என் மலர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து தொழிற்சங்கங்கள்"
- விரைவு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்.
- நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பலன்களை தர வேண்டும், வாரிசுதாரர்களுக்கு வேலை நியமனம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த மாதம் (டிசம்பர்) 19-ந்தேதி தொழிற்சங்கங்கள் நோட்டீசு வழங்கி இருந்தது.
இதையடுத்து தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் கடந்த மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
இதில் போக்குவரத்து கழகம் சார்பில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பின் ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொழிற்சங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று ஒரே ஒரு கோரிக்கையை முதலில் நிறைவேற்றி தருமாறு தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கும் சரியான பதில் கிடைக்காததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதனால் வருகிற 9-ந்தேதியில் இருந்து பஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில் ரெயிலில் டிக்கெட் கிடைக்காததால் பஸ்களில் முன்பதிவு செய்து உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' என்ற அறிவிப்பு பயணிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதைய சூழலில் பொங்கல் கழித்து பேச்சுவார்த்தை நடத்தி பரிசீலிக்கலாம் என்று சொல்லி இருந்தோம்.
ஆனால் அதை தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்து 9-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அறிவித்து உள்ளனர். இதை சுமூக நிலைக்கு கொண்டு வர தொழிற்சங்கங்களுடன் பேசி விட்டு உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளோம். அதன்பிறகு அந்த விவரங்களை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
கேள்வி:- தொழிற்சங்கத்தினர் ஏற்கனவே முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தெளிவுப்படுத்தி விட்டார்கள். இனிமேல் நீங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சமரசத்துக்கு வருவார்களா?
பதில்: அ.தி.மு.க.வை சேர்ந்த தொழிற்சங்கம் வரமாட்டார்கள். தொ.மு.ச. சேர்ந்த தொழிற்சங்கத்தினரை அழைத்து பேசிப் பார்ப்போம்.
கேள்வி: எந்த சமரசத்துக்கும் தொழிற்சங்கத்தின் வராவிட்டால் பஸ் ஸ்டிரைக் தொடங்கி விடுமே? இதனால் பொங்கலுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுமே? ஆயிரக்கணக்கான பயணிகள் விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளார்களே?
பதில்: விரைவு பஸ்களில் எந்த பிரச்சனையும் இருக்காது. அந்த பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். தொழிற்சங்கத்தினர் அதை ஒன்றும் செய்ய இயலாது. முன்பதிவு செய்து உள்ள பயணிகள் தாராளமாக பயணிக்க முடியும்.
ஆனால் மற்ற போக்குவரத்து கழகங்கள் சிலவற்றில் மட்டும் தொழிற்சங்கத்தினர் பங்கெடுக்க வாய்ப்பு உண்டு. அதையும் நாம் சமாளிக்க முடியும். பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் என்ன செய்ய முடியுமோ அதை அரசு மேற்கொள்ளும்.
நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை. பொங்கல் கழித்து பேச தயாராக இருக்கிறோம் என்றுதான் சொல்கிறோம்.
கேள்வி: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 8 வருடமாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கவில்லை. அதை மட்டும் முதலில் நிறைவேற்றுங்கள் என்று கூறுகிறார்களே?
பதில்: 8 வருடம் நிலுவை என்பது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 5 வருடம் நிலுவையை வைத்துவிட்டு சென்று விட்டார்கள். அந்த முழு சுமையையும் இப்போதைய நிதி நெருக்கடியில் தாங்க முடியாது. அதுதான் பிரச்சனை.
போக்குவரத்து துறை மட்டுமல்ல மற்ற துறைகளில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது. இவை எல்லாம் சேரும்போது பெரிய நிதிப்பிரச்சனை வரும்.
இவை அனைத்தையும் கணக்கெடுத்து விட்டு ஒரு பிளான் பண்ணி செய்வதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இந்த சூழலில் இது பொங்கல் நேரம் என்பதால் தொழிற்சங்கத்தினர் டிமாண்ட் வைக்கிறார்கள். கடந்த பேச்சுவார்த்தையின்போது அதிகபட்சமாக எல்லா கோரிக்கையும் முடித்து கொடுத்துள்ளோம்.
