search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94930"

    தி.மு.கவிடம் இருந்து அழைப்பு வரும் போது நகர்ப்புற தேர்தலில் எந்தந்த இடங்களில் போட்டியிடுவது குறித்து பேசி முடிவு செய்வோம்.

    சென்னை:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து முன்ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் ஆணையம் செய்து தயாராக உள்ளது.

    தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் அரசியல் கட்சிகள் விருப்பமனுக்களை கட்சி தொண்டர்களிடம் பெற்று வருகிறது.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தை இடம் பெற்று உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். விடுதலை சிறுத்தை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படவில்லை.

     

    திமுக

    தி.மு.கவுடன் விரைவில் இடங்கள் ஒதுக்கீடு குறித்து பேசுவோம். விடுதலை சிறுத்தைக்கு வாய்ப்புள்ள இடங்களை தி.மு.கவிடம் கேட்டு பெறுவோம். தி.மு.கவிடம் இருந்து அழைப்பு வரும் போது நகர்ப்புற தேர்தலில் எந்தந்த இடங்களில் போட்டியிடுவது குறித்து பேசி முடிவு செய்வோம்.

    சமூக வலைதளங்களில் பிரபாகரன் பற்றி அவதூறு பரப்புகிற கருத்தை அரசு கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.அரசியல் சாசனம் நேற்று கொண்டாடப்பட்டது.

    அனைத்து ஜனநாயக அமைப்புகளும் அதிகாரத்தில் உள்ள சனாதன சக்திகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உறுதி ஏற்க வேண்டும். அவர்கள் மதரீதியாகவும் ஜாதிரீதியாகவும் மக்களை பிளவுபடுத்துகிறார்கள்.

    2024-க்குள் அனைத்து சமூக நீதி அமைப்புகளும் இணைந்து அவர்களை வெளியேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... சென்னை விமான நிலையத்தில் சோதனையை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டுமென்றால் சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட வேண்டும், பொது மக்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்த வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சிறப்பு வாய்ந்த சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தம் தொடர்பான விதிகளும் உருவாக்கப்பட்டன.

    ‘அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டுமென்றால் சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட வேண்டும், பொது மக்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்த வேண்டும், மறு குடியமர்த்தம் செய்யப்படும் மக்களுக்கு வீடுகளை கட்டித் தர வேண்டும், அவர்களுக்கு அரசு வழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் இல்லாமல் நியாயமான இழப்பீட்டை வழங்க வேண்டும்’ உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

    நரேந்திர மோடி அரசு 2014-ல் பதவி ஏற்றதும் அந்த சட்டத்தில் இருந்த மக்களுக்கு சாதகமான அம்சங்களை எல்லாம் மாற்றி விட்டு அதை கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக திருத்தம் செய்து ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்தது. அதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் காலாவதியாகி விட்டது.

    ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அந்தத் திருத்தங்களை மாநில அரசுகள் கொண்டுவந்தன. பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளில் அ.தி.மு.க. ஆட்சி இருந்த தமிழ்நாட்டில் மட்டும் ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது 2015-ல் அந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி

    ஆனால் அதை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என 2019-ல் அறிவித்தது.

    அதன்பின்னர் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு மீண்டும் அதே சட்டத் திருத்தங்களை 2013-ம் ஆண்டுக்கு முன் தேதியிட்டுக் கொண்டு வந்தது. அந்த சட்டத் திருத்தத்தையும் எதிர்க்கட்சிகளும் விவசாய அமைப்புகளும் எதிர்த்தன. வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால், அந்த சட்டம் செல்லுபடியாகும் என நீதிமன்றம் கூறிவிட்டது.

    அந்த மக்கள் விரோத சட்டம்தான் இப்போதும் நடைமுறையில் உள்ளது. எடப்பாடி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் தான் சேலம் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது என்பதையும், தற்போது நடைமுறையில் இருக்கும் அந்த சட்டம் தி.மு.க., வி.சி.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரானதாகும் என்பதையும் தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு சுட்டிக் காட்டுகிறோம்.

