என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forest staff"

    • அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை.
    • சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னர்கோவில் பகுதியை சுற்றி பல்வேறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு குளங்கள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் வட்டம் திருநாரையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று குளத்தின் கரை ஓரத்தில் கிடந்தது. இதை அந்த வழியாக கிராமத்திற்குள் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்தசெய்தி கிராமத்தில் காட்டுதீ போல பரவி உடனே பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு குளத்தின் அருகே வந்து குளத்தின் ஓரத்தில் கிடந்த முதலையை பார்த்தனர். அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த வனசரக அலுவலர் வசந்த், பாஸ்கரன் தலைமையிலான வன ஊழியர்கள் விரைந்தனர். பின்னர் குளத்தின் ஓரத்தில் இருந்த முதலையை லாவகமாக பிடித்து சிதம்பரம் அருகே வக்கிரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர். பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குளத்தில் முதலை புகுந்தது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. 

    • ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அடுத்த கோரஞ்சல் பகுதி உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.

    அவ்வப்போது ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவத்தன்று மாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை கோரஞ்சல் பகுதிக்குள் புகுந்தது.

    யானை வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வன ஊழியர்கள், வன காப்பாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் அங்கு முகாமிட்டிருந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நாய் ஒன்றும் யானையை பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. பதிலுக்கு யானையும் நாயை நோக்கி துரத்தி வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் யானையை ஊருக்குள் வரவிடமால் வனத்தை நோக்கி விரட்டினர். அப்போது ஆக்ரோஷமான காட்டு யானை, வன ஊழியர்களை நோக்கி வேகமாக வந்தது.

    யானை ஆக்ரோஷத்துடன் வருவதை பார்த்ததும் வன ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் யானை விடாமல் அவர்களை விரட்டியபடி ஓடி வந்தது.

    மற்றவர்கள் வேகமாக ஓடிய நிலையில், ஒரு வன ஊழியரின் அருகில் காட்டு யானை வந்தது. அவர் சுதாரித்து அங்கிருந்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார்.

    ஆக்ரோஷம் குறைந்ததும் யானை அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது. யானை எங்கு சென்றது. எங்கு நிற்கிறது என்பதை வனத்துறையினர் கண்காணித்தனர். தொடர்ந்து இரவு முழுவதும் அந்த பகுதிக்குள் யானை நுழைந்து விடாமல் விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    வன ஊழியர்களை ஆக்ரோஷத்துடன் காட்டு யானை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மணிமுத்தாறில் கரடியை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு அணை பகுதியில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில் உள்ளதால் பலர் ஆடு, மாடு வளர்ப்பதோடு விவசாயமும் செய்து வருகின்றனர். இந்த பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளதால் விவசாய நிலங்கள், கிராமங்களுக்குள் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

    அதே சமயம் இங்கு சிறப்பு காவல் படை குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் கரடி மற்றும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தபடி இருந்தது.

    2 நாட்களுக்கு முன்பு  குடியிருப்பு பகுதியில் தனது குட்டியுடன், தாய் கரடி ஒன்று உலா வந்துள்ளது. அதன் பிறகு அந்த கரடி உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் பொது மக்கள் கரடியை தற்காலிகமாக காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயை தூக்கி சென்று கடித்து கொன்று விட்டது.

    இவ்வாறு அடிக்கடி காட்டு விலங்குகள் மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து தொந்தரவு செய்வதை தடுத்திட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா உத்தரவின் பேரில் சுரேஷ் பாலமுருகன் வனவர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுமார் 10 பேர் நேற்று இரவில் மணிமுத்தாறு குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குக்களை விரட்ட தீப்பந்தம் ஏற்றி இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    அப்போது மணிமுத்தாறு காவலர்கள் பயிற்சி 9-வது அணி கமெண்டான்ட் வீட்டின் பின்புறத்தில் கரடி தன் குட்டி உடன் சுற்றித்திரிவதை கண்டு அவைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர்.

    பொது மக்கள்  இரவு நேரத்தில் வீட்டை வீட்டு வெளிவர நேர்ந்தால் கையில் தீப்பந்தம் வைத்துக் கொள்ளுமாறு வனத் துறையினர் தெரிவித்தனர்.
    ×