சம்பள விகிதத்தை அ.தி.மு.க. ஆட்சியின்போது சீர்குலைத்து வைத்திருக்கிறார்கள். சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இன்றி குளறுபடி இருந்தது. அதை நாங்கள் சரி செய்து கொடுத்து அதனால் மாதம் 40 கோடி கூடுதல் செலவானது. இதை நிதித்துறை ஒத்துக்கொள்ளவில்லை.
ஆனால் முதலமைச்சர் அதை கொடுத்து தான் ஆக வேண்டும் என்று சொல்லி செய்து கொடுத்தார். மற்ற கோரிக்கைகள் எல்லாம் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு திருப்திதான்.
எந்த கோரிக்கையையும் நாங்கள் முடியாது என்று சொல்லவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலுவையை வைத்துவிட்டு சென்றதால்தான் பார்த்து செய்கிறோம் என்று கூறுகிறோம்.
எனவே இந்த விஷயத்தில் முதலமைச்சரிடம் கேட்டு விட்டு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி முடிவெடுப்போம்.
இப்போதைக்கு பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள் விட இருப்பது உள்பட பல வேலைகள் இருக்கிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்த பிறகு அதில் உள்ள சிரமங்களை சரி செய்யும் பணிகள் நிறைய உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 7, 8-ந்தேதிகளில் வருகிறது. சட்டமன்றம் விரைவில் கூட உள்ளதாக தெரிகிறது.
இந்த பணிகள் அனைத்தும் இருப்பதால் தான் பொங்கல் கழித்து பேசிக்கொள்ளலாம் என்று சொல்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
- போக்குவரத்து துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறையாக செயல்பட்டு வருகின்றது.
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்தில் பொதுமக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவசங்கர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சிவசங்கர் எம்.எல்.ஏ. போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கடலூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்பட 33 பேர் நேரில் ஆஜரானார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்டில் ஆஜரானவர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.
பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் பேட்டி அளித்ததாவது:-
அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் குன்னம் தொகுதியில் சுடுகாடு பகுதியில் அத்துமீறி மணல் அள்ளியதால் அனைத்து கட்சி சார்பிலும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்படும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முழுமையாக நிறைவேற்றி உள்ளோம். இதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கோரிக்கை மட்டும் நிலுவையில் உள்ளது. தற்போது நிதி நிலைமை அனைவருக்கும் தெரியும். மேலும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நிதி நிலைமையிலும் முதலமைச்சர் நிவாரணம் வழங்கி வருகிறார்.
ஆனால் மத்திய அரசு நம்மிடம் இருந்து நிதியை வசூல் செய்து வரும் நிலையில் மீண்டும் நிதியை சரியான முறையில் தருவதில்லை. ஆனால் பல்வேறு வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில் முதலமைச்சர் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களுக்கு நிறைவேற்றி வருகிறார்.
போக்குவரத்து துறை முதலமைச்சர் வழங்கும் நிதியால் தான் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுகிறது. இது மட்டுமின்றி மகளிர் கட்டணம் இல்லா பயணம், மாணவர்களின் கட்டணமில்லா பயணம், டீசல் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்திற்கு முதலமைச்சர் நிதி வழங்கி வருவதால் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் மாதம் முதல் தேதியில் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் எத்தனை மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் வழங்குகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சீரழிந்து வந்த துறையை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
மேலும் போக்குவரத்து துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறையாக செயல்பட்டு வருகின்றது. மேலும் டீசல் விலை உயர்ந்த நிலையிலும் ஏழை மக்கள் பாதிப்படையாத வகையில் கட்டணம் உயர்த்தவில்லை. பொங்கல் நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். பொங்கலுக்கு பிறகு நான் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவேன் என அறிவிப்பு தெரிவித்த நிலையில் இந்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
பொங்கலுக்கு பிறகு நாங்கள் பேச தயாராக உள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும் நாங்கள் தயாராக உள்ளோம். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பொங்கலுக்குப் பிறகு முழுமையாக அனைத்து பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 9 ஆண்டுகளாக அகவிலைப்படி வழங்கவில்லை. ஆனால் தற்போது போராட்டம் நடத்தி வரும் அ.தி.மு.க. தொழிற்சங்கங்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா? என தெரியவில்லை.
மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் கேட்கப்படாத அகவிலைப்படியை தி.மு.க. ஆட்சியில் சேர்த்து வழங்க வேண்டும் என கூறுவது அரசியல் நோக்கமாகும். பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்தில் பொதுமக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம். மேலும் தற்போது அறிவித்துள்ள போராட்டத்தில் குறைவான நபர்கள் தான் செல்வார்கள். ஆகையால் எந்த பிரச்சனையும் வராது. போக்குவரத்து தடை ஆகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
- வரும் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.
சென்னை:
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.
பொங்கலுக்கு முன்பாக இந்த ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகங்களில் மொத்தம் சுமார் 1,20,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இதில் தொ.மு.ச. தவிர்த்து மற்ற பிற தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், பொங்கலுக்கு முன்பு எங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் 9-ந்தேதி ஸ்டிரைக்கை திரும்ப பெறும் எண்ணம் இல்லை. நாங்கள் முறையான ஸ்டிரைக் நோட்டீசு வழங்கி விட்டோம். 4-ந்தேதியே அந்த கெடு முடிந்துவிட்டது. இருந்தாலும் 5 நாள் 'டயம்' கொடுத்து 9-ந்தேதி தான் வேலைநிறுத்தம் நடத்த இருக்கிறோம்.
எனவே பொங்கல் சிறப்பு பஸ்களை இயக்குவது பாதிக்கப்படக்கூடாது என கருதும் தமிழக அரசு தொழிற்சங்கத்தினரை அழைத்து பிரச்சனைகளை பேசி தீர்க்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
- ஆலோசனை முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தொழிலாளர் நல கமிஷனர் மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்துடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனை முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
- 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.
- போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.
பொங்கலுக்கு முன்பாக இந்த ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
அதன் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மதியம் பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
- பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது.
சென்னை:
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.
இதையடுத்து 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது.
இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை உட்பட 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
- மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- சென்னை பாரிமுனையில் இருந்து வழக்கமான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை:
சென்னையில் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்ததால் இன்று முதல் வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் 32 பணிமனைகளில் இருந்து 2,749 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 3092 மாநகர பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 2749 பஸ்கள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பாரிமுனையில் இருந்து வழக்கமான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் மாநகர பஸ்கள் வழக்கத்தை விட கூடுதலாக 103 சதவீதம் இயக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பஸ்கள் 100 சதவீதம் இயக்கப்படுகின்றன.
- அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
- இந்தியாவிலேயே எந்தவொரு போக்குவரத்து கழகத்திலும் இங்குள்ளது போன்ற கட்டமைப்பு இல்லை.
சென்னை:
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:
* தமிழகம் முழுவதும் பஸ்களை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
* கூடுதலாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான அகவிலைப்படியை, நிதி நெருக்கடியால் வழங்க முடியாத நிலை உள்ளது.
* அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
* கருணை அடிப்படையில் வேலை, புதிய பணியிடங்கள் நிரப்புதல் ஆகிய 2 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* கோரிக்கைகள் வைக்கப்படாமலேயே தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.
* அண்ணா தொழிற்சங்கத்தோடு மற்ற தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.
* திமுக எப்போதும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய இயக்கம்.
* முன்வைக்கப்பட்ட 6 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை நிறைவேற்ற தான் அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
* தொழிற்சங்கம் என்பது மக்களுக்காக தான். கோரிக்கைளை முன்வைத்து போராட்டம் நடத்தலாம். ஆனால் அது மக்களை பாதிக்கக்கூடாது.
