என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"

    • பெட்ரோல் பங்க் நன்கொடையாக கொடுக்கப்பட்டது.
    • வீடியோ வைரலாகி சமூக வலைத்தளவாசிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    திருமணத்திற்காக வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என சட்டம் உள்ளது. இருப்பினும் ஆங்காங்கே வரதட்சணை கொடுமையால் புதுப்பெண்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகள் குடும்பத்தினரால் மணமகனுக்கு பெட்டி, பெட்டியாக வரதட்சணைகள் வழங்கப்பட்டது. குண்டூசி முதல் ஏ.சி. வரை சீர்வரிசைகளும், 1 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி, 210 பிகா நிலம், ரூ.1½ கோடி ரொக்கம் மட்டுமின்றி பெட்ரோல் பங்க் நன்கொடையாக கொடுக்கப்பட்டது.

    வட இந்தியாவில் மார்வாரி மற்றும் ஜாட் கலாசாரத்தில் திருமண சடங்கின்போது பரிசுகள் வழங்குவது இயல்புதான் என்றாலும் வரதட்சணையாக ரூ.21 கோடி மதிப்பிலான பொருட்களை வாரிக் கொடுத்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி சமூக வலைத்தளவாசிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
    • வீடியோவை பார்ப்பவர்களுக்கு, தொழில்நுட்பத்தின் அபாயங்கள் தொடர்பான கவலை எழுகிறது.

    உலகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் சில நன்மைகளும், சில தீமைகளும் நடைபெறத்தான் செய்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் கொடி கட்டி பறக்கும் சீனா, ரோபோவைக்கொண்டு பல ஆச்சரியமான கண்டுபிடிப்புகளை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தில் ரோபோவை உருவாக்குபவருக்கு அந்த ரோபோவால் ஏற்படும் பிரச்சனை தான் கதை.

    அதைப்போலத்தான் சீனாவிலும் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஒரு தொழிற்சாலையில் மனித உருவ ரோபோட்டை உருவாக்கும் பணியில் இருவர் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ரோபோ செயலிழந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்குகிறது. இதனால் அச்சமடைந்தவர்கள் அங்கிருந்து சிறிது தூரம் ஓடி செல்கின்றனர். பின்பு, திரும்பி வந்து ரோபோவை பழைய நிலைமைக்கு கொண்டுவருகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு, தொழில்நுட்பத்தின் அபாயங்கள் தொடர்பான கவலை எழுகிறது. மேலும் பேசுபொருளாகி உள்ளது.



    • ரீல்ஸ் மோகத்தால் ஆடிப்பாடி எதிரில் இருப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு விரும்பத்தகாத செயல்களை புரிந்து வருகின்றனர்.
    • நெல்லையப்பர் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    சமீப காலமாக இளைஞர்களும், இளம்பெண்களும் சமூக வலைதளங்களால் தங்களது எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர். தனது நண்பர்கள் உள்ளிட்டோரிடம் அதிகமான லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் ஆபத்தை உணராமல் வீடியோ எடுக்கச்சென்று உயிரினை இழப்பதும், ஆபாச வீடியோக்களை பதிவு செய்து பொது மக்களின் கண்டனங்களை பெறுவதோடு போலீசாரின் நடவடிக்கைக்கும் உள்ளாகி தங்களது எதிர்காலத்தை இழந்து வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் சிறுவர்-சிறுமிகளும் இன்ஸ்டா மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு ரீல்ஸ் செய்வதற்கு அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் இடம், பொருள் அறியாமல் அனைத்து இடங்களிலும் ரீல்ஸ் மோகத்தால் ஆடிப்பாடி எதிரில் இருப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு விரும்பத்தகாத செயல்களை புரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்புள்ள கோவில் வளாகத்தில் சிறுவர்-சிறுமி ஜோடி ஒன்று தக்லைப் படத்தின் புதிய பாடல் ஒன்றுக்கு முகம் சுளிக்கும் வகையில் ஆட்டம் போட்டு அதனை ரீல்ஸ் ஆக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

    ஹயகிரீவன் என்பவரது இன்ஸ்டா பக்கமான விஜே ஹயாஸ் என்ற பக்கத்திலும், அதே போல் சாக்கோ 36 என்ற இன்ஸ்டா பக்கத்திலும் நடிகர்கள் கமல்ஹாசன்-சிம்பு ஆகியோர் ஆடும் அந்த பாடலுக்கு சிறுவர்-சிறுமி 2 பேரும் சேர்ந்து ஆடிய அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

    பாண்டிய நாட்டின் பெருமைமிகு சிவ தலமான நெல்லையப்பர் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு தனித்தனி ராஜ கோபுரங்களுடன் கூடிய தனித்தனி சன்னதிகள் அமையப் பெற்றுள்ளது.

