என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "online Gambling"

    • ஒட்டுமொத்தமாக இதுவரை 87 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்து உள்ளனர்.
    • ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் விஷயத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் மிட்னாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அவரது குடும்பம் கடனுக்கும், வறுமைக்கும் ஆளானதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது மனைவி வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வெண்ணிலாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தி.மு.க. அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 27 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 87 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்து உள்ளனர்.

    இத்தகைய சூழலில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் விஷயத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கனகராஜ் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
    • இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி வடக்கு தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்ற 27 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    தமிழக அரசின் அலட்சியம் காரணமாக 1½ ஆண்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 25 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக்கூடாது.
    • எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச் சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும்.

    சென்னை:

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மூலம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகிறது.

    மேலும், பணம் (அல்லது வெகுமதிகள்) வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருதப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுவதாக சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எந்தவொரு ஆன்லைன் விளையாட்டை வழங்குபவரும், சூதாட்டத்தை புகுத்தக் கூடாது. அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக்கூடாது. பணம் தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக்கூடாது. எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச் சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும். ஒழுங்குமுறைகளை மீறினால், விளக்கம் கேட்டு அந்தப் பதிவு ரத்து செய்யப்படும்.

    இதற்கு 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு குழுவை, ஒரு தலைவர் (ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி) மற்றும் 2 உறுப்பினர்களைக் கொண்டு அரசு அமைக்கும்.

    சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

    அதில் ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்கு முறை ஆணையம் விரைவில் செயல்பட உள்ளது. இந்த ஆணையத்தில் ஐ.டி.வல்லுனர்கள், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுனர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

    இவர்கள் எந்தெந்த ஆன்லைன் விளையாட்டுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது, குறைகளுக்கு தீர்வு காண்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்.

    உள்ளூரில் இல்லாத ஆன்லைன் விளையாட்டு வழங்குபவர் எவரும், எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையோ, பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையோ, ஒழுங்குமுறைக்கு மாறான விளையாட்டுகளையோ வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால், அந்த விளையாட்டு வழங்குபவரை தடை செய்வதற்கு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்ள வேண்டும்.

    • எந்த நோக்கத்திற்காக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதை தமிழக அரசு இன்று முதலே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
    • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய சமூகக்கேடு என்பதை அரசே ஒப்புக்கொண்டு விட்ட நிலையில், அது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் 3 முறை விவாதிக்கப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நியாயமானதல்ல.

    எந்த நோக்கத்திற்காக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதை தமிழக அரசு இன்று முதலே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அரசியலமைப்பு சட்டப்படி சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகி விடும்.
    • அக்டோபர் 17-ந்தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் 6 வாரங்கள் நிறைவடைவதால் அவசர சட்டம் காலாவதியாகிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த அக்டோபர் 1-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி இன்றுடன் காலாவதியாகிறது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம்.

    இந்திய அரசியலமைப்பு சட்டப்படி சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகி விடும். அக்டோபர் 17-ந்தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் 6 வாரங்கள் நிறைவடைவதால் அவசர சட்டம் காலாவதியாகிறது.

    ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மீண்டும் முழு வீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை மிகவும் அவசியம்.

    ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த கவர்னரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்த மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    • ஆன்லைன் சூதாட்டம் முழுவீச்சில் மீண்டும் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு பலரும் அடிமையாகி பணத்தை இழந்ததுடன், தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவங்கள், பதைபதைக்க வைத்து விட்டன.

    இது மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் இடையேயும் பேசும் பொருளானது. இந்த ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்தது.

    இதையடுத்து ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி, கடந்த மாதம் 1-ந் தேதி கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தது. கவர்னர் ஆர்.என்.ரவிஅன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

    இது ஆன்லைன் சூதாட்ட எதிர்ப்பு ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்தது.

    இந்த நிலையில், தமிழக அரசு, அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி, 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022'-ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28-ந்தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது.

