டாக்கும் காரசாரமான உணவுகளையும், மசாலா உணவுகளையும் தவிர்க்கவும்.
ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ என பதிவு இருக்கிறது. பொதுவாக ஆழ்ந்த தூக்கத்தின்போது தும்மல் வருவதில்லை. சில நோய்களில் அதிகப்படியாக நரம்புகளின் தூண்டுதல் இருந்தால் தூங்குபவர் விழித்துக்கொண்டு தும்முவதும் உண்டு.
ஒரு முறை தும்மும்போது மூக்கின் 2 துவாரங்களிலிருந்தும் சுமார் 40 ஆயிரம் திரவ நுண்துளிகள் சிதறி வெளியே பரவுவதுண்டு. தும்மும் போது வைரஸ் மற்றும் பாக்டீரியாக் கிருமிகள் வெளிவருவதுண்டு.
அந்த நேரத்தில் வேறு யாராவது நம் எதிரில் இருந்தால் அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு மிகமிக அதிகம். எனவே தும்மும் போது கர்ச்சீப் அல்லது துண்டு கொண்டு முகத்தை மூடிக்கொள்வது நல்லது.

பலத்த வேகத்துடன் தும்மும்போது சிலருக்கு இரண்டு காதுகளும் அடைத்துக் கொள்வதுண்டு. சில சமயங்களில் தும்மும் போது காது சவ்வு கிழிந்து போதல், தலைசுற்றல், நுண்ணிய ரத்தக் குழாய்கள் வெடித்தல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே முடிந்தவரை தும்மலைத் தடுக்கக்கூடாது.
ஜலதோஷம் வந்தாலே உடனே தும்மலும் வந்துவிடும். தும்மலோடு ஜலதோஷம், மூச்சுத்திணறல், வாந்தி, கண் எரிச்சல், தொண்டை கட்டிக் கொள்ளுதல், காய்ச்சல் முதலியவை இருந்தால் உடனே உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.
உங்களுக்கு எது 'அலர்ஜி' என்பதை ஓரளவு கண்டுபிடிக்க 'ஒவ்வாமை பரிசோதனைகள்' என்று ஒரு பரிசோதனை இருக்கிறது. உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனையுடன் அந்தப் பரிசோதனைகளை செய்து அலர்ஜி பொருள் எது என்பதைக் கண்டுபிடித்து அதை அறவே தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.