என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோசடி"

    • போலியான சேர்க்கை ஆணையை அந்த கும்பல் மணியிடம் கொடுத்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் மணி (வயது 44). இவரின் குழந்தைகளையும், தனது சகோதரரின் குழந்தைகளையும் சூலூரில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்க விரும்பினார். அதற்காக கார்த்திகேயன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.

    அவர் தனது நண்பர்களான சின்னச்சாமி, மேகநாதன், கந்தவர் சிங், பெருமாள் ஆகியோருடன் சேர்ந்து அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆணை பெற்று தருவதாக கூறி போலீசார் மணியை நம்ப வைத்துள்ளனர்.

    இதனை நம்பிய மணி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அவர்களிடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் போலியான சேர்க்கை ஆணையை அந்த கும்பல் மணியிடம் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த சேர்க்கை ஆணையை வைத்து குழந்தைகளை மணி பள்ளியில் சேர்த்துள்ளார்.

    பின்னர் அந்த ஆணை போலியானது என்பதை பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்து குழந்தைகளை பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மணி அளித்த புகாரின் பேரில் கார்த்திகேயன், சின்னச்சாமி, மேகநாதன், கந்தவர் சிங், பெருமாள் ஆகியோா் மீது திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமார்.
    • வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் காதல் சுகுமார் நெருங்கி பழகியுள்ளார்.

    நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமார். பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ள போதிலும் காதல் சுகுமார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

    47 வயதானவர். திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் காதல் சுகுமார் நெருங்கி பழகியுள்ளார்.

    அப்போது தனக்கு திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்றும் அவர் துணை நடிகையிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பி துணை நடிகையும் சகுமாருடன் பழகி இருக்கிறார்.

    அந்த துணை நடிகை கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலும் சுகுமார் அவரை ஏற்றுக் கொள்வதாகவே தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து துணை நடிகை சுகுமாருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

    அப்போது காதல் சுகுமார் துணை நடிகை இடம் தேவைப்படும் போதெல்லாம் நகை பணத்தை வாங்கியுள்ளார்.துணை நடிகையும் சுகுமாருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே என எண்ணி நகை-பணத்தை கொடுத்துள்ளார்.

    இப்படி துணை நடிகை இடம் இருந்து நகை பணத்தை சுருட்டிய பிறகு காதல் சுகுமார் அவருடன் பழகுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதன் பின்னர் துணை நடிகை செல்போனில் அழைத்தாலும் காதல் சுகுமார் போனை எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.

    இதையடுத்து காதல் சுகுமார் பற்றி துணை நடிகை விசாரித்துள்ளார்.அப்போது காதல் சுகுமார் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பதும் மதுரவாயல் கிருஷ்ணா நகரில் அவர் குடும்பத்தோடு வசித்து வருவதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகை இது பற்றி வடபழனி போலீசில் புகார் அளித்தார்.கடந்த ஜனவரி மாதம் அளிக்கப்பட்ட இந்த புகார் மீது வடபழனி மகளிர் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்து வந்தனர்.

    இதன் காரணமாக போலீஸ் கமிஷனர் அருண் துணை நடிகை அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து மாம்பலம் மகளிர் போலீசார் சுகுமார் மீது நம்பிக்கை மோசடி. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    போலீசார் தன்மீது வழக்கு பதிவு செய்ததை அறிந்ததும் சுகுமார் தலை மறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதை தொடர்ந்து நடிகர் காதல் சுகுமார் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள்.
    • ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ராமசாமி. இவர் அதே பகுதியில் பனியன் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சோ்ந்த பிரவீன் குமார், கல்பனா தம்பதியினர் ரூ.1 கோடியே 45 லட்சத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனியன் துணிகள் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர்.

    இதனால் ஏமாற்றம் அடைந்த மகேஷ் ராமசாமி ஐதராபாத் தம்பதி மீது திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் தெலுங்கானா சென்று தேடிவந்தனர். அப்போது ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பல பொய் தகவல்களை கூறி திருச்சூர் பெண்ணிடம் பணம் பறித்தபடி இருந்துள்ளார்.
    • மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு நைஜீரிய நாட்டை சேர்ந்த ஆஸ்டின் ஓக்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி திருச்சூர் பெண்ணிடம் நைஜீரிய வாலிபர் பேசியபடி இருந்திருக்கிறார். அப்போது அவர் பல பொய் தகவல்களை கூறி திருச்சூர் பெண்ணிடம் பணம் பறித்தபடி இருந்துள்ளார்.

