என் மலர்
நீங்கள் தேடியது "Spirituality"
- ஒரு தடவை கோவிலை சுற்றி வரும்போது 4 தூக்க நேர்ச்சை நடந்து முடிகிறது.
- ஒவ்வொரு தூக்க நேர்ச்சை முடிந்த உடன் குருதி தர்ப்பணம் நடைபெறும்.
கொல்லங்கோடு:
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தூக்கத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவின் போது நடைபெறும் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை சிறப்பு வாய்ந்தது.
இந்த விழாவில் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் குழந்தைகளுடன் பங்கேற்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தூக்கத் திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூக்க நேர்ச்சைக்கு முதல் நாள் நடக்கும் வண்டியோட்டம் நேற்று மாலை நடந்தது.
தூக்க வில்லை சோதனை செய்யும் வகையில் கோவிலை சுற்றி நடத்தப்பட்ட வண்டியோட்டம் நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணியளவில் வழக்கமான பூஜைகள் முடிந்ததும் தூக்கக்காரர்கள் முட்டு குத்தி நமஸ்காரம் செய்தனர். தொடர்ந்து 5 மணிக்கு அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளினார். அதன்பிறகு காலை 6.30 மணிக்கு முதல் தூக்க நேர்ச்சை தொடங்கியது. இதில் முதல் தூக்கம் தேவி தூக்கம்.
அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கான நேர்ச்சை தூக்கம் தொடங்கியது. ஒரு வில்லில் 4 குழந்தைகளை தூக்ககாரர்கள் தூக்கிச் சென்றனர். தூக்க நேர்ச்சையில் பங்கேற்க 1166 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். இதற்காக தூக்கதாரர்களும் தயாராக இருந்தனர்.
தூக்க வில்லானது ஒரு தடவை கோவிலை சுற்றி வரும்போது 4 தூக்க நேர்ச்சை நடந்து முடிகிறது. அதன்படி வில்லானது 350-க்கும் மேற்பட்ட முறை கோவிலை சுற்றி வந்து தூக்க நேர்ச்சை நிறைவடைகிறது.
ஒவ்வொரு தூக்க நேர்ச்சை முடிந்த உடன் குருதி தர்ப்பணம் நடைபெறும். இன்று இரவு வரை இந்த நிகழ்ச்சி நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூக்கத் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் கேரளா என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதை கருத்தில் கொண்டு போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு 4-ந்தேதி கும்பாபிஷேகம்.
- இன்று மாலை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்படுகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களேசு வரி உடனுறை மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.
சமஸ்தான தேவஸ்தானம், தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மூலம் திருப்பணிகள் முடிவடைந்துள்ளன. 4-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சன்னதியானது இன்று மாலை திறக்கப்பட்டு மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்படுகிறது.
இதுகுறித்து திவான் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-
கும்பாபிஷேகம் நடை பெறுவதை முன்னிட்டு இன்று மாலை மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு அவருக்கு சாத்தப்பட்டுள்ள சந்தனக்காப்புகளையப்படுகிறது. 4-ந்தேதி வரை 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி பக்தர்கள் தரிசனம் செய்ய திறந்திருக்கும். தொடர்ந்து 4-ந்தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சாத்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சாத்தப்படுகிறது.
கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று மேல்பகுதி தளத்தில் மட்டும் சுமார் 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத்திற்கு தேவையான அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், 2-வது நாளாக இன்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக சாலை பூஜைகள் நடை பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
ஆருத்ரா தரிசன விழாவின் போது ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஜனவரி 12-ந்தேதி அன்று திரு உத்தரகோசமங்கை கோவிலில் மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும் என்பதால் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை.
- நரம்பு தெரியும் அளவிற்கு சிலையாக வடிவமைத்தார் சித்தர் சண்முக வடிவேலர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற பகுதியில், மரைக்காயர் என்ற மீனவர் தனது வறுமை நீங்க மங்களநாதரை தினமும் வழிபட்டு வந்தார். ஒரு நாள் அவர் கடலில் மீன் பிடிக்கும்போது சூறாவளி காற்று அடித்து அவருடைய படகு திசை மாறிப்போனது.
அப்படியே வெகு தூரம் சென்ற பிறகு ஒரு பாசி படர்ந்த பாறையின் மீது மோதி நின்றுவிட்டது. அந்த பாறை அப்படியே சரிந்து படகின் உள்ளே விழுந்துவிட்டது.
