search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு நிலச்சரிவு"

    • திருமணத்திற்காக இருவரும் காத்திருந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு ஸ்ருதியின் வாழ்க்கையை திருப்பிப்போட்டது.
    • உறவுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்த ஸ்ருதிக்கு அவரது காதலன் ஆதரவாக இருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் மழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் கதி என்ன என்பது பல நாட்கள் தேடுதல் வேட்டை நடத்திய பிறகும் கண்டறியப்படவில்லை.

    வயநாடு நிலச்சரிவில் பலர் குடும்பத்தோடு உயிரிழந்துவிட்டனர். பலர் தங்களின் உறவுகளை இழந்து தனியாகிவிட்டனர். சூரல்மலை பகுதியை சேர்ந்த ஸ்ருதி என்ற இளம்பெண், நிலச்சரிவில் தனது தாய் சபீதா, தந்தை சிவண்ணன், சகோதரி ஸ்ரேயா உள்ளிட்ட குடும்பத்தினர் 9பேரை இழந்துவிட்டார்.

    பணி நிமித்தமாக கோழிக்கோட்டில் இருந்ததால் ஸ்ருதி நிலச்சரிவில் சிக்காமல் தப்பித்தார். தாய்-தந்தை மற்றும் சகோதரி மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஸ்ருதி அனாதையானார். நிவாரண முகாமில் தங்கியிருந்த அவருக்கு, அவருடைய காதலனான ஜென்சன் ஆதரவாக இருந்தார்.

    நிலச்சரிவில் ஸ்ருதியின் வீடு முற்றிலுமாக இடிந்து விட்டது. அவர்களது வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகியது. ஸ்ருதியின் திருமணத்துக்காக அவரது பெற்றோர் வைத்திருந்த 4 லட்ச ரூபாய் பணம் மற்றும் 15 பவுன் நகைகள் உள்ளிட்ட அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

    உறவுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்த ஸ்ருதிக்கு அவரது காதலன் ஆதரவாக இருந்தார். முகாமில் தங்கியிருந்த ஸ்ருதியுடன் தினமும் காலை முதல் மாலை வரை ஜென்சன் உடன் இருந்தபடி இருந்தார். நிவாரண முகாமில் காதலர்கள் இருவரும் கைகளை கோர்த்தபடி நடந்து சென்றதை பார்க்காதவர்களே இருக்க முடியாது என்ற அளவுக்கு பிரபலமாகினர்.

    இவர்களுக்கு நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு சில நாட்களுக்கு முன்பு தான் திருமண நிச்சயதார்த்தம நடைபெற்றது. திருமணத்திற்காக இருவரும் காத்திருந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு ஸ்ருதியின் வாழ்க்கையை திருப்பிப்போட்டது. உறவுகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தவித்த ஸ்ருதியை திருமணம் செய்வதில் ஜென்சன் மிகவும் உறுதியாக இருந்தார்.

    "ஸ்ருதியை கைவிட மாட்டேன், அவளை விரைவில் திருமணம் செய்து கொள்வேன், நான் இருக்கும் வரை அவளுக்காக வாழ்வேன்" என்று ஜென்சன் கூறினார். இந்த நிலையில் நிவாரண முகாமில் இருந்து முண்டேரியில் வாடகை வீட்டிற்கு ஸ்ருதி குடியேறினார்.

    நிலச்சரிவில் சிக்கி பலியான அவர்களது குடும்பத்தினரின் உடல்கள் பிரேத பரிசோதனை உள்ளிட்ட விஷயங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நடந்தது. அவை அனைத்தும் முடிந்ததும் இந்த மாத இறுதியில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

    இந்தநிலையில் ஸ்ருதி மற்றும் அவரது தோழிகள் சிலருடன் ஜென்சன் வேனில் சுற்றுலா தலத்துக்கு சென்றார். வேனை ஜென்சன் ஓட்டிச் சென்றிருக்கிறார். வெள்ளரம்குன் என்ற பகுதியில் சென்ற போது அவர்களது வேனின் மீது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது.

    இந்த விபத்தில் காதலர்கள் சென்ற வேனின் முன்பகுதி பயங்கரமாக நொறுங்கியது. முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஜென்சன் மற்றும் ஸ்ருதி படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் கடும் போராட்டத்திற்கு பிறகு வேனின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.

    ஜென்சன் மேப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், ஸ்ருதி கல்பெட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஜென்சன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். ஸ்ருதி தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஜென்சனும், ஸ்ருதியும் 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அவர்கள் திருமணத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில் தான், வயநாடு நிலச்சரிவில் ஸ்ருதியின் குடும்பத்தினர் அனைவரும் இறந்துவிட்டனர். இதனால் உடைந்துபோன ஸ்ருதிக்கு ஆதரவாக இருந்த ஜென்சன், காதலியை கரம் பிடிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

    அதன் மூலம் ஸ்ருதிக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது காதலன் விபத்தில் பலியானதன் மூலம் விதி ஸ்ருதியின் வாழ்க்கையில் மீண்டும் விளையாடி விட்டது. காதலன் ஜென்சன் விபத்தில் பலியானது பற்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ருதிக்கு தெரிவிக்கப்படவில்லை.

