search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுங்கச்சாவடி"

    • பண்டிகை காலங்களில் வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதால் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் பயணம் தடைபடுகிறது.
    • குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை சுட்டி காட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய மக்கள் ஆயத்தமாகி விட்டனர்.

    பஸ், ரெயில்கள் நிரம்பி விட்டதால் அரசு சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். வெளியூர் பயணம் 28-ந்தேதி முதல் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சொந்தமாக கார்களிலும் பயணம் செய்கிறார்கள்.

    சென்னையில் இருந்து 29,30-ந் தேதிகளில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும். மேலும் சிறப்பு பஸ்களும் ஆயிரக்கணக்கில் இயக்கப்படுவதால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    பாஸ்ட் டிராக் கட்டண முறை இருந்தாலும் பண்டிகை காலங்களில் வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதால் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் பயணம் தடைபடுகிறது.

    அதனை கருத்தில் கொண்டு வாகன நெரிசல் ஏற்பட்டால் இலவசமாக அனுமதிக்கலாம் என்று சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கவும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    பண்டிகை காலங்களில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தியது. குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை சுட்டி காட்டப்பட்டுள்ளது.

    அதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று விட்டு திரும்பும் போதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பல மைல் தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை.

    இதனை கருத்தில் கொண்டு சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் வாகன நெரிசல் ஏற்பட்டால் இலவசமாக அனுமதிக்கலாம் எனவும், சுங்கச்சாவடிகளில் கூடுதலாக ஊழியர்களை நியமித்து வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நீண்ட நெடுங்காலமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.
    • தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிரமான ஒரு போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்த விரும்புகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. கடந்த ஜூன் 2024 அன்று சுங்கச்சாவடி கட்டணங்களை 5 முதல் 7 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. நீண்ட நெடுங்காலமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.

    நெடுஞ்சாலைகளில் பயணிக்கிற வாகன ஓட்டுநர்களை சுங்கச்சாவடி கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கிற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிரமான ஒரு போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்த விரும்புகிறது. அதன்படி தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 70 சுங்கச்சாவடிகளிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் விரைவில் முற்றுகை போராட்டம் நடத்தி கண்டனத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.
    • சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

    தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1 -ந்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

    • வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும்.
    • அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை இந்த உயர்வு இருக்கும்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பயனீட்டாளர் கட்டணத்தை உயர்த்த உள்ளதால், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வது செப்டம்பர் 1-ந் தேதி முதல் விலை அதிகரிக்க உள்ளது.

    வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் கூறியதாவது:-

    சலுகை ஒப்பந்தத்தின்படி கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008-ன் படி மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டது.

    தற்போது மாநிலத்தில் 67 செயல்பாட்டு சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.

    அவற்றில் 25 சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1 -ந் தேதி பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.

    அதன்படி, அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை இந்த உயர்வு இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் 2023- 2024-ல் ரூ.4,221 கோடி வசூலித்துள்ளது. இது 2022- 23ல் வசூலான ரூ.3,817 கோடியை விட 10 சதவீதம் அதிகம்.

    மாநில வாரியாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது. உத்தரபிரதேசம் வசூலில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.

    6,961 கோடி, ராஜஸ்தான் ரூ.5,954 கோடி, மகாராஷ்டிரா ரூ.5,352 கோடி மற்றும் குஜராத் ரூ. 4,781 கோடி வசூலிக்கப்பட்டது.

    தமிழகத்தில் எல் அண்ட் டி கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடியில் அதிகபட்சமாக ரூ.269 கோடி வசூலித்து உள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் ரூ.257 கோடி வசூலித்து 2-வது இடத்தில் உள்ளது.

