search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94667"

    தமிழக வனத்துறை அதிகாரிகளை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை தமிழக அரசு விட்டுவிடக்கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பகுதியில் தொடர்வண்டி பாதையை கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது வெள்ளிக்கிழமை இரவு கர்நாடகத்தின் மங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விரைவு தொடர்வண்டி மோதியதில் ஒரு தாய் யானை மற்றும் இரு குட்டிகள் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன.

    அதிக வேகத்தில் தொடர்வண்டி வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்வண்டி ஓட்டுனர்கள் இருவரை கைது செய்த தமிழ்நாடு வனத்துறையினர், தொடர்வண்டி எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த வேகம் காட்டும் சிப்’பை பறிமுதல் செய்தனர். அதில் பதிவாகியிருந்த விபரங்களை அறிவதற்காக அவர்கள் பாலக்காடு தொடர்வண்டி நிலையத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்காத ஆர்.பி.எப் அதிகாரிகள், வனத்துறையினர் நால்வரை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர்.

    வனத்துறை அதிகாரிகளை விடுதலை செய்யும்படி தமிழக வனத்துறை உயரதிகாரிகள் கோரியும் அதை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் ஏற்கவில்லை. யானைகள் மீது தொடர்வண்டியை மோதியதற்காக கைது செய்யப்பட்ட இரு ஓட்டுனர்களை தமிழக வனத்துறையினர் விடுதலை செய்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட சிப்பை ஒப்படைத்த பிறகு தான் வனத்துறை அதிகாரிகள் குழுவை ஆர்.பி.எப் விடுவித்திருக்கிறது.

    இந்த மோதலை வனத்துறையினருக்கும், தொடர்வண்டி பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலாக பார்க்க முடியாது. கைது செய்யப்பட்ட ஓட்டுனர்களும், தொடர்வண்டி பாதுகாப்புப் படையினரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். வனத்துறை அதிகாரிகள் குழுவில் இருந்த நால்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கேரளத்தைச் சேர்ந்த தொடர்வண்டி ஓட்டுனர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் எவ்வாறு கைது செய்யலாம்? என்ற தன்முனைப்பு தான் இந்த மோதலுக்குக் காரணமாகும்.

    கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களின் தன்முனைப்புக்காக, விசாரணைக்காக சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து சட்ட விரோதக் காவலில் வைத்ததும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் நியாயப்படுத்த முடியாதவை. இது தமிழக அரசின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும்.

    தொடர்வண்டி பாதுகாப்புப் படையினரின் அத்துமீறலுக்கு பணிந்து தொடர்வண்டியின் ஓட்டுனர்கள் இருவரை வனத்துறை அதிகாரிகள் விடுவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். தமிழக வனத்துறை அதிகாரிகளை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை தமிழக அரசு விட்டுவிடக்கூடாது.

    இதற்குக் காரணமான தொடர்வண்டி பாதுகாப்புப் படை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். தொடர்வண்டித்துறை நிர்வாகத்திடம் இது குறித்து புகார் செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதையும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் வாக்கெடுப்பு, நடத்தி முறைப்படி அன்புமணியை தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
    சென்னை:

    பா.ம.க.வுக்கு சட்டசபையில் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க. கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.  அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற செயல்திட்டத்தை வகுத்து பா.ம.க. காய்களை நகர்த்த தொடங்கி உள்ளது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் பேசும்போது, அடுத்த தேர்தலில் அன்புமணி தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.

    எம்.பி.யாக இருக்கும் அன்புமணி கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் இருக்கிறார்.

    அன்புமணியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் இளைஞர்கள் அதிலும் குறிப்பாக அன்புமணி தலைமையில் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பவர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகிறார்கள்.

    சமீபத்தில் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவி ஒழிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.

    அதை தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மெஜாரிட்டியான நிர்வாகிகள் அன்புமணியின் இளைஞர் அணியை சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    நியமனம் செய்யப்பட்டபோது அன்புமணி முதல்வராக வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    அதற்கு ஏற்றவாறு கட்சி தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜி.கே.மணி

    தற்போது மாநில தலைவராக இருக்கும் ஜி.கே.மணி சட்டமன்ற பா.ம.க. குழு தலைவராக இருக்கிறார். அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டால் ஜி.கே.மணிக்கும் முக்கியமான பதவி வழங்க முடிவு செய்துள்ளனர்.