* இந்தியாவிலேயே எந்தவொரு போக்குவரத்து கழகத்திலும் இங்குள்ளது போன்ற கட்டமைப்பு இல்லை.
* 95 சதவீதத்திற்கும் மேல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொழிற்சங்கங்கள் அனைத்தும் பெரும்பாலும் அரசியல் கட்சிகளை சார்ந்தே இயங்குகின்றன.
- இன்று காலை தி.மு.க.வின் தொ.மு.ச., காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சுமார் 70 தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் பெரும்பாலும் அரசியல் கட்சிகளை சார்ந்தே இயங்குகின்றன.
தமிழக பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவது, வாரிசுகளுக்கு வேலை, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைதொகை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை கடந்த பல மாதங்களாக தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளில் 70 தொழிற்சங்கத்துக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஆனால் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 9-ந்தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்ற அறிவிப்பில் பேருந்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. வேலைநிறுத்த அறிவிப்பில் அரசியல் வரக்கூடாது என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.
ஆனால் பிரதான தொழிற்சங்கங்களில் ஒன்றான கம்யூனிஸ்டு ஆதரவு பெற்ற சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அதை ஏற்கவில்லை. அ.தி.மு.க. தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்க பேரவையுடன் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க பேரவை, கம்யூனிஸ்டின் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் மேலும் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாட்டாளி தொழிற்சங்கம் (பா.ம.க.), தே.மு.தி.க. தொழிற்சங்கம், தமிழ் மாநில தொழிற்சங்க காங்கிரஸ் பேரவை, பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.), புதிய தமிழகம் தொழிற்சங்கம், நாம் தமிழர் தொழிற்சங்கம், மனித உரிமை கழகம், திரு.வி.க. தொழிற்சங்கம் ஆகியவை வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக உள்ளன.
மேலும் அகில இந்திய தொழிற்சங்க பேரமைப்பு (ஏ.ஐ.டி.யு.சி.), இந்து மஸ்தூர் சபா (எச்.எம்.எஸ்.), மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (எம்.எல்.எஸ்.) ஆகிய முக்கிய சங்கங்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்றைய போராட்டத்தில் பங்கேற்று பணிக்கு செல்லவில்லை.
முக்கிய தொழிற்சங்கங்கள் அ.தி.மு.க. தொழிற்சங்கத்துடன் கைகோர்த்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரதான தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் பேருந்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்க போவதில்லை என்று நேற்று அறிவித்தது. அ.தி.மு.க. தொழிற்சங்கம் இந்த போராட்டத்தை அரசியல் ஆக்குவதால் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு செல்வதாக அறிவித்தது.
இதன் காரணமாக இன்று காலை தி.மு.க.வின் தொ.மு.ச., காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்பட்டன.
சில மாவட்டங்களில் அந்தந்த பகுதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருந்தன. மாவட்ட தொழிற்சங்கங்களால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.
- நெல்லை மண்டல போக்குவரத்து கழகமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
- நெல்லை மாவட்டத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தினமும் 236 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் வழக்கம்போல் அவை ஓடியது.
நெல்லை:
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சில தொழிற்சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனால் பஸ்கள் இயங்காது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதேநேரத்தில் அனைத்து பஸ்களும் வழக்கம்போல் இயங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் போக்குவரத்து துறை சார்பில் முன்கூட்டியே தற்காலிகமாக டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்டவர்களை தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கிய நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.
நெல்லை மண்டல போக்குவரத்து கழகமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்த மண்டலத்தில் மொத்தம் 1,660 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நெல்லை மாவட்டத்தில் 7 பணிமனைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பணிமனைகளும், தென்காசியில் 4 பணிமனைகளும் உள்ளன. மொத்தம் உள்ள 18 பணிமனைகளின் மூலமாக இந்த 3 மாவட்டங்களிலும் 898 பஸ்களும் இன்று அதிகாலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.
