என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    • சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது.
    • 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராக இருந்தபோது, பாராளுமன்றத்தைவிட அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்க வகை செய்யும் 20-ஏ சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

    அந்நாட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.

    அதன்பின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அதிபருக்கான அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தில் 21ஏ சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 21-ஏ என்ற பெயரிலான அரசியல் சாசன 22-வது திருத்த வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து கடந்த ஆகஸ்டு மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

    இந்த சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது.

    இந்த மசோதா மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இதையடுத்து அந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் இலங்கை அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் இந்த எம்.பி.க்கள் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்திய உணவுக் கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    11 எம்.பி.க்கள் கொண்ட பாராளுமன்ற குழு இன்று மாலை கார் மூலம் கன்னியாகுமரி வருகிறது.

    இந்த குழுவில் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளும் வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் இந்த எம்.பி.க்கள் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் இந்த எம்.பி.க்கள் குழுவினர் கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையத்துக்கு செல்கிறார்கள். அங்கு நடைபெற்று வரும் ரெயில் நிலைய விரிவாக்க பணிகளை எம்.பி.க்கள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்திய உணவுக் கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்கள். இரவு கன்னியாகுமரியில் இந்த குழுவினர் தங்குகிறார்கள்.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) எம்.பி.க்கள் குழுவினர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனி படகில் சென்று பார்வை யிடுகிறார்கள்.

    அதன் பிறகு இந்த எம்.பி.க்கள் குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்கள்.

    • மொத்தம் 2,50,319 பெண் தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
    • இத்திட்டத்திற்கான கால அளவு 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தெரிவித்துள்ளதாவது:

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

    இவற்றுள், அவசரக் கடன் உதவித் திட்டத்தின்கீழ், ரூ.5 லட்சம் கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான கால அளவு 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெருவோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டம், இலவசக் கடன் உதவியை எளிதாக்குகிறது.

    கடன் உத்தரவாத திட்டம், கடன் வழங்கும் முறையை எளிதாக்குதல், எளிதாக்கவும், பிணையத்தொகை மற்றும் இடைத்தரகர் உள்ளிட்ட பிரச்சினைகளின்றி அதிகபட்சமாக ரூ.200 லட்சம் வழங்கப்படுகிறது.

    03.08.2022 அன்றைய நிலவரப்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் இணையப்பக்கத்தில், மகளிரால் பதிவு செய்யப்பட்ட 17,96,408 தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    2008-09-ம் ஆண்டில், பிரதமரின் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 02.08.2022 வரை, மொத்தம் 2, 50, 319 பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

    2000-ம் ஆண்டில், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 30.06.2022 அன்றைய நிலவரப்படி, மொத்தம் 11,92,689 மகளிருக்கு கடன் உத்தரவாதத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இதுவரை 9.94 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

    2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ஜல்ஜீவன் இயக்கத்தை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது 3.23 கோடி வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது.

    கடந்த 36 மாதங்களில் மேலும் 6.70 கோடி ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 19.11 கோடி ஊரகப்பகுதி வீடுகள் உள்ள நிலையில், அதில் 9.94 கோடி (51.99%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கியது.
    • இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத் தொடரில் அக்னிபாத், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. கடும் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. வரும் 12-ம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில் முன்னதாகவே நிறைவடைந்துள்ளது.

    இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    • நாட்டின் ஜனநாயகம் மூச்சு திணறுகிறது
    • ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான மோதலால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் விலைவாசி உயர்வு-வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிரான காங்கிரஸ் போராட்டம், கட்சி தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை விசாரணை, பாராளுமன்றம் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் ஜனநாயக நிறுவனங்கள் அடக்கப்பட்டு இருக்கின்றன அல்லது ஏமாற்றப்பட்டு உள்ளன அல்லது கைப்பற்றப்பட்டுள்ளன. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களுக்கும் இதுதான் நிலைமை.

    நாட்டின் ஜனநாயகம் மூச்சு திணறுகிறது. இதைத்தான் ராகுல் காந்தியும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

    பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதில் இருந்து அவரை பாதுகாக்க அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தவறிவிட்டார்.

    ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான மோதலால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. அந்த வகையில் பாராளுமன்றம் செயலிழந்து விட்டது என்ற முடிவுக்கு வருத்தத்துடன் வந்திருக்கிறேன்.

    இதற்கு ஒரே காரணம் பேச்சுவார்த்தை, விவாதம் மற்றும் ஆலோசனையில் ஆளுங்கட்சியினருக்கு ஆர்வம் இல்லை.

    விலைவாசி உயர்வு குறித்து முதல்நாளே விவாதம் நடத்த அரசு ஒப்புக்கொண்டிருந்தால், ஒரே நாளில் விவாதம் முடிந்திருக்கும். மாறாக 2 வாரங்களை வீணடித்தோம்.

    விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவைதான் எங்கள் கவலை. இவை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தியுள்ளன. விலைவாசியை குறைக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துரைக்க நிதி மந்திரி கடமைப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் செய்யவில்லை.

    பணவீக்கம் அதிகரிப்பு பிரச்சினையில் அதிக தனிநபர் வருமானமும், சேமிப்பும் கொண்ட அமெரிக்காவுடன், குறைந்த தனிநபர் வருமானமும், சேமிப்பும் கொண்ட இந்தியாவை நிதி மந்திரி ஒப்பிடுவது கேவலமானது.

    இவ்வாறு ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

    ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட தினத்தில் (ஆகஸ்டு 5) விலைவாசி உயர்வு தொடர்பாக காங்கிரஸ் போராட்டம் நடத்தியிருப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருக்கும் குற்றச்சாட்டை ப.சிதம்பரம் நிராகரித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'துணை ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து எம்.பி.க்களும் டெல்லியில் இருக்கும் நாள் பார்த்து அந்த போராட்டம் திட்டமிடப்பட்டது. மேலும், ஆகஸ்டு 5-ந் தேதி தான் ஜம்மு காஷ்மீர் சட்ட விரோதமாக துண்டாடப்பட்டது. ஒரு தீவிரமான பிரச்சினையை விவாதிக்கும்போது இவற்றை விட்டுவிடுவோம்' என்று தெரிவித்தார்.

