search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விலக்கு"

    • தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
    • நாளடைவில் இவர்கள் சமூகவிரோதிகளாக மாறுகின்ற அபாய சூழல் உள்ளது.

    திருப்பூர்:

    இந்து மக்கள் எழுச்சி பேரவை, இந்து மக்கள் புரட்சி படை, இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மது பாட்டில்களுடன் வந்து மதுவை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இளம் வயது சிறுவர்கள் முதல் வயதாகிய முதியவர்கள் வரை மதுவின் கோரப்பிடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கூலித் தொழிலாளர்கள் தங்களின் அன்றாட வருமானத்தை மதுகுடிக்கும் பழக்கத்திற்கே செலவு செய்யும் வண்ணம் உள்ளனர்.

    நாளடைவில் இவர்கள் சமூகவிரோதிகளாக மாறுகின்ற அபாய சூழல் உள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளால் தினசரி விபத்துகளும் அதனால் பல உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றது. இதனால் மது குடிப்பவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே மாநில அரசு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தி தமிழக முழுவதும் உடனடியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.
    • மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது,

    "தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது'' என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்களும், "உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்" என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் கூறியிருக்கின்றனர். அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.

    தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து, நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.

    தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநிலங்களில் இருந்து மது உள்ளே வந்து விடும்; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை.

    அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும், கள்ளச்சாராய வணிகத்தை தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள். அதற்காகத் தான் காவல்துறை என்ற அமைப்பும், அதில் மதுவிலக்குப் பிரிவு என்ற துணை அமைப்பும் உள்ளன. தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அது குறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில் காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமை தான். மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.

    அரசு அதன் வருவாய்க்காகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. மதுவால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இரு லட்சம் பேர் உயிரிழப்பதை விட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல். எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • மது விலக்கு குறித்து பேரணி நடத்த பா.ம.க. மனு அளித்தது
    • மராத்தான் ஓட்டத்திற்கு அனுமதி வழங்குவதை நீதிபதி குறிப்பிட்டார்

    பாட்டாளி மக்கள் கட்சி, தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு கோரி பல வருடங்களாக தமிழ்நாட்டின் ஆளும் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறது. அக்கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக பூரண மதுவிலக்கை நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

    தங்களின் கோரிக்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய அக்டோபர் 5-ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

    அனுமதி மறுக்கப்பட்டதால் பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    பேரணி செல்லும் பாதையில் பிற மதத்தினர் உள்ளனர் என கூறி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பா.ம.க. மதம் சார்ந்த கட்சி அல்ல என்றும் பா.ம.க. வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் அரசு தரப்பு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.

    அவர் விசாரணையின் போது கேட்டதாவது:

    ஆளும் கட்சியினர் மராத்தான் ஓடவும், நடப்பதற்கும் அனுமதி வழங்குகிறீர்கள்; மதுவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கினால் என்ன? யாருக்காக காவல்துறை உள்ளது? தமிழ்நாட்டில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனைகளை நடத்தினால் அவை மத்திய அரசின் ஏஜென்சிகள் என குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படி என்றால் தமிழ்நாடு காவல்துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது? ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் காவல்துறை செயல்படுமா?

    இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    விவாதங்களுக்கு பிறகு வழக்கை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    ×