search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைவிழா"

    ஏற்காடு கோடைவிழா தொடக்கம் : சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குதூகலம்
    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கியது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்க்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். 

    இந்த மலர்க்கண்காட்சியில் மேட்டூர், அணை, வள்ளுவர் கோட்டம், பட்டாம்பூச்சி உள்ளிட்ட 7 மலர் வடிவமைப்புகள் 5 லட்சம் மலர்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கம் அருகே அனைத்து துறையின் சார்பில் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் அரங்குகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் திறந்து வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்குகளையும் மக்கள் பிரதிநிதிகள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில் சுற்று லாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில்,  தமிழகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பகுதிகளில் ரூ.50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சுற்றுலா இடங்களில் அணுகு சாலைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், கிளியூர் மலை கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் சாகசப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சுற்றுலாப் பயணிகள் டென்ட் மூலம் தங்குதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தமிழகத்தில் சூழல் சுற்றுலா, கேரவன் சுற்றுலா ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதன்மூலம் சுற்றுலாத் துறையில் புதிய மைல்கல் எட்டப்படும் என்றார்.  

    இதனையடுத்து நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனைத்து கிராம கலைஞர் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 900 கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் அரசின் செலவில் விளை நிலங்களாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இலவச போர்வெல், இலவச மின்சாரம், இலவச இடுபொருள்கள் உள்ளிட்டவை மூலம் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வேளாண்மை புரட்சி நிகழ்த்தப்படும் என்றார்.

    விழாவில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஏற்காடு மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஏற்காடு பகுதியில் வசித்து வரும் மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ளும்.ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், உள்ளூர் மலைவாழ் மக்களுக்கும்,உள்ளூர் வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைக்கும் என்றார். 

    திறப்புவிழா நிகழ்ச்சியில் அண்ணாபூங்கா ஊழியர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் கார்மேகம் போட்டோ எடுத்துக்கொண்ட காட்சி.

    இவ்விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ் ஆர்.சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொருப்பாளர் டி.எம்.செல்வகணபதி. ஏற்காடு ஒன்றிய பொருப்பாளர் தங்கசாமி,ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பாலு, கிளை செயலாளர்கள் ஆட்டோ ராஜா, குணசேகரன்,வைரம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜியகுமார்.மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    ஏற்காடு கோடைவிழாவை ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 2 வருடங்களாக கொேரானா ஊரடங்கு காரணமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்தப்படவில்லை.  இந்த ஆண்டு கடந்த 25-ந்  தேதி 45-வது கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

    இங்குள்ள அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்ணாடி மாளிகையில் வண்ணமிகு மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணா பூங்காவிலும், ஏரி பூங்காவிலும் உள்ள செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கோடை விழா மலர் கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மேட்டூர் டேம், மகளிருக்கான இலவச பேருந்து, விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டி, குழந்தைகளை குதூகலமாக்க சின்-சான் பொம்மை ,வள்ளுவர் கோட்டம்  போன்ற உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    சுற்றுலா பயணிகள் அமர இரண்டு குடில்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

    படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செயது மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர் கோடை விழா மலர் கண்காட்சிக்காக கூடுதலாக பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்கியுள்ளது.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காடு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பபட்டது. இதை சமாளிக்க சேலத்தில் இருந்து ஏற்காடு வரும் வாகனங்கள் திரும்பி செல்ல குப்பனூர் வழியாக திரும்பி விட பட்டனர்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லவும் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.

    நேற்று குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 6-ம் நாளான இன்று பல்வேறு துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    ×