என் மலர்
நீங்கள் தேடியது "summer heat"
- ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவில வழக்கமாக 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும்.
- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதம் வழக்கமான அதிகபட்ச வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை காணப்படும்.
புதுடெல்லி:
நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சில இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.இது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான அதிகபட்ச வெப்ப நிலையை விட அதிக வெப்பநிலை காணப்படும். இதைப்போல பெரும்பாலான பிராந்தியங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையும் இயல்பை விட அதிகமாக இருக்கும்.
அதேநேரம் மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் வழக்கமான வெப்பநிலை இருக்கும்.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா, மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு சமவெளிப்பகுதிகளில் வழக்கத்தை விட 2 முதல் 4 நாட்கள் வரை கூடுதலான வெப்ப அலை நாட்கள் இருக்கும்.
ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவில வழக்கமாக 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும். ஆனால் இந்த முறை அதிக நாட்களை எதிர்பார்க்கலாம்.
ராஜஸ்தான், குஜராத், அரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களும், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் வட பகுதிகளும் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்களை கொண்டிருக்கும்.
இந்த காலகட்டத்தில் கிழக்கு உத்தரபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில் 10 முதல் 11 வரை வெப்ப அலை நாட்கள் இருக்கும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதம் வழக்கமான அதிகபட்ச வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை காணப்படும். எனினும் தெற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் சாதாரண வெப்பநிலை இருக்கலாம்.
வடமேற்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களை சேர்ந்த ஒருசில இடங்களை தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும்.
இவ்வாறு மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறினார்.
- தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.
கோடை வெயிலின் கோரத்தாண்டவம் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி விட்டது. குறிப்பாக கடந்த 27-ந் தேதியில் இருந்து வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.
இதனால் தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதில் அதிகபட்சமாக சேலத்தில் 102.2 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலரும் வெளியில் தலைகாட்ட முடியாமல் ஏ.சி. அறைகளிலும், மரங்கள் நிறைந்த நிழல் பகுதிகளிலும் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
கடந்த 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வெப்பம் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வாளர்கள் முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படியே வெயில் சுட்டெரித்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்! என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பறவைகளுக்கு நீர், உணவு அளிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
- தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
- சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பம் முந்தைய ஆண்டை விட அதிகளவில் கொளுத்துகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பொதுவாகவே கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில், இந்த ஆண்டு சென்னையில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இந்த ஆண்டு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
- குழாய் பொருத்திய மண் பானை என பல்வேறு வடிவங்களில், விற்பனைக்கு வந்துள்ளது.
- ரூ. 250 முதல் ரூ.500 வரை விற்று வருகிறது.
உடுமலை :
உடுமலை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலுக்கு இயற்கையான, குளிர்ச்சியான குடிநீர் வழங்கும் மண் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
தண்ணீர் பானைகள், கூஜா, ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவத்திலான மண் பானை, குழாய் பொருத்திய மண் பானை என பல்வேறு வடிவங்களில், விற்பனைக்கு வந்துள்ளது. 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள் வடிவம், கொள்ளளவு அடிப்படையில் ரூ. 250 முதல் ரூ.500 வரை விற்று வருகிறது.
மண்பானை விற்பனையாளர்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்கு என பொதுமக்கள் மண் பானைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் 100 பானைகள் விற்பனையாகிறது என்றனர்.
- தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன.
- கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது.
தென்காசி:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கி கொண்ட பகுதியாக உள்ளது.
இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகாதேவி அருவி, சிற்றருவி, புலியருவி, தேனருவி என்ற பல்வேறு அருவிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது வரலாறு.
தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் அருவியாக ஓடி வருவதால் அந்த நீரில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளன. இதில் நாம் குளிக்கும்போது உடலுக்கு பெருமளவிலான நன்மைகள் கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறுவது உண்டு.
இங்கு தென்மேற்கு பருவமழையின்போது ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் நிலவும். அந்த நேரங்களில் அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குடும்பம் குடும்பமாக வந்து தங்கியிருந்து அருவிகளில் குளிப்பார்கள்.
தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் தண்ணீர் கொட்டும். ஒருசில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத தொடக்கத்திலே அருவிகளில் நீர் கொட்ட தொடங்கிவிடும்.
கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குற்றாலம் நீரை நம்பி இருந்த பாசன குளங்கள் ஏராளமானவை நிரம்பின. இதனால் விவசாயம் ஓரளவு செழித்தது.
இந்நிலையில் சமீபகாலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. அங்கு பாறைகள் மட்டுமே பாட்டு படிக்கின்றன. புலியருவி முற்றிலுமாக வறண்டுவிட்டது.
மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் லேசாக தண்ணீர் விழுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் வெறிச்சோடி கிடக்கும் அருவி மற்றும் அருவிக்கரைகளை ஒருவித ஏமாற்றத்துடன் பார்த்து செல்கின்றனர்.
- நடப்பு ஆண்டு தொடங்கியதும் குளிர் பருவத்தில் வழக்கமான அளவு மழை பெய்யவில்லை.
- கடந்த சில நாட்களாக திடீரென வெப்பக்காற்றுடன் வெயில் சுட்டெரிக்க துவங்கியது.
திருப்பூர் :
நடப்பு ஆண்டு தொடங்கியதும் குளிர் பருவத்தில் (ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம்) வழக்கமான அளவு மழை பெய்யவில்லை.தொடர்ந்து குளிரின் தாக்கம், இம்மாதம் 2வது வாரம் வரை நீடித்தது. குளிர்ந்த காலநிலை மாறும் முன்னதாக கடந்த சில நாட்களாக திடீரென வெப்பக்காற்றுடன் வெயில் சுட்டெரிக்க துவங்கியது. காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வெயில் கடுமையாக இருக்கிறது.
குறிப்பாக உச்சி நேரத்தில் ரோட்டில் வெப்பக்காற்று வீசுவதால் மோட்டார் சைக்கிளில் சென்று வருவோர் கடும் சோதனைக்கு ஆளாகின்றனர். ரோட்டில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளும், வெளியே தலைகாட்டாமல் நிழல் உள்ள இடங்களில் தஞ்சமடைந்து விடுகின்றன.
வெயில் தாக்கம் துவங்கியதால் வீடுகளின் மொட்டை மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும் அதிகரித்துள்ளது. தன்னார்வ அமைப்புகள் நீர்மோர் பந்தல் திறந்து மக்களின் தாகம் தணிக்கும் சேவையை தொடங்கி விட்டன. இவர்கள் தவிர துணிக்கடைகள் மற்றும் நிறுவனங்கள் சார்பிலும் குடிநீர் அல்லது நீர்மோர் வழங்கி வருகின்றனர்.
கோடை பருவம், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை சுட்டெரிக்கும். ஆரம்பமே இப்படி என்றால் அக்னி நட்சத்திர வெயில் காலம் எப்படி இருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோடை மழை கருணை காட்டினால் மட்டுமே கொளுத்தும் கோடை வெப்பம் தணிய வாய்ப்புள்ளது.
- கோடை விடுமுறை 20-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அளிக்கப்படுகிறது.
- ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏற்கனவே வருகிற 24-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடத்த கல்வித்துறை திட்டமிட்டது. இப்போது தொடர்ந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
போலீஸ், எல்.டி.சி., யூ.டி.சி. உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்துவது என்று ஆலோசித்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும்.
வரும் 20-ந் தேதியுடன் முடிகிறது. கோடை விடுமுறை 20-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அளிக்கப்படுகிறது. ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.
கல்லூரிகளை பொறுத்தவரையில் இன்னும் ஆலோசனை செய்யவில்லை. சிறுவர்கள் என்பதால் முதலில் அவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரிகளுக்கு மருத்துவத்துறை ஒப்புதல் கேட்டு அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயில் வாட்டி வதைக்கிறது.
- கடந்த திங்கட்கிழமையை விட நேற்று சென்னையில் வெப்பம் அதிகரித்தது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் கூட வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. சில மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.
சென்னையில் வெயில் தற்போது வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது. பிற்பகல் 4 மணிக்கு கூட வெயிலின் உஷ்ணம் தாக்கி வருகிறது.