    கடந்த 2023-ம் ஆண்டு முதல் கடந்தமாதம் (மார்ச்) வரை ரூ.2கோடி வரை பணம் பெற்றுள்ளார். முதலில் நைஜீரிய வாலிபரின் ஏமாற்றுவேலை திருச்சூர் பெண்ணுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது நைஜீரிய வாலிபரின் மோசடி செயலை அறிந்துகொண்ட அவர், அதுபற்றி திருச்சூர் நகர குற்றப்பரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், பெண்ணிடம் ரூ.2கோடி மோசடி செய்த ஆஸ்டின் ஓக்பாவை கைது செய்தனர்.

    அவரை மும்பை போலீசாரின் உதவுயுடன் கேரள போலீசார் கைது செய்திருக்கின்றனர். போலீசாரால் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த மோசடியின் பின்னணியில ஆன்லைன் மோசடி கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே இந்த மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது. மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஏ.டி.எம். கார்டை வாங்கி பெண்ணிடம் ரூ.30ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • பணம் எடுத்து தருவதாக கூறினார்.

    மேலூர்

    மேலூர் காந்திநகரை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன். இவரது மனைவி வைகை ஜோதி (வயது42). பாலசுப்பிரமணியம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    அவர் அடிக்கடி மனைவிக்கு பணம் அனுப்புவது வழக்கம். அதேபோல் கணவர் பணம் அனுப்பியதால் அதை எடுப்பதற்காக வைகை ஜோதி மேலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். சென்டர் சென்றார். அப்போது அங்கு பணம் எடுக்க பலர் நின்றிருந்தனர். இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் வைகை ஜோதியிடம் பணம் எடுத்து தருவதாக கூறினார்.

    அதை நம்பி வைகை ஜோதி அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பின் நம்பரையும் தெரிவித்து ள்ளார். அந்த வாலிபர் பணம் வரவில்லை என்று வேறு கார்டை அவரிடம் மாற்றி கொடுத்து விட்டு வைகை ஜோதியின் ஏ.டி.எம் .கார்டில் இருந்து ரூ.30,ஆயிரம் எடுத்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைகை ஜோதி மேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

    • பலரிடம் அவர்கள் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
    • மறுநாள் செல்லும் போது போலி தங்க கட்டிகளை கொண்டு சென்றுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்-பல்லடம் சாலை குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). இவரது மனைவி சுருதி (45). இவர்கள் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல்லடம் பகுதியில் வசித்து வரும் ரவி (41), அவரது மனைவி துர்கா (35) ஆகியோர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தில் ஒருவராக பழகி வந்துள்ளனர்.

    இந்த தம்பதியினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக சுருதியிடம் " பல்லடம் பகுதியில் குடியிருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மற்றொரு கணவன்-மனைவியிடம் ஒரு கிலோ தங்க கட்டி இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.60 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும், அதனை எப்படி விற்பனை செய்வதென்று தெரியாமல் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உடனே சுருதி அவர்களிடமிருந்து தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துக்கு விற்று விடலாம் என்ற பேராசையில் தான் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து மளிகை கடை நடத்தி வரும் தம்பதியை ரவியும், அவரது மனைவி துர்க்காவும், பல்லடம் பகுதியில் குடியிருக்கும் ஆந்திர மாநில மற்றொரு தம்பதியான முனுசாமி ( 38), அவரது மனைவி குமாரி (31) வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த தம்பதி தங்கக் கட்டி என்று கூறி 2 கட்டிகளை சக்திவேல் மற்றும் சுருதியிடம் கொடுத்துவிட்டு ரூ.13 லட்சத்தை பெற்றுக் கொண்டனர். அந்த கட்டிகளை வீட்டிற்கு கொண்டு வந்த மளிகை கடை தம்பதியினர் பரிசோதித்துப் பார்த்த போது அவை தங்க கட்டிகள் அல்ல என்றும், தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை என்பது தெரியவந்தது.


