search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் விதைகள்"

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
    • 25 சதவீதங்கள் மட்டுமே வேளாண் துறை மூலம் வழங்கப்படும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் முழுவதும் தற்பொழுது சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், பறக்கை உட்பட பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் விதை நெல் தட்டுப்பாடு உள்ளது.

    உழவர் செயலி மூலம் தகவலை தெரிந்து கொள்ளலாம் என்றால் விதை நெல் இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் தங்கு தடை இன்றி வழங்க வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது பொன்மணி, திருப்பதிசாரம் 3 விதை நெல்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பொன்மணி ரக நெல்லை இனி பயிர் செய்தால் காலதாமதம் ஏற்படும். எனவே திருப்பதி சாரம் 3 ரக நெல்லை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

    விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. தாழக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. திருப்பதி சாரத்திலுள்ள வேளாண் விதை மையத்தில் 12 ஏக்கர் நிலம் தரிசாக போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் அதை பயன்படுத்தாவிட்டால் விவசாயிகளுக்கு அந்த விதை பண்ணையை குத்தகைக்கு வழங்க வேண்டும். அதில் விவசாயிகள் பயிர் செய்வார்கள்.

    செண்பகராமன்புதூர் பகுதியில் தென்னை மேம்பாட்டு கழகம் பல ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது பொன்மணி, திருப்பதி சாரம் 3 ரக நெல்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2-வது பருவத்தில் 5,845 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதங்கள் மட்டுமே வேளாண் துறை மூலம் வழங்கப்படும். மீதமுள்ள விதை நெல்களை விவசாயிகளே தயார் செய்து விடுவார்கள்.

    அதன் அடிப்படையில் தற்போது 92 டன் விதை நெல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவை என்றால் சம்பந்தப்பட்ட வேளாண் துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பதி சாரத்தில் 40 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட பிறகு 30 ஏக்கர் வேளாண் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 17 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டது. இனி வரும் பருவத்தில் 31 ஏக்கரில் நெல் விதை பயிர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நமது பாரம்பரிய ரகங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

    குடிமங்கலம்:

    பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக அரசு விதைப்பண்ணை மூலம் தூயமல்லி நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:-

    நமது முன்னோர்கள் நெல் ரகங்களின் பண்புகள் மற்றும் தனித்தன்மைகள் குறித்த ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தனர். சிறந்த அனுபவத்தின் மூலம் புதிய நெல் ரகங்களை உற்பத்தி செய்வதிலும் சிறந்தவர்களாக இருந்தனர்.

    இதனால் ஒவ்வொரு பகுதிக்கும் அதன் சூழ்நிலை, தட்ப வெப்ப நிலை, மண் வகை, நீரின் தன்மையைப் பொறுத்து நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்தன. ஆனால் அதிக மகசூலைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளால் பாரம்பரிய நெல் ரகங்களில் பலவும் அழிந்து விட்டன.

    தற்போது பாரம்பரிய நெல் ரகங்களில் 63 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கச்சம்பா, இலுப்பைப்பூ சம்பா, மடுமழுங்கி, அறுபதாம் கோடை, சிவப்புக்கவுனி, ஆனைக்கொம்பன், மிளகுச்சம்பா, கருங்குறுவை, காட்டுயாணம், குழியடிச்சான், குள்ளக்கார், தூயமல்லி, மாப்பிள்ளைச்சம்பா, பூங்கார் என பலவகை பாரம்பரிய நெல் வகைகள் பயிரிடப்பட்டு வந்தது. இவற்றில் பல ரகங்கள் மருத்துவ குணங்கள் அடங்கியது.

    ஆனால் இவற்றில் பலவும் அழியும் நிலையில் உள்ளது. ஒரு பாரம்பரிய ரகத்தின் இழப்பானது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பின் இழப்பாகும்.

    தற்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நமது பாரம்பரிய ரகங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரம்பரிய அரிசிகள் கிடைக்கும் இடங்களைத் தேடிச் சென்று வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கும் அதற்கான விதைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    இதனால் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், அந்த விதைகள் விவசாயிகளை சென்றடையும் நோக்கத்திலும் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு விதைப்பண்ணைகளில் பல பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டது.

    அந்த வகையில் மடத்துக்குளம் வட்டாரம் பாப்பான்குளம் அரசு விதைப்பண்ணையில் 5 ஏக்கரில் தூய மல்லி எனப்படும் பாரம்பரிய நெல் ரகம் பயிரிடப்பட்டு 10.7 டன் மகசூல் பெறப்பட்டது. பெரும்பாலும் நவீன ரக நெல் பயிர்கள் குறைவான உயரமே வளரக்கூடிய குட்டை ரகங்களாகும்.

    ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள் பலவும் உயரமாக வளரக் கூடியவை. இதனால் இயற்கை உரத்தேவையைப் பூர்த்தி செய்யும் மாடுகளுக்கு வைக்கோல், மண்ணுக்கு தழைச்சத்து, விவசாயிகளுக்கு நெல்மணிகள் என்று பல அடுக்குகளாக பலன் தரக்கூடியதாக இருக்கும்.

    தற்போது அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள தூய மல்லி நெல் விதைகள் அங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, விதை மாதிரி எடுக்கப்பட்டு, பகுப்பாய்வுக்குப் பிறகு உண்மை நிலை விதைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பத்தூர் கந்திலி பகுதியில் நிலக்கடலை, நெல் விதைகள் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி அலுவலர் தெரிவித்தார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மற்றும் கந்திலி வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் கடந்த 2 வாரங்களாக பெய்த மழையினால் மேற்கொண்டு வருகின்ற மாணவரிபருவத்தில் விதைப்பு மேற்கொள்ளும் போது நெல், நிலக்கடலை, துவரை காராமணி, உளுந்து, விதைகள் திருப்பத்தூர் மற்றும் கந்திலி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

    நிலக்கடலை கதிரி1812, என்ற ரகம் 16 டன் இருப்பில் உள்ளது. விதைகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உதவி வேளாண்மை அலுவலர் தொடர்புகொண்டு உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் மூலம் பதிவு செய்தவுடன் வேளாண் விரிவாக்க மையங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான ஜிப்சம் 45 டன் இருப்பில் உள்ளது ஜிப்சத்தை அடி உரமாகவும் 45வதுநாள் மேல் உரமாகவும் இரண்டு முறை இடுவதால் நிலக்கடலை மகசூல் அதிகரிக்கும் எனவே நிலக்கடலை விதைகளை மானியத்தில் ஜிப்சம் வாங்கி பயனடையவும் மேலும் நிலக்கடலை விதைகளை விதைப்பு செய்யும் முன் டிரைகோடேர்மா பிரிவு அல்லது பேவிஸ்டின் மருது கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும், நெல்ரகம் வெள்ளைப்பொன்னி மற்றும் டிகேஎம் 1 ரகங்களும் கையிருப்பு உள்ளது.

    நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க ப்படுகிறது விதைகள் மானியத்தில் பெற்று பயனடையுமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி தெரிவித்துள்ளார்.
    ×