என் மலர்
நீங்கள் தேடியது "slug 94442"
- மந்தவெளியம்மன் உள்ளிட்ட 7 சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.
- சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள மந்தவெளியம்மன் கோவிலில் 10-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதற்கான விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. காலை, மாலை இருவேளையும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு அம்மன் கரகம் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நடைபெற்றது.
பேரம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.
மந்தவெளியம்மன் உள்ளிட்ட 7 சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பெரிய ராட்சத கிரேன் மூலம் உடலில் அலகு குத்திக் கொண்ட பக்தர்கள் அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்தும், கற்பூர தீபாராதனை காண்பித்தும் சிறப்பு வழிபாடு செய்தனர்.
பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதை தொடர்ந்து வண்ண வண்ண மலர்களாலும், வண்ண வண்ண மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
- கோவில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- கெங்கை அம்மன் கோவிலில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற கெங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் திருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்து வழக்கம்போல் கோவிலை பூட்டி சென்று விட்டனர். நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையில் இருந்து கோவிலுக்குள் மர்ம நபர்கள் ஏறி குதித்துள்ளனர். அங்கு அம்மன் சன்னதியில் உள்ள கிரீல் கதவின் பூட்டை உடைத்தனர். அதற்கு அடுத்து உள்ள மரக் கதவில் பூட்டு இல்லை. அதனால் எளிதாக கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயின், 4 குண்டு, 2 தங்க பொட்டு உள்பட 3 பவுன் நகைகளை எடுத்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 4 பட்டுப் புடவைகள், வெள்ளி குடை, ஒரு வெள்ளி கிரீடம், வெள்ளி மாலை, வெள்ளி சந்தன கிண்ணம், வெள்ளி தட்டு ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு செய்யக்கூடிய ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்று விட்டனர்.
கோவிலில் அம்மன் சன்னதியில் சிரசு ஒன்று உள்ளது. இந்த சிரசின் மேல் வெள்ளி கிரீடம் பொருத்தப்பட்டுள்ளது.கொள்ளையர்கள் வெள்ளி கிரீடத்தினை விட்டு சென்று விட்டனர்.
இன்று காலையில் கோவிலுக்கு வந்த ஊழியர்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் மூலம் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வேகமாக பரவியது.இதனால் கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
கோவிலில் கைவரிசை காட்டிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்துச் சென்றதால் அவர்கள் ஏற்கனவே இந்த பகுதியில் அறிமுகமானவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கோவில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் டாக்டர் வீட்டில் கொள்ளை நடந்தது. அலமேலு மங்காபுரம் பகுதியில் பணம் தர மறுத்த நகை அடகு கடை வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றனர். தொடர்ந்து சத்துவாச்சாரியில் நடைபெறும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் அடியில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அருகில் உள்ள கெங்கை அம்மன் கோவிலில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற சம்பவத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அம்மனுக்கு அலங்காரமும் நைவேத்தியமும் அந்தந்த கிராம மக்களே செய்வார்கள். நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். சென்னையைச் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு இந்த பாதாள பொன்னியம்மனே குலதெய்வமாக விளங்கியிருக்கிறாள். இந்த அம்மன் கோயிலுக்கு ஏழு இடங்களில் தோரண வாயில் அமைந்திருந்தனவாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகள் தொண்டை மண்டலம் என்றழைக்கப்பட்டன. இந்த மண்டலத்தை பல்வேறு தொண்டைமான்கள் ஆண்டனர். பின்னர் சிறிது காலம், நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ராயர்கள் ஆட்சி. விஜய நகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த தளபதிகள் நாயக்கர் எனப்பட்டனர். அவர்களின் ஒருவர் சென்னப்ப நாயக்கர். அவரிடம் குத்தகைக்கு நிலத்தைப் பெற்று ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் ஆட்சியுரிமை செலுத்திவந்தனர். அப்பொழுது புரசைவாக்கம் பகுதியில் மாந்தோப்புகளும், பூவரச மரங்களும் நிறைந்திருந்தது.
காய்கறிகள், பழங்கள் பயிரிடப்பட்டன. இருநூறு ஆண்டுகளுக்கு முன் விவசாய பாசனத்திற்கு நீர் அதிகம் தேவைப்பட்டது. தோட்டத்தின் வடக்கு மூலையில் நீர் சுரப்பதை அறிந்து, கூலி ஆட்கள் உதவியுடன், கிணறு வெட்டத் தொடங்கினர். ஏழடி தோண்டினாலே நீர் கிடைக்கும் இந்த பகுதியில், தொடர்ந்து முப்பதடி ஆழம் தோண்டியும் நீர் வரவில்லை. நிலச்சொந்தக்காரரும், வேலையாட்களும் சோர்ந்து விட்டனர். ஆனாலும் சக்தி அம்மாவை வேண்டியபடி கடப்பாரையை மேலும் இறக்க, அது ஒரு பாறைமீது பட்டு, தீப்பொறி வந்தது, அதைத் தொடர்ந்து தண்ணீரும் பீறிட்டு அடித்தது. சுற்றியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பாறையை நெம்பி எடுக்க, கடப்பாரையால் தோண்ட, அனைவரும் ‘சிலை, சிலை’ என்று கூச்சலிட்டனர். அது அபூர்வமான அம்மன் சிலை அமர்ந்தக் கோலத்தில் காட்சியளித்தது. அம்மன் சிலையை வெளியே எடுத்தபோது, அதற்குக் கீழே ஐம்பொன் விக்கிரகம் ஒன்றும் கிடைத்தது. அனைவரும் ஒன்றுகூடி இரு சிலைகளுக்கும் அபிஷேகம், ஆராதனை, நைவேத்யம் செய்து வழிபட்டனர்.
