என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லிக்குப்பம்"

    • பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை.

    நெல்லிக்குப்பம்:

    கடலுர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் பெரும் பாதிப்பை சந்தித்தது.

    இந்த நிலையில் தொழிலாளர் நல த்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முள்ளி கிராம்பட்டில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அந்த வகையில் கையில் குழந்தையுடன் நின்ற இளம்பெண் மற்றும் மூதாட்டி ஒருவரிடம் அமைச்சர் சி.வெ.கணேசன் குறைகளை கேட்டார்.

    அப்போது அவா்கள் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கதறி அழுதனர்.

    இதை பார்த்த அமைச்சர் சி.வெ.கணேசன், உடனே அந்த பெண்களின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி, அண்ணன் வந்துட்டேன், கவலை படாதே, உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.

    மேலும் இளம்பெண் வைத்திருந்த பெண் குழந்தையை வாங்கிய அமைச்சர், அந்த குழந்தைக்கு மணிமேகலை என்று பெயர் சூட்டினார்.

    பின்னர், தாசில்தாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் வருகிறேன் என்று தெரிந்தும் நீங்கள் வரவில்லை, உடனே இங்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறி எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், கமிஷனர் கிருஷ்ணராஜன், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மாருதி ராதாகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், வி.சி.க. நகர செயலாளர் திருமாறன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
    • தினந்தோறும் எங்கள் போராட்டம் தொடரும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபெஞ்சல் புயல் மழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 2 ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் அண்ணா கிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட 12 ஊராட்சிக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு 12 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது தாசில்தார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அண்ணா கிராமம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கடலூர் கலெக்டரை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

    இந்த நிலையில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் வேல்முருகன் எம்.எல்.ஏ. எனது தொகுதிக்குட்ட்பட்ட பண்ருட்டி அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுப்பி இருந்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை 12 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அந்தந்த பகுதிகளில் இருந்து ஊர்வலமாக ஏராளமானோர் பாலூர் பகுதியில் திரண்டனர்.

    பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர்-பாலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    அப்போது கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கலைப்போம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், தாசில்தார் ஆனந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது எங்களுக்கு நிவாரணத்தை வழங்கினால்மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். மேலும் தினந்தோறும் எங்கள் போராட்டம் தொடரும் என ஆக்ரோஷமாக தெரிவித்தனர். மேலும் பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் தொடர்ந்து பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கடலூர் பாலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பூலோகநாதர் லிங்கத் திருமேனியாக எழுந்தருளி காட்சி தருகிறார்.
    • அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும்.

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ளது, புவனாம்பிகை உடனாய பூலோகநாதர் கோவில். சகல தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி செய்யும் பரிகாரத்தலமாக இக்கோவில் திகழ்கிறது.

    இக்கோவில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டிய ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இக்கோவிலை சுற்றி, 2 கிலோமீட்டா் தொலைவில் 3 கோவில்கள் அமைந்துள்ளது.

    பூலோகநாதர் கோவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வையாபுரி பரதேசியாரால் புனரமைக்கப்பட்டது. பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தென் மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்சினை, ஜென்ம சாப பாவ தோஷம், வாஸ்து தோஷம், கண் திருஷ்டி தோஷம் உள்ளிட்ட 16 விதமான தோஷங்களையும் இக்கோவிலில் உள்ள பூலோகநாதர் நீக்குவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் பூலோகநாதர் லிங்கத் திருமேனியாக எழுந்தருளி காட்சி தருகிறார்.


    கோவில் அமைப்பு

    இக்கோவிலின் ராஜ கோபுரத்தை கடந்தால் கொடி மர விநாயகரும், ராஜ நந்தியம் பெருமானும் காட்சியளிக்கின்றனர். தொடர்ந்து கொடி மரம், பலிபீடம் உள்ளது. கொடி மரத்தின் வடகிழக்கு மூலையில் நவ கிரகங்கள் மற்றும் சொர்ண பைரவர் காட்சி தருகிறார்.

    மகா மண்டப நுழைவு வாசலில் இடது புறம் விநாயகரும், வலது புறத்தில் பாலதண்டாயுதபாணியும் காட்சித்தருகிறார்கள். தொடர்ந்து ஆனந்த ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். உள்ளே சென்றால் நந்தி, பலிபீடம் உள்ளது.

    அர்த்த மண்டபத்தில் புவனாம்பிகை சன்னிதி மற்றும் பூலோகநாதர் சன்னிதியின் வலது புறத்தில், சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த கல்யாண நடராஜ பெருமான் அருள்பாலிக்கிறார்.