    கட்சியின் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் வாக்கெடுப்பு, நடத்தி முறைப்படி அன்புமணியை தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறுகிறார்கள்.


    வருகின்ற தேர்தலில் புதுச்சேரியில் பா.ம.க. தனித்து போட்டியிட வேண்டும். ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்போம் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
    காலாப்பட்டு:

    புதுச்சேரி மாநில பா.ம.க. செயற்குழு கூட்டம் கோரிமேட்டில் உள்ள சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியின் பிராந்தியமான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். ஆனால் யார் யாரோ வளர்ந்து ஆளாகின்றனர். அவர்களை நான் குறை கூறவில்லை. தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிக்கிறது.

    புதுச்சேரி சிறிய மாநிலம், ஆனால் ஏன் 4 அல்லது 5 தொகுதிகளில் நின்று வெற்றிபெறும் அளவிற்கு வேலை செய்யவில்லை. கடந்த கால புதுச்சேரி வரலாற்றை பார்க்கும் போது அவ்வளவு கஷ்டப்பட்டேன்.

    புதுச்சேரியை அப்படியே விட்டு விட்டீர்களே என தொலைபேசியில் சிலர் தொடர்பு கொண்டு கேட்பார்கள். கூட்டணியில் இருந்தாலும் கூட நலினமாக தி.மு.க.வை விமர்சனம் செய்வேன். அதற்கு கலைஞர் தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது என பதில் சொல்வார்.

    பாமக

    அதேபோல் புதுச்சேரிக்கு அதிக அளவில் தைலம் அனுப்பினேன். அதனால் பயனில்லை. புதுச்சேரியில் என்னை கொலை செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் பாதுகாவலர்களால் தப்பித்தேன்.

    நிர்வாகிகளை கேட்டுக்கொள்வதெல்லாம் பா.ம.க. புத்துயிர் பெற்று புதுவையில் 3, காரைக்காலில் 2 என 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற வேண்டும். இதற்காக வீடு வீடாக சென்றும், சமூக ஊடகத்தின் மூலமாகவும் பிரசாரம் செய்ய வேண்டும். 10 நபர்களாக சென்று பிரசாரம் செய்யுங்கள். வருகின்ற தேர்தலில் புதுச்சேரியில் பா.ம.க. தனித்து போட்டியிட வேண்டும். ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்போம்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

    கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களை சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


    அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்க வேண்டும். அன்புமணிக்கு என்ன குறை உள்ளது. அவர் திறமையானவர் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
    திண்டிவனம்:

    திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கூறியதாவது:-

    தேர்தலில் தனியாக நிற்க வேண்டாம், நம்மிடம் சக்தி இல்லை, சக்தி இழந்து கிடக்கிறோம், ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என நீங்கள் வற்புறுத்தினீர்கள். இதனால் மாறி, மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து 20 எம்.எல்.ஏ.க்கள், 25 எம்.எல்.ஏ.க்கள், 18 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள், 10 ஆண்டு காலம் 2 மத்திய அமைச்சர்கள் என பா.ம.க.வின் பலம் செல்வாக்கு உயர்ந்தது. அப்போது நீங்கள் சொன்னீர்கள் தனியாக நிற்க வேண்டாம் என நாங்கள் சொன்னது சரிதான் என்று.

    தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் 5 தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளோம்.

    உள்ளூர் புரிதலுக்கு விட்டுக்கொடுப்பது என தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பா.ம.க.வுக்கு குழி பறித்தனர். இதனால் 2 தொகுதிகளை இழந்தோம். அந்த தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கும். அந்த வியாதி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது. இது தொடராமல் தடுப்பதற்கு ஒரே வழி திண்ணை பிரசாரம், சோசியல் மீடியா (செல்போன்) மூலமாக பிரசாரம் செய்வது தான்.

    கட்சியில் ஒரு சில பகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவதற்கு கூட ஆள் இல்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பலம் இழந்து விடுவோம். நம்முடைய பகுதியை மட்டும் சொல்லவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள நிலையைத்தான் சொல்கிறேன்.