அப்போது ஒரு பெண்மணிமீது அருள்வாக்கு வந்தது: ‘‘என் பிரிய பக்தர்களே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு கோயில் கொண்டிருந்தேன். ஞானிகளும், முனிவர்களும் என்னை வழிபட்டனர். பின்னர் மன்னர்கள் எனக்கு ஆலயம் அமைத்தனர். காலச்சுழற்சியில், இந்த பகுதி அழிந்துவிட, நான் பாதாளத்தில் வாழ்ந்தேன். வெளிப்படவேண்டிய நேரம் வந்ததால் நான் வெளிப்பட்டேன். எனக்கு ஆலயம் கட்டி என்னை வழிபடுங்கள். என் பிள்ளைகளான அனைத்து பக்தர்களையும் காப்பேன்.’’ அதன்படி, முதலில் கீற்றுக் கொட்டகை அமைத்து மூலவராக கல் விக்கிரகத்தையும், உற்சவராக ஐம்பொன் விக்கிரகத்தையும் ஸ்தாபித்தனர். பாதாளத்திலிருந்து கிடைத்ததால் பாதாள பொன்னியம்மன் என்று பெயரும் வைத்தனர். கிணறு தோண்டிய வேலையாட்களின் பரம்பரையினரே இன்றுவரை ஆடி மாத வீதி ஊர்வலத்தின்போது இந்த பாதாள பொன்னியம்மனுக்கு தாய் வீட்டுச் சீர் செய்கின்றனர்.
பக்தர்களின் எண்ணிக்கையும், காணிக்கையும் பெருகப் பெருக ஆலயமும் விரிவடைந்தது. அடுத்து அண்ணன்மார் சிலைகள் தனி கருவறையில் காவல் தெய்வங்களாக வைக்கப்பட்டன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, விநாயகர், முருகன் சிற்றாலயங்கள் கட்டப்பட்டன. அரசமர மேடை நாகர் சிலைகளும், நவகிரக சந்நதியும் கட்டப்பட்டன. கருவறை கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சியளிக்கிறார்கள். மிகப்பெரிய நூற்றுக்கால் மகா மண்டபமும் உள்ளது. அம்மன் சிலை கிடைத்த விவரத்தை தூணில் படைப்புச் சிற்பமாக செதுக்கியுள்ளனர். பாதாள பொன்னியம்மன் கற்சிலை வெகு அபூர்வமானது. அம்மன் வலது கையில் சூலமும், இடது கையில் அன்னப் பாத்திரமும் ஏந்தியுள்ளாள்; சாந்த சொரூபிணியாகத் திகழ்கிறாள்.
வலதுப்புற வெளிப்பிராகாரத்தில் தனிச் சந்நதியில் நான்கு கைகளுடன் பாசம், அங்குசம், மோதகம், ஏக தந்தம் ஆகியன ஏந்தி மூன்றரை அடி விக்கிரமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் விநாயகர். இடது புறத்தில் நின்றகோல முருகனுக்கும் தனிச் சந்நதி. அபய-வரதம் அருளும் கைகளுடன் ஐந்தடி விக்ரமாகக் காட்சி தருகிறார். இவரிடம் வேல் ஆயுதம் உள்ளது. அடுத்து துர்கா தேவி நின்ற கோலத்தில் நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள். பாதாள பொன்னியம்மனின் கருவறை எதிரே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத் தூணில் புடைப்பு சிற்பங்களாக கணபதி, முருகன், சிவன், பார்வதி, தட்சிணாமூர்த்தி, நடராஜர், துர்க்கை, அனுமன், விஷ்ணு, பிரம்மா, கால பைரவர் ஆகியோர் காணப்படுகின்றனர். நவராத்திரி மண்டப மேல்விதானத்தில் சக்கர வேலைப்பாடுகள் காட்சியளிக்கின்றன.
அம்மன் சந்நதி எதிரே உள்ள நவராத்திரி மண்டபத்தினுள் அண்ணன்மார் சந்நதி உள்ளது. இங்குள்ள நீளமான கருங்கல் மேடையில் புடைப்புச் சிற்பமாக ஆண் வீரர்கள் எழுவரின் சிலைகள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றன. இவர்கள் அனைவரும், இடது கையில் கேடயம் வைத்துள்ளனர். வலது கையில், கத்தி, கோடரி, தண்டம், அரிவாள், கதை, சூலம், வாள் முதலியவற்றை வைத்துள்ளனர். இவர்கள் அம்மனின் படைவீரர்கள் என்றும், பரிவார தேவதைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்கு கோயம்பேடு, பாரிமுனை, எழும்பூர் பகுதிகளிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
கோவிலின் நடுவில் மூலவர் சிவலிங்கமும், அதைச் சுற்றிலும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கம் என 5 சிவலிங்கங்கள் உள்ள ஆலயங்களும், ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. நாம் ஆரணிக் கரையோரம் உள்ள பஞ்ச பிரம்ம தலங்களைப் பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
அரியத்துறை
சென்னை - கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் உள்ளது, கவரப்பேட்டை. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அரியத்துறை இருக்கிறது. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் சத்யோஜாதம் முகத்திற்குரிய தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் தெற்கு பார்த்த நிலையில் காணப்படுகிறது. இறைவன் - வரமூர்த்தீஸ்வரர், அம்பாள் - மரகதவல்லி. உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இங்கு மூலவராக உள்ளது. இந்த லிங்கம் சதுர ஆவுடையாரைக் கொண்டது.
ஆரணி பெரியபாளையம்
சென்னையில் இருந்து வடக்கே 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆரணி. இங்குள்ள பெரியபாளையத்தில், பிச்சாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘வாமதேவபுரம்’ ஆகும். பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் வாமதேவ முகத்திற்குரிய ஆலயம் இதுவாகும். 2 ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோவிலின் மூலவர், சுயம்பு மூர்த்தி ஆவார். மூலவர் பெயர்- பிச்சாலேஸ்வரர், அம்பாள் பெயர் - மரகதவல்லி. இங்குள்ள சிவலிங்கத்தின் மேற்பகுதியில், அம்பாளின் பாதம் பதிந்திருப்பது விசேஷம்.