    • சுங்கச்சாவடியில் பணியிலிருந்த போது ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நள்ளிரவு நடந்த விபத்தில் பணியில் இருந்த ஊழியர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    கடலூர் மாவட்டம் ராசாபாளையத்தை சேர்ந்தவர் கணேசன்( வயது 31 ).இவர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை பார்த்துவந்தார். நேற்று இரவு இவர் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழி எண் 4-ல் பணியில் இருந்தார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்றுக்கு சுங்கவரி செலுத்துவதற்காக பணியில் இருந்த கணேசன், மணிகண்டன் ஆகியோர் கார்டிரைவரிடம் சுங்கவரியை வசூலித்துக் கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் அதே மார்க்கத்தில் ஒரு லாரி காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்தது, மேலும் அதே திசையில் வந்த முட்டை லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துசுங்கச்சாவடி வழி எண் 4-ல் வரி செலுத்த நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் நின்று கொண்டிருந்த லாரி, காரின் மீது மோதி அங்கு வரி வசூல் செய்து கொண்டு இருந்த கணேசன், மணிகண்டன் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விபத்து ஏற்படுத்திய முட்டை லாரி டிரைவர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காங்கேயம் பகுதியை சேர்ந்த முத்துக் குமாரை (வயது29) கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுங்கச்சாவடியில் ஊழியர்கள் அங்குள்ள பூத்தில் அமர்ந்து பணி செய்யாமல் வெளியில் நின்று பணி செய்வதால் இச்சம்பவம் நடந்ததாகவும், சுங்கச்சாவடியில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு இதற்கு காரணம் என்று அங்கு பணி செய்யும் மற்ற ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    விபத்தில் பலியான கணேசனுக்கு அஞ்சலை தேவி என்ற மனைவியும் ஹரிஷ் என்ற மகனும் ரித்திஷா என்ற மகளும் உள்ளனர். சுங்கச்சாவடியில் பணியிலிருந்த போது ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எந்த இடத்திலும் சேவை சிறப்பாக இருந்தால் மட்டுமே உரிய கட்டணம் செலுத்த வேண்டும்.
    • சேவை முறையாக இல்லாவிட்டால் கட்டணம் தேவை இல்லை.

    புதுடெல்லி:

    இந்த நிதியாண்டில் 5,000 கி.மீட்டருக்கு செயல்படுத்தப்படும் செயற்கைக்கோள் உதவியுடன் வாகனங்களை கண்காணித்து சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிக்கும் திட்டம் தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியதாவது:-

    * சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும்தான் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், மோசமாகவும் இருக்கும் இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

    * எந்த இடத்திலும் சேவை சிறப்பாக இருந்தால் மட்டுமே உரிய கட்டணம் செலுத்த வேண்டும். சேவை முறையாக இல்லாவிட்டால் கட்டணம் தேவை இல்லை.

    * குண்டும் குழியுமாகவும், சேறு நிறைந்ததாகவும் சாலைகளை வைத்துக் கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால், மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

    • மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.
    • சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார்.

    கோவை:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது27). தொழில் அதிபரான இவர் கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    கடந்த 12-ந் தேதி அஸ்லாம் சித்திக் தனது நிறுவனத்திற்கு தேவையான கம்ப்யூட்டர் வாங்க பெங்களூருவுக்கு சென்றார். அங்கு பொருட்களை வாங்கி விட்டு மறுநாள் மாலை கேரளாவிற்கு புறப்பட்டார்.

    இந்த நிலையில் அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து செல்வதற்காக பெங்களூரு வந்ததாக நினைத்த கேரளாவை சேர்ந்த கும்பல் பெங்களூருவில் இருந்து 3 கார்களில் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.

    அஸ்லாம் சித்திக் கோவை வழியாக கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதிகாலையில் மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள், தங்கள் காரை வேகமாக இயக்கி சென்று, அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்தனர். பின்னர் காரில் இருந்து திபு, திபுவென இறங்கிய 7 பேர் கும்பல், அவரது காரை நோக்கி வேகமாக சென்று, கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை காரை நோக்கி வீசி கண்ணாடியை உடைத்தனர். மேலும் காரில் கொள்ளையடிக்க முயன்றனர்.

    அப்போது சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார். அங்கு ரோந்து பணியில் போலீசார் இருந்தனர். இதனை பார்த்த கும்பல், அங்கிருந்து தப்பி சென்றது.

    இதுகுறித்து அஸ்லாம் சித்திக் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்து தாக்கியது கேரள மாநிலத்தை சேர்ந்த சிவ்தாஸ் (29), ரமேஷ்பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) என்பதும் தெரியவந்தது.

    சிவ்தாஸ் மற்றும் அஜய்குமார் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றுவதும், விஷ்ணு ராணுவத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    கேரளாவில் செயல்பட்டு வரும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள், கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு சென்று ஹவாலா பணம் எடுத்து வரும் கார்களை தாக்கி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அப்படி ஒரு குழு மூலம் அஸ்லாம் சித்திக் பெங்களூருக்கு ஹவாலா பணத்தை எடுத்து வந்திருக்கிறார் என்ற ரகசிய தகவல் பெங்களூரில் இருக்கும் கேரளாவை சேர்ந்த குழுவுக்கு கிடைத்துள்ளது.

