search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்நிலை பாதிப்பு"

    • இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு உண்ட பின்பு ஏற்பட்டுள்ளது.
    • மகரிஷி தேவ்ரஹா பாபா மருத்துவக் கல்லூரியில் ஆகாஷ் மற்றும் நித்தேஷ் ஆகிய இரு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் உள்ள மெஹ்ரூனா கிராமத்தில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஆசிரம முறை இடைநிலைக் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 80 மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவர்கள் உணவு உண்டபின்பு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சாப்பிட்ட உணவில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நீதிபதி திவ்யா மிட்டல் செய்தியாளர்களிடம் கூறுகையில், மகரிஷி தேவ்ரஹா பாபா மருத்துவக் கல்லூரியில் ஆகாஷ் மற்றும் நித்தேஷ் ஆகிய இரு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் பள்ளியிலேயே தலைமை மருத்துவ அதிகாரி (CMO) தலைமையிலான மருத்துவர்கள் குழுவிடம் முதன்மை சிகிச்சை பெற்றனர்.

    அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக மருத்துவக் குழு பள்ளியில் உள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    இதையடுத்து மாவட்ட மாஜிஸ்திரேட் மிட்டல் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சங்கல்ப் சர்மா ஆகியோர் மருத்துவக் கல்லூரிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்வையிட்டனர்.

    உணவு பாதுகாப்பு உதவி ஆணையர் வினய் குமார் சஹய் கூறுகையில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்தின் குழு கல்லூரிகளுக்கு இடையேயான சமையலறை, ஸ்டோரேஜ் ரூமில் ஆய்வு செய்தது. அங்கு தயார் செய்த ரொட்டி மற்றும் அங்கிருந்த பருப்பு, காய்கறிகள், மிளகாய்த்தூள், கடலைப்பருப்பு, கடுகு எண்ணெய், ஊறுகாய் உள்ளிட்டவைகளில் ஏழு மாதிரிகளை சேகரித்தனர்.

    மாதிரிகள் சோதனைக்காக உணவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    • மாவநத்தம், இட்டரை, தடசலட்டி ஆகிய 3 கிராமங்களும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.
    • ஆம்புலன்ஸ் அந்த கிராமத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலைகிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் தொழில் ஆடு, மாடு மேய்ப்பது, கூலி தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இங்கு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி மாவநத்தம் கிராமத்தில் மாரம்மா (40) , தடசலட்டி கிராமத்தில் கடந்த கவுரியம்மாள் (65), ரங்கன் (75), மாதி (85) என 4 பேர் வாந்தி பேதியால் திடீரென உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 5-ந் தேதி மாரே (67) என்பவரும், இட்டரை கிராமத்தில் கேலன் (60) என்பவர் உட்பட மொத்தம் 6 நபர்கள் கடந்த வாரங்களில் உயிரிழந்துள்ளனர்.

    தொடர்ந்து வயதானவர் உயிரிழந்தது மலைகிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நேற்று கிராமங்களில் மருத்துவக் குழுவினர், உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஆகியோர் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    மேலும் பஞ்சாயத்து மூலம் குளோரின் பவுடர்கள் போடப்பட்டுள்ளது. மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் உள்ள குடிநீரை பயன்படுத்துவதன் மூலமும், குட்டை நீரை குடிநீராக குடித்ததாலும், மேலும் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதாலும் இங்குள்ள வயதானவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வாந்தி பேதி ஏற்பட்டு மேற்கண்ட நபர்கள் இறந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தடசலட்டி கிராமத்தை சேர்ந்த நீலி மற்றும் அவரது கணவர் பாலன் ஆகியோர் உடல்நிலை சரியில்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இட்டரை கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்பவர் சத்தியமங்கலம் தனியார் மருத்துவ மனையிலும், லட்சுமி என்பவர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த மாவநத்தம், இட்டரை, தடசலட்டி ஆகிய 3 கிராமங்களும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு செல்போன் தொடர் சேவை கூட இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டால் மற்றவர்களை தொடர்பு கொள்ளாமல் அவதிபட்டு வருகின்றனர். இந்த மலைகிராமத்தில் மருத்துவ குழு கிராமத்தில் தொடர்ந்து முகாமிட்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், 108 ஆம்புலன்ஸ் அந்த கிராமத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறுவை சிகிச்சை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையிலும் இருந்துள்ளார்.
    • உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள கே.சிதம்பராபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராமர். ஆடு வியாபாரி. இவருக்கு அரிய நாச்சியார் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர. இவரது 2-வது மகள் உமா மகேஸ்வரி (24). இவர் எம்.சி.ஏ. படித்துள்ளார்.

    இந்நிலையில் ராமருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உமா மகேஸ்வரி தந்தையுடன் தங்கி இருந்து அவரை கவனித்து வந்தார். இதையடுத்து நேற்று ராமருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் நேற்று முன்தினம் இரவு உமா மகேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் பின்னர் தனது தாயிடம் தந்தை ராமர் என்னை படிக்க வைப்பதற்காக கஷ்டப்பட்டு வேலை செய்ததால் அவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டது என்று கூறி புலம்பி வந்துள்ளார். மேலும் அறுவை சிகிச்சை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையிலும் இருந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை உமா மகேஸ்வரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மகேஸ்வரியை தேடிய போது வீட்டின் பின்னால் உள்ள கிணற்றின் அருகே அவரது செருப்பு கடந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றுக்குள் தேடிப்பார்த்தனர். அப்போது உமா மகேஸ்வரி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை உடல் நலம் பாதிப்பால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×