அனைத்து பஸ்களும் பணிமனைகளில் இருந்து வழக்கம்போல் அதிகாலை முதலே புறப்பட்டன.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, தென்காசி , தூத்துக்குடி, திருச்செந்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம்போல் பஸ்கள் இயங்கின. இதனால் வெளியூர்களுக்கு பணிக்கு செல்வோர், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் எவ்வித பாதிப்பும் இன்றி பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமான நேரப்படி பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தினமும் 236 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் வழக்கம்போல் அவை ஓடியது. அதேபோல் தென்காசி மாவட்டத்தின் வழித்தடங்களில் 157 பஸ்கள் வழக்கமாக இயங்கும். ஆனால் இன்று வழக்கத்தை விட 3 பஸ்கள் கூடுதலாக, அதாவது 160 பஸ்கள் இயங்கின. தென்காசி பணிமனையில் இருந்து 67 பஸ்களும். செங்கோட்டை பணிமனையில் இருந்து 40 பஸ்களும் முழுவதுமாக இயக்கப்பட்டு வருவதாக பணிமனை மேலாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் 488 பஸ்கள் ஓடின.
தூத்துக்குடி மாவட்ட வழித்தடத்தில் ஓட வேண்டிய 226 பஸ்களில் 3 பஸ்கள் மட்டுமே ஓடவில்லை. அதிகாலையில் மாநகரில் 50 பஸ்களில் 49 பஸ்கள் ஓடின. புறநகர்களில் 34 பஸ்களில் 31 பஸ்கள் ஓடின. தொடர்ந்து கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் இயக்கம் அதிகரித்தது. 3 மாவட்டங்களிலும் சராசரியாக 90 சதவீதம் வரை பஸ்கள் ஓடின.
நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பணிமனையில் இருந்து 67 பஸ்களும், தாமிரபரணி பணிமனை மூலமாக 55 பஸ்களும் என மொத்தம் 122 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். இன்று வண்ணார்பேட்டை புற வழிச்சாலை பணிமனையில் இருந்து 60 பஸ்களும், தாமிரபரணி பணிமனையில் இருந்து 45 பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியதால் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் எவ்வித சிரமமும் இன்றி பயணித்தனர்.
- தேன்கனிக்கோட்டையில் இருந்து 44 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
- வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் எந்தவித பாதிப்பும் அடையவில்லை.
தருமபுரி:
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.
தருமபுரி அரசு போக்குவரத்து மண்டலத்துக்குட்பட்ட தருமபுரி, பொம்மிடி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட 14 பணிமனைகள் உள்ளன.
இதில் மண்டலத்திற்கு உட்பட்ட தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் என 853 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் நிலையில் தருமபுரி பஸ் நிலையத்தில் இன்று காலை முதல் அனைத்து பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.
இதேபோன்று பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது மேலும் புறநகர் பஸ்கள் 24, டவுன் பஸ்கள்-23, மாற்று பஸ்கள்-4 என மொத்த 51 பஸ்கள் இன்று வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் என 900-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முதல் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் அரசு டவுன் பஸ்கள் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.
கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் 100, புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரையில் 45 பஸ்களும், ஓசூரில் இருந்து 74 சாதாரண பஸ்கள் , 76 சொகுசு பஸ்கள் கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்பட வெளி மாநிலங்களும், புறநகருக்கும் இயக்கப்பட்டன.
இதேபோல் தேன்கனிக்கோட்டையில் இருந்து 44 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
காவேரிப்பட்டனத்தில் வழக்கம் போல அனைத்து புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து பஸ்களும் வழக்கம் போல குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கின.
இதனால் வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் எந்தவித பாதிப்பும் அடையவில்லை.
- தமிழகம் முழுவதும் தற்போது 15,528 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- மாநகர பஸ்கள் 95 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை:
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகம் முழுவதும் தற்போது 15,528 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 95.33 சதவீத பஸ்கள் இயங்கி வருகின்றன.
* SETC பஸ்கள் 100 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர பஸ்கள் 95 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன.
* அனைத்து வகையான பஸ்களும் சீராக இயங்குகின்றன. பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அச்சமின்றி பயணிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.