    கோவிலில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்து வருவதுடன் 100-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் கொண்டு கண்காணிக்க கூடிய பணி நடந்து வருகிறது.

    அப்படியிருக்க, சிறுவர்-சிறுமி இருவரும் ரீல்ஸ் நடனமாடியது பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்ஸ்டா மோகத்தில் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் தற்போது நெல்லையப்பர் கோவிலிலும் அந்த சம்பவம் நடந்திருப்பது பக்தர்களிடத்தில் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்காலத்தில் இது போன்ற செயல்கள் நடக்காது என சிவனடியார்கள் கூறுகின்றனர்.

    • பா.ஜ.க.வினர் சிலர் முதல்-மந்திரி சித்தராமையா பேசிக்கொண்டிருந்தபோது கருப்பு கொடி காட்டினர்.
    • வீடியோ வைரலாகி விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    கர்நாடக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக விலைவாசி உயர்ந்து வருகிறது. சமுதாயத்தை உடைக்கும் வேலையை இந்த பா.ஜ.க. செய்கிறது. மக்களுக்கு துரோகம் இழைக்கும் பணியை தவிர மத்திய பா.ஜனதா அரசு வேறு என்ன செய்கிறது?. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சங்பரிவார் அமைப்பினர் என்ன செய்தனர்?.

    காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 3 பேர் பலியாயினர். இது மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு இல்லையா? சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஒரு ராணுவ வீரர் இல்லை, ஒரு போலீஸ்காரர் இல்லை. இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு குறித்து கேள்வி எழுப்பக்கூடாதா?. நாடு சுதந்திரம் அடைந்து 51 ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது தேசிய கொடி ஏற்றப்படவில்லை.

    இதனால் பா.ஜ.க.வினருக்கு வெட்கம் ஏற்படவில்லையா?. சுதந்திர போராட்டம் முதல் நவீன இந்தியா வரை இதன் வளர்ச்சியில் பா.ஜ.க.வின் பங்கு என்ன?. வெட்கம் இல்லாமல் தேசபக்தி குறித்து அவர்கள் பேசுகிறார்கள். இந்தியர்களிடையே பிரிவினை ஏற்படுத்தியதை தவிர பா.ஜ.க. வேறு என்ன செய்தது?. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பணக்காரர்களுக்கு 32 சதவீத வரி விதிக்கப்பட்டது.

    ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிரான மத்திய ஆட்சி நிர்வாகத்தை நாங்கள் எதிர்க்கக்கூடாதா?. இந்தியர்களை நிரந்தர பொய்களில் இன்னும் எத்தனை ஆண்டுகள் மூழ்கடிப்பீர்கள். மக்களுக்கு உண்மையை சொல்ல பா.ஜனதாவினர் முன்வர வேண்டும். நாட்டிற்காக காங்கிரஸ் தலைவர்கள் உயிா்த்தியாகம் செய்தனர். அதனால் போராட்டம் என்பது காங்கிரசுக்கு புதிது அல்ல.

    ஆங்கிலேயர்களை விரட்டி யடித்த எங்களுக்கு உங்களை (பா.ஜ.க.வை) எதிர்க்கும் சக்தி உள்ளது. நாங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி அதை அப்படியே விவசாயிகளுக்கு வழங்குகிறோம். பஸ் கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் உள்ளிட்டவை மற்ற மாநிலங்களை விட கர்நாடகத்தில் குறைவாகத்தான் உள்ளது. பா.ஜ.க.வின் பொய் பிரசாரத்தை கண்டு நான் பயப்பட மாட்டேன்.

    மத்திய அரசு அரிசி, சமையல் எண்ணெய், தங்கம், வெள்ளி, உரம், பருப்புகள், டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்துள்ளது. இந்த மத்திய அரசு எதை விட்டுவைத்து இருக்கிறது?. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்துவது என்பது நாட்டு மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்த பா.ஜ.க.வினர் சிலர் முதல்-மந்திரி சித்தராமையா பேசிக்கொண்டிருந்தபோது கருப்பு கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த முதல்-மந்திரி சித்தராமையா ஏ.எஸ்.பி.யை அழைத்து, நீங்க என்ன பண்றீங்க? என கேள்வி கேட்டு கை ஓங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    காவல்துறை அதிகாரியை அடிக்க கையை உயர்த்துவது உங்கள் பதவிக்கோ கண்ணியத்திற்கோ எந்தப் பெருமையையும் தராது. உங்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் ஒரு அரசு அதிகாரி 60 வயது வரை பணியாற்றுகிறார். அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உங்கள் தவறான நடத்தையைத் திருத்திக் கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 



