search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students clash"

    • இரு தரப்பு மாணவர்களும் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
    • ஒரு தரப்பு மாணவருக்கும் மற்றொரு தரப்பு மாணவருக்கும் விளையாட்டில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கணாங்குளம் கோவிந்தபேரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்தக் கல்லூரியில் சேரன்மகாதேவி, களக்காடு, வீரவநல்லூர், முக்கூடல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவர்கள் அமர்ந்து செல்போனில் பிரீ-பயர் கேம் விளையாடி உள்ளனர்.

    அப்போது ஒரு தரப்பு மாணவருக்கும் மற்றொரு தரப்பு மாணவருக்கும் விளையாட்டில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.

    உடனே ஒரு தரப்பு மாணவர் அவரது ஊரில் இருந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட எதிர் தரப்பு மாணவரை தாக்குவதற்காக கல்லூரி அருகே உள்ள பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த மாணவருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பு மாணவர்களும் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் 9 பேரை இன்று கைது செய்தனர்.

    இந்த விவகாரத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் அடங்குவர். தப்பி ஓடிய 12 பேரை தேடி வருகின்றனர்.

    • மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • அரிவாளால் வெட்டிய மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணத்தில் இந்திய கடற்படை வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவர் ஒருவர் மீது தண்ணீரை சிந்தியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக மாணவர்களுக்கிடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை மாணவர் தனது வீட்டில் இருந்து சிறிய அரிவாள் ஒன்றை எடுத்து வந்து தன் மீது தண்ணீர் சிந்திய மாணவரை வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த மாணவர் அலறி துடித்தார். உடனே அரிவாளால் வெட்டிய மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    சம்பவம் குறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்த மாணவனை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • மாணவர் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது, தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    12ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தததை அடுத்து, ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த மோதலால், மாணவர் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமைந்தகரையில் நடந்த இன்னொரு மோதல் சம்பவத்திலும் கல்லூரி மாணவர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.
    • அமைந்தகரை போலீசார் சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் நேற்று இரவு மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது. இதில் 2 பிரிவுகளாக மாணவர்கள் மோதிக் கொண்டனர்.

    விடுதியில் தங்கியுள்ள மாணவர்களே இரண்டு தரப்பாக பிரிந்து மோதிக் கொண்டுள்ளனர்.

    இதில் பீட்டர் என்ற மாணவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்து உள்ளது. இந்த சம்பவம் பற்றி இன்று காலையில்தான் போலீசார் கேள்விப்பட்டு உள்ளனர். உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.

    போலீஸ் துணை கமிஷனர் கோபி இதுபற்றி உரிய விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் போலீசார் கல்லூரி வளாகத்துக்குள் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரிவாள் வெட்டில் காயம் அடைந்த மாணவர் பீட்டர் எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை கண்டுபிடித்து விசாரித்தால்தான் மோதலுக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதே போன்று அமைந்தகரையில் நடந்த இன்னொரு மோதல் சம்பவத்திலும் கல்லூரி மாணவர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

    சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் துளசி நாதன் (21). இவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் கொண்ட கும்பல் துளசி நாதனை தாக்கி மண்டையை உடைத்து உள்ளது.

    இது தொடர்பாக அமைந்தகரை போலீசார் சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர். கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பரத் என்ற பரத்ராஜ் (25) சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (21) ஆகியோர் புழல் சிறையிலும், 2 சிறுவர்கள் சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

    • அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர்.

    அம்பத்தூர்:

    சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது.

    அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. ரூட்டு தல பிரச்சினையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தும், எச்சரித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாணவர்களிடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று காலையும் மின்சார ரெயிலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. காலை நேரம் என்பதால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் படிக்கும் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயணம் செய்தனர்.

    பட்டரைவாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் இடையே திடீரெ மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்குள் பட்டரைவாக்கம் ரெயில் நிலையத்தை அடைந்ததும் மின்சார ரெயில் நின்றது. உடனே ரெயிலில் இருந்து இறங்கிய பச்சயைப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.

    மேலும் கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர். உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இதில் சில மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து வேறு ரெயில் பெட்டியில் ஏறினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே மாணவர்கள் மோதல் பற்றி அறிந்ததும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். உடனே மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிக்கு ரெயில்வே போலீசார் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் கூறும் போது, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் பட்டரைவாக்கத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    பயணிகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் வகையில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களை நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிக்கு கடிதம் வழங்கி உள்ளோம். மேலும் பஸ், ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்களின் விபரத்தையும் கேட்டு உள்ளோம் என்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இதேபோல் கல்லூரி மாணவர்கள் கல், பாட்டில்களை வீசி மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு மாணவிடியை 4 பேர் காதலித்து வந்தனர்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    வாலிபர் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அந்த மாணவியை அதே நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மேலும் 3 பேர் காதலித்து வந்தனர்.

