என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் அரசு மருத்துவமனை"

    • தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
    • தீயை விரைந்து கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதையொட்டியுள்ள சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு முதல் தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஆபரேஷன் தியேட்டர் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இங்கு 30 நோயாளிகள் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆபரேசன் தியேட்டர் பகுதியில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்து திடீரென மின் கசிவு ஏற்பட்டு கரும் புகை கிளம்பியது. உடனடியாக ஊழியர்கள் அந்த இடத்தில் தீயணைப்பான் கருவியை கொண்டு பவுடர் தூவி அணைக்க முயன்றனர்.

    அதற்குள் அந்த குளிர்சாதன பெட்டி மூலம் முதல் தளம் மற்றும் 2-ம் தளத்தில் உள்ள அனைத்து குளிர்சாதன பெட்டிகளுக்கும் கரும் புகை பரவியது. இதை பார்த்த டாக்டர்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ பிடிக்க தொடங்கியது. இதனால் ஆபரேசன் தியேட்டர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதனால் நோயாளிகள் பதறினர். டாக்டர்கள் சுதாரித்துக் கொண்டு நோயாளிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதல் மாடியில் விபத்து மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறும் வரும் நோயாளிகள், ஆபரேசனுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை ஸ்டிரெச்சர் மூலமாக அவசர அவசரமாக ஊழியர்கள் வெளியே கொண்டு வந்தனர்.

    முதல் மாடியில் 30 பேர், 2-வது மாடியில் 50 பேர் என மொத்தம் 80 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களை பத்திரமாக ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள வேறு வார்டுக்கு மாற்றினர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் முதலில் மின் இணைப்பை துண்டித்தனர். அதன் பிறகு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்சுகள், ஊழியர்கள், டெக்னீஷியன்கள் உள்பட அனைவரும் வெளியே வந்து விட்டனரா? என்பதை உறுதி செய்து விட்டு முதல் தளத்துக்குள் ஒவ்வொரு வீரராக புகுந்து புகையை வெளியேற்றும் மிஷின் மூலம் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். தொடர்ந்து மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியேற்றினர். பின்னர் குளிர்சாதன பெட்டிகளிலும் நுரை தெளிப்பான், ரசாயன பவுடர் ஆகியவற்றை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர். மேலும் தீ பரவாமல் இருக்க பெரிய குழாயை கொண்டு தண்ணீரை நாலாபுறம் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த தீயணைப்பு பணி நடைபெற்றது.

    இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் நோயாளிகள், வளாகத்தில் திரண்டிருந்த உறவினர்கள், பீதியில் பரபரப்பாக காணப்பட்டனர்.

    தீயை விரைந்து கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    தற்போது ஆஸ்பத்திரி எலெக்ட்ரீசியன்கள் மின்கசிவு ஏற்பட்ட ஏ.சி. மற்றும் பிறகு பகுதிகளில் கருகிய வயர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்று நோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத் தொடக்க விழா மற்றும் மருத்துவத்துறையில் ரூ.3.63 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 4 மாவட்டங்களில் சாய, தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் போன்ற காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 18 வயது மேல் நிரம்பிய ஆண், பெண் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காணொளி மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    ஆண்களை பொறுத்தவரை போதை பொருட்களால் வாய் புற்று நோய் பாதிப்பு ஏற்படும் நிலையும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை புற்று நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    புற்றுநோய் 4 நிலைகள் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் முதல் 2 நிலைகளில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். 4 மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், தலைமை மருத்துவமனை என 1,397 மருத்துவ கட்டமைப்பு மூலம் புற்றுநோய் கண்டறியும் பணிகள் நடைபெறவுள்ளது.

    இதற்கு அடுத்த படியாக கரூர், அரியலூர் மாவட்டத்தில் தொடங்க கோரிக்கை வந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் குளிர் சாதனப் பெட்டியில் ஏற்பட்ட சின்ன மின்கசிவு காரணமாக தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மருத்துவ கழிவு எரிப்பது சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்த கூடிய ஒன்று. வடகிழக்கு பருவமழை, சளி, காய்ச்சல் பாதிப்பு கருதி தான் கோவை மாவட்ட கலெக்டர் முககவசம் அணிய பரிந்துரை செய்துள்ளார்.

    ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 சதவீதம் காலி பணியிடங்கள் இருப்பது உண்மை. அதை நிரப்ப 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்று நோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது. இதற்காக ரூ.220 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025-க்குள் காசநோய், தொழுநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க முயன்று வருகிறோம். அதை போலவே புற்று நோய் பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது.
    • மருந்து நோயாளிகளுக்கு ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகள் பாதிப்பு.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் ஆண்கள் அறுவை சிகிச்சை உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அந்த வார்டில் நேற்று இரவு 11 மணியளில் பணியில் இருந்த டாக்டர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது.

    ஆனால் அந்த மருந்து நோயாளிகளுக்கு சரிவர ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவி மீனாள், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி மற்றும் அரசு ஆஸ்பத்திரி இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

    ஊசி போட்டதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் (வயது 40) என்பவர் அலர்ஜி ஏற்பட்டு இறந்து விட்டார். மேலும் தர்மபுரி மாவட்டம் நாகலூரை சேர்ந்த மனோஜ் (28), வாழப்பாடியை சேர்ந்த முருகேசன் (54), ஓமலூர் காமலாபுரம் பகுதியை சேர்ந்த அன்பழகன் (60), மனோகரன் (64), ரமேஷ் (45) ஆகிய 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவிமீனாளிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    வேணுகோபாலுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. இதைபார்த்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் உறவினர்களிடம் வேணு கோபாலின் உடலை ஒப்படைத்தனர். அவர்கள் உடலை பெற்று கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

    ×