    கோவில் பிரகாரத்தில் கிழக்கு திசை நோக்கி சொர்ண விநாயகர், பாலமுத்து குமாரசாமி, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் லிங்கோத்பவர் சுவாமிகள் மற்றும் தெற்கு திசை நோக்கி மேதா தட்சிணாமூர்த்தியும் காட்சி தருகிறார்கள்.

    மற்ற கோவிலை காட்டிலும் இங்குள்ள தல விருட்சங்கள் மாறுபட்டு இருக்கும். வில்வ, வன்னி மரங்கள் தல விருட்சங்களாக திகழ்கிறது. பூமி சம்பந்தமான தோஷங்களை நீக்குவதற்காக நடைபெறும் மண் வழிபாட்டு முறையில் தல விருட்சம் முக்கியத்துவத்தை பெறுகிறது.

    மேலும் கார்த்திகை மாதம் நடைபெறும் மகா யாகத்தின்போது பயன்படுத்தப்படும் மூலிகைகள், தானியங்கள், திரவியங்களின் சாம்பல் இந்த வன்னி மரத்தின் அடியில் சேர்க்கப்படுகிறது.

    புவனாம்பிகை என்பதற்கு புவனத்தை (உலகத்தை) ஆள்பவள் என்று பொருள். இக்கோவிலின் மகாமண்டபத்தின் நுழைவு வாயிலின் வலது புறத்தில் தனி சன்னதியில் புவனாம்பிகை நாயகி வடக்கு திசையை நோக்கி எழுந்தருளியுள்ளார்.


    இந்த அன்னையின் முன் அமர்ந்து எந்த வரம் வேண்டினாலும் அது நிறை வேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அஷ்டோத்திர நாமவளி உச்சரித்து குங்குமம் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் கூடும். திருமணத்தடை, குழந்தைபேறு உண்டாகுதல், குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும்.

    பூலோகநாதர் கோவிலில் உள்ள மகா மண்டபத்தின் வலது பக்கத்தில் தெற்கு நோக்கி தனி சன்னிதியாக ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதியும், ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் கிழக்கு நோக்கி யோக நிலையில் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்கள். அலமேலு தாயாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.

    அமைவிடம்

    இக்கோவில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இக்கோவில் தினசரி காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய்க்கிழமை மட்டும் அதிகாலை 5 மணிக்கே பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    • விவசாயிகளுக்கு கடன் வழங்காத தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை கண்டித்து 26 -ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கரும்பு விவசாயிகள் அறிவித்துள்ளது.
    • தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தனியார் சர்க்கரை ஆலை மட்ட கோரிக்கை மாநாடு நெல்லிக்குப்பத்தில் நடைபெற்றது.

    கடலூர்:

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தனியார் சர்க்கரை ஆலை மட்ட கோரிக்கை மாநாடு நெல்லிக்குப்பத்தில் நடைபெற்றது. மாநாட்டில் அருள் ஜோதி ராமலிங்கம் கொடியேற்றி தொடங்கி வைத்தார். சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் சம்பத் வரவேற்றார். மாநாட்டில் விவசாய சங்க மாநில துணை செயலாளர் மாதவன் தொடங்கி வைத்து பேசினார். ஆலை மாவட்ட செயலாளர் தென்னரசு அறிக்கை வாசித்தார். மாவட்ட இணை செய லாளர் சரவணன் தீர்மானங்கள் வாசித்தார். இதில் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், கரும்பு சங்க மாநில செயலாளர் இரவிச் சந்திரன், ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெ.ராம–லிங்கம், மாவட்ட பொரு–ளாளர் தட்சணாமூர்த்தி வாழ்த்துரை ஆற்றினார்கள். முடிவில் ராமானுஜம் நன்றி கூறினார். கூட்டத்தில் மத்திய அரசு கரும்பு டன்னுக்கு 4500 ரூபாய் விலை வழங்கிட வேண்டும். மாநில அரசு அறிவித்த எஸ்.ஏ.பி நிலுவைத் தொகை–யை உடனே வழங்கிட வேண்டும். தனியார் சர்க்கரை ஆலையில் எரிந்த கரும்புக்கு விவசாயிகளிடம் டன் 1-க்கு 100 ரூபாய் பிடித்தம் செய்த தொகையை உடனே விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.

    கரும்பில் கழிவு பிடித்தம் செய்த ரூபாயை ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும். ஆலை நிர்வாகம், அரசு, விவசாயி–கள் பங்கேற்கும் பழையபடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கரும்புக்கு விலை நிர்ணயம் செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் அலை கழிப்பதை கண்டித்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு வருகிற 26-ஆம் தேதி தமிழ்நாடு கரும்பு விவசாயி–கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×