என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95380"
அரியலூர் மாவட்ட கலெக் டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசின் அனுமதி பெற்று நடைபெற்று வருகிறது.
கால்நடை வளர்ப்போர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், நாட்டின காளைகள் என்பதற்கு அரசு கால்நடைமருத்துவர் மூலமாக மருத்துவச் சான்றிதழ் பெறவேண்டும். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகள் முற்றிலும் நாட்டின காளைகளாக இருக்க வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டின காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும். கலப்பின மற்றும் உயர் ரக காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது.
எனவே, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் காளை வளர்ப்போர்கள், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு நாட்டினம் என்பதற்கான தனிச்சான்றிதழை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி அரசு கால்நடை மருத்துவர் மூலம் சான்றிதழ் பெற்ற பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் இனி வருங்காலங்களில் பங்கு பெற முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மானாமதுரை அருகே அரசகுளம் கிராமத்தில் உள்ள திருவேட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
போட்டியில் கலந்துகொண்ட காளைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவை முறையாக பதிவு செய்யப்பட்டது.
போட்டியை சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்துகொண்ட காளைகளை அடக்க 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். பல காளைகள் அவர்களிடம் தப்பித்து வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பித்தளை அண்டா, பானை, சில்வர் அண்டா-பானை, கட்டில், ஆட்டுக்குட்டி, ரொக்கப் பணம், தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியாண்டி தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மானாமதுரை தாசில்தார் யாஸ்மின் அகர்பால், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி கவிநாடு கண்மாயில் நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 924 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளை அடக்க 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர். காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தகுதி உள்ள காளைகளை மட்டும் போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர். இதேபோல மாடுபிடி வீரர்களும் பரிசோதனை செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
பின்னர், ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். அப்போது, பல காளைகளை வீரர்கள் அடக்கினர். அந்த நேரத்தில் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் அருகே நெருங்க விடாமல் வீரர்களை மிரட்டின.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 2 பேர், 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டை காண புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள், லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், டிராக்டர் போன்றவற்றில் வந்து கண்டு ரசித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கடந்த 4-ந் தேதி காளைகளுக்கான முன் பதிவு தொடங்கியது. தேனி, திண்டுக்கல், மதுரை திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை (9-ந் தேதி) மாடு பிடி வீரர்களுக்கான முன் பதிவு தொடங்க உள்ளது. உரிய சான்றிதழ்களுடன் வந்து மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறு கிராம கமிட்டியினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற வழி காட்டுதல்படி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடம், வாடிவாசல், பார்வையாளர் கேலரி, வி.ஐ.பி. மாடம், மாடு சேகரிக்கும் இடம், பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #Jallikattu
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் கிராமத்தில் காளை விடும் விழா நடைபெற்றது. இதில் கே.வி.குப்பம், குடியாத்தம், பரதராமி, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. காளை விடும் வீதியின் இருபக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
போட்டியில் கலந்துகொண்ட காளை ஒன்று அருகே உள்ள நிலத்தின் வழியாக ஓடி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த காளை நிலத்தில் இருந்த தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதனைக்கண்ட இளைஞர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். '
குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி கிணற்றில் இருந்து காளையை உயிருடன் மீட்டனர்.
கிணற்றுக்குள் விழுந்ததில் காளையின் கால் முறிந்தது. உடனடியாக மீட்கப்பட்ட காளைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் பலத்த காயம் அடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் குடியாத்தத்தை அடுத்த தாழையாத்தம் பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் தினேஷ்குமார் (வயது 20) என்பவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான தினேஷ்குமார் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
காளைவிடும் திருவிழாவில் உதவி கலெக்டர் மெகராஜ், காட்பாடி தாசில்தார் ஸ்ரீதர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் கவிதா, இருதயராஜ் உள்பட 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டதில் மாணவர்கள் மீது தாக்குதல், காருக்கு தீ வைத்தது போன்றவை நடந்தது.
இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இவர், இன்று இறுதிக்கட்ட விசாரணையை மதுரையில் தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தினை போராட்ட களத்தில் வைத்து இருந்தது தெரியவந்தது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் கூட விசாரணைக்கு வர மறுத்து விசாரணைக்கு வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Jallikattu #JallikattuProtest
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூரில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி ஊருக்கு அருகாமையில் உள்ள வயல் பகுதியில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
இதில் பெரம்பலூர், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 287 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு களத்தில் இறங்கி காளைகளை அடக்கினர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 431 அலங்கரிக்கப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. பார்வையாளர்கள் கேலரியில் இருந்த பொதுமக்கள் வீரர் களை கைதட்டி உற்சாகப்படுத்தினர். வீரர்களும் காளைகளை போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர்.
