search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மாவட்டங்களில் மழை"

    • ஒரு சில இடங்களில் பாலங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், கால்வாய் நிரம்பி வழிவதாலும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது.
    • தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

    நெல்லை:

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இந்த மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இன்று (திங்கட்கிழமை) மதியம் வரை நீடிக்கிறது. நேற்று பகல் முழுவதும் 3 மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது.

    இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் அதிக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் அதிக கனமழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து 2 நாட்களாக சுமார் 30 மணி நேரத்துக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்து உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணை பகுதிகளிலும் கனமழை பெய்வதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    பாபநாசம் பாணதீர்த்த அருவியில் இருந்து காட்டாற்று வெள்ளம் வெளியேறுவதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சுமார் 32,000 கனஅடி நீர் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது. இது தவிர மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியை கடந்து இருப்பதால் அந்த அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.


    மேலும் கடனா அணையில் இருந்து 4500 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தற்போது 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. அங்கு இரு கரைகளையும் தொட்ட படி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. கொக்கிரகுளம் சுலோச்சனா முதலியார் பாலம் மற்றும் அதன் அருகில் அமைக்கப்பட்டு உள்ள புதிய பாலம் ஆகியவற்றை தொட்டபடி வெள்ளம் செல்கிறது.

    இதன் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் தண்ணீர் புகுந்து உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கும் பொதுமக்கள், அதிகாரிகள் யாரும் செல்ல முடியாத வகையில் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    மாநகரப் பகுதியில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வாறுகால்களில் அடைப்பு, சாலையோர ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவற்றின் காரணமாக மழை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் கழுத்து அளவுக்கு தேங்கி நிற்கிறது.


    நெல்லை மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கிறது. பழைய பேட்டையில் தொடங்கி வழுக்கோடை, தொண்டர் சன்னதி, நயினார் குளம் சாலை, டவுன் ரத வீதிகள், நெல்லையப்பர் கோவிலை சுற்றி அமைந்து உள்ள தெருக்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வழுக்கோடை பகுதியில் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அங்கும் காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் ஓடுகிறது. காட்சி மண்டபம், கோடீஸ்வரன் நகர் உள்ளிட்ட பகுதிகள் தீவுகள் போல் காட்சி அளிக்கிறது.

    இதுபோல் எஸ். என். ஹைரோட்டில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சந்திப்பு மீனாட்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில், சி.என். கிராமம், தச்சநல்லூர், சிந்து பூந்துறை, சமாதானபுரம், கே.டி.சி. நகர், ரஹ்மத் நகர், தியாகராஜ நகர், மகாராஜா நகர், அன்பு நகர், பொதிகை நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    ஒரு சில இடங்களில் பாலங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், கால்வாய் நிரம்பி வழிவதாலும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான காம்பவுண்டுகளில் வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ள முகாம்களில் மீட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். டவுன் குறுக்குத் துறையில் இருந்து கருப்பன் துறை வழியாக மேலப்பாளையத்துக்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கி விட்டது.

    தீயணைப்புத் துறையினரும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து மாநகரப் பகுதி முழுவதும் வெள்ளம் புகுந்த வீடுகளில் தத்தளிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். திருப்பணி கரிசல்குளம், பேட்டை, திருவேங்கடநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை குளத்தில் இருந்து வெளியேறும் நீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக நெல்லை மாநகராட்சி முழுவதுமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இன்று காலை முதல் மாநகரப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்களின் பாடு மேலும் திண்டாட்டமாகி வருகிறது.

    இன்று காலை 7 மணி நிலவரப்படி மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 60 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. அதற்கு அடுத்த படியாக பாளையில் 42 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 41 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. சேரன்மகாதேவியில் 40 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை புதிய பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வேய்ந்தான் குளமும் நிரம்பி விட்டதால் பஸ் நிலையத்தில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லையிலிருந்து மற்றும் கன்னியாகுமரியில் இருந்து வடக்கு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பெரும்பாலான பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாநகரப் பகுதியிலும் இயங்கி வரும் பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1200 குளங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் கடந்த 2 நாட்களில் பெய்த மழையின் காரணமாக நிரம்பும் தருவாயில் இருக்கிறது. அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் வயல்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் நாற்றுகளை மூழ்கடித்தபடி தேங்கிக் கிடக்கிறது.


    மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, கூடங்குளம், உவரி உள்ளிட்ட கட லோர பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கூட்டப்பனை கூடுதாழை மற்றும் 9-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டம் ரெட் அலர்ட் எச்சரிக்கையில் இருந்து மஞ்சள் அலர்ட்டுக்கு மாறி உள்ளது. இதனால் இன்று காலை சற்று மழை குறைந்துள்ளது. எனினும் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்த வண்ணம் உள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக ஒரு சில அணைகளை தவிர மற்ற அனைத்து அணைகளும் நிரம்பி விட்ட நிலையில் குளங்கள் உள்ளிட்டவற்றுக்கு நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. தற்போது 2 நாட்களாக பெய்து வரும் அதிக கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளிலும் வெளியேறும் தண்ணீர் சிற்றாறு கால்வாய் மூலமாக குளங்களை வேகமாக நிரப்பி வருகிறது.

    ஏற்கனவே 50 சதவீதத்திற்கும் மேலாக குளங்கள் நிரம்பிய நிலையில் தற்போது பெய்த மழையால் இதுவரை பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த குளங்கள் கூட ஒரே நாள் இரவில் பெய்த மழையால் நிரம்பிவிட்டன. தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது.

    இதேபோல் சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், சுரண்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்புவதோடு காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடுகிறது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக கொட்டி தீர்க்கும் மழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்கு மேல் நிரம்பாத பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து உள்ளது. காயல்பட்டினம் பகுதியில் மட்டும் இன்று காலை நிலவரப்படி சுமார் 93 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அங்கு அதிக அளவு மழை பொழிந்து உள்ளது.

    இதேபோல் திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து உள்ளது. திருச்செந்தூரில் அதிகபட்சமாக 69 செ.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 61 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கோவில்பட்டியில் 49 செ.மீ., சாத்தான்குளத்தில் 46 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழையால் பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து அதிலிருந்து பொதுமக்கள் தற்போது மீண்ட நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை மேலும் சிரமம் அடைந்துள்ளது. மாநகர பகுதி முழுவதும் தீவு போல் காட்சியளிக்கிறது.

    ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து உள்ளது.

    3 மாவட்டங்களிலும் கிராமங்கள் தனித்தனி தீவாக மாறி விட்டதால் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை இன்று முடங்கி போனது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் தகவல் தொடர்பையும் மக்கள் இழந்துள்ளனர்.

    இதனால் மக்களை மீட்க முப்படைகளும் உதவிக்கு விரைந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர்கள் தலைமையில் தீவிர ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    • 4 மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி, நேற்று முன்தினம் இரவு தொடங்கி இந்த மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இன்று வரை நீடித்தது.

    இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுத்து வரும் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற குளிர்கால தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கனிமொழி தூத்துக்குடியில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. மேலும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டார். சாலைகளில் நடந்து சென்றும், பேருந்தில் பயணித்தும் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் கீதா ஜீவன் உடன் இருந்தார்.


    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கனிமொழி தூத்துக்குடியில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம். மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம் என்று 80778 80779 தொடர்பு எண்ணையும் கனிமொழி அறிவித்து இருந்தார்.


    • 90 சதவீதம் மழை பெய்யும் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது.
    • ரெட் அலர்டுக்கு மேலான எச்சரிக்கை என்று எதுவும் இல்லை.

    சென்னை:

    வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது.

    * தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்.

    * நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளையும் கனமழை நீடிக்கும்.

    * தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    * தற்போதைய மழைக்கான காரணம் மேகவெடிப்பு இல்லை.

    * வளிமண்டல சுழற்சியில் இதுவரை இந்த அளவிற்கு மழை பெய்தது இல்லை.

    * 90 சதவீதம் மழை பெய்யும் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது.

    * ரெட் அலர்டுக்கு மேலான எச்சரிக்கை என்று எதுவும் இல்லை.

    * வரும் காலங்களில் கனமழை அடிக்கடி பெய்யும்.

    * கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாளையங்கோட்டையில் அதி கனமழை பெய்துள்ளது.

    * வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 5 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
    • பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர். எனவே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள். தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண் : 8148539914 மற்றும் "டிவிட்டர்" மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    வாட்ஸ்அப் எண்: 8148539914

    டிவிட்டர் : Username - @tn_rescuerelief, @tnsdma

    Facebook id: @tnsdma

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீர்குலைந்த சாலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு துரிதமாக செயல்படுத்த வேண்டும்.
    • கனமழையில் பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்ற நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு வழங்கிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் ஏற்பட்டதுபோல் கவனக்குறைவுடன் மக்களை பாதிக்கப்படவிடாமல், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், காவல் பணி அதிகாரிகள் ஆகியோரின் அனுபவங்களைப் பயன்படுத்தி, சீர்குலைந்த சாலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    மேலும், கனமழையில் பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்கிட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
    • மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க வலியுறுத்தல்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை (19.12.2023) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்
    • மாவட்ட ஆட்சியர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    தொடர்ந்து, நெல்லை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர், கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுரைகளை தயவுசெய்து கடைபிடிக்கவும்.
    • மத்திய, மாநில துறைகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில்,

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். மிகவும் அவசியமில்லாவிட்டால் வெளியே வர வேண்டாம்

    அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுரைகளை தயவுசெய்து கடைபிடிக்கவும். மத்திய, மாநில துறைகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

    விரைவில் நிலைமை சீரடைய எனது பிரார்த்தனைகள் என கூறியுள்ளார்.

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு தொடங்கி இந்த மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது.

    இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நெல்லை டவுன் பகுதியில் கனமழை வெள்ளத்தால் கான்க்ரீட் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், வீடு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வெள்ளத்தில் விழுகிறது. அப்போது பெண் ஒருவர் எல்லாம் போச்சே என்று கூறி கதறுவது கேட்பாரை கண்கலங்க செய்துள்ளது.




    • நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது.
    • தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு.

    நெல்லை:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரியில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது.

    தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    • புள்ளியங்குளத்தில் என்னுடைய பெற்றோரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
    • பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் படகு மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்றோம்.

    பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் மாரிசெல்வராஜ் உதவி வருகிறார்.


    புள்ளியங்குளத்தில் என்னுடைய பெற்றோரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் படகு மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்றோம். சேதம் அதிகமாக உள்ளது. சுற்றிலும் தண்ணீர் இருப்பதால் என்ன நடக்கிறது என்பதே மக்களுக்கு தெரியவில்லை என இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

    ×