    அவசரச் சட்டத்தைப் போன்று இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான நிரந்தர தடைச்சட்ட மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.

    இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. கடிதம் எழுதினார்.

    கடந்த 24-ந்தேதி காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழக அரசு விளக்க கடிதத்தை அனுப்பி வைத்தது.

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த 25-ந் தேதி நிருபர்களிடம் பேசும்போது, "கவர்னரின் கடிதத்தில் மசோதாவில் ஏற்பட்டுள்ள சில சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. விளக்கம் கேட்ட 24 மணி நேரத்திற்குள் சட்டத்துறை அதற்கான உரிய பதிலை தயாரித்து இன்று (25-ந் தேதி) காலை 11 மணிக்கு கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தது. விளக்கத்தை ஏற்று கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று காத்திருக்கிறோம். அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கவர்னர், நிரந்தர சட்ட மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்க தயங்குகிறார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து நேரில் விளக்கம் அளிக்க கவர்னரை சந்திக்க அனுமதி கேட்டோம். ஆனால் நேரம் ஒதுக்கித்தரப்பட வில்லை" என தெரிவித்தார்.

    தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் கடந்த மாதம் 1-ந்தேதி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் சட்டசபை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் தானாகவே காலாவதி ஆகி விடும்.

    இதுபற்றிய விதி, அரசியல் சாசன சட்டம் பிரிவு 213 (2) (ஏ)யில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

    அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர், தமிழக சட்டசபை கடந்த மாதம் 17-ந் தேதி கூடியது. நேற்றுடன் 6 வாரங்கள் முடிந்துவிட்டது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியாகி உள்ளது.

    இந்த நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய புதிய மசோதாவான 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022'-க்கு கவர்னர் கேட்ட விளக்கத்தை தமிழக அரசு அளித்தும், இன்னும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த மசோதாவுக்கு கவர்னர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

    அதே நேரத்தில் அவசரச் சட்டம் காலாவதியாகி உள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் முழுவீச்சில் மீண்டும் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணர வேண்டும்.
    • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

    ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது 4-வது தற்கொலை ஆகும்.

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை.

    ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது. மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது.

    ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணர வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை.
    • வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை:

    நெல்லையை சேர்ந்த ஐயா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:-

    ஆன்லைன் லாட்டரி விளையாட்டுக்களுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆன்லைன் லாட்டரி விளையாட்டுகளுக்கான சந்தையும் தற்போது காளான்கள் போல அதிகரித்து வருகின்றது.

    ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் மன அழுத்தம், கடன், வறுமை, விவாகரத்து, தற்கொலை மற்றும் குற்றவியல் நிகழ்வுகள் என தீங்குகளே அதிகம் நிகழ்கின்றன. இதனால் ஏராளமான குடும்பங்களும் சிதைந்துள்ளன. பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன் லாட்டரி, சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடி, அதனால் குற்றவாளிகளாக மாறும் சூழல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க 18 வயதுக்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை தடுக்க நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    ஆகவே 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், அதற்கான இணையதளம் மற்றும் செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    அவரது மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவிக்கும்போது, "18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுக்கள் தெரியவந்தது எப்படி? அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

    பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. அதன் விளைவாகவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம்" என கருத்து தெரிவித்தனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • ஸ்மார்ட் போன் வந்தபிறகு ஆன்லைன் சூதாட்டம், ஒரு தொற்றுநோயாக மாறியிருக்கிறது.
    • பணத்தை பறிகொடுத்த மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எல்லோரது கைகளுக்கும் ஸ்மார்ட் போன் வந்தபிறகு, ஆன்லைன் சூதாட்டம், ஒரு தொற்றுநோயாக மாறியிருக்கிறது. ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஒருசிலர் தற்கொலை செய்துகொள்வதும் இன்னொருபுறம் தொடர்கிறது.

    இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பந்தனா மஜ்கி என்கிற இளம்பெண், 70 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். பணத்தை பறிகொடுத்த மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியான கடைசி உயிர் பந்தனா மஜ்கி ஆக இருக்கட்டும். இப்படிப்பட்ட இனியொரு இழப்பு யாருக்கும் வேண்டாம்.

    ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக தடுக்கும் வகையில், நிரந்தர சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்து, சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இச்சட்ட மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு கடந்த மாதம் 28-ந் தேதியே அனுப்பிவைக்கப்பட்டது.

    ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவி, சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலதாமதம் செய்து வருவதால்தான், இப்போது ஒடிசா இளம்பெண் பந்தனா, ஆன்லைன் சூதாட்டத்துக்கு பலியாகி இருக்கிறார். இதற்கு, கவர்னர் ஆர்.என்.ரவியே முழுப் பொறுப்பு.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழ்நாட்டில் நிரந்தரமாக தடை செய்ய கவர்னர் ஆர்.என்.ரவிக்கு என்ன தயக்கம்? யாரைத் திருப்திப்படுத்த அவர் மவுனமாக இருக்கிறார்?

    இனியும், ஆன்லைன் ரம்மியை நிரந்தரமாக தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்து வந்தால், அதனால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் கவர்னர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியிருக்கிறார்.

    • மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி சில விளக்கம் கேட்டிருந்தார்.
    • ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது.

    சென்னை:

    ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை.

    ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக கவர்னர் சில விளக்கம் கேட்டிருந்தார். அதில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன் லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் கவர்னர் குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை ஆளுநர் ஆய்வு செய்துவருகிறார்.

    இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாளை காலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். அப்போது, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளார்.

    உரிய விவரங்களை சேகரித்து முறையாக ஆய்வு செய்து வல்லுநர் குறித்த அறிக்கைக்குப் பிறகே சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா, அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டே கொண்டு வரப்பட்டது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    • சல்மான் வழக்கம் போல வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பினார்.
    • வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையம் வி.ஜி.பி. கார்டனை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் (வயது 22). இவர் சந்தேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சல்மான் பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனது செல்போன் மூலமாக ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் சூதாட்டம் மூலமாக இவருக்கு வருமானம் வந்தது. அந்த ஆர்வத்தில் சல்மான் தொடர்ந்து ஆன்லைனின் சூதாட்டம் ஆடினார். அதில் அவர் தனது சம்பள பணத்தை இழந்தார். மேலும் தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சல்மான் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நடந்த சம்பவத்தையும் தனது பெற்றோரிடம் சொல்லாமல் அவர் மறைத்தார். சம்பவத்தன்று சல்மான் வழக்கம் போல வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரது பெற்றோர் மகன் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சல்மான் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் நான் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைனில் சூதாட்டம் ஆடினேன். அதில் சம்பள பணம் முழுவதையும் இழந்து விட்டேன். எனக்கு வாழ்வதற்கு அச்சமாக உள்ளது. எனவே என்னை மன்னித்து விடுங்கள் என எழுதி இருந்தார்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சல்மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடந்த 12-ந்தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார்.
    • சங்கர் வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் (வயது 29). என்ஜினீயர்.

    இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் இதன் மூலமாக அவருக்கு வருமானம் கிடைத்தது. நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானார். அதன் மூலம் தான் சேர்த்து வைத்து இருந்த பணத்தை இழந்தார்.

    எப்படியாவது சூதாட்டத்தில் விட்ட பணத்தை திருப்பி வென்றுவிடலாம் என்ற முயற்சியில் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாடினார். கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் சங்கர் இழந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    கடந்த 12-ந்தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

    அறையில் இருந்த சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அறையில் இருந்து சங்கர் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும்.

    இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.

    ஆனால் அவர் ஆன்லைனில் எவ்வளவு பணத்தை இழந்தார் என்பதையும் நண்பர்களிடம் எவ்வளவு கடன் வாங்கினார் என்பதையும் குறிப்பிடவில்லை. பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×