    ஏன் இந்த பின்னடைவு, பா.ம.க. தொண்டர்களின் வீரம், மானம் எங்கே போனது? பா.ம.க.வின் தொண்டனாக எப்போதும் இருப்பேன். உயிரே போனாலும் காசு வாங்க மாட்டேன் என்று இருப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

    அன்புமணி ராமதாஸ்

    அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்க வேண்டும். அன்புமணிக்கு என்ன குறை உள்ளது. அவர் திறமையானவர். அவரது தலைமையில் பா.ம.க.வின் ஆட்சி அமைய வேண்டும்.

    ஊர் ஊராகச் சென்று திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். சோசியல் மீடியா கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும்.

    நமது கட்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும். எந்த கட்சிக்கும் சொந்தமில்லை, பந்தமில்லை. ஆனால் பா.ம.க.வுக்கு சொந்த பந்தம் உண்டு. அனைவரும் அன்புமணியின் தம்பிகள், தங்கைகள் என அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். வருங்காலம் நமதாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கு விடிவுகாலமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ரெயில்களை தனியார்மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும் என்றும் மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக் கூடாது என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்னக ரெயில்வே சார்பில் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டிலிருந்தும் இயக்கப்படும் 13 எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதன் மூலம் ரெயில் சேவையை ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து தட்டிப் பறிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.

    அகில இந்திய அளவில் கூட தில்லியிலும், மும்பையிலும் சில ரெயில்களை மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. தனியார்மயமாக்கப்படவிருந்த ரெயில்களில் 95 சதவீதத்துக்கும் கூடுதலானவற்றை ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

    உண்மையில், ரெயில்களை தனியார் மயமாக்க நினைத்த மத்திய அரசுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால், நீண்ட தொலைவு பயணத்திற்கு ரெயில்களையே நம்பியிருக்கும் மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி தான். ரெயில்கள் தனியார்மயமாகி விடக்கூடாது என்பது தான் பெரும்பான்மையினரின் விருப்பம்.

    ரெயில்களை தனியார் மயமாக்கும் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும் அது தற்காலிகமானது தான். ரெயில்கள் தனியார்மயமாக்கப்படும் வாய்ப்புகள் இன்னும் முழுமையாக விலகவில்லை என்பது தான் உண்மை. வருவாய் பகிர்வு நிபந்தனையை மத்திய அரசு தளர்த்தினாலோ, பெரும்பான்மை ரெயில்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முன்வந்தாலோ நிலைமை தலைகீழாக மாறிவிடும்.

    அதன்பின்னர் தனியார் நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்பதால், ரெயில்வே துறை தனியார் பெரு நிறுவனங்களின் லாப வேட்டைக்காடாகிவிடும். அவற்றின் ஆதிக்கத்தை யாராலும் தடுக்க முடியாது.

    ரெயில்களை இயக்க தனியார் நிறுவனங்கள் முன்வராததைக் காரணம் காட்டி, வருவாய் பகிர்வு நிபந்தனையை ரத்து செய்யவும், அதிக எண்ணிக்கையிலான ரெயில்களை தனியார் மயமாக்கவும் மத்திய அரசு முன்வரக்கூடும். அது மக்களுக்கோ, மத்திய அரசுக்கோ நன்மையளிப்பதாக இருக்காது.

    மாறாக, தனியார் நிறுவனங்கள் இந்திய மக்களையும், ரெயில்வே துறையின் கட்டமைப்புகளையும் சுரண்டுவதற்கே வழிவகுக்கும். எனவே, ரெயில்களை தனியார்மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும்; மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    நடிகர் சூர்யாவை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    ஈரோடு:

    நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பா.ம.க சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தா.ப.பரமேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

    நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை அவதூறுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு நடிகர் சூர்யா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவர் செயல்படுவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், துணைத்தலைவர் பெருமாள், துணைச்செயலாளர் கணேஷ், நிர்வாகிகள் மூர்த்தி, முருகேசன், பாலா, கோவிந்தன் உள்பட பலர் உடனிருந்தனர். 

    நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பா.ம.க.வினர் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் எம்.கே.முரளி தலைமையில் இதுகுறித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த அமேசான் வெளியிட்ட திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம் 1995 ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் படமெடுத்த நடிகர் சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோரை கைதுசெய்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர்கள் கூறியிருந்தனர்.

