search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    கூடுதலாக வசூலித்த கட்டணத்தை ரெயில்வே துறை திருப்பி தர வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

    முன்பதிவு செய்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்பித் தரப்படாது என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது நியாயமல்ல என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன. சிறப்பு ரெயில்களுக்கான கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 30 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி, மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான 50 சதவீதம் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டு, முழுமையான கட்டணம், அதுவும் உயர்த்தப்பட்ட சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. சிறப்பு ரெயில்களில் சலுகை வழங்க முடியாது என்பதைக் காரணம்காட்டி இது நியாயப்படுத்தப்பட்டது.

    கொரோனா பாதிப்பு காலத்திற்கு முந்தைய கால அட்டவணைப்படி சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும், இப்போது வழக்கமான ரெயில்களாக அறிவிக்கப்பட்டுவிட்டன.

    முன்பதிவு செய்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்பித் தரப்படாது என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது நியாயமல்ல.

    ரெயில் கட்டணம் என்பது பயணத் தேதிக்கான கட்டணத்தையே குறிக்கும். கடந்த காலங்களில் ரெயில் கட்டணம் பலமுறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கட்டண உயர்வு நடைமுறைபடுத்தப்படும் நாளுக்கு முன்னர் முன்பதிவு செய்தவர்கள், பயணம் செய்யும் போது உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கும், அவர்கள் முன்பதிவின் போது செலுத்திய தொகைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை வசூலிக்கப்படும்.

    அது எவ்வாறு நியாயமோ, அதேபோல், பயணக் கட்டணம் குறைக்கப்படும் போதும், முன்பதிவின் போது கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு, அவ்வாறு கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை திருப்பித் தருவது தான் முறை. தொடர்வண்டித்துறை அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பாக முன்பதிவு செய்து விட்டார்கள் என்பதற்காக அவர்களை தண்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×