    இதனால் அதிர்ச்சி அடைந்த மளிகை கடை தம்பதியினர் உடனடியாக பல்லடம் சென்று தங்க கட்டி என்று கூறி ஏமாற்றிய தம்பதிகளை தேடிப்பார்த்தனர். அப்போது அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சக்திவேல் மற்றும் சுருதி வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநில மோசடி தம்பதிகளை தேடி வந்தனர். இதையடுத்து அவர்களை பிடிக்க திருப்பூர் தெற்கு இணை கமிஷனர் நந்தினி உத்தரவின் பேரில் வீரபாண்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் ரவி அவரது மனைவி துர்கா, முனுசாமி அவரது மனைவி குமாரி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 கிலோ போலி தங்க கட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் திருப்பூரை சேர்ந்த மேலும் சில பெண்களிடம் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை சந்தித்து பேசும் அவர்கள் உண்மையான தங்க கட்டிகளை கொடுத்து அதனை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். அந்த தங்க கட்டிகளை பெண்கள் வாங்கி பார்த்து ஆய்வு செய்யும் போது தங்க கட்டிகள் உண்மையானது என தெரியவரவே அவர்கள் தங்க கட்டிகளை வாங்க முன்வந்துள்ளனர்.

    பின்னர் மறுநாள் செல்லும் போது போலி தங்க கட்டிகளை கொண்டு சென்றுள்ளனர். பெண்கள் அதனை உண்மை என்று நம்பி லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி ஏமாற்றமடைந்துள்ளனர். இப்படி பலரிடம் அவர்கள் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

    • தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பிரவீன்குமார் கேட்டார்.
    • தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன்குமார் சம்பவம் குறித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை:

    கோவை வேடப்பட்டி அருகே உள்ள ஹரி ஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது28).

    இவர் வாட்டர் டேங்க் சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு திருப்பூரை சேர்ந்த மார்சல் பிரிட்டோ என்பவர் அறிமுகம் ஆனார். அவர் தான் தொழில் அதிபராக இருப்பதாகவும், துபாயில் பிபிஓ அலுவலகம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் துபாயில் பிபிஓ அலுவலகம் திறந்தால் நன்றாக பணம் சம்பாதிக்கலாம். எனவே நீங்கள் பணம் முதலீடு செய்தால் நாம் இருவரும் சேர்ந்து துபாயில் தொடங்கலாம். அதில் வரும் லாபத்தில் உங்களுக்கும் பங்கு தந்து விடுகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதனை பிரவீன்குமார் உண்மை என நம்பிவிட்டார். பின்னர் பிரவீன்குமார் அவரிடம் ரூ.48 லட்சம் பணத்தை கொடுத்தார். அதனை தொடர்ந்து பிரவீன்குமாரை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது தொழில் தொடங்கவில்லை. இதுகுறித்து மார்சல் பிரிட்டோவிடம் கேட்டதற்கு அவர், கொரோனா என்பதால் தொடங்கவில்லை என தெரிவித்து விட்டார்.

    இதையடுத்து பிரவீன்குமார் அங்கிருந்து கோவைக்கு வந்தார். அதன்பிறகும் தொழில் தொடங்கவில்லை. இதனால் பிரவீன்குமாருக்கு மார்சல் பிரிட்டோ மீது சந்தேகம் ஏற்பட்டது.

    தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பிரவீன்குமார் கேட்டார். அதனையும் அவர் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன்குமார் சம்பவம் குறித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், தொழில் தொடங்குவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திருப்பூர் தொழில் அதிபர் மார்சல் பிரிட்டோ மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கொடுக்கும் பணத்தை சிறிது சிறிதாக தந்துவிடுகிறேன் என்று ஆனந்தியிடமும், அவரது தங்கை அனுவிடமும் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
    • ஆனந்தியிடம் வாங்கிய பணத்தில் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்தை திருப்பி கொடுத்துவிட்டனர்.

    மதுரை:

    மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி ஆனந்தி (வயது 32). இவரின் தங்கை அனு, பொட்டபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது அவருடன் படித்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மதன் என்பவரது மனைவி அம்பிகாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதன் அடிப்படையில் அம்பிகா அடிக்கடி ஆனந்தி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    இந்த நிலையில் அம்பிகா பெரிய அளவில் சொந்தமாக தொழில் செய்ய இருப்பதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் ஆனந்தியிடம் தெரிவித்துள்ளார். அதில் முதலீடு செய்வதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி ஆனந்தியிடம் கடனாகவும் கேட்டுள்ளார். அவ்வாறு கொடுக்கும் பணத்தை சிறிது சிறிதாக தந்துவிடுகிறேன் என்று ஆனந்தியிடமும், அவரது தங்கை அனுவிடமும் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

    அதனை நம்பிய ஆனந்தி கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு தவணைகளில் ஆனந்தி மற்றும் அவருடைய சகோதரி அனு ஆகியோர் வங்கி கணக்கிலிருந்து அம்பிகா மற்றும் மதன் ஆகியோருக்கு ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் வரை பணம் அனுப்பி உள்ளனர். பின்னர் ஆனந்தியின் வீட்டிற்கு நேரடியாக வந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை அம்பிகாவும் அவரது கணவரும் பெற்றுள்ளனர்.