அப்போது விசுவக்குடியை சேர்ந்த முகமதுசலீம்(வயது 21), கெங்கவல்லி இளவரசன்(23), தழுதாழை பரமசிவம்(40), வேப்பந்தட்டை ஜெயக்குமார்(25), லால்குடி அருண்குமார்(21), நாமக்கல் தனபால்(19), சேந்தமங்கலம் அரவிந்த்(22) உள்பட 20 வீரர்கள் காளைகள் முட்டியதில் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசு, சில்வர் பாத்திரம், கட்டில், மின்விசிறி, குக்கர் போன்ற பரிசு பொருட்களை விழாக்குழுவினர் உடனுக்குடன் வழங்கினர். இந்த ஜல்லிக்கட்டு மாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் திஷாமித்தல், வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன், வேப்பந்தட்டை தாசில்தார் பொன்னுதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டம், கீழகொளத்தூர் கிராமத்தில் நேற்று ஊரின் நடுவே உள்ள நடுத்தெருவில் வாடிவாசல் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலாவதாக மாரியம்மன் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் கோட்டாட்சியர் சத்யநாராயணன், தாசில்தார் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.
இதில் பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன.
இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளுக்கும் கட்டில், சோபா, சில்வர் குடம், அண்டா, மின்விசிறி, தாம் பூலம், வெள்ளிக்காசுகள் மற்றும் ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய புதுக்கோட்டையை சேர்ந்த கரண், அருங்கால் கிராமத்தை சேர்ந்த முத்து மற்றும் திருச்சியை சேர்ந்த விஜய் ஆகிய 3 பேருக்கும் போட்டியின் முடிவில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டு சிறந்த மாடுபிடி வீரர்கள் என பெருமை படுத்தப்பட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் மொத்தம் 355 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் பெரியய்யா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.காளைகள் முட்டியதில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை 9 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மதியம் 12 மணி அளவில் முடிவடைந்தது. இதில் சுற்றுப்புறபகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.
அரியலூர் மாவட்டம் கீழகொளத்தூர் கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி மக்கள் முன்னேற்பாடுகளை செய்து வந்தனர். இந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து அரசு அதிகாரிகள் வந்தனர். அப்போது, கிராமத்தின் மத்தியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஜல்லிக்கட்டு திடல் அமைத்ததால், பல்வேறு இடையூறுகள் ஏற்படும் என்று கூறி, ஜல்லிக்கட்டை நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், இட வசதிகள் அதிகமாக உள்ள இடத்தில் மைதானம் அமைத்தால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. ஆனால் காலம், காலமாக நடுத்தெருவில் தான் ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம் என்று கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்ததை கண்டித்து நேற்று கிராமம் முழுவதும் உள்ள வீடுகள், தெருக்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றில் கிராம மக்கள் கருப்பு கொடிகளை கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு, ஜல்லிக்கட்டு காளையுடன் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்தின் நடுவே உள்ள நடுத்தெருவில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி தரும் வரை இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும், கிராம மக்கள் தெரிவித்தனர். #tamilnews
சிவகாசி:
சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 18பட்டி கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
ஆலடி ஈஸ்வர் கோவில் முன்பு காலை 7 மணிக்கு விருதுநகர் மாவட்ட அ.தி. மு.க. செயலாளரும், பால் வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராதாகிருஷ் ணன் எம்.பி., சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன் மற்றும் அதிகாரிகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாடுபிடி வீரர்களும், மாடு உரிமையாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியான காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. ஏராளமான வீரர்கள் களத்தில் இறங்கி மாடுகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பிடிபடாமல் போன காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண ஈஞ்சார், நடுவப்பட்டி, வேண்டுராயபுரம், மல்லி, நிறைமதி, கிருஷ்ண பேரி, வடபட்டி உள்பட சிவகாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
பொதுமக்கள் பாதுகாப்பாக அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் சிவகாசி யூனியன் ஆணையாளர்கள் சுப்பிரமணியன், சங்கர நாராயணன், தாசில்தார் பரமானந்தராஜா, அ.தி. மு.க. ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #jallikattu #ministerrajendrabalaji
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி நாளை 20-ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்தியாவிலேயே மிகப்பெரிய ஜல்லிகட்டு போட்டியாகும். அதிகமான பரிசுப் பொருள்களை வழங்க போகும் போட்டியாக இது திகழப்போகின்றது. இப்போட்டியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
முதல் பரிசாக மூன்று மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த மாடுகளுக்கு காரும்(சிப்ட்), 25 நபர்களுக்கு ஒன்றரை லட்சம் மதிப்புள்ள புல்லட்(இரண்டு சக்கர ) வாகனமும், கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் நிச்சய பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. அது மட்டுமல்லாமல் தங்ககாசு, வெள்ளி காசு, எவர்சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், கிரைண்டர், ஏசி, மின்விசிறி, ஏர் கூலர் போன்ற எண்ணற்ற எலக்ட்ரானிக் சாதனங்களும் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.
இந்த போட்டியை காண சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் அமர்ந்து பார்ப்பதற்காக தனி கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டி கின்னஸ் சாதனை செய்யப்படுவதால் மூன்று வெளிநாட்டு நடுவர்களும் பங்கேற்று போட்டியை ஆய்வு செய்கின்றனர்.
போட்டியை தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் இருக்கின்ற முன்னணி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளன. சுமார் 2500 காளைமாடுகள் பங்கு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெற இருக்கின்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்புக்கு புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, கரூர் மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
விராலிமலையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட உள்ளது. திருச்சி சரக டி.ஐ.ஜி. தலைமையில் 4 மாவட்டத்தை சேர்ந்த எஸ்.பி.க்கள், 25 டி.எஸ்.பி.க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். #Jallikattu #Jallikattu2019
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்