என் மலர்
நீங்கள் தேடியது "Droupadi Murmu"
+2
- இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்து நேரடியாக பார்வையிட அனுமதி.
- வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்த ஒளி, ஒலி காட்சி இடம் பெறும்.
குடியரசுத்தலைவரின் சொந்த படைப்பிரிவான மெய்க்காப்பாளர் பிரிவு, இந்திய ராணுவத்தில் குடியரசுத்தலைவரின் வெள்ளியாலான தாரை மற்றும் அதற்கான பதாகையை பெறுகின்ற தனித்துவம் மிக்க ஒரே படைப்பிரிவாகும்.
இந்நிலையில் குடியரசுத்தலைவர் மாளிகையின் முன்பகுதியில் உள்ள வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவரின் மெய்க்காவலருக்கு வெள்ளியாலான தாரை இசைக்கருவியும், அதற்கான பதாகையும், வழங்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கௌரவிக்கிறார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் இந்த விழாவில், வெள்ளியாலான தாரை மற்றும் அதற்கான பதாகையை குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர் பெற்றுக் கொள்வார். இதைத் தொடர்ந்து இந்த இசைக்கருவியும், பதாகையும் வழங்கப்படுவதன் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒளி, ஒலி காட்சி இடம் பெறும்.
இந்த சிறப்புக் காட்சியை www.presidentofindia.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்து நேரடியாக பார்வையிடும் அனுமதியை பெறலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பருவம் தவறி அதிக அளவு மழை பெய்வது அதிகரித்து விட்டது.
- நமது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலை மோசமடைந்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 7வது இந்திய நீர் வார தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியதாவது:
நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. தண்ணீர் என்பது வாழ்வில் மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பிந்தைய பயணத்திலும் முக்கியமானதாக உள்ளது. ஆனால் தற்போதைய சூழலைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது.
அதிகரித்து வரும் மக்கள்தொகையால், நமது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலை மோசமடைந்து வருகிறது. கிராமங்களில் உள்ள குளங்கள் வறண்டு வருகின்றன. பல உள்ளூர் ஆறுகள் அழிந்து வருகின்றன. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளால் தண்ணீர் அதிகமாக சுரண்டப்படுகிறது.

சுற்றுச்சூழலின் சமநிலை சீர்குலைந்து, வானிலை மாற்றம் ஏற்படுவதுடன் பருவம் தவறி அதிகப்படியான மழை பெய்வது அதிகரித்துவிட்டது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, தூய குடிநீரை விநியோகிப்பது வருங்காலங்களில் பெரிய சவாலாக இருக்கும்.
தண்ணீரை பயன்படுத்துவது மற்றும் மறு சுழற்சி செய்யும் நடவடிக்கைகள் மூலமே நீர்வளத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைக்க முடியும். நீர் வளத்தை கவனமாக கையாள அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீர் சேமிப்பு குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், விவசாயிகள், தொழில் அதிபர்கள் மற்றும் குழந்தைகள் நீர் சேமிப்பை தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே இனி வரும் தலைமுறையினருக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நாம் பரிசளிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி வழி கல்வியே உதவுகிறது.
- தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜெயதேவ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது:
கல்வி என்பது அதிகாரமளிப்பதற்கான ஒரு கருவி. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மட்டத்திலும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாரபட்சமின்றி அனைவருக்கும் கல்வி கிடைக்க முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அனைவருக்கும் எளிதாக கல்வி கிடைக்கும் வகையிலான மத்திய அரசின் திட்டங்கள் பாராட்டத்தக்கவை.

தொழில்நுட்பக் கல்வியை ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள ஏராளமான மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கையில் தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி உதவுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. தாய்மொழியில் கல்வி கற்பதே மாணவர்களிடையே ஆக்கப்பூர்வ சிந்தனையை உருவாக்கும், பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்தும்.
இது நகரம் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கும். மாநில மொழிகளில் பாடநூல்கள் கிடைக்காததன் காரணமாக முந்தைய காலத்தில் தொழில்நுட்பக் கல்வியை பயிற்றுவிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. இந்த சிரமத்தை நீக்குவதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அனைத்து தகவல்களும் குழந்தைகளின் விரல் நுனியில் இருக்கின்றன.
- நாமும் குழந்தைகளிடமிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். குழந்தைகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கூறியுள்ளதாவது:
குழந்தைப் பருவம் வாழ்க்கையின் மிக அழகான கட்டம். அதுவே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. குழந்தைகளின் களங்கமில்லா தன்மையையும், தூய்மையையும் நாம் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு புதிய தலைமுறையும், புதிய வாய்ப்புகள் மற்றும் கனவுகளை கொண்டு வருகின்றன.

தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தால் அனைத்து தகவல்களும் குழந்தைகளின் விரல் நுனியில் இருக்கின்றன. சிறந்த முறையில் குழந்தைகளுக்கு கற்பித்து அவர்களை பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விவாதங்களில் ஈடுபடுத்துவது மிக முக்கியமானது. நாமும் குழந்தைகளிடமிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும்.
பள்ளிக் குழந்தைகள் இந்தியாவின் கலாச்சாரத்துடன் இணைந்திருக்க வேண்டும். பெற்றோரை எப்போதும் மதிக்க வேண்டும், தாய்நாட்டை நேசிக்க வேண்டும். புதிய மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து கனவு காண வேண்டும். இன்றைய கனவுகள் நாளைய நனவாக மாறும்.
நீங்கள் வளரும் போது எந்த மாதிரியான இந்தியாவில் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் கடமையை செய்ய வேண்டும். அது தானாகவே மிகப்பெரிய வெற்றியை நோக்கி கொண்டு செல்லும். இன்று குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் பாதை, வருங்கால இந்தியாவின் பயணத்தை தீர்மானிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம்.
- மற்றவர்கள் உரிமைக்காக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் பணியாற்றும் சூழலை நாம் உருவாக்க வேண்டும், அப்போதுதான் அவர்களின் முழு ஆற்றலை பயன்படுத்த முடியும். இந்தியா வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அதிக அளவில் பெண்களின் பங்களிப்பு அவசியமாகும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் அதிக அளவிலான பங்களிப்பு, பொருளாதாரம், சமுதாயம் மற்றும் நாட்டை வலுப்படுத்தும். பெண்கள் ஒருவொருக்கொருவர் ஊக்குவித்து, உதவி செய்து, மற்றவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம். வளர்ச்சியின் பல்வேறு திசைகளில் அவர்களை முன்னேற்ற இது உதவுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பழங்குடியின பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்கள், இந்திய பழங்குடியின கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு மூலம் நுகர்வோரை சென்றடைவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நமது சகோதரிகளும், புதல்விகளும் தங்களது வாழ்வாதாரத்திற்காக உழைத்து பொருளாதார தன்னிறைவு அடைந்து வருகின்றனர். இதன் பயனாக ஊரக குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி நமது நாட்டு பெண்களின் முன்னேற்றத்திலேயே அடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஒவ்வொரு துறையிலும் மாற்று திறனாளிகள் சாதிக்க உகந்த சூழலையும் உருவாக்க வேண்டும்.
- மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2021 மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் மக்கள் தொகையில், 2 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதால், அவர்கள் யாரையும் சார்ந்திராமல், கவுரமாக வாழும் சூழலை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். அது மட்டுமல்லாமல், சிறந்த கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுதந்திரமாகச் செயல்படுதல், சமமான வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமை.
மாற்றுத் திறனாளிகள் பொதுஅறிவை வளர்த்துக்கொள்வதற்கும், அறிவாற்றலால் சாதனை படைப்பதற்கும், இந்தியாவின் கலாச்சாரமோ, பண்பாடோ தடையாக இருக்கக்கூடாது. மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களைவிட, அசாத்தியத் திறமை கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். துணிவு, திறமை, திட்டமிடல் மூலம் இலக்கை எட்டி ஏராளமான மாற்றுத்திறனாளி சகோதர-சகோதரிகள் சாதனை படைத்துள்ளனர்.

ஒவ்வொரு துறையிலும் மாற்று திறனாளிகள் சாதிக்க உகந்த சூழலையும், போதுமான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தனிநபர் அனைவரும் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளும் தரமானக் கல்வியைப் பெறுவதில், சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையே, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. தன்னம்பிக்கையை வளர்ப்பதன் மூலமே மாற்றுத்திறனாளிகளை அதிகாரமிக்கவர்களாக, தற்சார்பு பெற்றவர்களாக மாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தூய்மையான காற்றை சுவாசிப்பது மனிதனின் அடிப்படை உரிமை.
- சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் மனித உரிமைகளை நாம் பாதுகாக்க முடியும்.
தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள், புதுமை கண்டுபிடிப்பு விருதுகள் மற்றும் தேசிய ஓவியப் போட்டிக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் மின்னணு வாகனங்களுக்கு அருகில் உள்ள சார்ஜிங் நிலையங்களை கண்டறிய உதவும் ஈவி-யாத்ரா என்ற இணைய தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கூறியுள்ளதாவது: தூய்மையானக் காற்றை சுவாசிப்பது மனிதனின் அடிப்படை உரிமை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் பல்வேறு மனித உரிமைகளை நாம் பாதுகாக்க முடியும். எதிர்காலத் தலைமுறையினர் மாசு இல்லாத காற்றை சுவாசிப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்,
அவர்கள் ஆரோக்கியமாக நலமுடன் வாழ்வதே நமது முதன்மையான குறிக்கோள். எரிசக்தி சேமிப்பு என்பது நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்தது. பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற சவால்களை எதிர்கொள்ள அது உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று 51 ஆண்டுகள் நிறைவு.
- வீரர்களின் இணையற்ற துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறது.
1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி வெற்றி தினம் (விஜய் திவஸ்) கொண்டாடப்படுகிறது. இந்த போருக்கு பின்னர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம், சுதந்திர நாடாக மாறியது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 1971 ஆண்டு போரின் போது நமது ஆயுத படையினர் வெளிப்படுத்திய வீரத்தை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். வீரர்களின் இணையற்ற துணிச்சல் மற்றும் தேசத்துக்காக அவர்கள் செய்த ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவரையொருவர் அன்புடனும், கருணையுடனும் நடத்த வழி காட்டுகிறது.
- கிறிஸ்து போதனைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள உறுதிமொழி எடுப்போம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
கிறிஸ்துமஸ் பண்டிகை மொத்த மனிதகுலத்திற்கும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் மற்றும் தியாகத்தின் முக்கியத்துவத்தை நாம் நினைவுகூருவோம். கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவரையொருவர் அன்புடனும், கருணையுடனும் நடத்த வழி காட்டுகிறது.
இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள உறுதிமொழி எடுப்போம். நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புனிதமான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்து அன்பு, பரிவு மற்றும் கருணை ஆகியவற்றின் வழியை நமக்குக் காட்டியுள்ளார். இது நமது வாழ்க்கையை நல்லொழுக்கம் உள்ளதாக்குகிறது. அத்துடன் சமூகத்தில் சகிப்புத்தன்மை, நல்லிணக்கத்தைக் கொண்டு வருகிறது.
இது உலகில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாம், இணக்கமான, சகிப்புத்தன்மையுடன் கூடிய மற்றும் அமைதியான சமுதாயத்திற்காகப் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குற்றவாளிகள் காவல் துறையினரைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும்.
- சாதாரண மனிதர்கள், காவல் துறையினரை நண்பராக கருத வேண்டும்.
தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியில், காவல்பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பை நிலைநாட்டும் பணியின் போது ஆயிரக்கணக்கான காவல் துறையினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். காவல்துறை மக்களின் நம்பிக்கையை பெறும் போது அரசின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். கடைநிலையில் உள்ள காவலர் வரை அனைவரும் பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும்.

ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் பணி துவங்கும் போதிலிருந்தே தலைமைப் பண்புடன் திகழ வேண்டும். ஒருமைப்பாடு, பாரபட்சமற்ற தன்மை, துணிவு, திறமை மற்றும் உணர்திறன் ஆகிய 5 அடிப்படை பண்புகளை மனதில் வைத்து காவல் துறை அதிகாரிகள் தங்களது திறனை நிரூபிக்க வேண்டும். தொலைதூர பகுதிகளில் வசிக்கும் ஏழை கிராமவாசிகளை உள்ளூர் காவல் நிலையங்கள் கருணையுடன் அணுகுவதை காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.
குற்றவாளிகள் காவல் துறையினரைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும், அதே நேரம் சாதாரண மனிதர்கள் காவல் துறையினரை நண்பராகவும் தங்களை காப்பாற்றுபவராகவும் கருத வேண்டும். அந்த வகையில் காவலர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். பாதிக்கப்படும் பெண்களுக்கு பெண் காவல் அதிகாரிகள் அதிக அளவில் உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழை எளிய மக்களை சென்றடைய வேண்டும்.
- மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.
ஐதராபாத்தில் உள்ள நாராயணம்மா அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இன்றைய உலகில் முன்னெப்போதும் கண்டிராத பிரச்சனைகளுக்கும் விரைவான தீர்வை காண, பொறியியலின் பங்கு மிகவும் முக்கியமானது.பொறியியலாளர்களின் கண்டுபிடிப்புகளும், அவர்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்களும் மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழை எளிய மக்களையும் சென்றடைவதுடன், சமூக நீதிக்கான கருவியாக பயன்பட வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்னும் மந்திரத்தை இந்தியா உலகின் முன் வைத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எத்தனால் கலந்த எரிபொருள், பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றின் மூலம் புதிய முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். இந்த முன்முயற்சிகள் மூலம் சிறந்த முடிவுகளை நாம் பெறலாம்.
பெரிய நிறுவனங்களின் தலைவர்களாக பெண்கள் பரிமளித்து வருகின்றனர். தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, எந்திர வடிவமைப்பு, கட்டுமானப்பணிகள், செயற்கை நுண்ணறிவு உள்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் பெரிய அளவில் பங்காற்றி வருகின்றனர். தொழில்நுட்பவியலாளராக இளம் பெண்களை உருவாக்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை நாடு எட்ட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புத்தாண்டு விடியல், நமது வாழ்வில் மகிழ்ச்சியையும், பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.
- குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
2023 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
புத்தாண்டு தினத்தில் மக்கள் அனைவருக்கும், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு விடியல், மகிழ்ச்சியையும், இலக்குகளையும், உத்வேகங்களையும், நமது வாழ்வில் பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.
தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி ஏற்போம். புத்தாண்டில் நமது தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்த மகிழ்ச்சியான தருணம், நமது முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையை உறுதிசெய்து, உத்வேகத்துடன் நமது முயற்சிகளைத் தொடர ஒரு வாய்ப்பாகும். இந்தியாவை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டுடன் புத்தாண்டைத் தொடங்குவோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கும் தேசம், வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு உலகில் மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. நமது வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கான நமது முயற்சிகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.