ராமகிாி
சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சுருட்டப்பள்ளி. இந்த ஊரைத் தாண்டியதும் ராமகிரி உள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘திருக்காரிக்கரை’ என்பதாகும். மூலவர் பெயர் வாலீஸ்வரர். மரகதாம்பாள் என்பது அம்பாள் திருநாமம். சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய ஆலயம் இது. மூலவர் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்திக்கும், சிவலிங்கத்திற்கும் நடுவே ஆஞ்சநேயர் இருக்கிறாா்.
கருங்காலி
சென்னை அருகே உள்ளது பழவேற்காடு. இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில்தான் கருங்காலி திருத்தலம் இருக்கிறது. இது பழங்காலத்தில் ‘நைமிசான்யம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் அகோர முகத்திற்குரிய கோவில் இங்கு உள்ளது. ஆரணி நதி, கடலில் கலக்கும் இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் திருநாமம், சிந்தாமணீஸ்வரர். அம்பாள் பெயர் சிவகாமவல்லி. 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனிவரால், இங்குள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கடலோடு நதி கலக்கும் தீர்த்த அமைப்பின் காரணமாக, இந்த ஆலயம் காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களுக்கு நிகரானதாக கருதப்படுகிறது.
சுருட்டப்பள்ளி
சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. இத்தல மூலவரின் திரு நாமம், பள்ளிகொண்டீஸ்வரர். அம்பாளின் பெயர், மரகதவல்லி. பாற்கடலைக் கடைந்த வேளையில், முதலில் வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அது உலகை அழிக்கும் முன்பாக, தான் உண்டு உலக உயிர் களைக் காத்தார் சிவபெருமான். வீரிய விஷத்தின் காரணமாக ஈசனுக்கு சிறு மயக்கம் உண்டானதாகவும், அதனால் அவர் அம்பாளின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அப்படி அவர் அம்பாள் மடியில் தலைசாய்த்து படுத்திருக்கும் சயன கோலத்திலேயே, இறைவன் இங்கு காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, கண்ணுடைய நாயகி அம்மனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.
பிரமோற்சவம், கொடியேற்றம் உள்ளிட்ட காப்பு கட்டும் நிகழ்வுகள், சிவாச்சாரியார்கள், வைணவ பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது.
பாரசைவர்களாகிய உவச்சர் குலத்தினரால், இந்த ஆலயத்தில் பூஜை செய்யப்படுகிறது.
பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ‘களியாட்டம்’ மிகவும் பிரசித்திப்பெற்றது. இது கும்பகோணம் மகாமக திருவிழா போன்று நடத்தப்படும்.
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, கண் நோய் தீர இந்த அம்மனை அதிகமாக வணங்குகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு
வனமாக இருந்த இடத்தில் கண்ணுடைய நாயகி அம்மன், ஒரு மரத்தின் அடியில் சுயம்புவாக புதையுண்டு இருந்தார். பால் வியாபாரிகள், இந்தப் பகுதியில் வரும்போது, பால் குடம் கவிழ்ந்துபோவது வாடிக்கையாகிப்போனதால் அவர்கள் அச்சம் அடைந்தனர்.
இப்பகுதியை ஆண்ட மன்னனின் கனவில், தான் இருப்பதை அம்மன் உணர்த்தியதை அடுத்து, அந்த பகுதியை தோண்டி, அம்மனை வெளிக்கொண்டு வந்தனர்.
புதையுண்ட அம்மன் சிலையை மீட்கும் பணியின்போது, ஒருவரது கண்ணில் கடப்பாரை நுனி பட்டு ரத்தம் கொட்டியது. இருப்பினும் அவர் அம்மனை வெளிக்கொண்டு வரும் பணியை தொடர்ந்தார். முழுமையாக அம்மன் சிலை வெளிவந்ததும், அவரது கண்ணில் பட்ட காயமும் முழுமையாக நீங்கியது. இதனாலேயே ‘கண்ணத்தாள்’ என்ற பெயரும் அம்மனுக்கு உண்டு.
திருவிழாக்கள்
* சித்திரை மாத முதல் செவ்வாய் அன்று அம்மனுக்கு கண் திறப்பு விழா நடைபெறும். 22 நாட்கள் திருவிழா இது.
* வைகாசி பிரமோற்சவம் 10 நாட்கள் நடைபெறும்.
* ஆடி மாதத்தில் முளைகொட்டு திருவிழா, 10 நாட்கள் நடத்தப்படும்.
* புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியும் 10 நாட்கள் கொண்டாடப்படும்.
* ஐப்பசியில் 10 நாட்கள் நடைபெறும் கோலாட்ட திருவிழாவும் விசேஷமானது.
* தை மாதத்தில் 10 நாட்கள் நடத்தப்படும் தைலக்காப்பு உற்சவமும் பிரசித்திப்பெற்றது.
அம்மன் – வளைக்கைநாயகி
தல விருட்சம் – வில்வமரம்
தீர்த்தம் – எமதீர்த்தம்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருவைகாவூர், வில்வவனம்
தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.
அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.
சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர். மதியம் எமதீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். இரவில் சுவாமி, அம்பாள் இருவரும் ஒரு ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளுவர். இந்த சப்பர பவனியும் விசேஷமானது. இதற்காக மூங்கில் கீற்றில், தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சப்பரம் இது.
இங்கு துவாரபாலகர்கள் கிடையாது. பெருமாள், பிரம்மா இருவரும், துவாரபாலகர்கள் இடத்தில் உள்ளனர். அருகில் கையில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும், இங்கு சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர். இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள கலையம்சமான முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது. முருகன் கையிலுள்ள ரேகைககள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். கோயில் முகப்பில் வேடனை, புலி விரட்டிய சம்பவம் சுதை சிற்பமாக உள்ளது.
இந்த கோயிலில் உள்ள அம்பாள் “வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி)” மிகவும் அருள் வாய்ந்தவர். வெள்ளிக் கிழமை செவ்வாய் கிழமைகளில் மாலை 6 லிருந்து 7:30 க்குள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தல் விசேசம். குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும். இங்கு நின்று வழிபட்டுக்கொண்டிருக்கும்போதே சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். இவர் கூறியதுபோலவே எல்லா விசயங்கள் நிகழ்ந்திருப்பதாக இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர்.
வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாகத் புராணம் கூறுகிறது. ஊழிக் காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி, தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு “வில்வவனேசுவரர்” என்றும் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பரோ அது போல் சுவாமி, அம்பாள் சந்நிதிகள் உள்ளன. தீர்த்தங்களில் குளித்தாலோ அல்லது தெளித்து கொண்டாலோ பிணிகள் நீங்கும். தோசங்கள் விலகும்.
சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக – திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது என்பது ஐதீகம்.
இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்குநோக்கி காட்சி தருகிறது. உள் நுழைந்தால் நந்தி நம்மைநோக்கி திரும்பி (கிழக்குநோக்கி) இருப்பதைக் காணலாம். உள் கோபுரவாயில் நுழைந்தால் – வாயிலில் இடப்பால் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழலாம். வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சந்நிதியும், சுந்தரமூர்த்தி விநாயகர் சந்நிதியும், வள்ளிதெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை:
வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில்,
திருவைகாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம்.
தல புராணங்களின் படி முற்காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இப்பகுதிக்கருகே வசித்த மக்கள் காட்டு யானைகளின் தொல்லையால் அவதிப்பட்டனர். யானைகளை அடித்து விரட்டுவது இயலாத காரியம், அதே நேரத்தில் அந்த யானைகளை கொல்வதோ மிகவும் பாவமான செயல். இப்படி இரண்டு விடயங்களையும் சிந்தித்து குழம்பிய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இப்பகுதியில் இந்த நரசிம்மர் கோவில் அமைத்தனர். அதன் பிறகு இப்பகுதியில் காட்டு யானைகளின் தொந்தரவு குறைந்தது. காட்டை திருத்தி கோவில் அமைக்கப்பட்ட நரசிம்மர் என்பதால் இவருக்கு காட்டழகிய சிங்கர் என்கிற பெயர் ஏற்பட்டது.
கோவில் சிறப்புக்கள்
பொதுவாக கிழக்கு திசை பார்த்தவாறு இருக்கும் பெருமாள் இங்கு மேற்கு திசை பார்த்தவாறு காட்சி தருகிறார். கர்ப கிரகத்தில் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்திருக்கும் நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்களை காக்கும் அபயஹஸ்த முத்திரையை வலது கையில் நரசிம்மர் கொண்டிருக்கிறார். விஜயதசமி தினத்தன்று ஸ்ரீரங்கம் பெருமாள் இங்குள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருளி காலை முதல் மாலை வரை அருள்பாலிக்கிறார். பிறகு குதிரை வாகனத்தில் புறப்பட்டு, வீதியில் இருக்கும் தல விருட்சம் வன்னி மரத்தில் அம்பெய்தி தெற்கு வாசல் வழியாக மூலஸ்தானத்திற்கு செல்கிறார்.
இக்கோவில் ஒரு பிராத்தனை தலமாக விளங்குகிறது. பெருமாளின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திர தினத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பக்தர்கள் விரும்பும் நட்சத்திர தினங்களிலும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த நாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு, தீராத நோய்கள் தீருவது மற்றும் இன்ன பிற விரும்பிய வரங்களை பெருமாள் அருள்வதாக கூறுகிறார்கள் பக்தர்கள்.
பிரதோஷ நாளில் இந்த நரசிம்மருக்கு செய்யப்படும் பூஜையில் கலந்து கொண்டு வழிபடும் குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகளுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று உறுதியாக கூறுகிறார்கள். வைகாசி நரசிம்ம ஜெயந்தி, ஆனி சுவாதி நட்சத்திரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், பங்குனி யுகாதி ஆகிய நான்கு நாட்களின் போது ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து தைலக்காப்பு, திருப்பணியாரங்கள் இக்கோவிலுக்கு அனுப்பப்படுகிறது.
கோவில் நடை திறப்பு
காலை 6.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
கோவில் முகவரி
அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோவில்
ஸ்ரீரங்கம்
திருச்சிராப்பள்ளி – 620006
கோவில் அமைப்பு
குளத்துப்புழா கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. மரத்தாலான கோவில். நடுவில் கருவறையும் சுற்றி மரத்தாலான கூரையுடன் கூடிய சதுர வடிவப் பிரகாரம். இங்கு ஐயப்பன் பாலகனாகக் கருவறையுள் காட்சி தருகிறார்.
பிரகாரத்தின் வலப்புறத்தில் யட்சியம்மன் சன்னிதி உள்ளது. குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனுக்குத் தொட்டில் கட்ட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தை வலம் வரும்போது தனியே பிரிந்து செல்லும் பாதை, திறந்தவெளிக் கோவிலாக அமைந்துள்ள நாகராஜர் கோவிலுக்கு இட்டுச் செல்லுகிறது. இவ்விரண்டு சன்னிதிகள் தவிர கோவிலைச் சுற்றி, விநாயகர், மாம்பழத்துறையம்மன், பூதத்தார் சன்னிதிகளும் அமைந்துள்ளன.
கோவில் தோன்றிய தல புராணம்
கொட்டாரக்கரை பகுதியை ஆண்ட ஒரு அரசரும் அவருடைய ஆட்களும் காட்டில் கல்லடையாற்றின் கரையில் ஒருமுறை தங்க நேர்ந்தது. அப்போது உணவு சமைப்பதற்காக அடுப்பு மூட்டக் கல் தேடினர். மூன்று கற்களும் ஒரே அளவில் கிடைக்கவில்லை. ஒரு கல் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது. அளவில் பெரிதாக இருந்த கல்லை அதைவிட பெரிதான ஒரு கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்தனர்.
உடைக்க நினைத்த கல் உடையாமல் உடைக்கப் பயன்படுத்திய கல் எட்டு துண்டுகளாக உடைந்தது. உடைந்த பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது. அரசரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், சிதறிய கல் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் உருவம் என்று தெரிய வந்தது. பரிகாரமாக அவ்விடத்தில் குழந்தை வடிவான ஐயப்பனுக்குக் கோவில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது என்பது மரபுவழிச் செய்தி.
சிதறிய எட்டுத் துண்டுகளும் கருவறையுள் உள்ளன. பூசை சமயத்தில் இவை ஒன்றாக வைக்கப்பட்டு வழிபட்டபின் வழக்கமான நிலையில் வைக்கப்படுகின்றன.
மச்சக் கன்னி புராணக் கதை
கோவிலை ஒட்டி கல்லடையாறு ஓடுகிறது. குளத்துப்புழை ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக் கன்னி ஒருத்தி அவரைத் திருமணம் செய்ய விழைய ஐயப்பன் மறுத்து விட்டார். அதனால் அவள் அவரைப் பார்த்துக் கொண்டே அப்பகுதியில் வாழும் வரத்தையாவது தனக்குத் தர வேண்டுமென ஐயப்பனிடம் வேண்ட அவரும் தனது தலத்தில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினாராம்.
மச்சக் கன்னியும் அவள் தோழியரும் கல்லடையாற்றின் இப்பகுதியில் மீன்களாக வாழ்வதாக ஒரு நம்பிக்கை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக இங்குள்ள மீன்களுக்குப் பொரி போடுகின்றனர். ஆற்றின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவில் இங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
சிறப்புகள்
இக்கோவிலில் ஐயப்பன் பாலகனாக அமைந்துள்ளதால், சிறுவர்களின் கல்விக்கு உகந்த இடமான இங்கு விஜய தசமி மற்றும் சில குறிப்பிட்ட நாட்களில் இங்கு நடைபெறும் வித்யாரம்பம் சிறப்பானது. ஏப்ரல்/மே மாதத்தில் நடைபெறும் விஷு மகோத்சவம் இங்கு நடைபெறும் முக்கியமான திருவிழா ஆகும்[2]. பரவலாக அறியப்பட்ட ஐயப்பனின் கோவில்களில் குளத்துப்புழா ஐயப்பன் கோவில் ஒன்றாக உள்ளது. ஆரியங்காவு, அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகியவை ஐயப்பனின் பிற முக்கியமான கோவில்கள்.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று ஐயப்பனை வழிபட்டபின் பந்தளம் சென்று பின் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம்.திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள குளத்தூர் ஐயன் கோவில் இந்தக் கோவிலில் இருந்து பிடிமண் மற்றும் நீர் எடுத்துவந்து கட்டப்பட்டது.இன்றைக்கும் இந்தக் கோவில் திருவிழாவின் போது குளத்துபுழா சென்று நீர் எடுத்து திரும்புவது வழக்கம்
இக்கோவில் அமைந்துள்ள குளத்துப்புழா எனும் சிற்றூர், செங்கோட்டை-திருவனந்தபுரம் சாலையில்[2] செங்கோட்டையிலிருந்து சுமார் 40-50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை - கொல்லம் இருப்புப் பாதை வழியாகவும் இக்கோவிலை அடையலாம். மேலும் இவ்வூர் திருவனந்தபுரத்திலிருந்து 62 கிமீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
கடந்த 1000 ஆண்டு காலமாக நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் இக்கோயிலை மிக சிறந்த ஸ்தானத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த கோயிலை பற்றி தமிழ் இலக்கணத்தில் முன்னணி கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியுள்ள காவியங்கள் இன்றும் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது.
மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பற்றி ஒரு தமிழ் மகாகவியான அருணகிரிநாதர் அவருடைய படைப்பில் சிறப்பாக எழுதியுள்ளார். ‘ திருப்புகழ் ‘ என்ற மகா கவிதை இங்கு தான் எழுதி அர்ப்பணிக்கப்பட்டது.
மற்றொரு தமிழ் கவிஞர் மகாகவி முத்துசாமி தீட்சிதர் இங்குதான் அவருடைய படைப்பான கீர்த்தி அருணாச்சலம் என்ற கவிதையை எழுதி வெளியிட்டார். இக்கோயிலில் இன்றைய காலகட்டத்தில் மொத்தமாக ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
இந்த ஐந்து பிரகாரங்களிலுமே நந்திகள் அருணாச்சலேஸ்வரரை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பிரகாரத்தில் நான்கு திசைகளில் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அவை வருமாறு:-
திருமஞ்சன கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், பேய் கோபுரம், மற்றும் ராஜகோபுரம். ராஜகோபுரம் 217 அடி உயரம் மற்றும் 11 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான படைப்பாகும். விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியுடன் கட்டப்பட்ட இக்கோபுரம் தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகும்.
இத்துடன் ஐந்தாவது பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் அத்துடன் சேர்ந்த சிவகங்கா தெப்பகுளம் இவை யாவும் மன்னர் கிருஷ்ணதேவராயர் புகழ்பாடும். குறிப்பாக இங்கு இருக்கும் ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் சிறந்த கைவினைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இம்மண்டபம் திருவாதிரை நட்சத்திரம் தோன்றும் நாள் அன்று திருமஞ்சனம் நடைபெறுவதற்காக உபயோகிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சேவிக்க இந்த மண்டபத்தில் கூடுவார்கள்.
இந்த மண்டபத்தின் கீழே பாதாள லிங்கம் என அழைக்கப்படும் அறை உள்ளது. இங்கு சிவலிங்கம் உள்ளது. பாதாளலிங்கம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் தான் ஸ்ரீ ரமண மகரிஷி தியானத்தில் அமர்ந்திருந்தார்.
இந்த பிரகாரத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் இங்கிருக்கும் கம்பாட்டு இளையநார் சன்னதி. இந்த சிறப்பான சன்னதியை மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டினார். இங்கே நான்கு அறைகள் உள்ளன. பிரார்த்தனை செய்வதற்காக மூன்றாவது அறை பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காவது அறையில் முருக கடவுளின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.
முதலாவது அறையில் பல அரிய வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் இரண்டாவது அறைக்கு செல்ல முடியும். மேலும் சிவாகங்கா, விநாயகர் சன்னதி, கம்பாட்டு இளையநார் சன்னதிக்கு பின்புறமும் ஆயிரம்கால் மண்டபம் முன்புறமும் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விமானம் மிகவும் சிறப்பாக பல வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அருணகிரிநாதர் நின்றபடி முருக பெருமானை பிரார்த்தனை செய்கிறார். இந்த சன்னதி கோபுரதில்லையனார் சன்னதி என்று அழைக்கப்படுகிறது.
இச்சன்னதிக்கு அடுத்து வருவது கல்யாண சுதர்சனர் சன்னதியாகும். இச்சன்னதி தெற்குபுரத்திலிருந்து பல்லால மகாராஜா கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது. இங்கு ஒரு கல்யாண மண்டபம் கல்யாணம் நடத்த வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சன்னதியில் லிங்கம், நந்தி, மற்றும் தேவியின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்லாலா மகாராஜா கோபுரம் மன்னர் பல்லாலாவால் கட்டப்பட்டது. அதனால்தான் பல்லாலா மன்னர் இறந்த பின்னர் சிவனடியாரே இறுதி சடங்குகள் செய்தார் என புராணம் கூறுகிறது. இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அருணாச்சலேஸ்வரரே பல்லாலாவின் மகனாக உருவெடுத்து கடமைகளை செய்தார்.
கோயிலின் நாலாவது பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. பல்லாலா கோபுரத்தின் கிழக்குப்புறத்தில் மன்னர் பல்லாலாவின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரகாரத்தில் 12ம் நூற்றாண்டு காலத்து லிங்கம், சிலைகள், நிறுவப்பட்டுள்ளது. இத்துடன் கோபுர நுழைவாயிலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு புறத்தில் கொடிகம்பமும் வடக்கு புறத்தில் உண்ணாமலை அம்மன் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் சிவலிங்கத்தை பிரதிபலிக்கும் அனைத்து உருவங்களும் மற்ற தெய்வங்களும் இருக்கிறது. இந்த பிரகாரம் தான் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பல வரலாற்று சிறப்புகளையும், அற்புதங்களையும் கொண்டு திகழ்கிறது. இதனால் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம் மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத்தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.
நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிரகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் அமைந்த ஆலயம். ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.
முதலாம் படைவீடு
தஞ்சை மேல அலங்கம் பகுதியில் உள்ளது, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலய மூலவர், குன்றின் மேல் இருப்பது போல் உயரமான இடத்தில் இருப்பதால், இத்தலம் ‘திருப்பரங்குன்றம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு வள்ளி - தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். இதுதவிர விநாயகர், இடும்பன், சிவன், பார்வதி, சிவலிங்கம் திருமேனிகளும் காணப்படுகின்றன. இக்கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது.
நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில், 250 ஆண்டுகள் பழமையானது. சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற விழாக்கள் இங்கு வெகு விமரிசையாக நடைபெறும். நாயக்க மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன்பாக இங்கு ஆயுதங்களை வைத்து வழிபட்டு எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
இரண்டாம் படைவீடு
தஞ்சை பூக்கார தெருவில் உள்ளது, சுப்பிர மணியசாமி கோவில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் மனைவிகள் இன்றி தனித்து காணப்படுகிறார். இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறும்.
திருச்செந்தூரில் வாழ்ந்த ஞானி ஒருவர், ஐம்பொன்னால் ஆன முருகன் சிலை வைத்திருந்தார். அவர் தினமும் கடலிலும், நாழிக்கிணற்றிலும் நீராடும்போது, முருகன் சிலையையும் நீராட்டி பூஜைகள் செய்வார். வயோதிகம் காரணமாக அந்த சிலையை வேறுயாரிடமாவது ஒப்படைத்து தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஞானி எண்ணினார்.
ஒரு நாள் ஞானியின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அவரை ஒரு ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த ரெயில்வே ஊழியரிடம் ஐம்பொன் சிலையை கொடுக்கும்படி கூறிவிட்டு மறைந்தார். கனவும் கலைந்தது. கனவில் வந்ததுபோலவே, குறிப்பிட்ட ரெயில்நிலையம் சென்ற ஞானி, ரெயில்வே ஊழியரை சந்தித்து சிலையைக் கொடுத்தார். அந்த ஊழியருக்கும், அந்தக் கனவு முன்தினம் வந்ததை அவர் கூறினார். இருவரும் முருகனின் அருளை எண்ணி நெகிழ்ந்தனர். பின்னர் தஞ்சை வந்த ரெயில்வே ஊழியர், இங்கு ஒரு குடில் அமைத்து முருகனை வழிபட்டார்.
திருச்செந்தூர் செல்ல முடியாதவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் எல்லா காரியங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மூன்றாம் படைவீடு
தஞ்சை சின்ன அரிசிக்கார தெருவில் உள்ளது, பாலதண்டாயுதபாணி கோவில். இந்த ஆலயத்தில் இந்திரன் வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. வழக்கமாக முருகப்பெருமானின் அருகில் மயில் வாகனம் காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் சன்னிதியில் யானை இருப்பது அரிய காட்சியாக இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சிலை ஐம்பொன்னால் ஆனது. இங்கே விநாயகர், முருகன், இடும்பன், நவக்கிரக சன்னிதிகள், சிவன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், பைரவர், நாகநாதர் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. பொதுவாக நவக்கிரக சன்னிதிகள் வடகிழக்கு ஈசானிய மூலையில் அமைந்திருக்கும். ஆனால் இங்கு தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. அதுவும் ராகுவும், கேதுவும் இடம் மாறி இடம் பெற்றுள்ளன. இந்தக் கோவிலில் கார்த்திகை விரதம், பங்குனி உத்திர விழா, முத்து பல்லக்கு, சஷ்டி போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
நான்காம் படைவீடு
தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. சுவாமி மலையில் முருகன் சன்னிதி இருப்பது போலவே, இங்கும் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் அரசு, வேம்பு மரம் சேர்ந்து ஈசான மூலையில் உள்ளது. இங்கு தஞ்சை பெரிய கோவிலில் இருப்பதை போல பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், நவக்கிரக தலங்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பிரம்மா, ஆஞ்சநேயர் கணபதி, விஷ்ணு துர்க்கை, இடும்பன் என முருகனைத் தவிர 12 சன்னிதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னிதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுடைய கஷ்டம் தீரும் என்பது ஐதீகம். இங்கு சூரசம்ஹாரம், முருகன் திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கு, பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம், கந்த சஷ்டி போன்ற விழாக்கள் விமரிசையாக நடந்து வருகிறது.
ஐந்தாம் படைவீடு
தஞ்சை கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ளது, பாலதண்டாயுதபாணி கோவில். இங்கு வள்ளி- தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கருவறைக்கு முன்பாக விநாயகரும், எதிரில் மயிலும், பலிபீடமும் காணப்படுகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு முதலில் வேல் மட்டும் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் வள்ளி - தெய்வானையுடன் கூடிய சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகப்பெருமானின் கலியுக அவதாரமான திருஞானசம்பந்தருக்கும் இங்கு தனி சன்னிதி உள்ளது. தவிர விநாயகர், விசாலாட்சி, பைரவர், பஞ்சமுக ஆஞ்சநேயர், துர்க்கை, நவக்கிரக தலங்கள் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. இங்கு முருகனுக்கு நடைபெறும் கந்தசஷ்டி உள்பட அனைத்து விழாக்களும் விமரிசையாக நடைபெறும். இந்தக் கோவிலில் தரிசனம் செய்தால் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து பிரச்சினைகள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். திருத்தணியில் முருகன் இருப்பதை போல இங்கும் காணப் படுவதால் இத்தலம் திருத்தணி என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மாநகரில் ஈசானிய மூலையில் இத்தலம் அமைந்துள்ளது.
ஆறாம் படைவீடு
தஞ்சை வடக்கு அலங்கம் பகுதி யில் உள்ளது, பால தண்டாயுதபாணி சுவாமி கோவில். இந்தக் கோவில் மன்னர் சரபோஜி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் அடிக்கடி பழனி முருகன் கோவிலுக்குச் சென்று வருவதுண்டு. அப்படி சென்று வர பல நாட்கள் ஆகிவிடும். இதனால் அங்கிருப்பது போலவே இங்கும் ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். முருகப்பெருமான் கனவில் வந்து சொன்னதை அடுத்து, பழனி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு முருகன் சிலையை இங்கு கொண்டு வந்து நிறுவியிருக்கிறார்கள். பழனி முருகன் கோவில் இருப்பதைப் போல இது அமைந்திருந்தாலும், இதனை ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை என்றுதான் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
கோவில் இருக்கும் பகுதி, மன்னர்கள் காலத்தில் முதலைகளுக்கு தீவனம் வைக்கும் கொட்டகையாக இருந்துள்ளது. எதிரிகள் தஞ்சை நகருக்குள் நுழையாமல் இருக்க அகழிகளை உருவாக்கியிருந்தனர். அதற்குள் பல முதலைகளை வளர்த்து வந்தனர். அந்த முதலைகளுக்காக ஒரு மண்டபத்தில் தீவனம் வைத்துள்ளனர். அந்த மண்டபத்தில்தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.
1. ராஜகோபுரம் (கிழக்கு)
திருவண்ணாமலை ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் இதுதான். இந்த கோபுரம் கட்டுவதற்கான அடித்தளத்தை அமைத்தவர், கிருஷ்ணதேவராயர். ராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தை, 216 அடியாக நிர்மாணித்தார். அதை விட ஒரு அடியாவது பெரியதாக திருவண்ணாமலை ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என எண்ணினார், கிருஷ்ண தேவராயர். இதற்கான பணியை 1550-களில் தொடங்கினார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு, ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் அந்தப் பணி நிறைவடைவதற்கு முன்பாகவே, கிருஷ்ணதேவராயர் இறந்துவிட்டார். இதையடுத்து சில ஆன்மிகப் பெரியவர்கள், தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம், இந்தப் பணியை முடிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கிணங்க, திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரத்தை, கிருஷ்ணதேவராயரின் விருப்பப்படியே, தஞ்சை பெரிய கோவில் விமானத்தை விட, ஒரு அடி அதிகமாக வைத்து 217 அடியுடன் கட்டி முடித்தார். இந்தக் கோபுரம், தமிழ்நாட்டில் 2-வது பெரிய ராஜகோபுரமாக விளங்குகிறது. 11 நிலைகள் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிடக் கலை அம்சங்களை அதிகமாக காணலாம்.
2. பேய்க்கோபுரம்
இது கிழக்கு ராஜகோபுரத்தின் நேராக மேற்கு பகுதியில் உள்ளது. இதனை ‘பேய்க்கோபுரம்’ என்று அழைக்கிறார்கள். கிழக்கு ராஜகோபுரத்திற்கான பணியை தொடங்கியபோதே, மேற்கு கோபுரத்திற்கான பணியையும் கிருஷ்ண தேவராயர் தான் தொடங்கினார். ஆனால் இதனை கட்டி முடித்ததும், தஞ்சை செவ்வப்ப நாயக்கர்தான். 160 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம், தொடக்க காலத்தில் ‘மேற்கு கோபுரம்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. அது பேச்சு வழக்கில் ‘மேக்கோபுரம்’ என்றாகி, பிறகு மருவி ‘பேக்கோபுரம்’ என்றாகிப்போனது. பேக்கோபுரம் என்று பேசிப் பேசியே, இது ‘பேய்க்கோபுரம்’ என்ற பெயரைப் பெற்றுவிட்டது. 9 நிலை கொண்ட இந்த கோபுரத்திலும் ஏராளமான சிற்பங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. கார்த்திகைத் தீபத் திருநாளின் போது மட்டும்தான் இந்த கோபுர வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் மூடப் பட்டு இருக்கும்.