    • தொடர்ந்து 2 வாலிபர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கினார்.
    • இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

    பெங்களூரு:

    மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா விமானப்படை தளத்தில் விங் கமாண்டர் ஆக பணியாற்றி வருபவர் ஷிலாத்தியா போஸ். இவரது மனைவி மதுமிதா தத்தா. இவர் பெங்களூரு ராமன் நகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டி.ஆர்.டி.ஓ) சொந்தமான குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஷிலாத்தியா போஸ் பெங்களூருவில் உள்ள தனது மனைவியை பார்க்க வந்திருந்தார். நேற்று காலை 6 மணியளவில் போஸ் உடல் நிலை சரியில்லாத தனது தந்தையை பார்ப்பதற்காக கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டி பெங்களூரு விமான நிலையத்திற்கு மனைவியுடன் காரில் புறப்பட்டார். காரை மதுமிதா ஓட்டினார்.

    விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது பழைய மெட்ராஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகம் முன்பு மோட்டார்சைக்கிள் ஒன்று காரை முந்தி சென்றது.

    அப்போது கார், மோட்டார்சைக்கிள் மீது உரசியது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் திரும்ப வந்து காரை வழிமறித்தனர். பின்னர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி காரில் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த போஸை கையால் தாக்கினர்.


    மேலும் அருகில் கிடந்த கல்லால் தலையில் பலமாக தாக்கப்பட்டார். வாலிபர்கள் தாக்கியதில் சிலாத்தியா போசின் தலை, மூக்கில் காயம் ஏற்பட்டது.

    இந்த விவகாரம் குறித்து போஸ் கர்நாடகம் ஏன் இப்படி ஆனது. என்னால் நம்பவே முடியவில்லை. கடவுள் நமக்கு உதவுவார். தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய வேண்டும்.

    போலீசார் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

    இதுகுறித்து போஸின் மனைவி மதுமிதா தத்தா பையப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரில் வாலிபர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளின் பதிவு எண்ணை குறிப்பிட்டு இருந்தார்.

    விசாரணையில் போஸ் மீது தாக்குதல் நடத்தியவர் தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்ப வல்லுநராக பணியாற்றும் என்ஜினீயர் விகாஸ்குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.


    இந்த நிலையில் விமானப்படை அதிகாரி ஷிலாத்தியா போஸ் தொழில்நுட்ப வல்லுநர் விகாஸ்குமாரை கொடூரமாக தாக்கிய புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவில் போஸ் விகாஸ்குமாரின் சட்டை காலரை பிடித்து கையை கொண்டு பல முறை குத்தியதும், விகாஸ்குமார் கீழே விழுந்த பிறகும் நிற்காமல் கால்களை கொண்டு உதைத்த காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    அதோடு இல்லாமல் விகாஸ்சின் மோட்டார்சைக்கிளின் சாவியையும் பறித்து எறிந்தார். தொடர்ந்து 2 வாலிபர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கினார். உள்ளூர் மக்கள் சண்டையை விலக்கி விட போராடும் காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தன.

    இதையடுத்து விமானப்படை அதிகாரி போஸ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பையப்பனஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து பெங்களூரு கிழக்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் கூறுகையில், விமானப்படை விங் கமாண்டர் ஷிலாத்தியா போஸ் மீது மொழி பிரச்சினை தொடர்பாக தாக்குதல் நடைபெறவில்லை.

    காரும், மோட்டார்சைக்கிளும் உரசியதால் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது என தெரிவித்தார்.

    ஷிலாத்தியா போஸ், தொழில்நுட்ப வல்லுநர் விகாஸ்குமாரை கொடூரமாக தாக்கி விரட்டியடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சதீசுக்கு சொந்தமான ஜே.பி.நகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • காகசியன் ஷெப்பர்டு இன நாய் வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் அதிகாரிகளுக்கு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் சதீஸ்(வயது 51). தொழில் அதிபரான இவர், விலை உயர்ந்த நாய்களை வாங்கி வளர்ப்பது வழக்கம். மேலும் அந்த நாய்களை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்று வந்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு 'காகசியன் ஷெப்பர்டு' வகையை சேர்ந்த நாய் ஒன்றை வாங்கியிருந்தார்.