    ஆனந்தியிடம் வாங்கிய பணத்தில் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்தை திருப்பி கொடுத்துவிட்டனர். மீதி பணம் ரூ.15 லட்சத்து 25 ஆயிரத்தை திருப்பி தருமாறு ஆனந்தி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு மதனும் அவரது மனைவி அம்பிகாவும் ஆனந்தி மற்றும் அனுவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆனந்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி எஸ்.எஸ்.காலனி போலீசார் பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்த அம்பிகா மற்றும் அவரது கணவர் மதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பனியன் உற்பத்தியாளர்களும் ஆர்டருக்கு ஏற்றவாறு ஆடைகளை அனுப்பி வைத்தனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.

    திருப்பூர்:

    சேலம் சொர்ணபுரி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 48). இவர் ஜவுளி நிறுவனம் நடத்தி வருவதாகவும், இணையதளம் மூலம் ஜவுளி ஆர்டர் தேவைப்படுவதாக திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டார்.

    இதைத்தொடர்ந்து திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர்கள் விசாரித்தபோது, சாம்பிள் ஆடைகளை பார்த்து தேர்வு செய்து பாலமுருகன் ஆர்டர் கொடுத்துள்ளார்.

    திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர்களும் ஆர்டருக்கு ஏற்றவாறு ஆடைகளை அனுப்பி வைத்தனர். சிலருக்கு ஆர்டர் கொடுத்த தொகையில் பாதியளவு பணம் கொடுத்து வர்த்தகம் செய்ததாக தெரிகிறது.

    இவ்வாறு திருப்பூரில் உள்ள பல பனியன் உற்பத்தியாளர்களிடம் கோடிக்கணக்கில் ஆடைகளை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் பாலமுருகன் திருப்பூர் வந்தபோது, அவரால் பாதிக்கப்பட்ட பனியன் உற்பத்தியாளர்கள் அவரை பிடித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆடை வாங்கிக்கொண்டு கோடிக்கணக்கில் பணம் கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது. முதல்கட்டமாக 5 உற்பத்தியாளர்கள் தங்களுக்கு ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார். பாலமுருகனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகிறார்கள்.

    • மோசடி கும்பலிடம் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டாம்.
    • போலியான அழைப்புகள் வந்தால் அந்த தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் புகார் செய்யுங்கள் என்று அறிவித்து உள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக மோசமான வானிலை, புயல் மற்றும் கனமழை காரணமாக பல விமானங்கள் தாமதம், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    இதை பயன்படுத்திக் கொண்டு மோசடி கும்பல் தற்போது புதுவிதமாக பாதிக்கப்பட்ட விமான பயணிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விமான பயணம் தாமதம் அல்லது ரத்து போன்றவற்றிற்கு இழப்பீடுகள் தருவதாக கூறி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டு சுருட்டி வருகின்றனர்.

    இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி, விமான பயணிகளிடம் நூதன முறையில் மோசடி செய்யும் கும்பல் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி, விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து ஆனதற்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை கொடுக்கப் போவதாக, போலியான செல்போன் அழைப்புகள் மூலம், பயணிகளை ஏமாற்றி வருகின்றனர். அதற்கும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

    அதைப் போன்ற இழப்பீடுகள் கொடுக்கும் திட்டமும் இல்லை. எனவே இதைப் போன்ற போலியான செல்போன் அழைப்புகள் வந்தால், பயணிகள் யாரும் அதை நம்ப வேண்டாம்.

    பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அவர்கள் பயணிக்க இருந்த விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு, விவரங்கள் கேட்டு அறிந்து, தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மோசடி கும்பலிடம் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் பயணிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. போலியான அழைப்புகள் வந்தால் அந்த தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் புகார் செய்யுங்கள் என்று அறிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, இந்த போலி மோசடி கும்பல் குறித்து போலீசிலும் புகார் தெரிவித்து உள்ளோம் என்றனர்.

    ×