search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைக்க"

    • பெரும்பாலான வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு வீடுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்க முடியவில்லை.
    • இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கட்டாயம் உறிஞ்சி குழாய் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உறிஞ்சிக்குழாய் அமைக்காமல் கழிவுநீரை சாக்கடையில் விடுபவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அந்த கழிவுநீரை விடும் பைப்பை அடைப்பதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஆனால் இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வீடுகளில் இடம் இல்லாதவர்களுக்கு மாற்று வழி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கட்டையன்விளை பகுதியில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கழிவுநீர் உறிஞ்சிக் குழாய்கள் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி கூறி வருகிறது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு வீடுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்க முடியவில்லை.

    இந்த நிலையில் உறிஞ்சி குழாய்கள் அமைக்காத வீடுகளில் கழிவுநீர் குழாய்களை சீல் வைக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அந்த வார்டு கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.

    அதில் கட்டையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து தர வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் கழிவுநீர் வெளியேற்றுவது தொடர்பாக உறிஞ்சி குழாய்கள் அமைப்பதால் ஏற்கனவே போர்வெல் அமைத்திருக்கும் இடங்களில் கழிவுகள் கலக்க வாய்ப்பு இருக்கிறது.

    எனவே மாநகராட்சி தனது முடிவை மறு பரிசீலனை செய்து தற்போது உள்ள நடைமுறைபடியே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பின் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று இது தொடர்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அந்த பகுதி பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து கட்டையன்விளை பகுதியில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். ஏ.டி.எஸ்.பி. சுப்பையா, டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் மாநகராட்சி நகர்நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் மாநகராட்சி சார்பில் சானல் கரை பகுதியையொட்டி உறிஞ்சி கிணறு அமைக்கப்பட்டு தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாகும்.

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர் குறிச்சி அருகே உள்ள உதயகிரி கோட்டையினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாகும். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் கன்னியாகுமரி கடற்கரை, லெமூரியா கடற்கரை, பூம்புகார் படகுதளம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை புரிகிறார்கள்.

    சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு முன்வரைவு திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு படைவீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட உதயகிரி கோட்டையினை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    உதயகிரி கோட்டை வளாகத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்படவுள்ள பூங்கா பணிகள் ரூ.13 லட்சம் மதிப்பில் வளாகத்திலுள்ள குளத்தினை தூர்வாரும் பணியினையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு இப் பணிகளை விரைந்து முடித்திட பத்மநாபபுரம் நகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து படைத்தளபதி டிலனாய் கல்லறையினை பார்வையிடப்பட்டது.உதயகிரி கோட்டை வளாகத்தினை தூய்மைப்படுத்து வது, தொங்குபாலம் அமைப்பது தொடர்பான திட்டத்தினை வகுத்திட வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. வளாகத்திலுள்ள மீன் அருங்காட்சியகத்தினை மேம்படுத்துவது அதிகமான விலங்குகள், பறவைகளை இங்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்திடவும் வனத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சமையலறை கூடத்தினை ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இச்சமையலறை பயன்பாட் டிற்கு வரும்போது பத்மநாபபுரம் நகராட்சி விலவூர் திருவிதாங்கோடு, இரணியல், வில்லுக்குறி ஆகிய நான்கு பேரூராட்சிக்குட்பட்ட 20 பள்ளிகளை சேர்ந்த சுமார் 1900 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் லெனின் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • ஈரோடு சிந்தன் நகரில் இன்று பாதாள சாக்கடை கழிவுநீர் ஊற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாளசாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துள்ளனர். எனினும் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் கைவிடவில்லை.

    ஏற்கனவே கடந்த 2 வாரத்திற்கு முன்பு இங்கு பணிகள் மேற்கொள்ள வந்த மாநகராட்சி அதிகாரிகளை இப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து பணிகளை செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைப்பதற்கு குழிகள் தோண்டுவதற்காக இன்று மீண்டும் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.

    அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வராஜ், மாலதி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் இருந்தனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு ஒன்று திரண்டனர்.

    அவர்கள் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பணிகள் செய்ய விடாமல் தடுக்க சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளி, கோவில்கள் உள்ளன. திடீரென மாநகராட்சி சார்பில் குடியிருப்பு மத்தியில் பாதாள சாக்கடை கழிவுநீர்ஊற்று நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    இதற்கு நாங்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளோம். ஆனால் இன்று திடீரென மாநகர் சார்பில் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் வந்தனர். நாங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் அவர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இருந்தாலும் போலீசார் உதவியுடன் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

    இது சம்பந்தமாக எங்களிடம் எந்த ஒரு கருத்தும் இதுவரை கேட்கப்படவில்லை. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஊற்று நிலையம் அமைந்தால் எங்கள் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பள்ளி குழந்தைகள் இந்த வழியாகத்தான் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.

    இதனால் துர்நாற்றம், சுகாதார கெடு, நோய் தொற்று பரவ ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த திட்டம் அமைக்கப்படுவதற்கு பதில் ஊரின் ஒதுக்குப்புறமாக இந்தத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×