அதே வேளையில் கடலில் சுழன்று வீசிய சூறாவளி காற்றும் நின்றுவிட்டது. அதிர்ச்சியில் இருந்து மீண்ட மரைக்காயர் கரைக்கு திரும்பி வர பார்த்தால், அந்த இடத்தில் இருந்து திக்கும் திசையும் தெரியவில்லை.

மங்களநாதரை நினைத்து படகை செலுத்தி மிகவும் சிரமப்பட்டு பலநாள் கடலில் திரிந்து அலைந்து ஒரு வழியாக தனது ஊரான மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
கடலுக்குப் போன இவர் திரும்பிவர வில்லை என்று பலநாட்கள் கவலையோடு காத்திருந்த குடும்பத்தினருக்கு அவரை பார்த்ததும் தான் நிம்மதி கிடைத்தது. படகில் கொண்டுவந்த பாசி படர்ந்த கற்களை என்னவென்று தெரியாமல் தனது வீட்டு படிக்கல்லாக போட்டு வைத்தார் மரைக்காயர்.
அந்த கல்லின் மேல் நடந்து நடந்து நாளைடைவில் அந்த கல்லின் மேல் ஒட்டி இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சூரிய வெளிச்சத்தில் பார்ப்பதற்கு பளபளவென்று மின்னியது.
இது வறுமையில் வாடிய தனக்கு ஈசன் மங்களநாதர் கொடுத்த பரிசு என்று நினைத்த மரைக்காயர், அந்த மின்னும் பச்சை பாறையை அரசருக்கு அன்பளிப்பாக தந்தால் தனது வறுமை நீங்கும் என்ற எண்ணத்தில் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். நடந்த அனைத்தையும் கூறி தன் வீட்டில் ஒரு பெரிய பச்சை கல் உள்ளது என்று அரசரிடம் சொன்னார்.
அரண்மனை பணி ஆட்கள் பச்சை பாறையை வீட்டில் இருந்து எடுத்து வந்து அரசரிடம் காண்பித்தனர். கற்களைப் பற்றிய விவரம் உள்ள ஒருவர் பச்சைப் பாறையை சோதித்து பார்த்தார்.
சோதித்தவர் ஆச்சரியத்துடன் "இது விலைமதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல், உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது" என்று கூறினார். உடனே மன்னரும், மரைக்காயருக்கு பச்சைப் பாறைக்கு உரிய பொற்காசுகளை அளித்து வழி அனுப்பினார்.

இவ்வளவு அருமையான கல்லிலிருந்து ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை. இந்த வேலைக்கு உகந்த சிற்பியைப் பல இடங்களில் தேடி கடைசியில் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தர் ரத்தின சபாபதியைப் பற்றிய விவரம் கிடைத்தது. அவரை அனுப்பி வைக்கும்படி அரசர் ஓலை அனுப்பினார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு சிற்பியும் வந்து சேர்ந்தார்.
அவ்வளவு பெரிய மரகத கல்லை பார்த்த உடன் ஆச்சரியத்தில் மயங்கியே விழுந்துவிட்டார், "என்னால் மரகத நடராஜர் வடிக்க இயலாது மன்னா" என்று கூறிவிட்டு இலங்கைக்கே திரும்பி சென்றார்.
மன்னன் மன வருத்தத்துடன் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் சன்னதி முன்பாக நின்று மனமுருகி பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தார். அப்போது நான் மரகத நடராஜரை வடித்து தருகிறேன் என்று சித்தர் சண்முக வடிவேலர் கூறினார்.
அதனை காதில் கேட்ட மன்னனின் கவலையும் நீங்கியது. மரகத நடராஜரை வடிக்கும் முழு பொறுப்பையும் சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.
அந்த பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் "ராஜ கோலத்தில்" மிகவும் நுணுக்கமாக மரகத நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு சிலையாக வடிவமைத்தார் சித்தர் சண்முக வடிவேலர். இவ்வாறுதான் மரகத நடராஜர் சிலை உருவானது என சொல்லப்படுகிறது.
- ராமாயண காலத்திற்கும் முந்தையது’ என்றும் சொல்லப்படுகிறது.
- ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் இங்கு தான் நடந்துள்ளது.
உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில்தான். இதுவே சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் சொல்லப்படுகிறது.
உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்றால் பார்வதி தேவியை குறிக்கும். சிவன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் ரகசியத்தையும், அதன் பொருளையும் பார்வதி தேவியிடம் கூறியது இந்த இடத்தில்தான் என்பதால் இந்த இடத்திற்கு உத்திரகோசமங்கை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோவிலில் ஒரு இலந்தை மரம் உள்ளது. இந்த மரம் 3000 ஆண்டு பழமையானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த மரத்தடியிலேதான் சிவன் சுயம்பு லிங்கமாக தோன்றினார்.