    எனவே அந்தச் சட்டத்தைத் தொடர்ந்து அனுமதிப்பது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த கேடு விளைவிப்பதாகவே இருக்கும். ஆதலால், சட்டமன்ற கூட்டத்தொடர் வரை காத்திருக்காமல் ஒரு அவசர சட்டத்தின் மூலம் அந்த சட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்... மதுரை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.100 கோடி ஊழல்

    எழும்பூரில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு இப்தார் உரையாற்றுகிறார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் மாநில பொருளாளர் மு.முகமது யூசுப்தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை எழும்பூர் பைஸ் மகாலில் நடக்கிறது. இதில் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு இப்தார் உரையாற்றுகிறார். 

    பேரவை மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மண்டல செயலாளர் முபாரக், மாநில துணை செயலாளர் சைதை ஜபார், கரிமுல்லாகான், முகமது ஷாகீர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீனஸ் இம்ரான்செய்து வருகிறார்.

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்”, என வைகோ கூறினார்.
    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளது. அதன்படி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்தநிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் நேற்று சந்தித்தனர். அப்போது பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக இருவருக்குமே, வைகோ வாழ்த்து தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    எத்தனையோ தடைகளை உருவாக்கி பார்த்தும், கோடி கோடியாக பணத்தை கொட்டி பார்த்தும் தொல்.திருமாவளவனின் வெற்றியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல்வேறு தாக்குதல்கள் அவர் மீது ஏவப்பட்டன. தடைகள் அனைத்தையும் தாண்டி மக்களின் நல் ஆதரவை பெற்று, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

    ஜனநாயக சுடர் தமிழகத்தில் அணையாமல், இந்தியாவுக்கே வழிகாட்டும் சுடராக பிரகாசிப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவானது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் பெற்ற வெற்றிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இது ஒரு புதிய திருப்பம். இருவருமே பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார்கள். எழுத்தால், பேச்சால், எண்ணத்தால், செயலால் அனைவரையும் வசீகரிக்கக்கூடிய தலைவர் திருமாவளவனும், அதேபோல நல்ல நட்புடன் பழகும் எழுத்தாளரும், சிந்தனையாளருமான ரவிக்குமாரும் எம்.பி.க்களாக பாராளுமன்றத்துக்கு தமிழகத்துக்காக குரல் எழுப்ப செல்ல இருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் கடும் இழுபறிக்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.
    சிதம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் கட்சி தலைவர் திருமாவளவனும், அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரும் போட்டியிட்டனர்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு வேட்பாளர்களும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 497010 வாக்குகள் பெற்றார். கடும் இழுபறிக்கு பிறகு, சுமார் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.

    இதேபோல், திமுக கூட்டணியில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்றார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எதிர்த்து போட்டியிட்ட வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்றார். இதனால் ரவிக்குமார் எளிதில் வெற்றி பெற்றார்.
    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    அரியலூர் :

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 7,36,655 ஆண்கள், 7,42,394 பெண்கள் மற்றும் 59 மூன்றாம் பாலி னத்தவர்கள் என மொத்தம் 14,79,108 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு சிதம்பரம், அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அ.ம.மு.க. வேட்பாளர் இளவரசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவி, நாம் தமிழர் கட்சியில் சிவஜோதி உள்பட மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவர், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவர், ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

    திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)-20,867

    சந்திரசேகர் (அ.தி. மு.க.)-20,686

    முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலையில் இருந்தார்.
    மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
    மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.

    இன்று வாக்குகள் எண்ணியதும் தொடக்கத்தில் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலையை பெற்றுள்ளார்.
    காந்தியை தீவிரவாதி என்பதா? என்று திருமாவளவன் மீது தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:-

    சகோதரர் திருமாவளவனின் சுயரூபமும், மன நிலையும் வெளிப்பட்டு விட்டது. சனாதன தர்மம் எதிர்ப்பு என்று பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் தேர்தல் வந்ததும் சிதம்பரத்தில் தேர்தல் பக்தி பரவச வேடத்தில் சிவாச்சாரியர்களிடம் மண்டியிட்டு ஆசி வாங்கினார். நடிப்பில் கமலையும் மிஞ்சிவிட்டார்.

    இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு முழு காரணம் காங்கிரஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று ஆவேசப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் எல்லாவற்றையும் மறந்து காங்கிரசோடு கூட்டணி அமைத்து ராகுலை பிரதமர் ஆக்குவதே என் முதல் வேலை என்கிறார்.

