search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மாணவர்கள் மோதல்- மாணவிகளும் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு
    X

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மாணவர்கள் மோதல்- மாணவிகளும் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    • பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவு வருவதால் கூட்டம் நிரம்பி வழியும். நேற்று மாலையிலும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

    அப்போது பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவர்களை பிடித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இரு தரப்பினருக்கும் அறிவுரைகளை கூறி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் பஸ் நிலையத்தின் சுரங்கப்பாதை பகுதியில் 11-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.அப்போது மாணவிகள் இருவரும் மாறி மாறி வசை பாடினார்கள். இது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

    தகராறில் ஈடுபட்ட மாணவிகளை சக மாணவிகள் சமாதானம் செய்தனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்நிலையத்தில் தகராறில் ஈடுபடும் சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் பள்ளி மாணவர்கள் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் நடைபெற்றது.

    எனவே காலை, மாலை நேரங்களில் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    மேலும் பஸ் நிலையத்தில் உள்ள புறகாவல் நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் திறந்து வைப்பதுடன் அங்கு போலீசாரை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    Next Story
    ×