3. திருமஞ்சன கோபுரம்
திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு பகுதியில் உள்ள பெரிய கோபுரம் இது. 157 அடி உயரத்தில் அமைந்த இந்த ஆலயத்தை கட்டியவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதும் தெரியவில்லை. இது ஒரு சிறப்புக்குரிய நுழைவு வாசல் ஆகும். ஏனெனில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரண்டு விழாக்களின் போதும், இந்த கோபுரத்தின் வழியாகத்தான், நடராஜர் வெளியே வந்து திருவீதி உலா செல்வார். திருவீதி உலா முடிந்தும், கோவிலுக்குள் செல்வதும் இந்த வழியாகத்தான். முன் காலத்தில் இறைவனுக்கு திருமஞ்சனம் செய்வதற்கான புனித நீரை, இந்த வாசல் வழியாகத்தான் யானை மீது வைத்து உள்ளே எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனாலேயே இந்த வாசல் கோபுரத்திற்கு ‘திருமஞ்சன கோபுரம்’ என்று பெயர் வந்ததாம்.
4. அம்மணி அம்மாள் கோபுரம்
திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு பகுதியில் அமைந்த பெரிய கோபுரம் இது. திருவண்ணாமலை பகுதியில் வாழ்ந்த ஒரு பெண் சித்தரின் முயற்சியால் கட்டப்பட்டதாகும். சிவபெருமானே இவரது கனவில் வந்து, வடக்கு ராஜகோபுரத்தைக் கட்டும்படி உத்தரவிட்டார். இதனால் பலரிடம் நன்கொடை பெற்று இந்தப் பணியை அம்மணி அம்மாள் செய்து வந்தார். 5 நிலைகள் கட்டப்பட்ட நிலையில் பணம் தேவைப்பட்டது. அப்போது சிவபெருமானே, பணம் கிடைக்க அருளினார். மீண்டும் சித்தரின் கனவில் வந்து, ‘பணியாட்களுக்கு விபூதியை ஊதியமாகக் கொடு, மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார். அதன்படியே கட்டிட வேலையைத் தொடங்கிய அம்மணி அம்மாள், அதில் பணியாற்றியவர்களுக்கு, ஊதியமாக விபூதியை வழங்கினார். விபூதியை பெற்றவர்கள் வீட்டிற்குச் சென்று பிரித்து பார்த்தபோது, அன்று அவர்கள் வேலை பார்த்ததற்கான ஊதியத் தொகை சரியாக இருந்தது. இப்படி முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட இந்த வடக்கு ராஜகோபுரத்தின் உயரம் 171 அடி ஆகும். கிழக்கு பிரதான ராஜகோபுரத்தைப் போலவே 11 நிலைகளுடன், 13 கலங்களுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இது. அம்மணி அம்மாளின் பெரு முயற்சியால் நிறைவேறிய காரணத்தால், இந்த கோபுரத்திற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.
5. வல்லாள மகாராஜா கோபுரம்
1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு வரை, இந்த கோபுரத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதாக கல்வெட்டு குறிப்புகள் சொல்கின்றன. இதனை கட்டியவர், வீர வல்லாள மகாராஜா. கிழக்கு ராஜகோபுரத்தைத் தாண்டியதும் வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். இந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. இதனால் வருந்திய மன்னனின் கனவில் வந்த சிவபெருமான், தானே மகனாக இருந்து அனைத்து காரியங்களையும் செய்வதாக வாக்களித்தார். அதன்படியே, வல்லாள மகாராஜா இறந்த வேளையில், அவருக்கு சிவபெருமானே இறுதிச் சடங்கை செய்ததாக ஐதீகம். இன்றும் மாசி மாதம் நடைபெறும் நிகழ்வில், மன்னனுக்கு ஈசன் திதி கொடுக்கும் வைபவம் நடத்தப்படுகிறது.
6. கிளி கோபுரம்
திருவண்ணாமலை கோவிலில் உள்ள கோபுரங்களிலேயே மிகவும் பழமையானதாக இந்த கோபுரம் கருதப்படுகிறது. இதனை 1053-ம் ஆண்டு, ராஜேந்திரச் சோழன் கட்டியுள்ளார். சுமார் 81 அடி உயரம் கொண்டது இந்த கோபுரம். வல்லாள மகாராஜா கோபுரத்திற்கு அடுத்தபடியாக இருக்கிறது. முருகப்பெருமானின் புகழைப்பாடிய அருணகிரிநாதா் பிறந்த திருத்தலம் இது. இவர் ஆரம்ப காலத்தில் பெண் பித்தராக இருந்தார். ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்த அவர், இந்த கோபுரத்தின் மீது இருந்து குதித்து தற்கொலை செய்ய துணிந்தார். அப்போது முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். இப்பகுதியை ஆண்ட மன்னனுக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க தேவலோகத்தில் உள்ள மலர் தேவை என்றும், அதனைக்கொண்டு வர அருணகிரிநாதரால்தான் முடியும் என்றும், மன்னனின் ஆலோசகராக இருந்த சம்பந்தாண்டான் கூறினான். இதனை நம்பி, கூடுவிட்டு கூடு பாயும் வித்தையால், தன்னுடைய ஆன்மாவை, இறந்து போன ஒரு கிளியின் உடலுக்குள் செலுத்திக்கொண்டு, தேவலோகம் சென்றார், அருண கிரியார். அதற்குள் அருணகிரியார் மீது பொறாமை கொண்டிருந்த சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்துவிட்டான். இதனால் கிளி உருவத்திலேயே அந்த கோபுரத்தில் தங்கினார் அருணகிரியார். இதனால் இது ‘கிளி கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.
7. தெற்கு கட்டை கோபுரம்
திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் ‘தெற்கு கட்டை கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன.
8. மேற்கு கட்டை கோபுரம்
பேய் கோபுரத்திற்கு அடுத்தபடியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.
9. வடக்கு கட்டை கோபுரம்
அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.