    தமிழர்களுக்காக ரத்தக் கண்ணீர் சிந்துவதாக கூறினார். ஆனால் தமிழர்களை கொன்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவின் கைகளினாலேயே பரிசும் வாங்கி வந்தார்.

     


    ஆக, இவர்களின் கொள்கை என்பது அவர்களின் சுய நலம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார். ஆனால், அந்த மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. முழுக்க முழுக்க தனது ஆதாயத்துக்காக சாதியை வைத்து அரசியல் நடத்துகிறார்.

    இப்போது காந்திகூட அவரது கண்களுக்கு தீவிரவாதி ஆகிவிட்டார். கோட்சேவின் செயலை யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் காந்தியை ஒரு இந்து தீவிரவாதி என்று மிகவும் மோசமாக விமர்சிக்கும் அளவுக்கு சென்று இருக்கிறார். இதற்கு மற்ற கட்சிகள் என்ன சொல்லப் போகிறது?

    காந்தி உண்மையான இந்து. அவர் வணங்கும் கடவுளை ‘ஹேராம்’ என்று சொன்னது தப்பா? எல்லோரும் அவரவர் மதங்களில் உண்மையாக இருங்கள் என்றுதான் காந்தி சொன்னார். அவரையும் திருமாவளவன் தீவிரவாதி ஆக்கி இருக்கிறார்.

    இளைஞர்கள் மனதில் வி‌ஷத்தை பாய்ச்சி வரும் திருமாவளவன் மனநிலை எப்படி இருக்கிறது என்பது வெளிப்பட்டு இருக்கிறது. தான் ஒரு பிரிவினைவாதி என்பதை அடையாளப்படுத்தி இருக்கிறார். இப்படியே பிரிவினை உணர்வுகளுடன் பேசியே குளிர்காய நினைக்கிறார். ஆனால் மக்கள் அவ்வளவு எளிதில் அவரது வலையில் சிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று கமல் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு திருமாவளவன், முத்தரசன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    கமல்ஹாசன் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

    மகாத்மா காந்தி இந்து மதத்தினரை மட்டுமல்ல எல்லா மதத்தவரையும் அரவணைத்து சென்றார். பிரார்த்தனையில் கூட பகவத் கீதையுடன் திருக்குர்ரானையும் சேர்த்து படிக்க வேண்டும் என்று கூறினார்.

    மத சார்பற்ற கொள்கையில் உறுதியுடன் இருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த பா.ஜ.க. வினர் தலையில் தூக்கி கொண்டாடுகின்றது. கமல் கூறிய கருத்தில் பெரிய தவறு இல்லை. அதனை பா.ஜ.க.வினர் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். கோட்சேவை தேச பக்தன் என்றும் அவர் செய்தது சரிதான் என்றும் கூறுகின்றனர்.

    பா.ஜ.க. வேட்பாளரே கோட்சே தேச பக்தன் என்று கூறுகிறார். அதற்காக வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி அவரை வேட்பாளரில் இருந்து நீக்கவில்லை.

    மோடியும், அமித்ஷாவும் நாடகம் ஆடுகிறார்கள். ஜனநாயக நாட்டில் கருத்துக்கள் கூற உரிமை உண்டு. அதனை மறுப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அதை தவிர்த்து செருப்பு, முட்டைகளை வீசி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதை மோடி கண்டிக்கவில்லை.

    பா.ஜ.க.வை பொறுத்த வரை கோட்சே தேச பக்தர். காந்தி தேச துரோகி. வரலாற்று உண்மையை சொன்ன கமலை தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். அவரை தனிமைப்படுத்த முடியாது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    பெரியார், அம்பேத்கார் கடந்த காலங்களில் இந்து மதத்தை பற்றி என்ன கருத்துக்களை கூறினார்களோ அதைதான் கமல் ஹாசன் பிரதிபலிக்கிறார். இந்து என்ற பெயரில் ஒரு மதம் இல்லவே இல்லை.

    மதங்களுக்கு இடையில் மோதல்-வன்முறை அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது. இந்தியா என்கிற ஒரு தேசத்தையும் இந்து என்கிற மதத்தையும் ஆங்கிலேயர்களின் ஆட்சிதான் உருவாக்கியது. எனவே கமல் சொல்வது ஒரு வரலாற்று உண்மைதான்.