    அப்போது பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், சமூக நீதிப்பேரவை மாநில துணை செயலாளர் வக்கீல் ஜானகிராமன், வாலாஜா மத்திய ஒன்றிய செயலாளர் சபரி கிரீசன் உள்பட பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இதேபோல் ஜெய்பீம் படத்தை கண்டித்து ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் சோளிங்கர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ம.க.முன்னாள் மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், சமூக சமூக நீதிப் பேரவை துணைச் செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் சென்று சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.

    பாணாவரம் போலீஸ் நிலையத்திலும் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் மனு அளித்தனர். அப்போது போலீஸ் நிலையம் எதிரில் நடிகர் சூர்யா உருவ பொம்மையை அவர்கள் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ேபாலீசார் அதனை தடுத்து பா.ம.க.வினரிடமிருந்து உருவபொம்மையை பிடுங்கிச்சென்றனர்.

    இதே பிரச்சினையை கண்டித்து அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர், அவர்கள் அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று திரைப்படத்தில் நடித்த சூர்யா தயாரிப்பாளர் ஜோதிகா இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு கூறி மனு அளித்தனர்.

    ஆற்காடு நகர பா.ம.க. சார்பில் நகர செயலாளர் அறிவுச்சுடர் தலைமையில் மாநில பசுமை தாயகம் பொறுப்பாளர் டி.டி.மகேந்திரன், நகர தலைவர் சஞ்சீவிராயன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஏ.வி.டி.பாலா நகர துணை செயலாளர் ராமன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆற்காடு டவுன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    வாலாஜா போலீஸ் நிலையத்தில் பா.ம.க. நகர செயலாளர் ஞானசேகர் தலைமையில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர்் ஞானவேல் ஆகியோரை கைது செய்ய கோரி புகார் மனு அளித்தனர்.

    அப்போது நகர தலைவர் சுரேந்தர், ஒன்றிய செயலாளர்கள் ரவி, ரஜினிசக்ரவர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பூண்டி மோகன், மாநில நிர்வாகி ஞானசவுந்தரி உள்பட பலர் உடனிருந்தனர்.
    மிதிவண்டிகளில் பயணிப்பதால் நமக்கும் சமூகத்திற்கும் ஏராளமான பயன்கள் கிடைப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலக ஊழியர்கள் நேற்று மிதிவண்டியில் அல்லது பொதுப்போக்குவரத்து மூலம் அலுவலகம் வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மதித்து வாரியத்தின் தலைவர் உதயன் நேற்று தமது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு மிதிவண்டியில் பயணம் செய்திருக்கிறார்.

    பெரும்பான்மையான ஊழியர்கள் மிதிவண்டிகள் மூலமாகவும், வெகுதொலைவிலிருந்து வரும் பணியாளர்கள் பொதுப்போக்குவரத்து மூலமும் அலுவலகம் சென்றுள்ளனர். இந்த சிறிய முயற்சி மூலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் காற்று  மாசு 20 சதவீதம் குறைந்திருக்கிறது.

    மிதிவண்டிகளில் பயணிப்பதால் நமக்கும் சமூகத்திற்கும் ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன. இந்திய அளவில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின்படி இருசக்கர மற்றும் நான்கு சக்கர ஊர்திகளை பயன்படுத்துவோரில் 50 விழுக்காட்டினர் குறைந்த தூர பயணத்திற்கு மிதிவண்டிகளை பயன்படுத்தத் தொடங்கினால் ஆண்டுக்கு ரூ.2,700 கோடி எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும்.

    அதுமட்டுமின்றி, இப்போது மகிழுந்துகள், இரு சக்கர ஊர்திகளை பயன்படுத்துவோர் 8 கி.மீ.க்கும் குறைவான தூரத்துக்கு பயணிக்க, ஆண்டுக்கு 240 நாட்கள் மிதிவண்டிகளை பயன்படுத்துவதால் 10 ஆண்டுகளில் கிடைக்கும் மருத்துவப் பயன்களின் மதிப்பு மட்டும் ரூ.4.76 லட்சம் கோடி (ஆண்டுக்கு ரூ.47,670 கோடி), காற்று மாசு தடுக்கப்படுவதால் கிடைக்கும் பயன்கள் ரூ.24,100 கோடி ஆகும்.