    அந்த நாயின் விலை ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த வளர்ப்பு நாயுடன் சதீஸ் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் ரூ.50 கோடி விலை கொடுத்து இந்த நாயை வாங்கியதாக கூறினார். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியது.

    இதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், தொழில் அதிபர் சதீஸ் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று சதீசுக்கு சொந்தமான ஜே.பி.நகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். காலை முதல் மாலை வரை நடந்த இந்த சோதனையில் காகசியன் ஷெப்பர்டு இன நாய் வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் அதிகாரிகளுக்கு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது விலை உயர்ந்த நாயை வாங்கியது உண்மை. ஆனால் அதற்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை.

    இதையடுத்து சதீஸ் ரூ.50 கோடி கொடுத்து நாய் வாங்கியது பொய்யான தகவல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் தொழில் அதிபர் சதீசுக்கு இந்த விலை உயர்ந்த நாய் வாங்க பணம் எப்படி வந்தது என்பது பற்றிய ஆவணங்கள் அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சதீசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



    • உணவுகளில் இருக்கும் கலோரிகள் குறித்து யாரும் யோசிப்பது கிடையாது.
    • உணவு மெனு குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

    சமீபகாலமாக திருமணங்களின் போது பலரும் வித்தியாசமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பந்தலில் தொடங்கி அழைப்பிதழ், மணமக்களின் ஆடைகள், ஊர்வலம், உணவு வகைகள் என ஒவ்வொன்றிலும் தனித்துவத்தை காட்டுகின்றனர். குறிப்பாக சைவ உணவோ அல்லது அசைவ உணவோ விருந்தினர்கள் ருசிப்பதோடு மட்டுமின்றி வியக்கும் வகையிலும் ஏராளமான வகைகளில் தயார் செய்கின்றனர். ஆனால் அந்த உணவுகளில் இருக்கும் கலோரிகள் குறித்து யாரும் யோசிப்பது கிடையாது.

    இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தின் போது பரிமாறப்பட்ட உணவுகளின் கலோரிகள் குறித்த விபரங்களை விருந்தினர்களுக்கு தெரிவித்து ஆச்சரியப்பட வைத்துள்ளனர். இதுதொடர்பாக உணவு மெனு குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

    அந்த மெனுவில், உங்களை சவுகரியமாக வைத்துக்கொண்டு உணவை வீணாக்காமல் அனுபவியுங்கள் என்று குறிப்பிட்டு உணவுகளின் கலோரிகள் குறித்த விபரங்களை கூறியுள்ளனர். அதில், தண்ணீர்-0 சதவீதம் கலோரி, சாலட்-10 சதவீதம் என மொத்த உணவும் 1,200 கிலோ கலோரிகள் இருந்தன. விருந்தினர்கள் தங்களுக்கு பிடித்த உணவை சுவைத்த பிறகு எவ்வளவு நேரம் நடனமாட வேண்டும் என்பதை கலோரி பட்டியல் பயன்படுத்தி தீர்மானிக்கலாம் என வேடிக்கையான குறிப்பும் அதில் இருந்தது.

    • வாடிக்கையாளர்கள் தங்கள் உடல் அளவுக்கேற்ற கம்பிகள் வழியாக செல்ல முடிகிறது.
    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

    பிரபல உணவகங்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி அறிவிப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் தாய்லாந்தில் உள்ள ஒரு உணவகம் ஒல்லியாக இருப்பவர்களுக்கு தள்ளுபடி வழங்குவது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு சியாங் மாயி பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், வாடிக்கையாளர்களின் உடல் அளவை அடிப்படையாக கொண்டு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதாவது ஓட்டலில் ஒரு பகுதியில் 5 வகையான உலோக கம்பிகள் உள்ளன. ஒவ்வொரு கம்பிகளுக்கு இடையேயும் குறிப்பிட்ட இடைவெளிகள் உள்ளன.

    வாடிக்கையாளர்கள் தங்கள் உடல் அளவுக்கேற்ற கம்பிகள் வழியாக செல்ல முடிகிறது. அதில், ஒவ்வொரு உடல் அளவுக்கு ஏற்ற வகையில் 5 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடிகள் உள்ளன. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

    ஒரு பயனர், இது மிகவும் அபத்தமானது, அவமரியாதைக்குரியது என பதிவிட்டார். மற்றொரு பயனர், ஆசியாவின் உணவு முறை மற்றும் உடல் கலாச்சாரம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது என பதிவிட்டார்.