    அதை இன்று அரசியல் ஆதாயத்திற்கு வசதியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்து என்கிற உணர்வை தூண்டி பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதுதான் அவர்களின் உண்மையான நோக்கம். அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் ஒரே இலக்கு.

    கமலின் கருத்து உண்மையானதும், நியாயமானதும் ஆகும். அவரை அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொம்பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 42). இவர் நெய்வேலி என். எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர்ஜோதி பாசு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தங்கவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வரலாற்று உண்மையை துணிவுடன் கூறிய கமல்ஹாசனை பாராட்டுகிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்துஅரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிற நிலையில் ‘தான் சொன்னது சரித்திர உண்மை’ என்று அவர் உறுதிபட கூறியுள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலைமலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- கோட்சே குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- அவர் ஒரு வரலாற்று உண்மையை துணிச்சலாக பேசி இருக்கிறார். அதை வரவேற்று பாராட்டுகிறேன். இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது அவருடைய நோக்கமல்ல.

    இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் நடந்த முதல் பயங்கரவாத நடவடிக்கை காந்தி படுகொலையாகும். அதைத்தான் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

    கே:- கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று தற்போது கமல்ஹாசன் சொல்லி இருப்பது ஒட்டுமொத்த இந்துக்களையும் காயப்படுத்துவதாக கூறுகிறார்களே?

    ப:- இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது அவரது நோக்கமில்லை. கோட்சே இந்து மதத்தை சார்ந்தவர் தான் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய நிலை தற்போது எழுந்துள்ளது. கோட்சே வாழ்க, காந்தி ஒழிக என்று அண்மையில் உத்தரபிரதேசத்தில் இந்து மகாசபையை சேர்ந்த ஒரு பெண்மணி முழக்கமிட்டார். காந்தி படத்தை பொது இடத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் தான் கமல்ஹாசன் போன்றவர்களை பேச வைத்துள்ளது.

    நாதுராம் கோட்சே கிறிஸ்தவரோ, முஸ்லீமோ அல்ல. அவர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பது உலகறிந்த உண்மை. அந்த வரலாற்று உண்மையை அவர் சுட்டிக் காட்டியதில் என்ன தவறு இருக்கிறது. சங்பரிவார் அமைப்புகளே அவரை இந்து என்பதால்தானே தூக்கிவைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

    அவர் கோட்சேவை இந்து என்று உரிமை கொண்டாடலாம், ஆனால் கமல்ஹாசன் அவரை இந்து என்று சொல்லக்கூடாதா?

    கே:- கோட்சேவை தீவிரவாதி என்பதை விட பயங்கரவாதி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது ஏன்?

    ப:- நானும் வரலாற்று உண்மையைத் தான் கூறுகிறேன். உண்மையில் காந்தியடிகளை இந்து தீவிரவாதி என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் இந்து மதத்தின் மீது தீவிர பற்றுதலை கொண்டிருந்தார். ஆனால் கோட்சே இந்து தீவிர பற்றாளரான காந்தி அடிகளையே சுட்டுக் கொன்றார்.

    எனவே கோட்சேவிடம் இருந்தது தீவிரவாதம் அல்ல பயங்கரவாதம். எனவே அவர் ஒரு பயங்கரவாதி என்பதுதான் உண்மை.



    கே: பிரதமர் மோடி நடிகர் கமல் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறாரே?

    ப: அவர் வட இந்தியாவில் நடைபெறும் இறுதி கட்ட தேர்தலுக்கு கமல் எதிர்ப்பை பயன்படுத்தி கொள்ள விரும்புகிறார். இந்துக்களின் வாக்கு வங்கியை குறி வைத்து நாடகம் ஆடுகிறார். ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒரு தீவிரவாதி இந்துவாக இருக்க முடியாது என்று வேதாந்தம் பேசுகிறார். இது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் என்ற பழமொழியை நினைவூட்டுகிறது.

    மோடி சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு வான் உயர சிலை நிறுவி இருக்கிறார். அந்த பட்டேல் தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று சொன்னவர். அவர் காலத்தில்தான் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.

