என் மலர்
நீங்கள் தேடியது "slug 94677"
- தொண்டர்களுக்கு என்னை பற்றி தெரியும்.
- பாவத்தை அவர்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள்.
அவனியாபுரம்:
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேவர் தங்க கவச விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சிலர் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. எனவே அதை பற்றி கருத்து சொல்ல விருப்பம் இல்லை.
ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? என்று நாட்டு மக்களுக்கு தெரியும். தொண்டர்களுக்கு என்னை பற்றி தெரியும். பாவத்தை அவர்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள். அ.தி.மு.க. உறுதியாக இணைய வேண்டும் என்பதே என் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாஸ்கரன், முருகேசன், ஸ்ரீராம் ரங்கராஜன், வேல்முருகன், ஒத்தக்கடை பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை.
- நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.
ஆலந்தூர்:
சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து நேற்று வள்ளுவர்கோட்டம் அருகே அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சென்ற போது போலீசார் இதற்கு அனுமதி அளிக்காததால் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, 'முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓ.பி.எஸ்-யை பி டீமாக பயன்படுத்தி அ.தி.மு.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திட்டமிடுகிறார். ஸ்டாலினும், ஓ.பன்னீர் செல்வமும் அரை மணிநேரம் சந்தித்துப் பேசினர் என்று பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.
நான் முதல்வருடன் சந்தித்ததாக கூறுவதை நிரூபிக்க தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகுவாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
- உண்ணாவிரதத்தை தண்ணீர் குடித்து நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி.
- போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை சட்டசபையில் பேச அனுமதிக்காததைக் கண்டித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்.
போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டனர். அங்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தை தண்ணீர் குடித்து நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி. மாலை 5 மணி அளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கபட்டனர்.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அமைதி வழியில் போராட்டம் நடத்த முனைந்த கழகத்தினர் மீது காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவிவிட்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் வகையில் சென்னை முதல் குமரி வரை அனைத்து தொண்டர்களின் ஒற்றுமைக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். உறுதி! உழைப்பு!! உயர்வு!!! என்பதை தாரக மந்திரமாக கொண்டு, மக்களின் துணையோடு இந்தக் கொடுங்கோல் ஆட்சியை அகற்ற விரைவில் அம்மாவின் நல்லரசை அமைப்போம் என தெரிவித்துள்ளார்.
- அவினாசி சாலை அண்ணா சிலை அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவை:
சென்னையில் இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் குவிந்தனர்.
அவர்கள் திடீரென ஊர்வலமாக சென்று அவினாசி சாலை அண்ணா சிலை அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அ.தி.மு.க.வினர் யாரும் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். மொத்தம் 10 பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- முக்கிய கட்சி சொத்து பத்திரங்களை எடுத்து சென்றார். இது எல்லோருக்கும் தெரியும். இதற்கெல்லாம் ஏற்பாடு செய்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாக தெரிகிறது.
- ஸ்டாலின் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கிறார். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். கோர்ட்டு எங்களுக்கு சாவி கொடுக்க சொல்லியது.
சென்னை:
எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது ஓ.பன்னீர் செல்வம் குறித்து பரபரப்பான தகவலை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
ஓ.பி.எஸ்.சை 'பி' டீமாக வைத்து மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை பிளக்க பார்க்கின்றார். ஒரு போதும் இது நடக்காது. இது உயிரோட்டமுள்ள கட்சி. எம்.ஜி.ஆர். தோற்றுவித்த இயக்கம். ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கம். இதனால் அ.தி.மு.க.வை எதிர்கொள்ள திராணி இல்லாத தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்றைக்கு ஓ.பி.எஸ்.சை பயன்படுத்தி எங்களை உடைக்க நினைக்கிறார்.
அது ஒரு போதும் நடக்காது. நேற்று சட்டமன்ற கூட்டம் முடிந்த பிறகு அரைமணி நேரம் ஓ.பி.எஸ்.சும், ஸ்டாலினும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அது மட்டுமல்ல ஸ்டாலின் ஆலோசனைபடி தான் ஓ.பி.எஸ். செயல்படுகிறார்.
பொதுக்குழு கூட்டத்திற்கு வராமல் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்திற்கு குண்டர்களை அழைத்து சென்று அங்கு கதவுகளை உடைத்து அறைகளை சேதப்படுத்தி கம்ப்யூட்டரை சேதப்படுத்தி அங்கு இருக்கிற முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று இருக்கிறார்.
