என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NLC"

    • ஜனநாயகம், சமூக நீதி பேசும் அரசு, அவற்றை செயலிலும் காட்ட வேண்டும்.
    • தங்களின் நிலங்களைக் காக்க தங்களுக்கு உரிமை உண்டு என்ற மக்களின் நிலைப்பாட்டை மதிக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறிஇருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் கரிவெட்டி கிராமத்தில், என்.எல்.சி. நிறுவனத்தின் சட்டத்திற்கு எதிரான நிலப்பறிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல்துறை பொய்வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. அவ்வழக்குகளின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேர்நிற்கும்படி அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் செயல் கண்டிக்கத்தக்கது.

    ஜனநாயகம், சமூக நீதி பேசும் அரசு, அவற்றை செயலிலும் காட்ட வேண்டும். தங்களின் நிலங்களைக் காக்க தங்களுக்கு உரிமை உண்டு என்ற மக்களின் நிலைப்பாட்டை மதிக்க வேண்டும். அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படாது; என்.எல்.சி. வெளியேற்றப்படும் என்று அறிவிப்பதுடன், அவர்கள் மீது தொடுக்கப்பட்ட பொய்வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும். இவை சாத்தியமாகும் வரை என்.எல்.சி.க்கு எதிரான போராட்டங்கள் தொடரும்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்.எல்.சி.யால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
    • என்.எல்.சி.யில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    கடலூர்:

    என்.எல்.சி. நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு, தற்போது உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் தற்போது 5 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு 80 ஹெக்டேர் நிலம் கிடைத்தால், நிலக்கரி உற்பத்தி மூலம் மின்சாரத்தை சீராக உற்பத்தி செய்ய முடியும்.

    என்.எல்.சி.யால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் முழுவதுமாக உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    மேலும் வேலைவாய்ப்பில் 20 போனஸ் மதிப்பெண்கள் நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    என்.எல்.சி.யில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் தமிழர்கள். அதுபோல் நிரந்தர தொழிலாளர்களிலும் 83 சதவீதம் பேர் தமிழர்கள் தான் உள்ளனர். தமிழர்களுக்கு என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பு இல்லை என்பதில் உண்மை இல்லை.

    நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தால், பற்றாக்குறையான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை உடனடியாக ஈடு செய்ய முடியும். இந்த ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசுக்கு என்.எல்.சி. நிறுவனம் 2 ரூபாய் 30 பைசா என்ற தொகையில் கொடுக்கின்றது. அதே வேளையில் மின்சாரத்தை தமிழக அரசு, வெளிச்சந்தையில் வாங்க வேண்டும் என்றால் யூனிட்டுக்கு 10 அல்லது 12 ரூபாய் கொடுக்க வேண்டும். மேலும் என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாவதற்கு வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிதாக வாங்கப்பட்ட 95 வாகனங்களை என்.எல்.சி. அதிபர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி தொடங்கி வைத்தார்.
    • ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 47 பழைய வாகனங்கள் மாற்றப்பட்டுள்ளன.

    கடலூர்:

    என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சுரங்கப் பகுதியில் இயக்கப்பட புதிதாக வாங்கப்பட்ட 95 வாகனங்களை என்.எல்.சி. அதிபர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி, நிறுவன இயக்குனர்கள், உயர் அதி காரிகள் முன்னலையில் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    நெய்வேலியில் உள்ள 3 சுரங்கங்களில் இதுவரை பயன்பாட்டில் இருந்த பழைய வாகனங்கள் மாற்றப் பட்டு புதிதாக 47 பணியாளர் வாகனங்கள், 33 திறந்த வகை லாரிகள், 7 கேண்டீன் வாகனங்கள் மற்றும் 7 எரி பொருள் நிரப்பும் வாகனங்கள் உள்ளட்ட 95 வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.