வெப்ப அலை கொஞ்சம் கொஞ்சமாக வீசி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் ஆக இருந்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து வெப்பம் அதிகரித்தது. 15-ந்தேதிக்கு பிறகு சராசரி வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வாளர்கள் நம்புவதால் வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
கிழக்குப்பகுதியில் இருந்து வரும் ஈரப்பதம் காரணமாக வெப்பம் அதிகரித்து உடலில் வியர்வை அதிகளவில் வெளியேறும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கீழ்த்திசை காற்று இல்லாததால் வருகிற நாட்கள் வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும். பருவத்திற்கு இயல்பான வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை திடீரென உயரலாம் என்று கூறியுள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறுகையில், `அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை இருக்கும். 15-ந்தேதிக்கு பிறகு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். இது பருவத்திற்கு இயல்பானது.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கோடை காலத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை சாதாரணமாக இருந்து இயல்பை விட குறைவாக இருக்கும். நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் இந்த மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 36.4 டிகிரி செல்சியஸ் ஆகும்' என்றார்.
கடந்த திங்கட்கிழமையை விட நேற்று சென்னையில் வெப்பம் அதிகரித்தது. ராயலசீமா மற்றும் தெலுங்கானா வரை வறண்ட வானிலை நிலவுகிறது. வடகிழக்கு காற்று நுழைவதால் அடுத்த 4, 5 நாட்கள் வெப்ப நிலை படிப்படியாக உயரும் என்று தலைமை வானிலை ஆய்வாளர் மகேஷ் கூறினார்.
- கோடை காலத்தில் எப்போதுமே விலங்குகள், பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும்.
- டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 இடங்களில் குடிநீர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி பறவைகளின் தாகத்தை தீர்க்க மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டார்.
சென்னை:
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகிறது. இதனால் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க மனிதர்களே வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோடை காலத்தில் எப்போதுமே விலங்குகள், பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும். இதனை கருத்தில் கொண்டு திருவள்ளூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து வருகிறார்கள்.
வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் எனக்கருதி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் நிலைய வளாகங்களிலும் சிறிய சிமெண்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீரை நிரப்பி வைத்து அதன் தாகத்தை தணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
அதன் ஒரு பகுதியாக டி.ஜி.பி. அலுவலகத்தில் அவர் 2 இடங்களில் குடிநீர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி பறவைகளின் தாகத்தை தீர்க்க மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டார்.
விலங்குகள் நல உரிமைகள் ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக காவல்துறை பறவைகளை பாதுகாக்க இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-
அனைத்து உயிர்களையும் முடிந்தவரை பாதுகாக்க உதவி செய்வது முக்கியமாகும். கொரோனா காலத்தில் தீயணைப்பு நிலையங்களில் தண்ணீர் கிண்ணம் வைக்கப்பட்டதால் அதன் மூலம் பறவைகள் தாகத்தை தணித்துக் கொண்டது. அந்த பணி திருப்தியளித்தது.
போலீஸ் நிலையங்களில் உள்ள மரங்கள், பறவைகளுக்கு வீடுகளாக அமைந்தது. தொடர்ந்து பறவைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். உதவி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோடைவெப்பத்தால் அதிக வியர்வை, உடலில் உப்பு சத்து மற்றும் நீர்சத்து பற்றாக்குறை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
- கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்க அதிக அளவு தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் முதல் ஜூலை மாதம் வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும்.
சுற்றுப்புற வெப்பநிலை நமது உடலின் சராசரி வெப்பநிலையை விட அதிகமாகும் போது வியர்வை மற்றும் தோலுக்கு அதிக ரத்த ஒட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி சராசரி வெப்பநிலையில் பாதுகாக்கிறது.
கோடைவெப்பத்தால் அதிக வியர்வை, உடலில் உப்பு சத்து மற்றும் நீர்சத்து பற்றாக்குறை, அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைபிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்க அதிக அளவு தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும்.
தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்துக்கொள்ளுவது நல்லது, சூடான பானங்களை தவிர்க்க வேண்டும்.
உப்பு கலந்த மோர், அரிசி கஞ்சி, எலுமிச்சை, பழச்சாறு, இளநீர், உப்பு கரைசல் ஆகியவற்றை தண்ணீர் தாகம் எடுக்கும் போது பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய நிலையில் பகலில் அனல்காற்று வீசியதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.
சென்னை:
நாடு முழுவதும் கோடை வெயில் கடந்த 2 மாதமாகவே கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி எடுக்கிறது.
தமிழகத்தில் கடந்த மாதமே பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.