முக்கிய கட்சி சொத்து பத்திரங்களை எடுத்து சென்றார். இது எல்லோருக்கும் தெரியும். இதற்கெல்லாம் ஏற்பாடு செய்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாக தெரிகிறது. ஸ்டாலின் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கிறார். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். கோர்ட்டு எங்களுக்கு சாவி கொடுக்க சொல்லியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். முறையிட்டார். அங்கேயும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது. எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை ஒடுக்க, சிதைக்க ஸ்டாலின் திட்டமிட்டு ஓ.பி.எஸ். மூலமாக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
- சட்டசபையில் நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் யார்? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். சட்டசபை விதிகளின் படி துணைத் தலைவர் பதவி கிடையாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகரிக்காததால் சபாநாயகர் செயலை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி உண்ணாவிரதம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி இன்று அதிகாலை முதலே வள்ளுவர் கோட்டம் பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிய தொடங்கினார்கள்.
அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அதையும் மீறி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரள ஆரம்பித்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர். காலை 9 மணிக்கு எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டை அணிந்தபடி அங்கு வந்தார்.
அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அவரை பார்த்து எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று கோஷமிட்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்காததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீரென ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே போலீசார் எடப்பாடி பழனிசாமியிடம் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். அதற்கு அ.தி.மு.க.வினர் அரை மணி நேரமாவது எங்களுக்கு போராட அனுமதி தாருங்கள் என கேட்டனர். ஆனால் அதற்கு போலீசார் மறுத்து விட்டனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி மற்றும் 62 எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்கு தயாராக நிறுத்தி வைத்திருந்த 7 அரசு பஸ்களில் ஏற்றப்பட்டனர்.
அப்போது அங்கு கூடி இருந்த தொண்டர்கள் கைது நடவடிக்கையை எதிர்த்து கோஷமிட்டனர்.போலீசாருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்த போதிலும் அங்கிருந்து கலைய மறுத்த அ.தி.மு.க.வினரையும் போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினார்கள்.
பின்னர் கைதான எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பஸ்களில் இருந்து கீழே இறங்கி வந்த போது அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.
அ.தி.மு.க. தர்ணா போராட்டத்தால் வள்ளுவர் கோட்டம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சென்னை காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.
- தடயை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். காவல்துறை தடையை மீறி உண்ணாவிரதமிருக்க பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்துள்ளனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் முனுசாமி, செங்கோட்டையின், அரக்கோணம் ரவி, உதயகுமார், தங்கமணி, கோவிந்தசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் வந்துள்ளனர்.
சென்னை காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.
சட்டசபையில் ஜனநாயக படுகொலை நடந்ததாக கூறி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளனர்.
அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- சபாநாயகர் அப்பாவு தி.மு.க. தலைவர் ஆதரவாக செயல்பட்டு வருவதாக எட்ப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
- நாளை நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக இன்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டசபையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு தி.மு.க. தலைவர் ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, சட்டசபையில் நடைபெற்ற சம்பவம் குறித்து அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்து நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது. இதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்சினை நீடித்தது.
- சட்டசபை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பிரச்சினை இன்னும் ஓயவில்லை. சட்டசபையிலும் இன்று இது எதிரொலித்தது.
தமிழக சட்டசபை இன்று கூடியது. அதற்கு முன்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஆர்.பி.உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் சபாநாயகர் முடிவு எதுவும் சொல்லவில்லை. இதனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்சினை நீடித்தது. இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
- எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்தும் அது ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சட்டசபையில் இருந்து அவர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை அறிவிக்காததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனிப்பட்ட முறையில் அசவுகரியங்கள் இருந்தால் மட்டுமே இருக்கைகளை மாற்றித் தருமாறு கோரிக்கை வைக்க முடியும்.
- மற்றபடி இருக்கை விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது சபாநாயகர் உரிமைக்கு உட்பட்டது என்றார்.
சென்னை:
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எழுப்பிய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் விரிவான விளக்கத்தை அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் தரப்பிலும், துணைதலைவர் தரப்பிலும் என்னிடம் வேண்டுகோள் வைத்து என்னிடம் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்தபோது அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டதின் படி, எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வம் இருந்து வருகிறார்.
இடையில் இடைக்கால பொதுச்செலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் கையெழுத்திட்ட மனுவை என்னிடம் அளித்துள்ளனர். அதில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதில் ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதாகவும், எனவே துணை தலைவர் இருக்கையை அவருக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை அலுவலகத்தில் வந்து சந்தித்தனர். 9.25க்கு வந்து பார்த்துவிட்டு 9.37-க்குள் இருக்கையை மாற்ற வேண்டும் என கூறுகிறார்கள். எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி என்பது சட்டசபை விதிகளின்கீழ் கிடையாது. எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே சட்டசபை விதிகளின்கீழ் வரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
எனவே தனிப்பட்ட முறையில் அசவுகரியங்கள் இருந்தால் மட்டுமே இருக்கைகளை மாற்றித் தருமாறு கோரிக்கை வைக்க முடியும். மற்றபடி இருக்கை விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது எனது உரிமைக்கு உட்பட்டது.
அதே நேரத்தில் எதிர்க்கட்சி துணை தலைவராக உள்ள ஓ.பன்னீர்செல்வமும் என்னிடம் மனு அளித்துள்ளார். அதில் தேர்தல் ஆணைய பதிவேடுகளில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாகவும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் தற்போது வரை குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்திலும் பொதுச்செயலாளர் தேர்தலை வழக்கு முடியும் வரை நடத்த மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருக்கை விவகாரத்தை பொறுத்தவரையில் பழைய சம்பவம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். கலைஞர் கருணாநிதி சட்டசபைக்கு வந்து செல்ல வசதியாக இருக்கை ஒதுக்க வேண்டும் என்று சக்கரபாணி மனு அளித்தார். அப்போது அந்த மனு ஏற்று கொள்ளப்படவில்லை. ஆனால், சட்டசபைக்கு கலைஞர் வந்து சென்றார் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
அதற்காக இதை நான் செய்கிறேன் என்று கருதக்கூடாது. சட்டசபையை பொறுத்தவரையில் பேரவையின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் உறுதியாக உள்ளார். அதன்படி 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சபை கண்ணியத்தோடு நடைபெற்று வருகிறது. மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச அனைவருக்கும் சமமான அனுமதி வழங்கி வருகிறது.
எனவே இருக்கைகள் விவகாரத்தை பொறுத்தவரை யாரை எங்கே அமர வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இன்று அந்த பிரச்சினையை கையில் எடுத்து கொண்டு அ.தி.மு.க.வினர் நடந்து கொண்ட விதத்தை நாம் அனைவரும் பார்த்தோம்.
ஜானகி அம்மையார் பதவியேற்றபோது நடந்து கொண்டது போன்றும் கலைஞர் கருணாநிதி கையில் இருந்து பட்ஜெட் உரையை கிழித்து எரிந்ததை போன்றும் கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அ.தி.மு.க.வினர் வந்துள்ளனர்.
கேள்வி நேரத்தை நடத்த விடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் சபையில் நடந்து கொண்டதை காண முடிந்தது.
இன்று சட்டசபையில் இந்தி எதிர்ப்பு தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படும் நிலையில் நாம் சபையில் இருந்தால் ஏதேனும் சங்கடம் ஏற்படும் என்று நினைத்து இருக்கலாமோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகியவையும் சபையில் வைக்கப்படுகிறது. இதைக் கண்டும் அவர்கள் அஞ்சி விட்டார்களா என்றும் தெரியவில்லை.
சட்டசபையில் இருந்து தங்களது கருத்துக்களை சொல்லி இருக்க வேண்டிய அ.தி.மு.க.வினர் வேண்டும் என்றே அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சபை தொடங்கும் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி வேகமாக வந்து ஓ.பன்னீர்செல்வத்தின் அருகே தனது இருக்கையில் அமர்ந்தார்.
- இருவரும் பரஸ்பர வணக்கம் கூட தெரிவிக்கவில்லை. அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.
சென்னை:
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9.30 மணியளவில் இருந்து வரத்தொடங்கினார்கள்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டசபைக்கு வராததால் இன்று அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9.25 மணிக்கு சட்டசபை வளாகத்துக்கு வந்தனர்.
எடப்பாடி பழனிசாமி அவரது அறையில் அமர்ந்து இருக்க மற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை அவரது அறையில் சென்று பார்த்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சட்டசபையில் பதில் சொல்வதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் சொன்ன விஷயத்தை எடப்பாடி பழனிசாமியிடம் சென்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். அதன் பிறகு அவர் உள்பட அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்குள் வந்தார்கள்.
அதற்கு முன்னதாகவே சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகிய 4 பேரும் சபையில் அமர்ந்திருந்தனர்.
சபை தொடங்கும் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி வேகமாக வந்து ஓ.பன்னீர்செல்வத்தின் அருகே தனது இருக்கையில் அமர்ந்தார். இருவரும் பரஸ்பர வணக்கம் கூட தெரிவிக்கவில்லை. அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.
அவர்களுக்கு எதிரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்தனர்.
சரியாக 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வந்ததும் சபை நடவடிக்கைகள் தொடங்கின. முதல் நிகழ்ச்சியாக கேள்விநேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சமயத்தில் எல்லோரும் அமர்ந்திருக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து இருக்கை விவகாரம் தொடர்பாக நாங்கள் கொடுத்த கடிதத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்டார்.
உடனே சபாநாயகர், நான் இப்போது கேள்வி நேரத்துக்கு அனுமதித்துள்ளேன். எனவே உட்காருங்கள். கேள்வி நேரம் முடிந்ததும் உங்களுக்கு பேச வாய்ப்பு தருகிறேன் என்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் சொன்ன கருத்தை சபாநாயகரிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் எழுந்து நின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு மைக் இணைப்பு கொடுங்கள் என்று உரத்த குரலில் தெரிவித்தனர்.
ஆனால் மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து பழனிசாமி தான் சொன்ன கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தி பேசினார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு. 'சட்டசபையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது. சபாநாயகர் கேள்வி நேரத்தை அனுமதித்த பிறகு நீங்கள் இப்படி பேசுவது முறையல்ல' என்றார்.
ஆனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எழுந்து நின்று சபாநாயகருக்கு எதிராக முழக்கம் எழுப்ப தொடங்கினார்கள். இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட தொடங்கியது. அமளிக்கு இடையே சபாநாயகர் அனைவரிடமும் உட்காரும் படி கூறினார்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் கேள்வி நேரத்தின் போது சமரசம் செய்துகொள்ள மாட்டேன். கேள்வி நேரத்துக்கு பிறகு உங்கள் பிரச்சினையை சொல்லுங்கள் பதில் சொல்கிறேன்' என்றார்.
ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நின்றுகொண்டே பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர். 'நீங்கள் பேசியது எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது. நீங்கள் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாதது அல்ல.
சட்டசபை விதி என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்வேன். ஆனால் நான் சொல்வதை நீங்கள் கேட்பதாக தெரியவில்லை. நீங்கள் கலங்கம் விளைவிக்க இங்கு வந்தீர்களா? உங்கள் நடவடிக்கை அப்படித்தான் தெரிகிறது.
ஏற்கனவே 1988-ம் ஆண்டு ஜானகி அம்மாள் பதவி பிரமாணத்தின் போதும் இதேபோல் தான் செய்தீர்கள். எனவே சபை அமைதியாக நடைபெற ஒத்துழையுங்கள். கேள்வி நேரம் முடிந்ததும் நீங்கள் பேசுவதற்கு நேரம் தருகிறேன். அமைதியாக இருங்கள்' என்றார்.
ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அவரது இருக்கையில் அமராமல் நின்று கொண்டே பேசினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.
சபாநாயகர்:-இப்படி கூச்சல் போட்டு அவை மாண்பை கெடுக்காதீர்கள். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மக்கள் பிரச்சினையை பற்றி பேசத்தான் இந்த அவை.
ஆனால் மக்கள் பிரச்சினை பற்றி பேச நீங்கள் தடையாக இருக்கிறீர்கள். பேரவை விதி 22-ல் என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால் முதல் ஒரு மணிநேரம் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று உள்ளது. நீங்கள் கொண்டு வந்த விதியை நீங்களே மீறலாமா? மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்' என்றார்.
ஆனால் அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். செங்கோட்டையன் உள்பட இன்னும் சில எம்.எல்.ஏ.க்களும் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.
அமைச்சர் துரைமுருகன்:- சபாநாயகர் எவ்வளவோ சொல்லியும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேட்கவில்லை. சட்ட சபையில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான அறிக்கை, இந்தி எதிர்ப்பு தீர்மானம் ஆகியவை தாக்கல் செய்யப்படுகிறது. எனவே இதை தவிர்ப்பதற்காக நீங்கள் சபையில் அமளி ஏற்படுத்துவதாக தெரிகிறது. இதை சபாநாயகர் அனுமதிக்க கூடாது' என்றார்.
ஆனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டபடி இருந்தனர். இதனால் சபாநாயகர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேறும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
உடனே அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் அனைவரையும் சபை காவலர்கள் கூண்டோடு வெளியேற்றினார்கள். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது சட்டசபை வாயிலிலும் நின்றபடி சில எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர். அவர்களையும் அங்கிருந்து வெளியேற்றினார்கள். அவர்கள் வெளியே வரும் போதும் சபாநயகருக்கு எதிராக கோஷமிட்டபடி வெளியேறினாகள்.
இவ்வளவு அமளி நடந்த போதும் தொடர்ச்சியாக துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரும் சபையில் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்தனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளியேற்றப்பட்டதால் அவை நடவடிக்கைகளில் இன்று 1 நாட்கள் கலந்து கொள்ள இயலாது.