    • புகைப்படம் இணையத்தில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.
    • மணிக்கூண்டு செயல்படாமல் போனதற்கு திட்ட இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

    பீகாரில் ஸ்மாா்ட் சிட்டி திட்டதின் கீழ் புதிதாக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அங்குள்ள ஷெரீப் நகரில் கான்கிரீட் மணிக்கூண்டு ஒன்று சுமார் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த விழாவில் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் அங்கு சென்று இந்த மணிக்கூண்டை தொடங்கி வைத்தார்.

    இந்தநிலையில் அந்த மணிக்கூண்டில் இருந்த கடிகாரம் செயல்படாமல் நின்றது. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதில் 'ஒருநாள் கூத்துக்கு ரூ.40 லட்சம் செலவு!' என தலைப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மணிக்கூண்டு செயல்படாமல் போனதற்கு திட்ட இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். 'அதாவது அந்த நள்ளிரவில் மணிக்கூண்டுக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து கேபிள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுவிட்டதாகவும், மணிக்கூண்டு கட்டுவதற்கு ஆன செலவு இதுவரை கணக்கிடப்படவில்லை' எனவும் கூறினார். இதனை அடுத்து பயனர்கள் 'ஏதோ! திறந்த ஒரேநாளில் திருட்டு நடந்துவிட்டதா? காதில் பூ சுற்றுகிறார்களா?' என வலைத்தளவாசிகள் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.



    • வாய்தகராறு முற்றி ஒருவரையொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.
    • இவர்களது சண்டையை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் மாமியார்-மருமகள் ஆகியோர் சண்டையிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    லாடவரம் மதுரா கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர்கள் சக்கரவர்த்தி- சின்னபாப்பா தம்பதி. இவர்களது 2 மகன்களுக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சின்னபாப்பா தனது விளைநிலத்தில் அமர்ந்திருந்த நிலையில், மூத்த மருமகள் ராஜேஸ்வரியுடன் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாய்தகராறு முற்றி ஒருவரையொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.

    இவர்களது சண்டையை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். 

    • மோட்டார் சைக்கிள்களுடன் போட்டிபோட்டு சாலையில் கட்டில் காரை ஓட்டுகிறார்.
    • சில இடங்களில் மற்ற வாகனங்களை முந்தியும் செல்கிறார்.

    ரோட்டில் மோட்டார் சைக்கிள்களுடன் போட்டி போட்டு ஓடும் கட்டில்மெத்தை காரின் வீடியோ சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.

    மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தை சேர்ந்த நவாப் ஷேக்கில், என்பவர்தான் கட்டில் மெத்தையை காராக மாற்றி அசத்தி இருக்கிறார். அவர் ரூ.2 லட்சம் செலவு செய்து காரின் உதிரி பாகங்களை கட்டில் மெத்தையுடன் இணைத்து தனது கனவு காரை வடிவமைத்து உள்ளார்.

    சுமார் ஒரு ஆண்டு கால முயற்சியில் அவர் இதை மாற்றி அமைத்துவிட்டு தெருவில் ஓட்டி வந்தபோது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் சாலையில் வாகனத்தை மறித்த போலீசார், அதற்கான உரிமங்கள், பதிப்புரிமையை கேட்டதால் சிக்கலை சந்தித்தாராம்.

    வீடியோவில் அவர் மோட்டார் சைக்கிள்களுடன் போட்டிபோட்டு சாலையில் கட்டில் காரை ஓட்டுகிறார். சில இடங்களில் மற்ற வாகனங்களை முந்தியும் செல்கிறார். எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ 2 நாட்களில் 2½ லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. வாகன பிரியர்கள் மற்றும் வலைத்தளவாசிகள் மத்தியில் அவரின் புகழ் அதிகரித்து வருகிறது.



    • சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு சிங்கம் விரட்டப்பட்டது.
    • யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ஒருவரின் வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக வந்த சிங்கத்தால் கிராம மக்கள் தங்களின் தூக்கத்தை தொலைத்த சம்பவம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது.

    குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் கோவாயா கிராமத்தை சேர்ந்தவர் ராம்பாய். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களின் வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக சிங்கம் ஒன்று நுழைந்துள்ளது. சமையறையின் சுவரின் மேல் அமர்ந்து கொண்டு இருந்த சிங்கத்தை பார்த்த குடும்பத்தினர் அலறி அடித்து ஓடினர். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து சிங்கத்தை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு சிங்கம் விரட்டப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ×