என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரா ஒலிம்பிக்"

    • தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி தேர்வாகியுள்ளார்.
    • கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை உதயநிதி வழங்கினார்.

    பாரீஸில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் 2024 – ல் மகளிருக்கான 67 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ள கஸ்தூரி ராஜாமணியை இன்று நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்,

    இது குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக தேர்வாகியுள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் விமானப் பயணச் செலவு – தங்குமிடம் – உணவு – பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கினோம்.

    தங்கை கஸ்தூரி ராஜாமணி சர்வதேச அரங்கில் வெற்றி வாகை சூடி இந்தியாவிற்கும் – தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
    • இந்த ஒலிம்பிக் திருவிழாவில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பாரீஸ்:

    மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. வருகிற 8-ந்தேதி வரை நடைபெறும் இந்த ஒலிம்பிக் திருவிழாவில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று முதல் போட்டிகள் நடக்க உள்ளன.

    போட்டியை பார்க்க இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி இருப்பதாகவும், கடைசி நாள் வரை டிக்கெட் விற்பனை நடைபெறும் என்றும் போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

    • சுமித் ஆன்ட்டில் கடந்த பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார்.
    • பாரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது.

    பாரீஸ்:

    17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரின் ஜோதியை பிரபல நடிகர் ஜாக்கி சான் ஏந்தி சென்றார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மிகவும் மோசமாக நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு பதில் சொல்லும் விதமாக பாரா ஒலிம்பிக்கில் தொடக்க விழாவை சிறப்பாக பிரான்ஸ் நடத்தியது.

    இதில் 167 நாடுகளை சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பாரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது.

    பாரிசில் முக்கிய பகுதியான லா கான்கோர்டு என்ற இடத்தில் இந்த தொடக்க விழா நடந்தது. இதில் 140 நடன கலைஞர்கள் பங்கேற்று கண்கவரும் நடனத்தில் ஈடுபட்டனர். இந்த தொடக்க விழாவில் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்கரான் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து பிரெஞ்ச் கலைஞர் கிறிஸ்டின் குழுவினர் நடத்திய இசை கச்சேரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் பிறகு போர் விமானங்கள் மூலம் வண்ண புகைகள் வெளியேற்றி வானத்தில் வட்டமிட்டு படி சென்றது.


    இந்தத் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் என்ற சுமித் ஆண்டில்க்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் என்ற பாக்கியஸ்ரீ ஜாதவ்க்கும் கிடைத்தது. சுமித் ஆன்ட்டில் கடந்த பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார்.

    இதை போன்று பாக்கியஸ்ரீ ஜாதவ் குண்டு எறிதலில் ஆசிய பாரா போட்டிகளில் வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய குழுவினர் வெள்ளை நிற ஆடை மற்றும் தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். கடந்த முறை இந்தியா ஐந்து தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 24-ம் இடத்தை பிடித்தது. இம்முறை அதிக வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருப்பதால் மேலும் அதிக பதக்கங்களை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது .

    • பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
    • பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    17 ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவை பிரான்ஸ் சிறப்பாக நடத்தியது.

    இதில் 167 நாடுகளை சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பாரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய வில் வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி ஒருபுள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார்.

    தகுதிச் சுற்றில் அற்புதமாக விளையாடிய ஷீத்தல் 703 புள்ளிகளை பெற்றார். எனினும், 704 புள்ளிகளை பெற்ற துருக்கி வீராங்கனை சாதனை படைத்தார். ஒருபுள்ளியில் உலக சாதனையை தவறவிட்ட போதிலும், வில் வித்தையில் 700 புள்ளிகளை கடந்த முதல் இந்திய பாராலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையை ஷீத்தல் பெற்றுள்ளார்.

    • கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சோலைமலை சிவராஜன் - நித்யா ஸ்ரீ சுமதி ஆகியோர் பங்கேற்றனர்.
    • முதல் செட்டை அமெரிக்கா 23-21 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா முதல் முறையாக 84 வீரர்- வீராங்கனைகளை அனுப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் உயரம் குறைவாக உள்ளவர்களுக்கான கலப்பு இரட்டையர் பேட்மிண்டனில் இந்தியாவின் சோலைமலை சிவராஜன் - நித்யா ஸ்ரீ சுமதி ஆகியோரும் அமெரிக்காவின் மைல்ஸ் க்ராஜெவ்ஸ்கி மற்றும் ஜெய்சி சைமன் ஆகியோரும் மோதின.

    இந்த ஆட்டத்தின் முதல் செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் 21-23 என்ற கணக்கில் இந்திய ஜோடி தோல்வியடைந்தது. 2-வது செட்டை இந்தியா எளிதாக இழந்தது. இதனால் 21-23, 11-21 என்ற கணக்கில் அமெரிக்கா ஜோடி வெற்றி பெற்றது.

    • கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதிஷ் குமார், துளசிமதி முருகேஷன் ஜோடி பங்கேற்றது.
    • மலேசியாவின் ஹிக்மத் ராம்தானி மற்றும் லியானி ராத்ரி ஒக்டிலா ஜோடி மோதியது.

    பாரா ஒலிம்பிக் தொடர் பாரீஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதிஷ் குமார், துளசிமதி முருகேஷனும் மலேசியாவின் ஹிக்மத் ராம்தானி மற்றும் லியானி ராத்ரி ஒக்டிலா ஆகியோர் மோதின.

    இந்த ஆட்டத்தில் எளிதான முறையில் மலேசிய வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்திய ஜோடி 15-21, 8-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

    • பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • இந்தியா சார்பில் 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய சார்பில் 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் SL3 பெண்கள் பிரிவில் இந்தியாவின் மந்தீப் கவுர், நைஜீரியாவின் மரியன் எனியோலா போலாஜியுடன் மோதினார்.

    சுமார் 29 நிமிடங்களில் முடிந்த இந்தப் போட்டியில் மந்தீப் கவுர் 8-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மந்தீப் கவுர் அடுத்து ஆஸ்திரேலிய வீராங்கனை செலின் வினோட்டுடன் மோத உள்ளார்.

    • துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி இரு பதக்கங்களைப் பெற்றது.
    • அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் பெற்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் போட்டியிட்ட அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தினர்.

    பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் அவனி லெகரா தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் மோனா அகர்வால் வெண்கலம் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தனது பதக்க கனவை தொடங்கி உள்ளது. ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • பாரா ஒலிம்பிக் போட்டியில் உலக அளவில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    • இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது

    பாரீஸ்:

    17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது

    இந்நிலையில், தடகளத்தில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரீத்தி பால் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியா இன்று ஒரே நாளில் 3 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.

    ஓட்டப் பந்தயத்தில் சீனா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றது.

    ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்திய அணி 2 பதக்கம் பெற்றது.
    • ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    ஆண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இவர் மொத்தம் 234.9 புள்ளிகள் எடுத்து 2வது இடம் பிடித்தார்.

    கொரியா தங்கப் பதக்கமும், சீனா வெண்கலமும் வென்றது.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ஏற்கனவே. துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர்.

    • இந்திய அணி இன்று மொத்தம் 4 பதக்கக்களை வென்றுள்ளது.
    • இதில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி 3 பதக்கங்கள் பெற்றது.

    பாரீஸ்:

    17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் இன்று துப்பாக்கிச் சுடுதலில் கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் தேவரட்டி ராமகிருஷ்ணா பங்கேற்றார்.

    இதில் சிறப்பாக செயல்பட்ட ராமகிருஷ்ணா, ஒரு புள்ளியில் பதக்க வாய்ப்பை தவறவிட்டுள்ளார். தேவரட்டி ராமகிருஷ்ணா 6 சுற்றில் மொத்தம் 630.7 புள்ளிகளுடன் 9வது இடம் பிடித்தார்.

    முதல் 8 இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே பதக்க வாய்ப்புக்கு தகுதி பெறுவார்கள். நியூசிலாந்தின் ஜான்சன் மைக்கேல் 630.8 புள்ளிகள் பெற்று எட்டாவது இடம்பிடித்து பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.

    இதன்மூலம் ஒரு புள்ளியில் பதக்க வாய்ப்பை இந்திய வீரர் தேவரட்டி ராமகிருஷ்ணா தவறவிட்டுள்ளார்.

    • பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது.
    • பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மணீஷ் நர்வால் வெள்ளியும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். தடகளத்தின் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், துப்பாக்கிச் சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற அவனி லேகராவுக்கு வாழ்த்துகள். மேலும், பாரா ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையும் படைத்துள்ளார். அவனி லேகராவின் அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமைப்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு பதிவில், வெண்கலப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள். மோனா அகர்வாலின் குறிப்பிடத்தக்க சாதனை அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மோனாவால் இந்தியா பெருமை கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற மணீஷ் நர்வாலுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ×