என் மலர்
நீங்கள் தேடியது "மீனவர்கள்"
- திடீர் சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நடுக்குப்பம் பகுதியில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் சீற்றத்தால் சேதம்
சேதராப்பட்டு.
மாண்டஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில் கோட்டக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் சின்னமுதலியார் சாவடி, தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம் உள்ளிட்ட 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 3-ம் நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் நாட்டு படகுகள் மேடான பாதுகாப்பாக இடங்களில் கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நடுக்குப்பம் பகுதியில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் சீற்றத்தால் சேதம் அடைந்தது. இதற்கிடையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் புதுவை பிள்ளைச்சாவடி மீனவ பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீனவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். பொம்மையார் பாளையத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு நடத்திய கலெக்டர் மோகன் 24 மணி நேரமும் பேரிடர் மீட்பு குழு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் புதுவை பகுதியான பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் ஊருக்குள் வந்த கடல் நீரால் அங்கு வசிக்கும் மீனவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
ராட்சத அலையால் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததையடுத்து ஊர் மக்கள் மற்றும் மீனவ குப்பத்து மக்கள் இணைந்து புதுவை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுவைப் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்தால் மட்டுமே கடல் சீற்றத்திலிருந்து கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களை காப்பாற்ற முடியும் என கோரிக்கை வைத்தனர்.
காலாப்பட்டு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் மறியல் கைவிடப்பட்டது. இந்த திடீர் சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- முக துவார மணல் திட்டுகளை முறையாக தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
- 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திடீரென இன்று கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, ராஜாமடம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு மீன்பிடி தொழிலே பிரதான தொழிலாகும்.
இந்த கிராமத்தில் 210-க்கும் மேற்பட்ட பைபர், நாட்டு படகுகள் உள்ளது.
கடற்கரையில் இருந்து கீழத்தோட்டம் கிராமத்திற்குள் படகுகள் வந்து செல்வதற்கான ஒரே வழி இந்த முக துவாரத்தில் உள்ள வாய்க்கால்கள் மட்டும் தான்.இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசின் உத்தரவின் பெயரில், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூலம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் கடற்கரைக்குள் நீர்புகும் வாய்க்காலின் முக துவாரங்களை அடைத்து கிடக்கும் மணல்களை தூர்வாரும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்றன.
இந்த பணிகள் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த முக துவார மணல் திட்டுகளை முறையாக தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊர் பஞ்சாயத்தா ர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திடீரென இன்று கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினைக்கு மீன்வளத்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் மீண்டும் போராட்டம் நடை பெறும் என்று கூறி அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
- வகுக்கப்படும் திட்டத்தை இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மீனவர்கள் நலனுக்கான இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் வரும் 29-ந் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடந்து கைது செய்யப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது, அபராதம் விதிக்கப்படுவது உள்ளிட்ட அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும், அதில் தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்பதும் வரவேற்கத்தக்கவை.
கடைசியாக 2022-ம் ஆண்டில் இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில், இரு ஆண்டுகளுக்குப்பின் இந்தக் கூட்டம் நடைபெறுவது மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் கூடிக் கலையும் கூட்டமாக அமைந்து விடக் கூடாது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியதாக உள்ள நிலையில், அந்த எதார்த்தத்தை உணர்ந்து கொண்டு இரு தரப்பு மீனவர்களும் சிக்கலின்றி மீன் பிடிக்க என்ன வழி? என்பதை இரு நாட்டு அதிகாரிகளும் ஆராய வேண்டும்.
மீனவர் சிக்கலுக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்தது தான் என்றாலும் கூட, இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகு முறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில் பேச்சுகளை நடத்துவது என்பது குறித்த தெளிவானத் திட்டம் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு வகுக்கப்படும் திட்டத்தை இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மூன்று விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆன்மிக மையம் அமைக்கவோ, கலாச்சார மையம் அமைக்கவோ பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
- எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவிடந்தைக்கு அருகில் 233 ஏக்கர் நிலப்பரப்பில் ஆன்மிகம் மற்றும் கலாச்சார மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்திற்கு மீனவ மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தும் கூட அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆன்மிக மையம் அமைக்க இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலாத்துறையும் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
ஆன்மிக மையம் அமைக்கவோ, கலாச்சார மையம் அமைக்கவோ பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் பூர்வகுடி மக்களான மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு, அந்த மையங்களை அமைக்க வேண்டுமா? என்பது தான் எனது வினா.
ஆன்மிக மற்றும் கலாச்சார மையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தை தான் மீனவர்கள் அவர்களின் படகுகளை நிறுத்துவது, வலைகள் மற்றும் மீன்களை காய வைப்பது போன்றவற்றுக்காக பயன்படுத்தி வந்தனர். இப்போது அங்கு ஆன்மிக மையம் அமைக்கப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
திருவிடந்தையில் ஆன்மிக மற்றும் கலாச்சார மையம் அமைக்கும் திட்டம் மீனவர்களை மட்டுமின்றி, பேரிடர்களுக்கும் வழி வகுக்கும். ஆன்மிக மையம் அமைக்கப்படுவதற்கு அருகில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் இயற்கையான மணல் மேடுகள் உள்ளன.
அவை சுனாமி அலைகளைக் கூட தடுக்கும் வல்லமை பெற்றவை. இந்தத் திட்டத்திற்காக அவை அகற்றப்படும் என்று கூறப்படும் நிலையில், சுனாமியிலிருந்து திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு கிடைக்காது. அந்தப் பகுதி தான் நிலத்தடி நீர்வளத்தை சேமிக்கும் தளங்களைக் கொண்டிருக்கிறது. இயற்கையையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து விட்டு ஆன்மிக , கலாச்சார மையம் அமைக்க வேண்டுமா? என தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.
ஆன்மிக, கலாச்சார மையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதில் காட்டப்பட்ட அசாத்திய வேகம் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான மாநில அளவிலான சுற்றுச்சூழல் அனுமதி ஒரே நாளில் வழங்கப்பட்டதாகவும், அதுகுறித்த கூட்டத்தில் மீனவ சமுதாய பிரதிநிதிகள் ஒருவர் கூட அழைக்கப்படவில்லை என்றும் மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது; உள்ளூர் மக்களால் வரவேற்கப்படும் வகையில் இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளையும் பெறாத ஆன்மிக, கலாச்சார மையத்தை திருவிடந்தை பகுதியில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
- உப்பாற்று ஓடையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சகதியாக காட்சியளிக்கிறது.
தூத்துக்குடி:
தென் மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓட்டபிடாரத்தில் 20 மில்லி மீட்டரும், சூரன்குடியில் 18 மில்லி மீட்டரும், வைப்பாரில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் தூத்துக்குடி, கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், காடல்குடி, மணியாச்சி, வேடநத்தம், கீழ வைப்பார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
தொடர்மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. உப்பாற்று ஓடையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சகதியாக காட்சியளிக்கிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் மழை பெய்தது. கொடுமுடியாறு பகுதிகளில் 5 மில்லி மீட்டர் மழை பதிவானது. 55.50 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் இன்று 40 அடியாக உள்ளது. இதேபோல் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 88.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 88.35 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடியாகவும் உயர்ந்துள்ளது.
நெல்லை, பாளை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்தது.
கனமழை, புயல் எச்சரிக்கையை முன்னிட்டு மீனவர்கள் 29-ந் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3 வது நாளாக விசைபடகு, நாட்டு படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதேபோல நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூந்தங்குடி, உவரி, கூடுதாழை உள்ளிட்ட மீனவ பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
- தொடர் மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்தன.
- மீன் பிடிக்கச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
மண்டபம்:
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால் பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. பாம்பன் ரெயில் பாலத்தில் ராட்சத அலைகள் மோதின. பாதுகாப்பாக படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதிலும் கடலில் நங்கூரமிட்டு இருந்த 30-க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதம் அடைந்தன.
இதற்கிடையே நேற்றும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தீர்த்தண்டதானம், வாலி நோக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 12 செ.மீ. மழை பதிவானது. பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதி மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது. புயல் எதிரொலியாக ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது.
கடற்கரையோரமாக அமைந்துள்ள சேராங் கோட்டை, தோப்புக்காடு மற்றும் பாம்பன் கடற்கரையை ஒட்டியுள்ள மீனவர்கள் குடியிருப்புகளிலும் கடல் நீர் புகுந்தது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத் தப்பட்டனர். மண்டபம் மீன்பிடி இறங்குதளம் கடல் நீர்மட்டம் உயர்ந்ததால் மூழ்கியது.
ராமேசுவரம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கலச்சிக்காய் முடுக்கு தெருவில் சுப்புலெட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேபோல் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்தன.
இந்நிலையில் நேற்று மாலை மண்டபத்தில் பெய்த கனமழையால் ராமேசுவரம் -ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வேதாளை அருகே நாகநாதர் கோவில் பகுதியில் உள்ள பழமையான அரசமரம் மரம் முறிந்து விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மரக்கிளைகளை மண்டபம் தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலத்தை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். மாலை நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
புயல் எதிரொலியாக கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்வளத்துறை சார்பில் அனுமதி டோக்கனும் மறுக்கப்பட்டது. இருந்தபோதிலும் தடையை மீறி மீனவர்கள் யாரும் செல்கிறார்களா என்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தடையை மீறி திருவாடானை அடுத்த நம்புதாளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று மீன் பிடித்து விட்டு திரும்பும் போது கடற்படை போலீசார் அவர்களை பிடித்து அபராதம் விதித்துள்ளனர். மேலும் தொடர்ந்து மீன் பிடிக்கச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.
இச்சம்பவத்தை அடுத்து ராமநாதபுரம் மாவட்டம் மீன்வளத்துறை சார்பில் தேவிபட்டினம் அடுத்த அழகன்குளம், அம்மன் குடியிருப்பு, ஆற்றங்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களுக்கு வாகனத்தில் சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால் மீனவர்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்லக்கூடாது. படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்கு மாறும் அறிவுறுத்தினர். மேலும் தடையை மீறி மீன்பிடிக்கச் சென்ற படகை பறிமுதல் செய்து மீன் பிடிக்கச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
மேலும் தமிழகத்தை புயல் நெருங்கி வரும் வேளையில், இன்று தரைக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலும், கடல் காற்று 65 கி.மீ. வரை வீசும் எனவும், நாளை மற்றும் 30-ந்தேதிகளில் 75 கி.மீ. சூறைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் மிகுந்த துயரத்திலும் மனவேதனையிலும் உள்ளனர்.
புதுச்சேரி:
ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒரு வாரமாக தொழிலுக்குச் செல்லாமல் இருந்த புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்ட மீனவர்கள், டிசம்பர் 1-ந்தேதி மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
அதுபோல் காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த பால்மணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், பால்மணியின் சகோதரர் கலைமணி மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், சுதின், பொன்னையன், ராமன், பூவரசன், மாணிக்கவேலு, ஆகாஷ், சக்திவேல், வினித் குமார், கமலேஷ், சிவக்குமார், ஜெயமணி, மோகன்குமார், ஆறுமுகம் (காரைக்கால்மேடு), நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மணி, ரத்தினவேலு, மயிலாடுதுறை செல்வநாதன் ஆகிய 18 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றனர்.
கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 18 மீனவர்கள் சிறைபிடித்து விசைபடகை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் காரைக்கால் மீனவர்களை மீட்க கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்தில் இருந்து எந்திரப்படகில் 15 காரைக்கால் மீனவர்கள் மற்றும் 3 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகை கைப்பற்றி மீனவர்களை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் டெல்லியில் மத்திய மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வைத்திலிங்கம் எம்.பி. அளித்த மனுவில், காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் மிகுந்த துயரத்திலும் மனவேதனையிலும் உள்ளனர். மீனவர்களுடன் மீன்பிடி படகை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
- தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகல், இரவு என நாள் முழுவதும் மழை பெய்தது.
- பல வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
தஞ்சாவூர்:
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 11-ந் தேதி மழை பெய்ய தொடங்கியது. அன்றில் இருந்து தற்போது வரை இடைவிடாமல் அடைமழை கொட்டி வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகல், இரவு என நாள் முழுவதும் மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய பெய்த கனமழை இன்றும் நீடித்தது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் அதி கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. அடைமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்தது. மேலும் மாவட்டத்தில் பல வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
மாவட்டத்தில் ஒரே நாளில் 1731.40 மி.மீ.அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக திருவிடைமருதூரில் 196.40 மி.மீ. மழை கொட்டியுள்ளது. மஞ்சளாறில் 191 மி.மீ., கும்பகோணத்தில் 179 மி.மீ, கீாணை-168 மி.மீ, பாபநாசம்-124.20 மி.மீ, அய்யம்பேட்டை-124 மி.மீ, பூதலூர்-115, திருக்காட்டுபள்ளி-85.20, திருவையாறில் 78 மி.மீ, தஞ்சாவூரில்-35 மி.மீ. மழையும் பதிவானது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழையின் அளவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்மழையால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மூழ்கிய பயிர்கள் பாதிப்படையும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே ஃபெஞ்ஜல் புயலால் பயிர்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது இடைவிடாது பெய்யும் மழையால் மீண்டும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்மழையால் இன்றும் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய இடைவிடாமல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக திருவாரூர், நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் பின்னத்தூர், மாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நன்னிலத்தில் 11.5 சென்டிமீட்டர் திருவாரூரில் 8.3 செ.மீ வலங்கைமானில் 8.8 சென்டிமீட்டர் குடவாசலில் 7.3 செ.மீ நீடாமங்கலத்தில் 7.2 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது
இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழை நீரில் சாய்ந்து வருகிறது. உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைப்போல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பனங்குடி, ஏனங்குடி, ஆனைமங்கலம், குறுக்கத்தி, கிள்ளுக்குடி, சீராவட்டம், திருப்பூண்டி, பூவை தேடி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 8.2செமீ மழை பதிவாகியுள்ளது.
நாகையில் 8.2செமீ, திருப்பூண்டி 0.9, வேளாங்கண்ணி 1.9, திருக்குவளை 1.1, தலைஞாயிறு 1.2, வேதாரண்யம் 1.4 கோடியக்கரை 2.8 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. மாணவர்களின் நலன் கருதி நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதைப்போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகளை துறைமுகம், கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
- ராமேசுவரம் தங்கச்சி மடம் பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
- ஒவ்வொரு மீனவரும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 5-ந் தேதி 338 விசைப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியான நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிக்க வந்ததாக கூறி, ராமேசுவரத்தைச் சேர்ந்த ரிபாக்சன் (வயது 26), ராஜபிரபு சீனிபாண்டி (27), அரவிந்த் பாண்டி சீனிபாண்டி (24), ராபின்ஸ்டன் (41), பிரசாந்த் (56), ஆரோக்கியம் (58), யோபு (15), பெட்ரிக் நாதன் (37), ஜான் இம்மரசன் (38), அருள் பிரிட்சன் (29), நிஷாந்த் (25), பரலோக மேட்டன் வினித் (24), அந்தோணி லிஸ்பன் (24) ஆகிய 14 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியதோடு, மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து வீசினர். தொடர்ந்து 14 மீனவர்களும் இலங்கையில் உள்ள மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் தங்கச்சி மடம் பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கைது செய்ய மீனவர்கள் 14 பேரும் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 14 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மீனவரும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தி, ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 27-ந் தேதி, காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து, காரைக்கால் கிளிஞ்சல் மேட்டை சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அராஜக முறையில் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.
இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் மீனவர் செந்தமிழ் காலில் பயங்கர அடிபட்டு காலை அகற்றும் நிலைக்கும், மணிகண்டன் கண் பறிபோகும் நிலைக்கும், மற்றொருவர் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்தும், காயப்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களை மேல் சிகிச்சை செய்ய விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கையில் உள்ள தங்களது படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 11-ந் தேதி முதல் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
4-வது நாள் போரட்டமாக, கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று 7-வது நாள் போராட்டமாக, காரைக்கால் ரெயில் நிலையத்தில், வேளாங்கண்ணி ரெயில் முன்பு மீனவர்கள் குடும்பத்தோடு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் மற்றும் காரைக்கால் மாவட்ட போலீசார் மீனவர்களிடம் சமாதானம் பேசி ஒவ்வொருவரையும் தனித்தனியாக தண்டவாளத்தை விட்டு அகற்றி ரெயில் செல்ல அனுமதித்தனர்.
இதனால் ரெயில் 30 நிமிடம் தாமதமாக சென்றது. மேலும் ரெயில் நிலையத்தை ஒட்டிய தோமாஸ் அருள் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக காரைக்காலில் 400-க்கு மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீன் விற்பனை இல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
- மீனவக்குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
- 5 விசைப்படகுகளை ஒப்படைக்க வலியுறுத்த வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்று வழக்கம்போல் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவக்குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். காரணம் வருமானம் ஈட்ட முடியாமல், வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே மத்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 32 பேரை விடுவிக்கவும், அவர்களின் 5 விசைப்படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.