    மிதிவண்டிகள் ஏழைகளுக்கும் நன்மை தருகின்றன. ஏழை மக்கள் 3.5 கி.மீ தொலைவு வரை நடப்பதற்கு பதிலாக மிதிவண்டியில் பயணிப்பதால் மிச்சமாகும் உழைப்பு நேரத்தின் மதிப்பு ரூ.11,200 கோடி என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    இந்த புள்ளிவிவரங்களின் படி பார்த்தால் மிதிவண்டி புரட்சி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.85,670 கோடியை மிச்சப்படுத்த முடியும்.

    இவை அனைத்துக்கும் மேலாக நமது சந்ததிகள் இந்த பூமியில் வாழ்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மிதிவண்டி அவசியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    முன்பதிவு செய்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்பித் தரப்படாது என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது நியாயமல்ல என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன. சிறப்பு ரெயில்களுக்கான கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 30 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி, மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான 50 சதவீதம் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டு, முழுமையான கட்டணம், அதுவும் உயர்த்தப்பட்ட சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. சிறப்பு ரெயில்களில் சலுகை வழங்க முடியாது என்பதைக் காரணம்காட்டி இது நியாயப்படுத்தப்பட்டது.

    கொரோனா பாதிப்பு காலத்திற்கு முந்தைய கால அட்டவணைப்படி சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும், இப்போது வழக்கமான ரெயில்களாக அறிவிக்கப்பட்டுவிட்டன.

    முன்பதிவு செய்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்பித் தரப்படாது என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது நியாயமல்ல.

    ரெயில் கட்டணம் என்பது பயணத் தேதிக்கான கட்டணத்தையே குறிக்கும். கடந்த காலங்களில் ரெயில் கட்டணம் பலமுறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கட்டண உயர்வு நடைமுறைபடுத்தப்படும் நாளுக்கு முன்னர் முன்பதிவு செய்தவர்கள், பயணம் செய்யும் போது உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கும், அவர்கள் முன்பதிவின் போது செலுத்திய தொகைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை வசூலிக்கப்படும்.

    அது எவ்வாறு நியாயமோ, அதேபோல், பயணக் கட்டணம் குறைக்கப்படும் போதும், முன்பதிவின் போது கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு, அவ்வாறு கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை திருப்பித் தருவது தான் முறை. தொடர்வண்டித்துறை அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பாக முன்பதிவு செய்து விட்டார்கள் என்பதற்காக அவர்களை தண்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தரக்கோரி மன்னார்குடியில் கொட்டும் மழையில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    மன்னார்குடி:

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தர தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பில் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபாலன் கலந்து கொண்டு பேசினார். இதில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், பா.ம.க மாவட்ட துணை செயலாளர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர் வினோத், மன்னார்குடி நகர துணை செயலாளர் கருணாநிதி, நகர இளைஞரணி தலைவர் வசந்த், வன்னியர் நகர செயலாளர் அரவிந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    வன்னியர்களுக்கு உரிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தின்போது மழை கொட்டியது. அதில் நனைந்தபடி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    மாவட்ட தலைவர்கள் இதற்குரிய பணிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் விருப்பமனுக்களை பெற வேண்டும்.
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் 7-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விருப்பமனுக்கள் அளிக்கலாம். 7-ந் தேதி சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான மனுக்கள் வழங்கலை நான் தொடங்கிவைக்கிறேன். இதர மாநகராட்சிகளில் 10-ந் தேதி காலை முதல் மாநில நிர்வாகிகள் நேரில் சென்று விருப்பமனுக்களை பெற உள்ளார்கள். நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான விருப்பமனுக்கள் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பெறப்படும். விருப்பமனு பரிசீலனைக்கு பிறகு இறுதியாக வேட்பாளர் தேர்வு நடைபெற இருக்கிறது.

    அந்தந்த மாவட்ட தலைவர்கள் இதற்குரிய பணிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் விருப்பமனுக்களை பெற வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு கருணைத் தொகை, முன் பணம் வழங்க அதிக செலவாகாது என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு பள்ளிகளில் மிகக்குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தீப ஒளி திருநாள் கொண்டாட பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

    பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. மே மாதத்துக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பல ஆண்டுகளாக பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. போனஸ், கருணைத் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை.

    தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு கருணைத் தொகை, முன் பணம் வழங்க அதிக செலவாகாது. ஆனால், அது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கும். எனவே அவர்களுக்கு அரசு கருணைத்தொகை, முன் பணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    ×