    அந்த குழுவினர் அஸ்லாம் சித்திக்கின் காரை பின்தொடர்ந்து தாக்கி ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க கூறியுள்ளனர்.

    அதன்படியே இந்த 7 பேர் கும்பல் 3 கார்களில் அஸ்லாம் சித்திக்கை பெங்களூருவில் இருந்து பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    கோவை அருகே வந்ததும், காரை வழிமறித்து சேதப்படுத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும், போலீசார் ரோந்து பணியில் நிற்பதை பார்த்ததும் அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிவ்தாஸ், அஜய்குமார், விஷ்ணு, ரமேஷ்பாபு ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகி உள்ள ராணுவ வீரரான விஷ்ணு, கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்துள்ளார்.

    அதன்பின்னர் அவர் பணிக்கு செல்லவில்லை. அவர் எதற்காக ராணுவத்தில் இருந்து விடுப்பு எடுத்து வந்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் விடுப்பில் வந்த அவர் எங்கெங்கு சென்றார். யாருடன் எல்லாம் தொடர்பு வைத்துள்ளார். இவருக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா? வேறு எங்காவது நடந்த வழிப்பறியில் இவருக்கு தொடர்பு உள்ளதா?

    அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து வர போகிறார் என்ற தகவலை இவர்களுக்கு சொன்னவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுங்க கட்டண உயர்வு தேர்தல் காரணமாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.
    • கட்டண உயர்வு அடுத்தாண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.

    நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டண உயர்வு தேர்தல் காரணமாக அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கட்டண உயர்வானது அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், அக்கரை மற்றும் மாமல்லபுரம் இடையே உள்ள சுங்கசாவடியில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வானது அடுத்தாண்டு மார்ச் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

    கார், ஜீப், உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.1 முதல் ரூ. 68 வரையும், இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ. 2 முதல் ரூ. 110 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை-மாமல்லபுரம் இடையே போக்குவரத்து அதிகரித்ததால் 2018-ம் ஆண்டு அக்கரை-மாமல்லபுரம் இடையேயான சாலை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

    • கட்டணம் கேட்டதால் ஜேசிபி டிரைவர் ஆத்திரம் அடைந்தார்.
    • புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை தகர்க்கும் வீடியோ வைரலானது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அங்கு வந்த புல்டோசர் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தும்படி டிரைவரிடம் கேட்டுள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த டிரைவர் திடீரென புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை இடிக்கத் தொடங்கினார். இதனால் அங்கு செயல்பட்டு வந்த இரு கட்டணம் வசூலிக்கும் மையங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் பதிவுசெய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஹபூர் மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜேசிபி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பா.ஜ.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
    • இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

    தமிழ்நாட்டில் சுங்க கட்டணம் உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "நாடு முழுவதும் உள்ள 1228 சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, 5 முதல் 10 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயணக் கட்டணம் ரூபாய் 5 முதல் 20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில், ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்ததாக அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை எழுப்பின. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு சி.ஏ.ஜி. தெரிவித்த முறைகேடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்திலுள்ள 36 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அப்படி திரும்பப் பெறவில்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களே அந்தந்த சுங்கச்சாவடிகளில் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
    • கட்டண உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்நிலையில் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

    கடந்த ஏப்ரல் 1-ந்தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுமுதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

    அதன்படி மணகதி, கல்லக்குடி, வல்லம், தென்மாதேவி உள்பட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஒரு முறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையிலும் உயர்ந்துள்ளது.

    பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.110, மாதாந்திர கட்டணம் ரூ.2,395. இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூ.115, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.175, பஸ், சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.245, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.265, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.400 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.570 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள் மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.465, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணம் ஆகும்.

    உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுங்க சாவடியில் கட்டண உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    • சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

    அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த கட்டண உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

    அதன்படி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.110, மாதாந்திர கட்டணம் ரூ.2,395. இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூ.115, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.175, பஸ், சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.245, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.265, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.400 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.570 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள் 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.465, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணம் ஆகும்.

    உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ×