என் மலர்
நீங்கள் தேடியது "Kodaikanal"
- திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
- கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. கொடைக்கானலில் வெயில் அதிகரித்த நிலையில் நேற்று அதிகாலையில் சாரலாக தொடங்கிய மழை பின்னர் கனமழையாக பெய்தது.
தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் சிரமமடைந்தனர். பகல் பொழுதிலேயே கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேல்மலை பகுதியில் பெய்த மழை சாகுபடி பணிக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வந்தது. இதனை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தற்போது பெய்துள்ள மழை காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவித்தனர். கோடைகால சீசன் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இருந்தபோதும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் 20, காமாட்சிபுரம் 13.2, நிலக்கோட்டை தாலுகா 17, நிலக்கோட்டை 16.20, சத்திரப்பட்டி 7.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 8.4, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 8.2, பழனி 7, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 13, பிரையண்ட் பூங்கா 14 என மாவட்டம் முழுவதும் 124.20 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- சசிகுமார் மற்றும் மகாலெட்சுமி தற்கொலை செய்தகொள்ள முடிவு செய்தனர்.
- மயங்கிய நிலையில் இருந்த மகாலெட்சுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
கொடைக்கானல்:
மதுரை மேலக்கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவருக்கும் அவரது உறவினர் மகாலெட்சுமி என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சசிகுமார் மகாலெட்சுமி மீது கொண்ட காதல் மோகத்தால் நாடு திரும்பினார்.
இவர்கள் இருவரும் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றுலா சென்று வந்துள்ளனர். உறவினர்கள் இவர்களை சந்தேகப்படவில்லை. இந்த நிலையில் மகாலெட்சுமி தனது கணவரிடம் நகை கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் மகாலெட்சுமியை தேடினார்.
இந்நிலையில் மகாலெட்சுமி தனது குடும்பத்தினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கொடைக்கானலில் உள்ளேன் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விரைந்து கொடைக்கானலுக்கு சென்றனர்.
ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பு சசிகுமார் மற்றும் மகாலெட்சுமி தற்கொலை செய்தகொள்ள முடிவு செய்தனர். அதன்படி விஷ மருந்தை மகாலெட்சுமி மட்டும் குடித்துள்ளார். ஆனால் சசிகுமார் அதனை குடிக்காமல் வெளியே வீசினார்.
மயங்கிய நிலையில் இருந்த மகாலெட்சுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். நீண்ட நேரமாக அறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது மகாலெட்சுமி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கள்ளக்காதலன் சசிகுமாரை தேடி வருகின்றனர்.
- மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
- கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக கனமழை முதல் மிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் வருவதை சில நாட்கள் தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
கொடைக்கானல், பள்ளங்கி, கோம்பை, மூங்கில்காடு கிராமத்தில் பழங்குடியினர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியிலிருந்து மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதி கிராம மக்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தான முறையில் கயிற்றை பிடித்து கொண்டு ஆற்றை கடந்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூங்கில்காடு கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வர முடியாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளனர். மேலும் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் மலைக்கிராம மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை மலைக்கிராமப்பகுதியில் இருந்து மூங்கில்காடு பகுதிக்கு செல்ல விரைவில் பாலம் அமைத்து தர வேண்டும்.
பலமுறை இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை அதற்கான தீர்வு முடிவுக்கு கொண்டுவர துறை சார்ந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்மலை கிராம பகுதியில் கீழான வயல் செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையை கடந்து செல்வதில் பொதுமக்கள், விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதேபோல் கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லும் சாலை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு மண் சரிந்து வீடுகளில் விழுந்துள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லாவிட்டாலும் முறையான சாலை பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நள்ளிரவு மிக கனமழையாக பெய்த நிலையில் காலையிலும் மிதமான மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதே போல் மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனிடையே பேரிஜம் ஏரிக்கு செல்ல இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை, பில்லர்ராக் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட எந்த தடையும் விதிக்கப்படவில்லை. பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் அடுக்கம் சாலையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அலுவலர்கள் விழுந்த பாறைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதால் வாகனங்கள் மறு உத்தரவு வரும்வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் சிறு வாகனங்கள் மட்டும் எச்சரிக்கையுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு விடுதிகளில் விதவிதமான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது உறை பனி சீசன் நிலவி வருகிறது. கொடைக்கானலில் மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 5 டிகிரி செல்சியஸ் மட்டுமே காணப்படுகிறது. மேலும் நகர் முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் பகலிலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன.
ஓங்கி உயர்ந்த மலை உச்சி கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. நேற்று மாலை முதல் விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருகிறது. அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவிந்துள்ளனர்.
இதனால் நகர் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஏரியில் பனிமூட்டத்துக்கு நடுவே படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு விடுதிகளில் விதவிதமான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேக்கேஜ் டூரில் கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் அங்கு தங்கி புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். இங்கு சாரல் மழை, பனி மூட்டம், உறை பனி என காஷ்மீர் போன்ற சீதோஷ்ணம் காணப்படுவதால் அதனை சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் ரசித்து வருகின்றனர்.
மேலும் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க கூடும் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கினர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கொடைக்கானல்:
மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ரவிக்குமார் மகன் ஜஸ்வந்த்குமார் (வயது28). இவர் சகோதரி ஜெஸி (27), இவரது கணவர் திலிப் (29), இவர்களது உறவினர் மாலன் (22) ஆகிய 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.
மூஞ்சிக்கல் அருகே உள்ள தனியார் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டனர். அந்த உணவு பொருட்களில் துர்நாற்றம் வீசியதால் வேறு உணவு மாற்றி கொடுக்கும்படி ஜஸ்வந்த்குமார் தெரிவித்தார். ஆனால் கடை ஊழியர்கள் அதனை மாற்றித்தர மறுத்ததுடன் அவர்களுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உணவு பொருட்களை ஜஸ்வந்த்குமார் தனது செல்போனில் வீடியோவாக படம் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கினர்.
படம் எடுத்த செல்போன்களை வாங்கி உடைத்ததுடன் சுற்றுலா பயணிகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் காரில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முயன்றபோது வழிவிடாமல் காரையும் அடித்து நொறுக்கினர். ஒரு வழியாக அவர்கள் 4 பேரும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர்.
பின்னர் தங்களுக்கு நேர்ந்த விஷயம் குறித்து அவர்கள் பேசிய வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது. சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கே இந்த நிலை என்றால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எவ்வாறு மதிப்பார்கள்? எனவே போலீசார் இப்பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல முயன்றபோது அங்கும் தங்களை தாக்க ஓட்டல் ஊழியர்கள் வந்ததால் நாங்கள் மதுரைக்கு செல்வதாக தெரிவித்தனர். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் ஓட்டலில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது ஊழியர்களே சுற்றுலா பயணிகளை தாக்கியது உறுதியானது. மேலும் பெண் என்றும் பாராமல் சுற்றுலா பயணிகளை கடுமையாக தாக்கியது தெரியவந்ததால் ஓட்டல் ஊழியர்களான முகமதுஅலி (32), தர்வீஸ் முகைதீன் (35), அர்சத் (27), அரவிந்த் (27), சர்தார் (34), ஆஷிப்ரகுமான் (38) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
புகாருக்கு உள்ளான ஓட்டல் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. கேரள சுற்றுலா பயணிகளை இதேபோல் ஒரு அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக புகார் உள்ளது. மேலும் தரமற்ற உணவுகள் வழங்கி வருவதால் மற்ற ஓட்டல் நிறுவனங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதால் இதன்மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.