    அந்த மாணவியும் எல்லோரிடமும் காதலிப்பது போல் சரிசமமாக பேசி வந்துள்ளார்.

    இது குறித்து 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு தெரிய வரவே, அவர் மாணவியை கண்டித்து உள்ளார். இது தொடர்பாக மாணவியை காதலித்து வரும் மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், கரடிகுடியில் உள்ள 2-ம் ஆண்டு மாணவனின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படு காயமடைந்த மாணவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மாணவனின் பெற்றோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுதியில் கர்னூல் மற்றும் காவாலி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
    • விடுதியில் தங்கி உள்ள இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வரா கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு என தனியாக விடுதி நடத்தப்படுகிறது.

    இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த விடுதியில் கர்னூல் மற்றும் காவாலி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கர்னூல், காவாலி என்ற பெயரில் தனித்தனியாக குழுவாக செயல்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கல்லூரி உணவகத்தில் சமையல் செய்யப்படுகிறது.

    இந்த உணவுகளில் காரமான ஆந்திரா மிளகாயை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென கர்னூல் பகுதி மாணவர்கள் தெரிவித்தனர். அதன்படி அதிக அளவு மிளகாய் உணவில் சேர்க்கப்பட்டது.

    இதற்கு காவாலி பகுதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் உணவில் போதுமான அளவு மட்டுமே மிளகாய் சேர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சேர்க்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர் .

    இதனால் விடுதியில் தங்கி உள்ள இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் தாக்கினர்.

    இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் விடுதியில் இருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டது.

    உணவில் மிளகாய் சேர்ப்பது தொடர்பாக மாணவர்கள் மோதிக்கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    • பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவு வருவதால் கூட்டம் நிரம்பி வழியும். நேற்று மாலையிலும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

    அப்போது பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவர்களை பிடித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இரு தரப்பினருக்கும் அறிவுரைகளை கூறி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் பஸ் நிலையத்தின் சுரங்கப்பாதை பகுதியில் 11-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.அப்போது மாணவிகள் இருவரும் மாறி மாறி வசை பாடினார்கள். இது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

    தகராறில் ஈடுபட்ட மாணவிகளை சக மாணவிகள் சமாதானம் செய்தனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்நிலையத்தில் தகராறில் ஈடுபடும் சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் பள்ளி மாணவர்கள் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் நடைபெற்றது.

    எனவே காலை, மாலை நேரங்களில் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    மேலும் பஸ் நிலையத்தில் உள்ள புறகாவல் நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் திறந்து வைப்பதுடன் அங்கு போலீசாரை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • நோட்டு புத்தகத்தை மறைத்து வைத்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
    • பள்ளிக்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த பள்ளியில் நோட்டு புத்தகத்தை மறைத்து வைத்தது தொடர்பாக பிளஸ் டூ மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது இரு தரப்பு மோதலாக வெடித்துள்ளது. இதை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார்.

    மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவனிடம் பெற்றோரை அழைத்து வரும்படி அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்துள்ள அந்த மாணவன், இன்று பள்ளிக்கு கத்தியுடன் வந்ததுடன் மற்றொரு தரப்பு மாணவரின் முதுகில் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவன், களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். 


    பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அந்த மாணவன் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து அறிந்த காவல்துறையினர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட கல்வி அதிகாரியும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளார். இந்த சம்பவம் களக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.
    • மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் ரிஷிவந்தியம் அருகே மேல தேவனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பஸ்சில் வந்த கோமாளூர் - சேரந்தாங்கல் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். ஓடும் பஸ்சில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருகிராமங்களை சேர்ந்த மாண வர்கள் 13 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • விளையாட்டின் போது இரு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
    • தாக்கப்பட்ட நிலையில் பிளஸ் டூ மாணவன் உயிரிழப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த சக்கில் நத்தம் கப்பல்வாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை சக்கில் நத்தம் கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் பள்ளியில் சமையல் செய்ய வைக்கப்பட்டிருந்த தென்னம் பாளையால் மாணவன் கோபிநாத்தை உடன் படிக்கும் மாணவன் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோபிநாத் அங்கேயே சுருண்டு விழுந்தார். மேலும் மாணவன் கோபிநாத்திற்கு வலிப்பு நோய் ஏற்பட்டு துடிதுடித்துள்ளார். இதனை அறிந்த அங்கிருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் மாணவனை அங்கிருந்து மீட்டு பர்கூர் அரசு பொது மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, வழியிலேயே மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் மருத்துவமனையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவன் கோபிநாத்தை தாக்கிய மற்றொரு மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இறந்த மாணவன் மற்றும் அவனை தாக்கிய மாணவனும் அடுத்தடுத்த வீடுகளைச் சார்ந்தவர்கள் என்பதால் கிராமத்தில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    ×