    காதலன் தனக்கு எப்போதும் துணையாக இருப்பான் என்ற எண்ணத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் ஸ்ருதி. 

    • வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    புதுடெல்லி:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள், திரை நட்சத்திரங்கள் உள்பட பலர் வயநாடு நிலச்சரிவுக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தனது ஒருமாத சம்பளத்தை கேரள காங்கிரசுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

    நிலச்சரிவில் தங்கள் அன்புக்குரி உரியவர்கள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த வயநாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்ற ராகுல் காந்தியின் அறிவிப்பின் ஒரு பகுதியாக காங்கிரசின் மாநிலப் பிரிவு சேகரிக்கும் நிதிக்கு இந்த நன்கொடை வழங்கப்பட உள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    • பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
    • பல பள்ளிகள் கடந்த 27-ந் தேதி முதல் செயல்பட தொடங்கின.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி பெய்த மழையின்போது தொடர்ச்சியான நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

    இந்த நிலச்சரிவின்போது மண்ணுக்குள் ஏராளமான வீடுகள் புதைந்தன. அதில் இருந்தவர்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

    இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்காக வயநாடு மாவட்டம் மேப்பாடி, முண்டகை பகுதிளில் உள்ள பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டன. இந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் அரசு ஏற்பாடு செய்த வீடுகளுக்கு மாறத் தொடங்கினர்.

    இதனை தொடர்ந்து பல பள்ளிகள் கடந்த 27-ந் தேதி முதல் செயல்பட தொடங்கின. அங்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு மாணவ-மாணவிகள் கல்வி தொடர்ந்தது.

    இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலை பகுதியை சேர்ந்த 2 பள்ளிகள் மேப்பாடியில் கிராம பஞ்சாயத்து சமுதாயக் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக இடங்களில் இன்று செயல்பட தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.

    • கேரளா மாநிலத்தில் நலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

    கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் சார்லஸ் மார்ட்டின் 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

    நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள கோவை, மார்ட்டின் நிறுவனம், இந்த சவாலான நேரத்தில் அம்மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    வயநாட்டில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு 2 கோடி ரூபாய் வழங்கியுள்ள மார்ட்டின் நிறுவனம், அதில் ஒரு கோடி ரூபாயை, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம்.

    ஒரு கோடி ரூபாயை, இயற்கை பேரிடர்களின் போது நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட ரோட்டரி சங்கம் மூலம் நிவாரணப் பொருட்கள், மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கவும் வழங்கியுள்ளதாக மார்ட்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

    • வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவித் தொகையாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி அறிவித்துள்ளார்.
    • கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி வழங்க உள்ளார்.

    கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு ரூ. 10 கோடி நன்கொடை அறிவித்துள்ளது.

    வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அன்று வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 310 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    இந்த நிலையில், ஆந்திரா முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கேரள அரசுக்கு ரூ.10 கோடி வழங்குவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆந்திர அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    முன்னதாக, தெலுங்கு திரையுலகில் இருந்து பிரபாஸ் இரண்டு கோடியும், சிரஞ்சீவி மற்றும் சரண் ஒரு கோடி ரூபாயும், அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், தயாரிப்பாளர் நாகவம்ஷி ரூ. 5 லட்சம் என பிரபலங்கள் பலர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர்.

    இதேபோல், நடிகைகள் மீனா, குஷ்பு, சுஹாசினி மற்றும் சில சினிமா நட்சத்திரங்கள் நேரடியாகச் சென்று ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வரிடம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையின் பெரும்பகுதி மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பாக உள்ளது.
    • ஆற்றங்கரையோரம் மட்டும் வாழ்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது எனவும் ஆய்வு செய்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரமலை, முண்டகை உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.

    புவி அறிவியலுக்கான தேசிய மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜான் மத்தாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. நிலச்சரிவுகள் ஏற்பட்ட பகுதி மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பானதா? இல்லையா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு கேட்டிருந்தது.

    அதன்படி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் சூரமலையின் பெரும்பகுதி பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். புஞ்சுரிமட்டம் ஆற்றங்கரையோரம் வாழ்வதை தவிர்ப்பது நீண்ட கால பாதுகாப்பு என மத்தாய் தெரிவித்துள்ளார்.

    வயநாடு மேப்பாடி பஞ்சாயத்தில் உளள் முண்டகை மற்றும் சூரமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு பகுதியும் ஏறக்குறை அழிந்துபோனது.