    கோட்சேவை பட்டேல் உள்ளிட்ட இந்து தீவிரவாத சிந்தனையாளர்கள் பயங்கரவாதி என்றே கண்டித்து இருக்கிறார்கள். இவையெல்லாம் வரலாற்று உண்மைகளாகும். வரலாற்றை திரித்து ஆதாயம் தேடுவதை சங்பரிவார் கும்பல் தொழிலாக கொண்டு இருக்கிறது. ஆகவேதான் கமலை அச்சுறுத்துகிறார்கள்.

    கே: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலை கடுமையாக எச்சரித்து இருக்கிறாரே?

    ப: இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றுதான். தன்னுடைய பதவிக்கான பொறுப்பை உணர்ந்து அவர் பேசியதாக தெரியவில்லை. கலைஞரின் நாக்கை அடக்க வேண்டும் என்று வட இந்திய சாமியார் ஒருவர் எச்சரித்தது போல அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசி இருக்கிறார். இதிலிருந்து அ.தி.மு.க.வும் சங்பரிவார் அமைப்பின் ஒன்றாக மாறி வருகிறது என்பதை அறிய முடிகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கே: கமலை ஆதரிப்பதில் உங்களுக்கு அரசியல் நோக்கம் இருக்கிறதா?

    ப: வரலாற்று உண்மையை பேசும் கமலை வரவேற்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அவரை அச்சுறுத்தி தனிமைப்படுத்துவதற்கு மதவெறி சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த இக்கட்டான நிலையில் அவருக்கு ஆதரவு கொடுப்பதை ஒரு ஜனநாயக கடமையாகவே கருதுகிறேன். வேறு எந்த அரசியல் நோக்கமும் எனக்கு இல்லை.

    காந்தியடிகளை கொன்ற கோட்சேவை உயர்த்தி பிடிப்பது காந்திக்கு செய்கிற துரோகம் என்பதைவிட ஜனநாயகத்துக்கும், தேசத்துக்கும் செய்கின்ற துரோகம். இன்னும் பல 10 ஆண்டுகள் ஆனாலும் இந்த விவாதம் இன்னும் விரிவாகவும் வெளிப்படையாகவும் நடந்தே தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பள்ளிக்கூடமே செல்லாத நடிகர் கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

    கொடைக்கானல்:

    பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கொடைக்கானலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விஸ்வரூபம் படம் வெளியாகும்போது முஸ்லீம்களால் கமல்ஹாசனுக்கு கடுமையான மிரட்டல் வந்தது. பின்னர் அவர்களது காலில் விழுந்து தனது படத்தை வெளியிடும்படி கெஞ்சினார்.

    அத்தகைய கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்றும், கோட்சேவை தரக்குறைவாகவும் விமர்சிக்க தகுதியற்றவர். பள்ளிக் கூடத்திற்கே செல்லாமல் இடைநின்ற மாணவரான கமல்ஹாசனுக்கு இந்துக்களின் வரலாறு எப்படி தெரியும். அவருக்கு வருகிற தேர்தலில் மக்கள் தெளிவான பாடத்தை புகட்டுவார்கள். 100 ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதற்காக பள்ளப் பட்டியில் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்று கூறி உள்ளார்.


    அவரது கருத்துக்கு கே.எஸ்.அழகிரி, வீரமணி போன்றவர்கள் ஆதரவு தெரித்துள்ளனர். அவர்களும் இந்துக்களுக்கு எதிரானவர்களே. வருகிற தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கு போட்டு வாக்காளர்களிடம் கதை சொல்லி வருகிறார். ஜூன் 3-ந் தேதி தான் முதல்-அமைச்சராக பதவி ஏற்பேன் என்று கூறுகிறார். இது அவரது கனவு மட்டுமே. ஒருபோதும் பலிக்காது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சரக்குக்கும், முருக்குக்கும் சொந்தக்காரர். எனவே அவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாகத்தான் பேசுவார். இதில் வியப்பு இல்லை.

    ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஊழல் புகாரில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்கள். அவர்களது ஊழலை நாடே அறியும். தான் நின்றால் தோற்று விடுவோம் என்பதால்தான் தனது மகனை ப.சிதம்பரம் நிறுத்தினார். இருந்தாலும் அவரும் வெற்றி பெறப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×