இந்த கோயிலில் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய 3 கிரகங்கள் மட்டும்தான் உள்ளன. எனவே நவக்கிரக வழிபாடு அறியப்படாத காலத்திற்கு முன்பே தோன்றிய கோவில் இது என்று அறியப்படுகிறது.

இந்த கோவிலின் பழமையை குறிக்கும் விதமாக "மண் தோன்றியதற்கு முன்பே மங்கை தோன்றியது" என்ற பழமொழி இப்பகுதியில் வழக்கில் இருந்து வருகிறது. மேலும் இந்த கோவில் 'ராமாயண காலத்திற்கும் முந்தையது' என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கோவிலில்தான் ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடந்துள்ளது. அதற்கு சான்றாக கோவில் கல்வெட்டுகளில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
- 2-ந்தேதி கார்த்திகை விரதம்.
- 6-ந்தேதி ராமநவமி.
1-ந்தேதி (செவ்வாய்)
* சதுர்த்தி விரதம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் பங்குனி உத்திரம் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசர் காலை ராஜாங்க சேவை, இரவு சிம்ம வாகனத்தில் பவனி.
* தொட்டியம் காளியம்மன் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
2-ந்தேதி (புதன்)
* கார்த்திகை விரதம்.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி நவநீதன் சேவை. வெண்ணெய் தாழி சேவை.
* தாயமங்கலம் முத்து மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
3-ந்தேதி (வியாழன்)
* சஷ்டி விரதம்.
* திருச்சுழி சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் பவனி.
* கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் உற்சவம்.
* தாயமங்கலம் முத்து மாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
4-ந்தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையில் ரெங்கமன்னார் சிம்ம வாகனத்தில் பவனி.
* பரமக்குடி அன்னை முத்தாலம்மன் விழா தொடக்கம்.
* கழுகுமலை முருகப் பெருமான் புஷ்பக விமானத்திலும். இரவு அன்ன வாகனத்திலும் பவனி.
* சமநோக்கு நாள்.
5-ந்தேதி (சனி)
* நாங்குநேரி வானமா மலை பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
* பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
* திருக்குற்றாலம் குற்றாலநாதர், பாபநாசம் சிவபெருமான், கோவில்பட்டி பூவணநாதர் தலங்களில் உற்சவம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள்ஆண்டாள் திருக்கோலம்.
* மேல்நோக்கு நாள்.
6-ந்தேதி (ஞாயிறு)
* ராமநவமி.
* திருச்சி தாயுமானவர் வெள்ளி விருட்சப சேவை.
* ஒழுகைமங்கலம் மாரியம்மன் விழா தொடக்கம்.
* பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு வரக ரிசி மாலை அணிவித்தல்.
* சமநோக்கு நாள்.
7-ந்தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.
* பழனி ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
* கழுகுமலை முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
- இன்று சதுர்த்தி விரதம். கார்த்திகை விரதம்.
- முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-18 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: திருதியை காலை 10.04 மணி வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: பரணி பிற்பகல் 3.22 மணி வரை. பிறகு கார்த்திகை.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சதுர்த்தி விரதம். கார்த்திகை விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல். தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பநதர் புறப்பாடு. மிலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமாள் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீசித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. திருநெல்வேலி 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீவைத்தமா நிதிப் பெருமாள் கோவிலில் காலையில் திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-முயற்சி
கடகம்-தாமதம்
சிம்மம்-மாற்றம்
கன்னி-வரவு
துலாம்- பொறுமை
விருச்சிகம்- மகிழ்ச்சி
தனுசு- பாசம்
மகரம்-விருப்பம்
கும்பம்-நன்மை
மீனம்-ஜெயம்
- ஏப்ரல் 11-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
- பக்தர்கள் விரதம் இருந்து தீர்த்தக் காவடி எடுக்க தயாராகி வருகின்றனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களின் பங்குனி உத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இத்திருவிழாவின் போது பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத்திருவிழா ஏப்ரல் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருஆவினன்குடி கோவிலில் காலை 11 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி தங்க குதிரை வாகனம், தங்க மயில், வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் இரவு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
6ம் நாள் நிகழ்ச்சியாக ஏப்ரல் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் வள்ளிநாயகி அம்மன், திருமுருகன், திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக 7ம் நாளான ஏப்ரல் 11-ந் தேதி பங்குனி உதிரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு கிரி வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் நிறைவாக ஏப்ரல் 11-ந் தேதி இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறும். பங்குனி உத்திரம் தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் விரதம் இருந்து தீர்த்தக் காவடி எடுக்க தயாராகி வருகின்றனர்.
- இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 முதல் மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.
- நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும்.
பழனி:
இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்வு தெரியாது என்பதால் நாளை பழனி முருகன் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வானியல் நிகழ்வுகளில் கிரகணங்கள், கிரகண காலங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வகையில் நாளை (29-ந் தேதி) இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.
இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சூரிய அனுஷ்டானம் கிடையாது. எனவே நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும்போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது குறிப்பிட்ட நேரத்துக்கு பழனி முருகன் கோவிலில் அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
கிரகணம் முடிந்து பரிகார பூஜைகளுக்கு பின்னே கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உப கோவில்களான திருஆவினன்குடி, பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் வழக்கமாக பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பூக்குழி திருவிழா நாளை நடக்கிறது.
- நாளை மறுநாள் தேரோட்டத்துடன் விழா நிறைவடைகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரின் மையப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு வடக்கு புறத்தில் இருக்கிறது.
இந்த கோவிலில் மூலவராக பெரிய மாரியம்மன், வடக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலுக்கு விருது நகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர்.

இந்த கோவிலில் கருப்பசாமி, வீரபத்திரர், துர்க்கை, பைரவர், சப்தகன்னியர், வராகி அம்மன் ஆகியோர் தனி சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
குழந்தை வரம் கேட்டு இந்தக் கோவிலுக்கு எண்ணற்ற பேர் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்களது கணவருடன் சேர்ந்து இந்தக் கோவிலில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி அம்மனை வழிபடுகின்றனர்.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களின் குறை நீங்க வேண்டும் என்பதற்காக அம்மனை வேண்டி கண்மலர் வாங்கி போட்டு தரிசனம் செய்கின்றனர். அதேபோல திருமணத்தடை, தோல் வியாதி உள்ளவர்களும் இங்குள்ள அம்மனை மனமுருக வேண்டிச் செல்கின்றனர்.
இவர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மறு வருடம், கோவிலில் நடைபெறும் பூக்குழி திருவிழாவில் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதனால் ஆண்டுதோறும் தீமிதி திருவிழாவில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
இந்தக் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வ வழிபாடு, பவுர்ணமி சிறப்பு பூஜை, பஞ்சமி திதி அன்று வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நவராத்திரி உற்சவம் என ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.
இருப்பினும் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பூக்குழி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டத்துடன் விழா நிறைவடைகிறது.
இந்த கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகே மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது.
- கும்பாபிஷேக பூஜைகள் வருகிற 3-ந் தேதி முதல் தொடங்குகிறது.
- 7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக பூஜைகள் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது.
அன்று காலை 5 மணிக்கு ராஜ அனுக்ஜை, (பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபடுதல்), விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், பாத்ர பூஜை, தன பூஜை, விப்ரனுக்ஞை, கிராம தேவதானுக்ஞை, ஸ்ரீமகா கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

காலை 8.30 மணிக்கு பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. மாலையில் தீர்த்தம் எடுத்து வருதல், ஹோமம் ஆகியவை நடக்கிறது.
4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், ஸம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், யாகசாலை ஸ்தண்டிலம் அமைத்தல், காலை 10.15 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கிறது.
மாலை 5 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து 7-ந் தேதி வரை 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது.
7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் உலகம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேக நாட்களில் சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடக்கிறது. கும்பாபிஷகேத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர வேத சிவாகம பாடசாலை முதல்வர் செல்வம்பட்டர், ஆலய தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைக்கின்றனர்.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மேற்பார்வையில் உதவி ஆணையர் தங்கம், அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பொன்னி, ஆய்வாளர் சரவணக்குமார், அறங்காவலர்கள் முருகேசன், புவிதா, சஷீலா குமார், மூக்கன் மற்றும் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் விடையாற்று விழா.
- திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-14 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி இரவு 7.24 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 9.44 மணி வரை பிறகு உத்திராட்டாதி
யோகம்: நாளை முழுவதும் சித்தயோகம்
ராகுகாலம்: பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் விடையாற்று விழா. மன்னார்குடி ராஜகோபால சுவாமி, பரமபதநாதர் திருக்கோலம். திருவாரூர் தியாகராஜர் பவனி. திருப்புவனம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-முயற்சி
கடகம்-தாமதம்
சிம்மம்-மாற்றம்
கன்னி-வரவு
துலாம்- பொறுமை
விருச்சிகம்- மகிழ்ச்சி
தனுசு- பாசம்
மகரம்-விருப்பம்
கும்பம்-நன்மை
மீனம்-ஜெயம்