    வயநாட்டின் மேப்பாடி பஞ்சாயத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு, நிலச்சரிவின் மையப்பகுதியான புஞ்சிரிமட்டம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டது. மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்தனர்.

    வயநாடு நிலச்சரிவில் இதுவரை 231 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் 212 உடல்களின் பாகங்கள் மீட்கப்பட்டதாக கேரள மாநில மந்திரி தெரிவித்துள்ளார்.

    • இந்த வங்கி கிளையில் 100 கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள்.
    • கடந்த 30 ம் தேதி கேரள முதலைமைச்சர் நிவாரணம் ஒதிக்கி 50 லட்சம் இந்த வங்கி நிர்வாகம் வழங்கியது.

    வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

    கேரள வங்கி என்பது கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வங்கி கிளையில் 100 கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். இந்த கிளையில் நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளதாக அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள முதலைமைச்சர் நிவாரணம் நிதி கணக்கிற்கு ரூ.50 லட்சத்தை கேரள வங்கி நிர்வாகம் வழங்கியுள்ளது. இதைத்தவிர, வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களது 5 நாட்கள் ஊதியத்தை கேரள முதல்வர் நிவாரன நிதிக்கு வழங்கினர்.

    இருப்பினும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களில் எத்தனை பேர் இந்த வங்கியில் கடன் வைத்திருக்கிறார்கள் என்ற விவராம் இன்னும் வெளியாகவில்லை. இந்த அறிவிப்பின் மூலம், கூடுதலான மக்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • உயிருக்கு போராடிய 35 பேரை காப்பாற்றி உள்ளார்.
    • மா.சுப்பிரமணியன் பாராட்டி கேடயம் வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூரரை சேர்ந்த நர்சு சபீனா என்பவர் வயநாடு சூரல்மலை பகுதியில் கரைபுரண்டோடும் ஆற்றை கடந்து ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு சென்று அங்கு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 35 பேரை காப்பாற்றி உள்ளார். அவர் ஜிப்லைனில் ஆற்றை கடந்து செல்லும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவின.

    இந்தநிலையில் அரசு நிகழ்ச்சிக்காக ஊட்டிக்கு வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீரப்பெண்மணி சபீனாவின் செயலை பாராட்டி பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கினார். மேலும் அரசு சார்பில் சபீனாவின் செயலை அங்கீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.

    வயநாடு நிலச்சரிவில் மருத்துவப்பணிகளில் ஈடுபட்டது குறித்து பெண் நர்சு சபீனா கூறியதாவது:-

    வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட போது மீட்புக்குழுவினர் ஆண் செவிலியர்களைதான் முதலில் தேடி வந்தனர். ஆனால் யாரும் கிடைக்காத சூழ்நிலையில் நானே முன்வந்து மீட்புக்குழுவினருடன் புறப்பட்டு சென்றேன்.

    மேலும் சூரல்மலை பகுதியில் படுகாயம் அடைந்தவர்களை காப்பாற்ற ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு செல்ல தயாராக இருப்பதாக கூறினேன். இதற்கு அக்கரையில் உள்ளவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.

    பெண் செவிலியரை ஏன் அனுப்புகிறீர்கள் எனவும் தயக்கம் தெரிவித்தனர். ஆனால் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    ஆற்றின் இக்கரையில் இருந்து பார்க்கும்போதே அக்கரையில் படுகாயம் அடைந்து தவிப்பவர்களின் நிலை எவ்வளவு பரிதாபமாக உள்ளது என்பது தெரிந்தது. எனவே எவ்வளவு விரைவாக அங்கு செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாக சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் இருந்தது.

    மற்றபடி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளமோ, அங்கிருந்த சூழ்நிலையோ எனக்கு அச்சமாக தெரியவில்லை. மேலும் ஜிப்லைனில் செல்லும்போது காலுக்கு அடியில் ஓடிய வெள்ளம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கையில் வைத்திருக்கும் மருந்துப்பெட்டி கீழே விழுந்து விடுமோ என்று மட்டும்தான் எனக்கு பயமாக இருந்தது.

    முதலில் ஜிப்லைன் மூலமாக நானும், பிறகு மருத்துவ ஊழியர்கள் உட்பட 3 பேரும் சென்றோம். அங்கிருந்தவர்களில் பலருக்கு காயத்தின் வலிகூட தெரியாத அளவுக்கு அதிர்ச்சி இருந்தது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தது மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • நிலச்சரிவை தொடர்ந்து நிவாரண பணிகளுக்கு பல பிரபலங்கள் நிதி உதவி அறிவித்தனர்.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. நள்ளிரவு வேளையில் அரங்கேரிய இந்த கோரம் காரணமாக வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உறக்கத்திலேயே மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவை தொடர்ந்து ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை, தன்னார்வலர்கள் என பலதரப்பினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக திரைப் பிரபலங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

    இந்த வரிசையில், நடிகர் தனுஷ் கேரளா நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ. 25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். முன்னதாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர், நடிகைகள் கேரளாவுக்கு நிதி உதவி அறிவித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பொதுமக்கள் தரப்பில் சுமார் 200 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள்
    • அனைத்து இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களை கண்டுபிடிக்க கடந்த மாதம் 30-ந்தேதி முதல் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் குழு என 11 பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நவீன ராடர்கள் மற்றும் ட்ரோன்கள், ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்கள், நிபுணத்துவம் பெற்ற மோப்பநாய்கள் உள்ளிட்டவைகளும் தேடு தலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம் மண்ணுக்குள் புதைந்தும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் பலியாகிய நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தின் முப்படை வீரர்களும் 10 நாட்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது தேடுதல் பணியை கடந்த 9-ந்தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். அதேநேரத்தில் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டியிருப்பதால் மற்ற பிரவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.


    காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் புதிய முயற்சியாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. தேடுதலுக்கான அனைத்து வழிகளும் தீர்ந்துவிட்டதால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் கடைசி முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி பொதுமக்கள் உதவியுடன் மீட்பு குழுவினர் நேற்றுமுன்தினம்(9-ந்தேதி) தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் வீடுகள் புதைந்த இடங்கள், சாலியாற்று பகுதிகள், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய வனப்பகுதிகள் என பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    பொதுமக்கள் தரப்பில் சுமார் 200 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். இந்த தேடுதலின் பலனாக மேலும் சிலரது உடல்களும் மீட்கப்பட்டன. இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இந்த முறையை பயன்படுத்தி தேடுதல் பணியை தொடர மீடட்பு குழுவினர் முடிவு செய்தனர்.

    அதே நேரத்தில் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நேற்று வயநாடு வந்ததால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேடுதல் பணி நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அவர் வந்து சென்றபிறகு சில இடங்களில் மீட்பு குழுவினர் மட்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள்.

    இந்நிலையில் பொது மக்கள் பங்களிப்புடனான மெகா தேடுதல் பணி இன்று மீண்டும் நடைபெற்றது. தேடுதல் பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் இன்று காலை 9 மணி வரை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால், அதன் பிறகு தேடுதல் பணி தொடங்கப்பட்டது.

    நேற்று முன்தினத்தை விட பொதுமக்கள் தரப்பில் இன்று கூடுதலான நபர்கள் தேடுதல் பணியில் களமிறங்கினர். முண்டக்கை, சூரல்மலை, புஞ்சிரிமட்டம், கிராம அலுவலக வளாகம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் இன்று தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி இன்று 13-வது நாளை எட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார்.
    • மீட்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை பிரதமர் மோடி நடத்தினார்.

    திருவனந்தபுரம்:

    வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார். அங்கு நிலச்சரிவால் பாதிப்பு அடைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வுசெய்த பிரதமர் மோடி, மீட்புப்பணி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

    இந்நிலையில், ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி கூறியதாவது:

    நிலச்சரிவு மீட்புப் பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், தன்னார்வலர்கள், டாக்டர்கள் என அனைவரும் ஈடுபட்டனர்.

    இந்தப் பேரிடர் சாதாரணமானது அல்ல. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கானோரின் கனவுகளை தகர்த்துள்ளது.

    சூழ்நிலையை நேரில் பார்த்தேன். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களையும், காயம் அடைந்தவர்களையும் சந்தித்தேன்.

    பேரிடர் குறித்து அறிந்ததும் முதல்வரை தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தேன்.

    கேரளாவுக்கு மத்திய அரசு தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவி வந்தது. அது தொடரும்.

    இறந்தவர்களின் உறவினர்கள் தனித்துவிடப்பட மாட்டார்கள் என அவர்களுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவர்களுடன் துணை நிற்கிறோம்.

    கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும். பணப்பற்றாக்குறையால் எந்த பணியும் நிறுத்தப்படாது என உறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார்.

    • வயநாடு நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு.
    • பிரதமர் மோடி இன்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் வீடுகள் நிலச்சரிவால் இழுத்துச் செல்லப்பட்டன. மேலும், மணல் சேற்றால் மூழ்கின. இதில் சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நிலச்சரிவால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியை பிரதமர் மோடி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் பறந்தவாறு ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பள்ளி முகாமிற்கு சென்று, அங்குள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆகியொர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கேரள மாநில முதல்வரான பினராயி விஜயன் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, வயநாடு செல்லும் பிரதமர் மோடி நிலச்சரிவு பாதிப்பை தேசிய பேரிடர் என அறிவிப்பார் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

    ×