    மேலும் மத்திய சுரங்க இயக்குனரகத்தின் சமீபத்திய உமிழ்வு விதிகளுக்கிணங்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் பல்வேறு நவீன வசதிகளுடன் இப் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. சுரங்கத்தில் பணிபுரியும் பணியாளர்கள், சுரங்க பகுதிக்கு சென்று வர பயன்படும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 47 பழைய வாகனங்கள் மாற்றப்பட்டு அவற்றுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட் டிற்கு வந்தது.

    இந்நிகழ்ச்சியில் சுரங் கங்கள் மற்றும் நித இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் சுரேஷ் சந்திரா சுமன், மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், மின் துறை இயக்குனர் வெங்கடாசலம், தலைமை அதிகாரி சந்திர சேகர் மற்றும் செயல் இயக்கு னர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • காந்தி சிலைக்கு என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டு பள்ளி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • சமூக நலனுக்காக மேற் கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் என்எல்சி முன்னணியில் இருக்கும்.

    கடலூர்:

    நெய்வேலி நகரியத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் வெகு ஜன தூய்மை இயக்கம் நடைபெற்றது. முன்னதாக, பிரதான சந்தைப் பகுதி யில் உள்ள காந்தி சிலைக்கு என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டு பள்ளி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தூய்மை இயக்க த்தை தொடங்கி வைத்தார். நிறுவன இயக்குநர்கள் சுரேஷ் சந்தி ரசுமன், சமீர் ஸ்வரூப், எம்.வெங்க டாசலம், தலைமை ஒற்றாடல் அதிகாரி எல்.சந்திரசேகர், அங்கீகரிக்கப் பட்ட தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகள், அதிகாரிகள், ஊழியர்கள், சிஐஎஸ்எப் பணியாளர்கள், ஒப் பந்தத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பல்வேறு இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், தூய்மையின் முக்கிய த்துவத்தை வலியு றுத்தும் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் என்எல்சி தலைவர் பேசியதாவது: சமூக நலனுக்காக மேற் கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் என்எல்சி முன்னணியில் இருக்கும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. நிகழாண்டு தூய் மைக்கான செயல்பாடு களை திறம்பட ஒழுங்கமை ப்பதில் என்எல்சி இந்தியா முதலிடம் வகிக்கும் என்றார்.

    • ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.
    • என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிலக்கரி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இங்கு பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நிறைவேற்றப்படாததால் இன்று (15-ந்தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    இது குறித்த சமாதான பேச்சுவார்த்தை கட லூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் (பொறுப்பு) பூமா தலைமை தாங்கினார். இதில் என்.எல்.சி. உதவி பொது மேலாளர் உமா மகேஸ்வரன், பயிற்சி துணை கலெக்டர் அபிநயா, நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது என்.எல்.சி. உயர் அதிகாரிகளிடம் பேசி இது குறித்து நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வேண்டும் என கோட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

    தங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று (சனிக்கிழமை) இரவு முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறும் போது, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.

    இன்று மாலை வரை அரசிடம் பேசி உத்தரவாதம் அளிக்காவிட்டால் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    • 35 ஜே.சி.பி. இயந்திரம் மூலம் நிலங்களை சமன் படுத்தும் பணி தொடக்கம்
    • அறுவடைக்கு இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் நெற்பயிர்கள் அழிப்பு

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க மையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இன்று காலை சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலத்தை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் இங்குள்ள விவசாய நிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் விவசாய நிலத்தை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுமார் 1500 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட உள்ளது. ஆனால் இன்று காலை சுமார் 450 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. தற்போது அங்கு பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்குகூட தயாராக இல்லாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பயிர்கள் அறுவடைக்கு பின் கால்வாய் வெட்ட வேண்டும். மேலும் கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினர்.

    ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தகூடும் என்பதால் அங்கு எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் தடுக்க நேற்று இரவு முதலே விழுப்புரம் மாவட்ட டி.ஐ.ஜீ. ஷியாவுல்ஹக் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் தலைமையிலான 600-க்கும் மேற்பட்ட போலீசார் வளையமாதேவியிலிருந்து சேத்தியாதோப்பு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நிலம் கையகப்படுத்துவதை அறிந்த விவசாய நிலத்தின் விவசாயிகள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விவசாய நிலத்திற்கு அனுமதிக்காமல் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கப்படும் பணம் உரிய முறையில் வழங்கவில்லை என்று அங்கு கூடியிருந்த விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

    சரியான முறையில் பணம் வழங்காமல் விவசாய நிலத்தை எந்தவித அறிவிப்புமின்றி காலை முதலே அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு அளிக்கின்றனர் என்று அவர்கள் கூறினர். இதற்கு அதிகாரிகள் தரப்பில் நிலம் கையகப்படுத்துவது குறித்து கடந்த மாதமே நாங்கள் அறிவித்தோம் என்று கூறினர். இதனால் என்.எல்.சி அதிகாரிகளுக்கும் பாதிக்கப்பட்டு உரிய முறையில் இழப்பீடு பணம் பெறாத விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் இங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் பீச் அடிக்கும் எந்திரம், தீயணைப்பு, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களுடன் இந்த பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் மேல்வளையமாதேவி பகுதி பெரும் பரபரப்பாக உள்ளது.

    • நில உரிமையாளர்கள் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்களை ஒப்படைக்காமல் இருந்தனர்.
    • 1,088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடிக்கு மேற்பட்ட தொகை இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புவனகிரி தாலுகா வளையமாதேவி கீழ்பாதி, வளையமாதேவி மேல்பாதி மற்றும் 4 கிராமங்களின் வழியாக பரவனாறு செல்கிறது. இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பணிக்காக பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக என்.எல்.சி இந்தியா நிறுவனத்தினரால் 6 கிராமங்களில் 304 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 273 ஹெக்டேர் நிலங்கள் என்.எல்.சி.யிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஹெக்டேர் நிலங்களுக்கு தீர்வாணை பிறப்பிக்கப்பட்டு, நில உரிமையாளர்கள் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்களை ஒப்படைக்காமல் இருந்தனர். இதனால் பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உரிமையாளர்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 2006 முதல் 2013-ம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்டிருந்த 104 ஹெக்டேர் பரப்பளவிற்குள் வரும் 382 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகை நீங்கலாக, தற்போது ரூ.10 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது.

    அதேபோல் கையகப்படுத்தப்பட்டுள்ள 83 ஹெக்டேர் பரப்பளவிற்குள் வரும் 405 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே ஏக்கருக்கு 2.6 லட்சம் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை நீங்கலாக, தற்போது ரூ.14 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 301 பேரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 77 ஹெக்டேருக்கு, ஏற்கனவே ஏக்கருக்கு ரூ.2.4 லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு ரூ.6 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. அதாவது மொத்தமாக 1,088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடிக்கு மேற்பட்ட தொகை இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் அனைத்தும் நில உரிமையாளர்களை நேரில் அழைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே என்.எல்.சி.யில் 800 மெகாவாட் மின்உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அறிந்து, கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய கலெக்டரால் விவசாயிகளிடம் பரவனாறு பகுதியில் பயிர் சாகுபடி செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்டு மாதம் முதல் 1000 மெகாவாட் மின்உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. ஏற்கனவே எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளது.

    நிலக்கரி எடுக்க போதிய இடமில்லாததே அதற்கு காரணம். அதனால் தான் தற்போது பரவனாறு மாற்றுப்பாதை திட்ட பணி நடக்கிறது. அந்த ஆற்றுக்கு மாற்றுப்பாதை அமைக்க 30 ஹெக்டேர் இடம் தேவைப்படுகிறது. இந்த இடத்திற்கான இழப்பீடு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உயரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நிலத்தை கையகப்படுத்துவது குறித்து கடந்த வாரமும், நேற்றும் (அதாவது நேற்று முன்தினம்) விவசாயிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே விவசாயிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீடு போக, கருணை தொகையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்படும் பயிர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் 16.8.2023 முதல் 26.8.2023 வரை 10 நாட்கள் நில உரிமையாளர்களிடம் ஆவணங்கள் பெற்று, கருணைத்தொகை வழங்க சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரவனாறு மாற்றுப்பணி அமைக்கும் பணியின் போது வேளாண்மைப் பயிர்கள் சேதமடைந்தால் உரிய இழப்பீட்டுத் தொகை என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்று வழங்கப்படும்.

    கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய மாவட்ட கலெக்டரால், நில உரிமையாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கப்படும் பகுதியில் பணி மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தும் கேளாமல், நில உரிமையாளர்கள் தொடர்ந்து பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதேபோன்று கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின்னரும், கடந்த 10 ஆண்டுகளாக நிலத்தை ஒப்படைக்காமல் தொடர்ந்து விவசாய பணிகள் செய்து வருகின்றனர். என்.எல்.சி. நிர்வாகமும் கருணை அடிப்படையில் விவசாயிகள் பயிர் செய்வதை கண்டு கொள்ளவில்லை. அப்போதே என்.எல்.சி. நிர்வாகம் பயிர் செய்ய விடாமல் தடுத்திருந்தால், தற்போது பிரச்சினை ஏற்பட்டிருக்காது. இருப்பினும் நில உரிமையாளர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் பல்வேறு காலகட்டங்களிலும் தீர்த்து வைத்து, அவர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    • தமிழகத்தில் மக்களாட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
    • ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, தற்போது விடியா திமுக அரசின் முதலமைச்சரானவுடன் ஒரு நிலைப்பாடு.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    என்.எல்.சி. நிறுவனம் தனது 2-ம் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அனைத்திந்திய அண்ணா ராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சியில் இருந்தவரை விவசாயிகளின் நியாயமான கோரிக்கையினை என்.எல்.சி. ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, மக்கள் விரோத விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளையும், அப்பகுதி மக்களையும் இந்த அரசு கைவிட்டு விட்டு, என்.எல்.சி-யின் நில எடுப்புக்கு காவலர்களின் உதவியுடன் துணை நிற்கிறது.

    விவசாயிகளுடைய கோரிக்கை என்னவென்றால், மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு வழங்குதல். வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை வழங்குதல். என்.எல்.சி. நிறுவன நில எடுப்புப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காலகாலமாக வேலை செய்து வரும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து என்.எல்.சி. நிறுவனம் விரைவில் முடிவினை அறிவிக்கக் கோருதல்.

    ஏற்கெனவே என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம், வீடுகளைக் கொடுத்து இடம்பெயர்ந்து சென்றவர்களுக்கு, என்.எல்.சி. நிறுவனம் இதுவரை எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றித் தரவில்லை. அந்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

    1989-க்கு பிறகு நிலம் கொடுத்தவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கவில்லை. எனவே, அப்போது முதல் இன்று வரை நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்.

    நில எடுப்புப் பகுதியில் உள்ள மக்களுக்கு சி.எஸ்.ஆர். நிதி என்று சொல்லப்படுகிற சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, எவ்வித வளர்ச்சித் திட்டங்களையோ, நல உதவித் திட்டங்களையோ செய்து தரவில்லை. எனவே, சி.எஸ்.ஆர். நிதி முழுமையாகவோ அல்லது பெரும் பகுதியோ கடலூர் மாவட்டத்திற்கு செலவிடப்பட வேண்டும் என்பது உட்பட பல நியாயமான கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் என்.எல்.சி. நிறுவனத்திடம் வைத்துள்ளனர்.

    ஆனால், இது குறித்து எந்தவிதமான நியாயமான பதிலும் அளிக்கப்படாத நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நில எடுப்புப் பகுதியில் உள்ள விவசாயிகளுடைய நம்பிக்கையை இழந்திருக்கிறது. என்.எல்.சி. நிறுவனத்தின் மீது கடுமையான கோபத்தில் விவசாயிகள் இருக்கிறார்கள். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள விடியா திமுக அமைச்சர்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, விவசாயிகளை, திமுக விவசாயிகள் மற்றும் தி முக அல்லாத விவசாயிகள் என்று இரண்டாகப் பிரித்து, திமுக அல்லாத விவசாயிகளை பழி வாங்குவதற்கு தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று செய்திகள் தெரிய வருகிறது.