    • நேஷனல் ஹெரால்டு வழக்கில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
    • குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்து உறுப்பினர்கள் விலக்கு பெற முடியாது.

    புதுடெல்லி :

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    இதை மாநிலங்களவையில் எழுப்பிய அவர், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது சம்மன் அனுப்புவது அழகா? என கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகளும் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன.

    இந்த விவகாரத்தில் மாநிலங்களவையில் அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நேற்று விளக்கம் ஒன்றை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு இருப்பதாக உறுப்பினர்களிடையே ஒரு தவறான கருத்து இருக்கிறது. அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    அதாவது பாராளுமன்ற தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு குற்ற வழக்கில் கைதாவதில் இருந்து ஒரு எம்.பி.க்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை.

    அந்தவகையில் பாராளுமன்ற தொடரின்போதும் குற்ற வழக்குகளில் எம்.பி.க்களை விசாரணை அமைப்புகளால் கைது செய்யவோ, தடுப்புக்காவலில் வைக்கவோ முடியும்.

    மேலும் குற்ற வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்தும் உறுப்பினர்களுக்கு விலக்களித்து சிறப்புரிமை அளிக்கப்படவில்லை. பாராளுமன்ற அலுவல்களை காரணம் காட்டி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்து உறுப்பினர்கள் விலக்கு பெற முடியாது.

    அதேநேரம் பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது சிவில் வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து எம்.பி.க்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

    • கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர் கேள்வி.
    • மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தகவலை கூறி மத்திய மந்திரி விளக்கம்.

    கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகள் இடையிலேயே கல்வியை கைவிடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இரானி அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், நாடு முழுவதும் ஆரம்ப பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்பட அனைத்து கல்வி நிலைகளிலும் பள்ளி மாணவர்கள் இடையிலேயே கல்வியை கைவிடும் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    அனைத்து கல்வி நிலையிலும் பள்ளி இடை நிற்றல் விகிதம் குறைந்து வருவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி உள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும்.
    • விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

    பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். வங்கிகள், நிதி நிறுவனங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் மட்டுமே பதிவு  செய்யப்படும்.

    விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பிரீமியம் தொகை, பிரீமியம் தொகையை எவ்வாறு செலுத்துவது மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட விவரங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    விவசாயிகள் யாரும் விடுபடாத வகையில், அவர்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்காக, வங்கிகளுக்கு கடைசி தேதியிலிருந்து 15 நாள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தரவு பாதுகாப்பு மசோதா கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
    • பாராளுமன்ற கூட்டுக்குழுவின அறிக்கை 2021, டிசம்பர் 16ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது

    புதுடெல்லி:

    தனிநபர்களின் தனிப்பட்ட தரவு தொடர்பான டிஜிட்டல் தனியுரிமையை பாதுகாக்க வகை செய்யும் தரவு பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் இருந்து மத்திய அரசு இன்று திரும்பப் பெற்றது. இந்த மசோதா கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த மசோதா, பாராளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது அந்த குழுவின் அறிக்கை 2021ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், தரவு பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெறுவதாக தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

    • பரிசோதனை திறனை கணிசமாக அதிகரிக்க புதிய சட்டம் உதவும் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தகவல்
    • தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதாவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா-2022 கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி அனுராக் தாகூர் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது.

    விவாதத்திற்கு பதிலளித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் பேசினார். அப்போது, தற்போது நாட்டில் ஆண்டுக்கு 6,000 பரிசோதனைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும், இந்த பரிசோதனை திறனை கணிசமாக அதிகரிக்க புதிய சட்டம் உதவும் என்றார்.

    'எந்தவொரு பெரிய சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துதாக இருந்தாலும், ஒரு மாதத்திற்கு 10,000 சோதனைகள் மேற்கொள்ளவேண்டியிருக்கும். இந்த மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம், விளையாட்டுகளில் ஊக்கமருந்து தடுப்பு தொடர்பான சட்டங்களை கொண்டுள்ள அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேரும்' என்றார் அனுராக் தாக்கூர்.

    விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

    தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மக்களவையில் பாராட்டு.
    • எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று போராட்டம்.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் இளைஞர்களுக்கு அவர்கள் உத்வேகமாக இருப்பதாக கூறினார்.

    தொடர்ந்து கேள்வி நேரம் எடுக்கப்பட்ட நிலையில், ​​காங்கிரஸ் உறுப்பினர்கள் நான்கு பேரின் இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கோரி அக்கட்சியின் எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பினர். அவையின் மையப் பகுதிக்கு வந்த அவர்கள் குரல் எழுப்பியதை கண்ட சபாநாயகர் இருக்கைகளுக்குச் சென்று அமருமாறும், சபையை நடத்த அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

    எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக, பாராளுமன்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குற்றம் சாட்டினார். எனினும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததை அடுத்து அவை முதலில் நண்பகல் 12 மணி வரையும் பின்னர் 2 மணிவரையும் ஒத்தி வைக்கப்பட்டது.

    இதேபோல் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது விவகாரத்தை பாராளுமன்ற மாநிலங்களவையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் எழுப்பினர். இந்த விவகாரத்திற்கும், சபைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், உறுப்பினர்கள் இருக்கைகளுக்குச் செல்லுமாறு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, கேட்டுக் கொண்டார்.

    மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று குரல் எழுப்பியதை அடுத்து, நண்பகல் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

    ×