இந்த நிலையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் 9 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார் ஆகிய 3 மாநிலங்களிலும் வெப்ப அலை கடுமையாகும் என்று கூறியுள்ளது.
இந்த 3 மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த 3 மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த வெயிலில் நின்று அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு வெப்ப நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மகாராஷ்டிரத்தில் திறந்தவெளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 13 பேர் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பலியானார்கள்.
எனவே பகலில் வெயிலில் வெளியே செல்லக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் சிக்கிம், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப அலைகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த வெப்ப அலைகளால் கைக்குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோய் இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே அவர்கள் போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை கோடை வெயில் 113 டிகிரியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தெலுங்கானா மாநிலம் பூபால் பள்ளி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 112.28 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
அதற்கு அடுத்தபடியாக பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் 111 டிகிரி வெயில் பதிவானது. உத்தரபிரதேச மாநிலம் சுல்தான் பூர் பகுதியில் 110.13 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது. பீகார் மாநிலம் சுபால் பகுதியில் 108.32 டிகிரி வெயில் பதிவானது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், ஜான்சி, கான்பூர் மற்றும் ஆக்ரா, பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன், பஞ்சாப் மாநிலம் பதிண்டா ஆகிய பகுதிகளில் நேற்று 104 டிகிரி வெயில் பதிவானது.
வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திரிபுராவில் பள்ளி நேரம் அதிகாலைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை நேற்று 13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதில் ஈரோட்டில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் வறுத்தெடுத்தது. பரமத்திவேலூரில் 105.44 டிகிரியும், சேலத்தில் 105.08 டிகிரியும், திருப்பத்தூர், மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் 103.64 டிகிரியும், திருச்சியில் 103.46 டிகிரி வெயிலும், திருத்தணி, நாமக்கல் ஆகிய இடங்களில் 103.10 டிகிரி வெயிலும், மதுரை விமான நிலையம், தருமபுரி ஆகிய இடங்களில் 102.2 டிகிரி வெயிலும், சென்னையில் 101.60 டிகிரி வெயிலும், கோவையில் 101.3 டிகிரி வெயிலும், தஞ்சாவூரில் 100.40 டிகிரி வெயிலும் பதிவானது.
தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய நிலையில் பகலில் அனல்காற்று வீசியதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். இதனால் பகல் வேளைகளில் வெளியே செல்வதை பெரும்பாலானோர் தவிர்க்கிறார்கள். உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களை குடித்து தாகத்தை தவிர்த்தனர்.
அடுத்த மாதம் (மே) அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் வெயில் மேலும் அதிகரிக்கும்.
- ஊழியர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- சுரங்கங்களில் பணியாற்றுவோருக்கு ஓய்வெடுக்கும் பகுதிகளை உருவாக்க வேண்டும்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் வெயில் அளவு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சில ஊர்களில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டி விட்டது. மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வெயில் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட வானிலை முன்னறிவிப்பை சுட்டிக்காட்டி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய தொழிலாளர் துறை செயலாளர் ஆர்த்தி அகுஜா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வெப்ப அலையின் தாக்கத்தால் தொழிலாளர்களும், ஊழியர்களும் பாதிக்கப்படாத வகையில் உரிய முன்னேற்பாடுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிறுவன உரிமையாளர்கள் ஆகியோருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்கலாம். பணியிடங்களில் போதிய குடிநீர் வசதிகள் இருப்பது அவசியம். கட்டுமான தொழிலாளர்களுக்கு வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான உபகரணங்களையும், ஐஸ் பேக்குகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஊழியர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்த சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
சுரங்கங்களில் பணியாற்றுவோருக்கு ஓய்வெடுக்கும் பகுதிகளை உருவாக்க வேண்டும். தரமான குளிர்ந்த நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும்.
தொழிலாளர்கள் அசவுகரியமாக உணர்ந்தால், வேலையை மெதுவாக செய்ய அனுமதிக்க வேண்டும். ஓய்வு எடுக்க நேரம் ஒதுக்க வேண்டும். குளிர்ச்சியான நேரத்தில் கடினமான வேலைகளை செய்யும்வகையில் பணி நேரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
வெயிலால் ஏற்படும் ஆபத்துகளையும், அவற்றை தணிக்கும் வழிகளையும் தொழிலாளர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். செங்கல் சூளை தொழிலாளர்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.