    கடந்த மே மாதம் 2-ம் தேதி அன்று, அப்போதைய தலைமைச் செயலாளர் தலைமையில், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்தினர் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், புவனகிரி தொகுதியின் கழக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கலந்து கொண்டு, என்.எல்.சி. நிர்வாகம் அப்பகுதி மக்களின் கருத்தை கேட்டுத்தான் நில எடுப்பு செய்யப்பட வேண்டும் என்று உறுதிபட எடுத்துரைத்தார். சட்டமன்ற உறுப்பினரின் கடுமையான எதிர்ப்பை ஏற்றுக்கொண்ட அப்போதைய தலைமைச் செயலாளர், விரைவில் இதேபோல் மற்றொரு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெறும் என்றும், அதுவரை எந்தவிதமான நில எடுப்புப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் என்.எல்.சி. நிர்வாகத்தை பணித்தார். ஆனால், தலைமைச் செயலாளர் மாறியவுடன் என்.எல்.சி. நிர்வாகம் தன்னிச்சையாக இன்று நில எடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்த விடியா திமுக அரசு துணை நின்றுள்ளது.

    ஏற்கெனவே, கடந்த 10.3.2023 அன்று என்.எல்.சி. நிர்வாகம் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டபோது, கழக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் உட்பட நூற்றுக்கணக்கான கழகத் தொண்டர்கள் என்.எல்.சி-யின் நில எடுப்பு நடவடிக்கையினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை குறித்த என்.எல்.சி. நிறுவனத்துடன் விவசாயிகளின் பேச்சுவார்த்தை முழுமையடையாத நிலையில், புவனகிரி தொகுதியில், வளையமாதேவி பகுதியில் கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த நேற்று காலை திடீரென்று 1000-க்கும் மேற்பட்ட காவலர்களின் துணையுடன் என்.எல்.சி. நிறுவனம், நெல் பயிரிட்ட நிலத்தில் இராட்சத இயந்திரங்களை இறக்கி வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் விவசாயிகள் விரோதப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

    'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலார் வாழ்ந்த மண்ணில் விளைந்து நிற்கும் நெற்பயிர்களை அழிப்பதற்கு இந்த விடியா திமுக அரசுக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை.

    கடலூர் மாவட்டத்தில், நில எடுப்பு என்ற பெயரில் விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்காமல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களை நிறைவேற்றாமல், தற்போது விளை நிலங்களில் உள்ள நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டுகின்ற என்.எல்.சி. நிறுவனத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்தில் மக்களாட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான காவல் துறையினர் துணையுடன் மக்களை முடக்கி, அவர்களை மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கி, விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தின் செயலுக்கு துணை போகின்ற விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    தற்போதைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, புவனகிரி தொகுதிக்குட்பட்ட 37 கிராமங்களில் சுமார் 13,500 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளினால் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து 3.1.2019 அன்று சட்டப்பேரவை விதி எண்.55-ன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். தற்போது முதலமைச்சராக ஆனவுடன், காவல் துறையின் உதவியுடன் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிலங்களை கையகப்படுத்துகின்றனர். ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, தற்போது விடியா திமுக அரசின் முதலமைச்சரானவுடன் ஒரு நிலைப்பாடு. இதுதான் திராவிட மாடல் அரசு.

    விவசாயிகளின் கோரிக்கையான மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு; சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு; வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிறுவனத்தை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
    • வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

    சேத்தியாத்தோப்பு:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்கப்பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலங்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் இழப்பீடு வழங்கி உள்ளது. இந்த இழப்பீடு தொகையை முழுமையாக வழங்கவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

    இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இதில் என்.எல்.சி. நிர்வாகம் கூறியதை ஒரு தரப்பு ஏற்றுக்கொண்டது. மற்றொரு தரப்பு மறுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் என்.எல்.சி. 2-ம் சுரங்க விரிவாக்கப்பணியின் ஒரு பகுதியாக நேற்று காலை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்க வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியது. சுமார் 1½ கிலோ மீட்டர் நீளத்துக்கு வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    விரிவாக்கம் செய்யப்படும் வாய்க்கால் வழியாக என்.எல்.சி. சுரங்க நீர் பரவனாற்றுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக என்.எல்.சி. நிறுவனத்துக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாய்க்கால் வெட்டும் பணி நடந்து வருகிறது.

    தற்போது அந்த பகுதியில் விவசாயிகள் நெற்பயிரிட்டுள்ளனர். பச்சை பசேலென்று செழித்து வளர்ந்துள்ள நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டுவதை அறிந்த விவசாயிகள் வேதனை அடைந்தனர். அவர்கள் வாய்க்கால் வெட்டும் பணியை தடுக்க முயன்றனர்.

    ஆனால், 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் விவசாயிகள் அந்த பணியை தடுக்க முடியவில்லை.

    விளை நிலங்களில் நெற்பயிர்களை அழித்து வருவதை கண்டித்து சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், என்.எல்.சி.க்கு இடம் கையகப்படுத்துவதை எதிர்த்தும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

    பண்ருட்டி, விருத்தாசலம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 17 பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு ஒரு சில பஸ்கள் இயக்கப்படாமல் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை முதல் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியது.

    விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வளையமாதேவி கிராமத்தில் நேற்று 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    போராட்டம் தீவிரம் அடைய கூடும் என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சூப்பிரண்டு தலைமையில் 750 போலீசார் இன்று கடலூர் வந்தனர். அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குறிப்பாக சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து களமிறங்கிப் போராடும்.
    • என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி. நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள் விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

    என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து பா.ம.க. ஒருபோதும் பின்வாங்காது. ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து களமிறங்கிப் போராடும்.

    அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்திற்கு நானே தலைமையேற்கிறேன். இதில் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போராட்டத்தின் போது தென்னை மரக்கன்று, கரும்பு பயிர், நெற்பயிர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர். மேலும் அங்கு இருந்த பேரி கார்டுகளை போட்டு தடுத்தனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், என்.எல்.சி. நிறுவனம் மற்றும் தமிழக அரசை கண்டித்து புதுச்சேரி- கடலூர் எல்லையான முள்ளோடை நுழைவு வாயிலில் புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி, துணை அமைப்பாளர் வடிவேலு தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் போது தென்னை மரக்கன்று, கரும்பு பயிர், நெற்பயிர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர். மேலும் அங்கு இருந்த பேரி கார்டுகளை போட்டு தடுத்தனர்.

    தகவல் அறிந்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்ததால் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையே சிலர் தாங்கள் மறைத்து வைத்து இருந்த லாரி டயரை எடுத்து வந்து போராட்டம் நடந்த இடத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி சாலையில் போட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக பா.ம.க.வினர் 28 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • என்.எல்.சி.யில் 10-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் உள்ளன.
    • ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெய்வேலி:

    பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் நேற்று மாலை நெய்வேலி நகரத்தில் உள்ள நேரு சிலை அருகில் இருந்து என்.எல்.சி. நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் நெய்வேலி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினா். பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் நேரு சிலை அருகில் அமர்ந்து கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தொழிற்சங்கத்தினர் கூறும்போது நேற்று இரவு 8 மணிக்குள் என்.எல்.சி. நிர்வாகம் நல்ல பதிலை கூறினால் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வோம். இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றனர்.

    ஆனால் இரவு 8 மணியை கடந்தும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து எந்த தகவலும் வராததால் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்தது. இதனால் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

    இது குறித்து என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் சேகா் கூறும்போது, தொழிற் சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற என்.எல்.சி. நிர்வாகம் முன்வந்தால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற தொழிற்சங்கம் முடிவு செய்யும் என்றார்.

    இதையடுத்து என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் அந்தோணிராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. என்.எல்.சி.யில் 10-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் உள்ளன. ஆனால், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணிக்குள் முடிவு தெரியாவிட்டால் காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போலீசார், மாவட்ட நிர்வாகம், என்.எல்.சி. நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    வேலைநிறுத்தம் தொடர்ந்தால் என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    ×